எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்,(லூக்.11:3)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
"ஏங்க, இயேசு
'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்'
என்று நாம் தந்தையிடம் வேண்டவேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறாரே,
அன்றன்றைக்கு வேண்டிய உணவு அன்றன்றைக்கு கிடைக்கும் என்று நம்பாமல்
எதிர்காலத்திற்காக சேர்த்து வைப்பது தப்பாங்க?"
..."ஆங்கிலத்தில்
The letter of the law ,
the spirit of the law
என்று இரண்டு சொற்றொடர்கள் உண்டு.
' Keep to the letter of the law' என்றால் சட்டத்தின் வார்த்தைகளுக்கு அகராதியிலுள்ள பொருள்படி விளக்கம் கொடுத்து அப்படியே வாழ்வது.
Keep to the spirit of the law என்றால் சட்டம் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறதோ அதன்படி வாழ்வது.
கடவுள் தந்த பத்து கட்டளைகளுள் ஐந்தாவது கட்டளை என்ன? "
"கொலை செய்யாதிருப்பாயாக."
..."நான் தேவை இல்லாமல் உன்னிடம் கோபப்பட்டு, கடுமையான வார்த்தைகளால் உன்னைத் திட்டினால், பாவம் செய்கிறேனா?"
"ஆமா."
"எந்த கட்டளைக்கு விரோதமான பாவம்?"
"தெரியலிய.
'மனைவியைத் திட்டாதிருப்பாயாக' என்று கட்டளையே இல்லையே!"
..."அப்படியானால் நான் திட்டியது பாவம் இல்லையே!
நான் எந்த கட்டளையையும் மீறவில்லையே!"
"எனக்குப் புரியவில்லையே!"
..."இப்போது ஐந்தாங்கட்டளைக்கு வருவோம்.
அகராதியில் உள்ள பொருள்படி நமது அயலானைக் கொல்வது, அதாவது உயிரை எடுப்பது பாவம்.
ஆனால் அந்தக் கட்டளை நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.
நான் உன்னைத் தேவை இல்லாமல் திட்டும்போது உனது மகிழ்ச்சி கொல்லப்படுகிறது.
உன்னைப்பற்றிக் கெடுத்துப் பேசினால் உன் நல்ல பெயர் கொல்லப்படுகிறது.
சதா உன்னைக் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் உனது உற்சாகம் கொல்லப்படுகிறது.
ஆக இவையும் ஐந்தாங்கட்டளைக்கு விரோதமான பாவங்கள்தான்.
கொலை செய்வது மட்டுமல்ல, காயப்படுத்துவதும் பாவம்தான்."
"அப்போ நீங்கள் பாடம் படிக்காத மாணவர்களைத் திட்டியது, அடித்தது எல்லாம்?"
..." 'தேவை இல்லாமல்' என்று சொன்னது காதில் விழவில்லையா?
மாணவர்கள் நன்கு படிக்கவேண்டும்,
நல்லவர்களாய் வளரவேண்டும் என்பதற்காக
அவர்கள் தவறு செய்யும்போது
அர்களைத் திருத்துவதற்காக
அவர்களைக் கண்டிக்க
வேண்டியது ஆசிரியரது கடமை.
பிரம்பை எடுக்காதவன் பிள்ளையைப் பகைக்கிறான்."
"விழுந்தது. சும்மா கேட்டேன்.
சரி, நான் முதலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கேளாத கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?"
..."நீ கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்லிக் கொண்டிக்கிறேன்.
'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்'
என்று வேண்டும்போது
நாம் நமது அன்றாட. உணவிற்காக மட்டுமல்ல,
அன்றாடத் தேவைகளுக்காகவும் தந்தையை வேண்டுகிறோம்.
கடவுள் நேரடியாக நமக்கு நம் உணவைத் தருவதில்லை.
நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் பெற்றோர் வழியாக நமக்குத் தந்தார்.
நமது பெற்றோருக்கு வயதாகும்போது நம் மூலமாகப் பெற்றோருக்குக் கொடுப்பார்.
நம் அயலான் மூலமாக நமக்குத் தருகிறார்.
நம் மூலமாக நம் அயலானுக்குக் கொடுக்கிறார்.
நமது அன்றாட உழைப்பில் நமது
தேவைக்குப் போக மீதியை,
போதிய வருவாய் இல்லாத நம் அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அதுவும்போக மீதி இருப்பது சேமிப்பில் சேரும்.
அப்படியே தினமும் மிஞ்சுவது தினசேமிப்பில் சேரும்.
இப்படிச் சேர்வது
நமது சொந்தப் பயன்பாட்டுக்காக மட்டுமல்ல
தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதிருக்கும் நமது அயலானின் பயன்பாட்டுக்காகவும்தான்.
கிறிஸ்துவின் மதிப்பீட்டின்படி (Christian value) நம் உடைமையும் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய
(ஆடையில்லாதோருக்கு ஆடை கொடுக்க,
பட்டினியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க,
தாகமாய் இருப்போருக்குத் தண்ணீர் கொடுக்க,
நோயாளிகளைக் குணமாக்க,
அன்னியனை வரவேற்று உபசரிக்க,
சிறைப்பட்டோரை விடுவிக்க)
பயன்படுத்தப்பபட வேண்டும்.
ஏனெனில் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்.
அதனால்தான்
ஒரு ஆள் வேண்டினாலும்
'என்னுடைய அன்றாட உணவை எனக்கு நாள்தோறும் அளித்தருளும்'
என்று வேண்டாமல்
'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்'
என்று எல்லோருக்கும் சேர்த்தே வேண்ட இயேசு கற்றுத் தந்திருக்கிறார்.
கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி செயல்படுபவர்கட்கு சேமிப்பு நல்லது.
ஏனெனில்,
அவர்கள் தங்கள் சேமிப்பை மற்றவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்டுத்துவார்கள்."
"அந்த சிறிய செபத்தில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருகேகிறதா?"
..." 'நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.' (அரு.13:34)
என்ற ஒரு வசனத்தில் மொத்த கிறிஸ்தவமே அடங்கியிருக்கிறது."
"அனைவரையும் நேசிப்போம்.
அன்றாட உணவு அனைவருக்கும் கிடைக்க,
அன்றாட தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக
நம்மைக் கரங்களாய்ப் பயன்டுத்த
நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment