"ஆனால், தேவையானது ஒன்றே." (லூக்.10:42)
------------------------------------------------a
அவன் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன்.
பள்ளியில் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் அவன் பெயர் பிரசித்தம்.
ஏனெனில் அவன் District level Ko Ko player.
பள்ளியில் நடைபெறும்
பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, நடிப்புப் போட்டி, நடனப்போட்டி போன்ற போட்டிகளிலும் அவன்தான் First!
எல்லா வெற்றிகளுக்கும் சான்றிதளள்கள் கையில்.
ஆனால், பாடங்களில் கவனம் செலுத்தாததால் S. S. L. C தேர்வில் Fail!
ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாத மாணவர்கள்கூட 11th. Std.க்குப் போய்விட்டார்கள்.
S. S. L. C சான்றிதழ் இல்லாமல்,
போட்டிகளில் கிடைத்த சான்றிதள்கள்களால் என்ன பயன்?
சான்றிதழ்களைப் பார்த்துக் கொண்டு வீட்டில் உட்கார்திருக்கிறான்!
"அட மடையா, தேவையானது ஒன்று இல்லாமல்
எங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?"
சான்றிதழ்களின் குரல் காதுகளுள் நெருப்பாய்ப் பாய்கிறது.
* * * *
இன்னொரு நபர்.
ஊரில் பெரியமனிதர், வசதியிலும், மதிப்பிலும்.
சபைக்கும் முக்கிய ஆள்.
ஒரு ஆண்டு.
கோவில் திருவிழா முழுப்பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்து விட்டார்கள்.
வசதி இருந்ததால் கைப்பணத்தையும் போட்டு செலவழித்தார்.
கோவில் அலங்காரம்,
சப்பரம்,
வாணவேடிக்கை,
மேளம்,
பத்து நாட்களும் சுவாமிமார் சாப்பாடு எல்லாம் அவர் மேற்பார்வையில்தான்.
திருவிழா ஜெகஜோதியாய் நடந்தது.
எல்லோரும் அவரை வானளாவப் புகழ்ந்தார்கள்.
பத்தாம் திருநாள் முடிந்ததும் வீட்டில் வைத்து மனைவி சொன்னாள்,
"திருவிழா பிரம்மாதம்,ஆனால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லையே!"
"ஏண்டி வருமானத்திற்காகவா உழைத்தேன்? வரிப்பணம் போக ஒரு இலட்சம் கையிலிருந்து செலவழித்திருக்கிறேன்.
அதை நன்கொடையாக எழுதிவிட்டேன்."
"உங்களுக்கு ஒரு பயனும் இல்லையே!"
"ஏண்டி சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்க."
"நான் சொல்வதை நிறுத்தினாலும் ஆண்டவர் ஒரு நாள் சொல்லுவார்.
'நீ ஆடம்பரமாகக் கொண்டாடிய விழாவினால் உனக்கு ஒரு பயனும் இல்லையே! '
'ஏன் ஆண்டவரே?'
'நீ ஒரு நாள்கூட முழுப் பூசை காணவில்லையே!
தேவையான ஒன்றை விட்டுவிட்டாய்.
ஆடம்பரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்.'
* * * *
ஆயர் ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டுவிட்டு விண்ணகம் சென்றார்.
வாசலில் இராயப்பர் ஒரு தராசுடன் உட்கார்ந்திருந்தார்.
"இராயப்பரே, சாவிகளை இடுப்பில் சொருகிவைத்து விட்டு, கையில் தராசுடன் உட்காந்திருக்கீங்க?"
"உங்களுக்காக மோட்ச வாசல் திறந்திருக்கிறது.அதற்கு முன் தராசுக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. "
"இராயப்பரே, எனது Weight பார்க்கணும்னா பூமிக்கல்லவா போகவேண்டியிருக்கும். எனது உடல் அங்கேதானே இருக்கிறது."
"உட்காருங்க, ஆயரே. உங்கள் சாதனைகளை சுருக்கமாக விபரியுங்கள்."
"மேற்றிராசனத் தலை நகரில் பழைய பேராலயத்தை இடித்துவிட்டு பல கோடிகள் செலவழித்து புதிய பேராலயம் கட்டியுள்ளோம்.
கிராமங்களிலும் கோவில்கள் கட்டியுள்ளோம்.
பரவலாக பல பள்ளிக்கூடங்கள் கட்டியுள்ளோம்.
நிறைய ஆசிரியர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம்.
பள்ளிகளில் C. C. T. V கேமராக்கள் பொருத்தி பணி சரியாகச் செய்யப்பப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறோம்.''
'' கொஞ்சம் பொறுங்கள்.
ஆசிரியர்கள் பெற்றோர் ஸ்தானத்திலிருந்து மாணவர்களைக் கவனிக்க வேண்டியவர்கள் ஆயிற்றே, அவர்கள்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"
"பொதுவாகக் தவறுகள்
எதுவும் நடைபெறாமல் தடுக்க கேமராக்கள் பொருத்துவது பூமியில் வழக்கம்.
பிள்ளைகளின் பெற்றோரும், மற்றவர்களுங்கூட பள்ளிக்கு வருவார்கள்.
கேமரா எல்லோரையுமே கண்காணிக்கும்."
"மற்ற அமைப்புகளுக்கும், கிறிஸ்தவ அமைப்புக்கும் இடையில் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.
திருச்சபை கிறிஸ்துவின் ஞான சரீரம். இதன் தலை கிறிஸ்து.
இதன் உயிர் அன்பும் நம்பிக்கையும்.
பூமியின் கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசர் தனக்குக் கீழ் உள்ள ஆயர்ளையும், குருக்களையும் கேமரா வைத்தா கண்காணிக்கிறார்?
உங்கள் மேலுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தானே
இறைவன் கோடிக்கணக்கான விசுவாசிகளை உங்கள் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார்.
நீங்கள் எந்த அடிப்படையில் பள்ளிகளில் கேமரா வைத்து கண்காணிக்கிறீர்கள்?
அன்பின் அடிப்படையிலா?
பயத்தின் அடிப்படையிலா?
கேமராவின் முன் இயல்பாக நடமாட முடியுமா?
கேமராவைப் பார்த்தவுடன் முதலில் வருவது பயம், தொடர்வது நடிப்பு.
இயல்பாக நடமாட முடியாதவர்கள் எப்படி இயல்பாக மாணவர்களை உருவாக்க முடியும்?
சாமியாரைப் பார்த்தவுடன் பயப்படுகிறவர்கள் எப்படி அவரிடம் போய் பாவசங்கீத்தனம் செய்வார்கள்?"
"நீங்கள் கூறுவது உண்மைதான், இராயப்பரே."
"சரி, இப்போது கட்டப்பட்ட கோவில்கள், பள்ளிக்கூடங்கள், நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பயன்பெறும் மாணவர்ள், நிர்வகிக்கப்படும் நிலபுலன்கள்
எல்லாவற்றையும் தராசின் ஒரு தட்டில் வையுங்கள்"
"வைத்தாகிவிட்டது."
"சரி. இப்போது தங்கள் மேற்றிராசனத்தில்
கேட்கப்பட்ட பாவசங்கீத்தனங்கள்,
சந்திக்கப்பட்ட வீடுகள்,
சரிசெய்யப்பட்ட திருமணங்கள், சமாதானப்படுத்தப்பட்ட ஆட்கள், குடும்ங்கள்,
சந்திக்கப்பட்ட நோயாளிகள், உதவிபெற்ற ஏழைகள்,
ஆடைகள் கொடுக்கப்பட்டோர்
இன்னும் இதைப்போன்ற ஆன்மீக உதவி பெற்றோர் ஆகியோரை அடுத்த தட்டில் வையுங்கள்."
"வைத்தாகிவிட்டது."
"ஆயரே, கட்டடங்கள் தட்டுதான் Weight அதிகம், கீழே போய்க்கொண்டிருக்கிறது.
ஆன்மீக தட்டு ரொம்ப Light.
ரொம்ப மேல போய்விட்டது.
ஆன்மீகப் பணிதான் குருக்களுடைய முழுநேரப்பணி.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில பள்ளிக்கூடங்கள் அவர்களுடைய ஆன்மீக நேரத்தின் பெரும்குதியைச்
சாப்பிட்டு விடுகின்றன என்று நினைக்கிறேன்.
எந்த பணிக்குத் தங்களை முழுவதும் அர்ப்பணிக்க முடிவெடுத்து குருக்கள் ஆனார்களோ,
எந்தப்பணிக்காக தங்களை பல ஆண்டுகள் தயாரித்தார்களோ
அந்தப் பணிக்கு இன்றைய பள்ளிக்கூடங்கள் இடைஞ்சலாய் உள்ளன.
பள்ளிக்கூடப் பிரச்சனைகளே அவர்களுடைய பொன்னான நேரத்தில் பெரும்பகுதியை விழுங்கிவிடுகின்றன.
ஆயினும் கிறிஸ்தவர்களுடைய சமூக முன்னேற்றத்துக்கு பள்ளிக்கூடங்கள் தேவை.
அவற்றை பொது நிலையினர் கையில் ஒப்படைக்கலாமே.
நமது குருக்கள் முழு நேர ஆன்மீகப்பணி ஆற்ற நேரம் கிடைக்கும்."
"இராயப்பரே, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.
நாம் நம் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்வோம்.
அவர் பார்த்துக் கொள்வார்."
* * * * *
இப்போது நமது வாழ்க்கைக்கு வருவோம்.
நாம் அநேக சமயங்களில் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அதை மறந்து விடுகிறோம்.
சில பயணிகள்
தங்கள் பயணத்தின்போது இளைப்பாறுவற்காகத் தங்கும் சத்திரங்களையே
வீடு என எண்ணி அங்கேய தங்கிவிட எண்ணுவது போல,
நாமும் நமது விண்ணக வீட்டை மறந்து
சத்திரமாகிய இவ்வுலகையே நமது நிரந்தர வீடு என எண்ண ஆரம்பித்து விடுகிறோம்.
அதன் விளைவுதான் நமது இன்றைய வாழ்க்கை முறை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்
நாம் பிறந்ததின் ஒரே நோக்கம் இறப்பதுதான்.
அதாவது,
இவ்வுலகின் 'உள்ளே' வழியான பிறப்பின் மூலம் உலகிற்குள் நுழைந்த நாம்,
விண்ணகத்தின் 'உள்ளே' வழியான இறப்பின் மூலம்
விண்ணகத்தின் நிரந்தர வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.
நாம் பிறந்தது இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் வளர்ந்தது இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் உழைப்பது இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் உண்பது இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் படிப்பது இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் சம்பாதிப்பது இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் வாழ்வதே இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல.
நாம் இவ்வுலகில் வாழ்வதே
மறுவுலக வாழ்விற்கு நம்மைத் தயாரிப்பதற்காகத்தான்.
நாம் அதை மறந்து
இவ்வுலக வாழ்வே சதம் என்று எண்ணி வாழ்ந்தால்,
எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும்,
எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தாலும்,
எவ்வளவு புகழோடு வாழ்ந்தாலும்,
எவ்வளவு பெரிய பதவியில் வாழ்ந்தாலும்,
எவ்வளவு பணத்தோடு வாழ்ந்தாலும்,
அத்தனையும் வீண்.
மேற்கூறப்பட்ட எதுவும் நமக்குத் தேவை இல்லை.
ஆனால், தேவையானது ஒன்றே ஒன்றுதான்.
இயேசுவின் வார்த்தை மட்டும்தான் விண்ணகம் அடைய தேவை.
இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர்ந்து அவரது வாழ்வுதரும் வார்த்தையைக் கேட்போம்.
அதை நமது வாழ்வாக்குவோம்.
நிலை வாழ்வு பெறுவோம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment