Sunday, July 14, 2019

திரும்பவும் கொண்டு வந்து நிறுத்துவோம்.

திரும்பவும் கொண்டு வந்து நிறுத்துவோம்.
------------------------------------------------

.."செல்வம்......செல்வம்.....அடியே
செல்வம்....ஏய், கத்துறது காதில விழல?   

Sorry டா. செபத்தை முடிச்சிட்டு வா."

(கொஞ்சம் பொறுத்து)

"Sorry ங்க. செபமாலை சொல்லிக்கிட்டிருந்தேன். நீங்க கூப்பிட்டது காதில விழுந்தது. செபமாலை முடியுமட்டும் அங்க இங்க பார்க்கக் கூடாதுன்னு ஆரம்பிச்சேன்...."

.."புரியுது. நான் எதைப்பற்றி பேசுவதற்காக உன்னக் கூப்பிட்டேனோ அத நானே செஞ்சிட்டேன். Sorry! "

"எதைப்பற்றி பேச?"

"இன்றைக்குக் காலையில

'செபம் சொல்லும்போது பராக்குகளிடமிருந்து தப்பிப்பது எப்படி'ன்னு

ஒரு கட்டுரை ஒரு வாசித்தேன்."

"நான் அதைப் பற்றி ஒரு கதையே வாசித்தேன்."

.."கதையா?  அதை முதல்ல சொல்லு."

"ஒரு பிஷப்பும் ஒரு சாமியாரும் பேசிக்கிட்டிருந்தாங்க, செபம் சொல்றது பற்றிதான்.

பிஷப் சொன்னாரு,

'பராக்கு (distraction) இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தி செபம் சொல்லணும்.

அது கொஞ்சம் கஸ்டம்தான்.

எவ்வளவுதான் மனச ஒருநிலைப்படுத்த முயன்றாலும்

பசாசு பராக்குகளை அனுப்பிக்கொண்டுதான் இருப்பான்.'

'ஆண்டவரே, பசாசு அவன் வேலைய அவன் செய்கிறான்.

நாம் அவனக் கண்டுக்கிடாம இருந்தாலே அவனாகவே பின்வாங்கிடுவான்.

கடவுளுடைய அருள் உதவி நம்மோடு இருக்கும்போது பசாசால என்ன செய்யமுடியும்.'

'கரெக்ட். கடவுளுடைய அருளைக் கேட்டுப் பெறணும்.

அநேகர் அதைச் செய்யாமல் தாங்களாகவே மன்னாடிக்கிட்டிருப்பாங்க.'

சாமியார் பெருமையா சொன்னார்,

'எங்கிட்ட பசாசு பாச்சா பலிக்காது. என்னால் பராக்கு இல்லாமல் செபிக்கமுடியும்.'

'உண்மையாகவா?'

'ஆமா.அதில என்ன கஸ்டம்?'

'சாமி, நீங்கள் இப்போது ஒரு கர்த்தர் கற்பித்த செபத்தை பராக்கில்லாமல் சொல்லி முடித்தால்,

என்னுடைய குதிரையை உங்களுக்குப் பரிசாகத் தந்து விடுகிறேன்.'

'உண்மையாகவா? '

'உண்மையாகவேதான்.'

சாமியார் செபம் சொல்ல ஆரம்பித்தார்.

பாதி செபம் சொல்லியிருப்பார், அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதை நிவர்த்தி செய்துவிட்டு மீதி செபத்தைச் சொல்லலாம் என்று எண்ணி,

'ஆண்டவரே, குதிரையை மட்டும் தருவீர்களா?  அல்லது சேணத்தையும் (Saddle) சேர்த்துத் தருவீர்களா? '

பிஷப் சிரித்துவிட்டார்.

'உங்களச் சோதிக்க பசாசு தேவை இல்லை, என் குதிரையே  போதும்! '

எப்படி கதை! "

.."இங்க நம்ம நிலவரமும் அதுதான்.

அவருக்காவது குறைஞ்சது ஒரு குதிரையாவது வேணும்.

எனக்கு நானே போதும்."

"அப்படீன்னா? "

"எனக்கு வருகிற பராக்கு என்னுடைய கற்பனை மூலமாகவே வரும்.

உதாரணத்துக்கு,

'அருள்நிறைந்த மரியே'

சொல்லுகிறேன்னு வச்சுக்க.

அப்போ  மனசுல யாரு  இருக்கணும்?

மாதாதான இருக்கணும்.

செபத்த ஆரம்பிக்கும்போது இருப்பாங்க.

ஒரிரு வரிகளுக்கு இருப்பாங்க, பிறகு அவங்க அங்கதான் இருப்பாங்க.

நான்தான் காணாமல் போயிடுவேன், கற்பனைக்குள்ள.

உதாரணத்துக்கு,

'எங்கள் மரண நேரத்திலும்' என்ற வார்த்தைகள் வரும்போது என் மரணத்தைப்பற்றி கற்பனை பண்ண ஆரம்பிச்சிடுவேன்."

''ஐயெய்யோ! என்னங்க கற்பனை பண்ணுவீங்க? "

.."பாக்கியமான மரணத்துக்குக் காவலரான சூசையப்பர் வருவாரு.

நான் பூசையில நன்மை வாங்கிட்டு வரும்போது என்னையும் இயேசுவையும்

மோட்சத்துக்குக் கூட்டிக்கிட்டு  போயிடுவாரு."

"அப்புறம்? "

"மாதா என்னப் பார்த்துச் சிரிப்பாங்க.

'ஒரு செபமால ஒழுங்காச் சொல்லத் தெரியல. நேரே மோட்சத்துக்கு வந்துட்டான்'பாங்க! 

'அது உங்க புருசன் பார்த்த வேல'ன்னு சூசையப்பரைப் பார்ப்பேன்.

அவர் ஒரு புன்முறுவல் பூப்பாரு!"

"ஏங்க, ஏதோ கட்டுரை வாசித்தேன்னு சொன்னீங்க, அத விட்டுட்டு மோட்சத்துக்கு வந்திட்டீங்க!"

.."ஆமான்ன! நல்ல வேளை ஞாபகப்படுத்தின.

அந்தக் கட்டுரையில பராக்குகளுக்கான காரணங்களையும்,  அவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளையும் சொல்லியிருக்காரு.

பராக்குக்கு முதற்காரணம்

செபம் நமது உள்ளத்திலிருந்து வராமல் வாயிலிருந்து வருவது.

அதாவது செபத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நமது மனதில் பிறக்கவேண்டும்.

நமது மனதினால் ஒரு சமயத்தில் ஒரு விசயத்தைப் பற்றிதான் நினைக்கமுடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விசயங்களை நினைக்க ஆசைப்பட்டால்கூட அதனால் முடியாது.

அதனால்தான் வாய்மொழி செபத்தைவிட  தியான செபம் சக்தி வாய்ந்தது.

ஆனால் சமூகமாக சேர்ந்து செபம் சொல்லும்போது, (உதாரணத்திற்கு, திருப்பலி, ) வாய்மொழியைத் தவிர்க்க முடியாது.

அப்படிப்பட்ட செபத்தில் வார்த்தைகள் உள்ளத்திலிருந்து புறப்பட்டு வாய்வழியாக வரவேண்டும்.

அதாவது மனதை ஒருநிலைப்படுத்தி செபிக்கவேண்டும்.

கஸ்டம்தான். மறுக்க முடியாது.

பராக்குகள் வரும். தவிர்க்கமுடீயாது.

ஏனெனில் உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை.

நம்மைச் சுற்றி,  நமக்குக் கட்டுப்படாத அநேக காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்.

அவை எல்லாம் நமது ஐம்பொரிகள் வழியாக நம் உள்ளக் கதவைத் தட்டும்.

அவைதான் பராக்குகள்.

அந்த பராக்குகளைத் தவிர்க்க ஒரே வழி அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான்.

நமது மனித சுபாவம் பாவத்தினால் பாதிக்கப்பட்ட சுபாவம். (Fallen nature)

நம்மை அறியாமல் பராக்குக்கு இடம் கொடுத்துவிட்டாலும்,

அதைப் பற்றிய உணர்வு வந்தவுடன் நாம் செபநிலைக்குத் திரும்பிவந்துவிடவேண்டும்.

ஞாயிறு பூசைக்கு வரும்போது நமது சூழ் நிலை நமக்குக் கட்டுப்பட்டது அல்ல.

ஏதோ Fashion show வுக்கு வருவதைப்போல dress அணிந்து கோவிலுக்கு வருபவர்களை நம்மால் என்ன செய்ய முடியும்?

அவர்கட்குப் புத்தி சொன்னால்,

'Who are you to interfere in our personal matters? Mind your own business.'
என்று சொல்லால் அடிப்பார்கள்.

ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
அடிக்கடி ஞாபகப்படுத்தவும் வேண்டும்.

சிலசமயங்களில் பராக்குகள் நமக்குள்ளேயே பிறக்கும்.

நடுப்பூசையில் சாமியார் நடுப்பூசையில் வசீகர வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருப்பார்.

அப்பொழுது பார்த்து நினைவுக்கு வரும்,  'இன்றைக்கு பிரசங்கம் நல்லா இருந்தது. ஆனால் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.'

'பூசை முடிந்தவுடன் bus வருமா? அல்லது காத்திருக்க வேண்டியிருக்குமா? '

'அதிகாலையிலேயே பூசைக்கு வந்தோமே, வீட்ல எல்லா லைட்டையும் அணைச்சிட்டு வந்தோமா?,

இப்படி என்ன எண்ணம் வேண்டுமானாலும் வரலாம்,

வந்ததை உணர்ந்தவுடன் செபநிலைக்குத் திரும்பிவிட வேண்டும்.

நமது கற்பனைகளும், எண்ணங்ளும், உணர்ச்சிளும் பராக்குகளால், பாதிக்கப்படக் கூடியவைதான்.

சம்பந்தமில்லாத இடத்தில்  சம்பந்தமில்லாத கற்பனைகள் வரும்.

நாள் முழுவதும் இறைவனின் சந்நிதியில் இருக்கவேண்டும்.

அந்தஸ்தின் கடமைகளைச் செய்யும்போது கடமையில் கண்ணாயிருக்க வேண்டும்.

அப்போது ஏதாவது கற்பனையில் இறங்கினால் அது செபவேளையிலும் தொடரும்.

அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

பசாசின் சோதனைகட்கு எதிராக நமக்கு உதவிசெய்ய கடவுள் ஆளுக்கொரு காவல் சம்மனசைக் கொடுத்திருக்கிறார்.

அவரை அவ்வப்போது நினைத்து செபம் சொல்ல வேண்டும்.

நமது எண்ணங்கள், கற்பனைகள், உணர்வுளைப் பரிசுத்தமாய்க்  காப்பாற்ற அவர்கள் உதவி வேண்டி செபிக்கவேண்டும்.

"ஆயிரக்கணக்கா பணம் செலவழித்து, நாட்கணக்கா பிரயாணம் செய்து திருத்தலங்களுக்கு போய்ட்டு வர்ரீங்க.

ரொம்ப சந்தோசம்.

அதே சமயத்தில உங்களுக்கு உதவி செய்வதற்கென்றே இறைவனால் நியமிக்கப்பட்ட
எங்களை ஒரு வினாடியாவது நினைத்துப் பார்க்கிறீர்களா?

நாங்கள் இறைவனது ஏவலர்கள்! உங்களுடைய காவலர்கள்! (Soul guards)

வேண்டியதை எங்களிடம் கேளுங்கள், இறைவனிடமிருந்து பெற்றுத்தருகிறோம்."என்று காவல் சம்மனசுக்கள் கூறுவதையும்  கேளுங்கள்."

"சிலர் பராக்கிற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு, அங்கு அமர்ந்து செபம் சொல்வார்கள்.

செபமாலை சொல்லவும் ஆசை, T. V பார்க்கவும் ஆசை.

இரண்டு ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றினால் எப்படி இருக்கும்?

சாத்தானுக்குக்  கொண்டாட்டமாக இருக்கும்.

(இது T. V யைப் போட்டுக் கொண்டு வீட்டுப்பாடம் எழுதும் மாணவர்களுக்கும் பொருந்தும், தேர்வுத் தாள் திருத்துகின்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும்)

நமது கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலையில்,

(உதாரணக பேருந்தில் பயணம், வீட்டில் பிள்ளைகளின் விளையாட்டு)

செபம் சொல்லும்போது, சூழ்நிலையைப் பற்றி கவலைப் படாமல் செபிக்க வேண்டும்.

பைபிள் வசனங்களை வாசித்துக்கொண்டு அவற்றை மையப்படுத்தி செபித்தால் பராக்குகள் குறையும்.

செபமாலை சொல்லும்போது

ஒவ்வொரு தேவஇரகசியத்துக்கும் உரிய பைபிள் பகுதியை வாசித்துக் கொண்டே செபித்தால் பராக்குகள் இருக்காது.

ஏனெனில் கவனத்தை வாசிப்பதில் ஈடுபடுத்திவிட்டால் மனம் அங்கே ஐக்கியமாகி விடும்.

சாத்தான் திருதிருவென்று முழிப்பான்!

புத்தகத்தைப் பார்த்து சொல்லும் செபத்தையும் பராக்குகள் தாக்காது,

ஏனைனில், கண்ணுக்கு வேலை கொடுப்பதால் மனம் அதில் கவனம் செலுத்தும்.

திருப்பலியின்போது நமது கண்ணும்,மனதும் பலி பீடத்தின்மீது மட்டும்தான் இருக்கவேண்டும்.

காது சாமியார் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்மீது இருக்கவேண்டும்.

பராக்குகள் நமது கண்ணையும், மனத்தையும், காதுகளையும் பார்த்து பயந்து ஓடிவிடும்.

தூங்கவேண்டிய நேரத்தில் நன்கு தூங்குவதும் மனதை ஒருலைப்படுத்த உதவும்.

செபநேரத்தில் பராக்கை ஏற்படுத்தும் எண்ணங்களை நினைத்துக் கலலைப்படக்கூடாது. .

கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்முடைய மன அமைதிதான் கெடும்.

தேவை இல்லாத எண்ணம் வந்தால் அதைக்கண்டு கொள்ளாமல் விட்டு விடண்டும்.

கடவுளுக்கு நாம் பலகீனர்கள் என்பது தெரியும்.

நமது சக்திக்குமேல் நம்மிடமிருந்து எதிர்பார்க்க மாட்டார்.

அவர் எதிர்பார்ப்பது நமது நல்ல மனதையும், நல்ல முயற்சியையும்தான்.

நமது  முயற்சிக்கு சன்மானம் கிடைக்கும்.

நமது சக்தியையும் மீறி ஏற்படும் குறைபாடுகளை அவர் தம் அருளால் நிறைவுசெய்து கொள்வார்.

அவர் நமது அன்புத் தந்தை, சர்வாதிகாரி அல்ல.

பராக்குககள் வரும்.

'பராக்குககள் வருதே' என்று கவலைப்படாமல், அவற்றைக் கண்டுகொள்ளாமல் நமது விண் நோக்கிய பயத்தைத் தொடரவேண்டும்.

பந்தயத்தில் ஓடுபவன் முடிவுக் கோட்டை (Finishing point) நோக்கியே ஓட வேண்டும். பார்வையாளகளைப் பார்த்து அல்ல.

வெற்றியே குறிக்கோள்."

"முடிவாக என் கருத்தைக் கூறுகிறேன்.

மனம் பராக்கை நோக்கிப்  போகிறாதா?

சட்டையைப் பிடித்து இழுத்து வந்து இயேசுவின் முன் நிறுத்துவோம்.

திரும்பவும் போகிறதா?

திரும்பவும் கொண்டு வந்து நிறுத்துவோம்.

திரும்பவும் போகிறதா?

திரும்பவும் கொண்டு வந்து நிறுத்துவோம்.

திரும்பவும் போகிறதா?

திரும்பவும் கொண்டு வந்து நிறுத்துவோம்.

திரும்பவும் போகிறதா?

திரும்பவும் கொண்டு வந்து நிறுத்துவோம்.

அதற்குள் வாழ்நாள் முடிந்து விட்டதா?

மகிழ்ச்சி அடைவோம்.

நமது முயற்சிகளுக்கான நித்திய சன்மானத்தைப் பெறுவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment