உரையாடல்தான் உறவினை வளர்க்கும்.
************ ********** ********
...."செல்வம், ..செல்வம்.."
"வந்துட்டேங்க! நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க,
அதான் எழுப்பல. சரி, நேற்றைய செப அனுபவம் எப்படி இருந்தது?"
..."Locationஅ shift பண்ணச் சொன்னியா,
உடனே நம்ம கோயில் நற்கருணைப் பேழை ழுன்னாலே முழந்தாழ்ப்படியிட்டேன்.
விசுவாசக் கண்ணால் பேழையுள் இருக்கும் ஆண்டவரைப் பார்த்தேன்.
அவரும் என்னைப் பார்த்தார்.
இரக்கத்துடன் என்னைப் பார்த்தார்."
"நீங்க என்ன பேசினீங்க?"
..."எதுவும் பேசல. அவரும் எதுவும் பேசல. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.
இயேசு எவ்வளவு நல்லவர் என்று கண்களால் ருசித்துப் பார்த்தேன்.
அவர் பரிசுத்தர்.
நான் பாவி.
பாவியிடம் அப்படி என்ன இருக்கிறது, அவர் இப்படி பரிவு காட்ட?"
"அவர் படைத்த ஆன்மா இருக்கிறதுங்க.
உடலும் அவர் படைத்ததுதான்.
ஆனால், பாவம் செய்தது ஆன்மாதானே!
இரட்சிக்கப்பட வேண்டியதும் அதுதானே!
அப்புறம்?"
..."அப்புறம், உள்ளங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டன, மௌனமாக.
எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம், தெரியாது.
தூங்கிவிட்டேன்.
விழித்து உன்னைக் கூப்பிட்டேன்."
"இதுதாங்க பராக்கே இல்லாத உண்மையான செபம்."
..."வாயினால் சொல்லப்படும் செபம் பற்றி பேசுவோமா?"
"அதில முக்கியமான விசயம் ஒன்று இருக்குதுங்க.
சிலர் நினைக்கிறார்கள் 'நீண்ட, அலங்கார வார்த்தைகளினாலான செபம் ஆண்டவரின் கவனத்தை ஈர்க்கும் என்று.
ஆனால் ஆண்டவர் வார்த்தைகளை அல்ல, அவற்றின் ஊற்றாகிய உள்ளத்தைத்தான் பார்க்கிறார்.
வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வராமல் உதட்டிலிருந்து மட்டும் வந்தால், அவை உயிரற்றவை.
உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளில்தான் உணர்வு இருக்கும்."
..."ஆகையினால்தான் மனப்பாட செபத்தைவிட உடனுக்குடன் வரும் செபங்களில் பக்தி அதிகம் இருக்கும்.
மனப்பாட செபங்கள் மனதிலிருந்து வர வேண்டும்.
'அருள் நிறைந்த மரியே' செபம் சொல்லும்போது தாய் முன் நின்று குழந்தை பேசும் உணர்வுடன் சொல்ல வேண்டும்.
ஆனால்,
நமது உள்ளமும், இறைவன் உள்ளமும் பேசும்போது
அன்பு உணர்வு மொழியில் நமது உள்ளத்தோடு பேசிய கடவுள்
ஏன் நாம் சப்தமாக சொற்களால் பேசும்போது,
மோயீசனிடம் பேசியதுபோல
நம்மிடமும் பேசுவதில்லை?"
"ஏங்க, நான் என்ன பைபிள் படிப்பில Degreeயா வாங்கியிருக்கேன்.
நான் பங்குச் சாமியார் பிரசங்கத்தில சொல்றத வச்சி வண்டிய ஓட்டிக்கிட்டிருக்கேன்.
என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதைச் சொல்றேன்.
ஆதாம், ஏவையை நேரடியாக படைத்த கடவுள்,
நம்மைப் படைக்கும்போது பாதி வேலையை நம் பெற்றோருக்குக் கொடுத்திருக்கிறார்.
நமது உடலைப் பெற்றோர் உற்பவிக்க,
நமது ஆன்மாவை மட்டும் நேரடியாகப் படைத்திருக்கிறார்.
நாம் 'எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்' என்று அவரிடம் வேண்டுகிறோம்.
ஆனால் அதை நமது பெற்றோர் மூலம்தான் தருகிறார்.
நமக்கு வேண்டிய அறிவை நமது ஆசிரியர் மூலம்தான் தருகிறார்.
நமக்கு நற்சுகத்தை மருந்துகள் மூலம் தருகிறார்.
'உன்னைப்போல உன் அயலானையும் நேசி ' என்று உத்தரவிட்டிருப்பதே
நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
'நான் ஆடை இல்லாதிருந்தேன், நீ எனக்கு ஆடை அணிவித்தாய்'
என்று சொல்லும்போதே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுள் நம் அயலானுக்கு நம் மூலம்தான் உதவி செய்கிறார்.
'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, சமாதானமாய் போ'
என்று குருவானவர் மூலம்தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.
'இது என் சரீரம்' என்று குருவானவர் மூலம் கூறி,
அப்பத்தைத் தன் சரீரமாக மாற்றுகிறார்.
மேலும் கடவுள் நம்மோடு பேசுகிறார்,
நமது மொழியிலேயே பேசுகிறார்
அவரது ஏவுதலினாலேயே எழுதப்பட்ட பைபிள் வழியாக, நம்மோடு பேசுகிறார்,
அன்னை கத்தோலிக்க திருச்சபை வழியாக நம்மோடு பேசுகிறார்,
நமது ஆன்ம குரு வழியாக நம்மோடு பேசுகிறார்,
நமது அயலான் வழியாக நம்மோடு பேசுகிறார்,
இயற்கை வழியாக நம்மோடு பேசுகிறார்.
நடந்த சம்பவம்.
ஒருவர் ஒரு மலையில் காடுகளின் இடையே இறங்கி வருகிறார்.
ஒரு விச முள் அவரது ஆழமாய்க் கீற ரத்தம் வேகமாக வெளி வருகிறது.
'ஆண்டவரே, நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என வேண்டிக்கொண்டே,
வரவர காட்டுச் செடிகளின் இலைகளைப் பறித்து இரத்தத்தைத் துடைத்துப் போட்டுக் கொண்டே வருகிறார்.
வழியெல்லாம் இரத்தம்.
இரத்தத்தைப் பார்க்க மனமில்லாமல்,
'ஆண்டவரே காப்பாற்றும்' செபத்துடன்
இலைகளைப் பறித்துத் துடைப்பதை விடாமல் செய்து வரருகிறார்.
மலை அடிவாரத்துக்கு வந்தபின்
கடைசியில் துடைத்த இலையைப் பார்க்கிறார்.
இலையில் இரத்தமில்லை!
காலைப் பார்க்கிறார்,
காயத்தையே காணோம்!
அவர் துடைத்த இலைகளில் ஏதோ ஒரு சக்தியுள்ள மூலிகை காயத்தைக் குணப்படுத்தியுள்ளது!
அது எந்த மூலிகை என்பது அவருக்குத் தெரியாது.
கடவுள் நம் அயலான் மூலம் மட்டுமல்ல, தான் படைத்த இயற்கை மூலமும் செயலாற்றுகிறார்."
..."பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போது,
'மகனே, என் கரங்களை மரத்தோடு சேர்த்து ஆணிகளால் அறைந்துவிட்டார்கள்.
இனி நீதான் என் கரங்களாக செயல்பட வேண்டும் '
என்று இயேசு கூறுவது போலிருக்கிறது."
"நற்கருணையைப் பார்க்கும்போது,
'மகளே, நான் அப்ப வடிவில் இருப்பதால்
அநேகர் என்னை சாதாரண தின்பண்டம் என நினைத்து
இடது கையால் வாங்கி
வலது கையால் எடுத்து
வாயில் போட்டுக்கொண்டு போகிறார்கள்.
நான் முழுமையாய் இருக்கும் துகழ்கள் தரையில் விழ நான் வருவோர் போவோரிடமெல்லாம் மிதிபடுகிறேன்.
அவமானமாய் இருக்கிறது.
நீயாவது என்னை நாவில் வாங்கம்மா'
என்று கெஞ்சுவது போலிருக்கிறது.
இயேசுவே அவர்ளை மன்னியும்."
..."பாடுபட்ட சுரூபத்தைப் பார்க்கும்போது
இயேசு ,
'என்னைச் சிலுவையில் அறையுமுன் என் அங்கியை உறித்து விட்டார்கள்.
அது என் அம்மா நான் சிறுவனாய் இருக்கும்போது எனக்காக பின்னியது.
நான் வளரவளர அதுவும் வளர்ந்தது.
அதைத்தான் உறித்துவிட்டார்கள்.
அதை என் குருக்களாவது அணிவார்கள் என்று எண்ணினேன்.
அதை அணிய அவர்களும் வெட்கப்படுகிறார்கள்.
இதை யாரிடம் போய்ச் சொல்வேன்?'
என்று என்னிடம் கேட்பது போலிருக்கிறது.
எனக்கும் யாரிடமாவது சொல்லணும் போலிருக்கு.
'யாரிடம் சொல்வேன்,இறைவா.
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம்தானே உள்ளன'
என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை."
"ஏங்க, நமது சக்திக்கு அப்பாற்படட்டதைக் கடவுளிடம் விட்டுவிடுவோம்.
உரையாடல்தான் உறவினை வளர்க்கும்.
இறைவனோடு உரையாடி
உறவினை வளர்ப்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment