Tuesday, July 2, 2019

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.'

'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.'
------------------------------------------------+-

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.

தேர்வு எழுதுவதற்கு என்னிடம் ஏற்கனவே இருந்த பேனாவைவிட வித்தியாசமான பேனா ஒன்று வாங்க ஆசைப்பட்டேன்.

பேனா வாங்குவதற்காக கடைத்தெருவிற்குச் சென்றேன்.

கடைகடையாய் ஏறி இறங்கினேன்.

ஒரு கடையிலும் என் கற்பனைப் பேனா கிடைக்கவேயில்லை.
கடைசி கடைக்காரர் சொன்னார்,

"'தம்பி, நீ எதிர்பார்க்கிற பேனா உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும்  கிடைக்காது.

பேசாம இங்க இருக்கிறதுல  ஒண்ணு வாங்கிட்டுப்போ."

"இங்கு இருக்கிறது மாதிரி எங்கிட்ட நிறைய இருக்கு."ன்னு சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இன்னும் அந்தப் பேனா என் கற்பனையில்தான் இருக்கிறது.

என் நண்பன் ஒருவன்

சினிமா, சீரியல் பார்த்துவிட்டு, அங்கு வருகிற Make up பெண்களைப் பார்த்துவிட்டு,

தனக்கு மனைவியாக வரப்போகிறவள் இப்படித்தான் இருக்கவேண்டும்

என்று கற்பனை செய்து வைத்திருந்தான்.

ஆனால் அவன் வயது நண்பர்களெல்லாம் பூட்டன், பூட்டி பெற்றெடுத்த பின்னும்

அவன் இன்னும் கற்பனை உலகை விட்டு வெளியே வரவேயில்லை.

கற்பனையும், நிஜமும் இன்னும் சந்திக்கவேயில்லை.

இப்படித்தான் அநேகர் கற்பனையில் வாழ்க்கைத் திட்டங்களைத் தீட்டிவிட்டு,

கற்பனையிலேயே அவற்றைச் செயல்படுத்துகிறார்கள்.

இதனால் நிஜ வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போவதால்

திருப்தி, மகிழ்ச்சி என்ற சொற்களுக்குப் பொருளே புரியாமல் வாழ்ந்து தொலைக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒன்று புரியவேண்டும்.

மனிதன் உலகில் பிறப்பதே தன் திட்டப்படி அல்ல.

நித்திய காலமாக நம்மை எண்ணமாகத் (Idea) தன் உள்ளத்தில் சுமந்த இறைவன் தன் திட்டப்படிதான் நமக்கு நிஜ வாழ்வு கொடுத்திருக்கிறார்.

நமது ஒவ்வொரு அசைவுக்கும் அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.

அதற்கு 'இறை பராமரிப்பு' என்பது பெயர்.

இறைவன் தன் சித்தப்படிதான் நம்மைப் பராமரித்து வருகிறார்.

உண்மைதான்,

தன் திட்டத்தின்படி நம்மை பராமரித்துவரும் இறைவன்

நாம் சிந்தித்து செயல்பட முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சுதந்திரம் கட்டுப்பாடு இன்றி நம் இஸ்டம்போல் வாழ்வதற்காக அல்ல.

விழா ஒன்றில் கலந்துகொள்ள அழைப்பு ஒன்று வந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அழைப்பை ஏற்று விழாவிற்குச் செல்லவும்,

ஏற்காது விழாவிற்குச்
செல்லாதிருக்கவும்
நமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

விழாவிற்குச் சென்றால் விருந்து கிடைக்கும்,

செல்லாவிட்டால் விருந்து கிடைக்காது.

அதேபோல் நமது ஆன்மீக வாழ்வில் நித்திய பேரின்ப வாழ்வுக்கு நமக்கு இறைவனிடமிருந்து  அழைப்பு வந்திருக்கிறது.

அதை ஏற்கவோ, ஏற்காதிருக்கவோ நமக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது.

ஏற்றால் இறைவனது அன்புக் கட்டளைகளின்படி நடக்கவேண்டும்,

அதாவது இறைவன் சித்தப்படி வாழவேண்டும்.

இறைவன் சித்தப்படி வாழாவிட்டால் நாம் அழைப்பை ஏற்கவில்லை என்று அர்த்தம்.

ஏற்கவில்லையென்றால் நித்திய பேரின்ப வாழ்வை இழப்போம்.

சுதந்திரம் இருக்கிறது என்றால் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்று  அர்த்தமல்ல.

சுதந்திரத்தைப் பயன்படுத்தி
நித்திய பேரின்ப வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இறைவன் விருப்பம்
என்றுதான் அர்த்தம்.

அதாவது

இறைவன் சித்தப்படி

மோட்சவாழ்வை நாம் முழுச் சுதந்திரத்துடன் தேர்ந்தெடுத்து,
இறைவனது முழுமையான உதவியுடனும்,

நமது முழுமையான ஒத்துழைப்புடனும்

நித்திய பேரின்பத்திற்குள் நுழையவேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்

1.இறைவன் நமது ஒத்துழைப்புடன்தான் நம்மை இரட்சிப்பார்.

2.முழு மனச் சுதந்தரத்துடன் நாம் இறைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3.முழு மனச் சுதந்தரத்துடன் நாம் நம்மை இறைவனின் அடிமையாக்கிக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் நமது அன்னை மரியாளும் செய்தாள்.

"இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது."

"இறைவா, என் முழு மனச் சம்மதத்துடன் என்னை முழுவதும் உமது கரங்களில் ஒப்படைத்துவிட்டேன்.

என்னை நீரே வழிநடத்தும்.

இனி உமது சித்தமே என் சித்தம்."

இறைவன் நம்மைப் படைத்ததே நாம் நித்திய காலமும் அவரோடு வாழ்வதற்காகத்தான்.

அதை ஏற்றுக்கொண்டு, அவரது சித்தப்படி நடக்கவேண்டியது மட்டும்தான் நமது வேலை.

அவரது சித்தம் பல வழிகளில் நமக்குத் தெரியப்படுத்தப் படுகிறது.

1.ஒவ்வொருவருக்கும் தமது கட்டளைகள் பதிவு செய்யப்பட்ட மனசாட்சியை இறைவன் அளித்துள்ளார்.

சமய வேறுபாடின்றி எல்லோரையும் இது வழி நடத்தும்.

2.இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்ட நமக்கு

இறைவார்த்தை (Bible) மூலமாகவும்,

நமது தாய் கத்தோலிக்கத் திருச்சபை மூலமாகவும்

இறைவன் சித்தம் தெரிவிக்கப் படுகிறது.

3.இறைவனைத் தியானிக்கும்போது அவர் உள்தூண்டுதல்கள் (inspirations) மூலமாக தனது சித்தத்தைத் தெரியப்படுத்துவார்.

ஆகவே நமது வாழ்வில் நாம் படும் ஆசைகள் இறைவன் சித்தத்திற்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.

1.நாம் படும் எந்த ஆசையும் நமது மனசாட்சிக்கும், இறைவார்த்தைக்கும் (Bible), திருச்சபையின் போதனைகட்கும் எதிராக இருந்துவிடக் கூடாது.

2. நமக்கு வரும்  ஒவ்வொரு ஆசையும்

இறைத்திட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பதை

நமது செபத்தியானத்தின்போது

இறைவன் Inspirations மூலம் நமக்கு அறிவுறுத்துவார்.

உண்மை,

பைபிள் வாசிக்கிறோம்.

திருப்பலிக்குச் செல்கிறோம்.

வாசகங்களுக்கு செவிமடுக்கிறோம்.

சுவாமியாரது பிரசங்கத்தைக் கேட்கிறோம்.

காலை மாலை செபம் சொல்கிறோம்.

எல்லாம் சரிதான்.

ஒவ்வொரு நாளும் நாம் படும் ஆசைகள், எடுக்கும் முடிவுகள் ஆகியவை இறைவன் சித்தத்திற்கு உட்பட்டவையா?  அல்லது நமது சொந்த விருப்பு வெறுப்புகட்கு உட்பட்டவையா?

அதாவது இறைவனது சித்தத்தை நிறைவேற்ற ஆசிக்கிறோமா?

அல்லது

நமது ஆசைகளை நிறைவேற்றித் தரும்படி செபத்தின் மூலம் இறைவனுக்குக் கட்டளை இடுகிறோமா?

நன்கு படிக்க ஆசைப்படுகிறோம்.

அது இறைவன் சித்தம் என்பதாலா?

இல்லை.

நல்ல மதிப்பெண் பெறுவதற்காக.

நல்ல மதிப்பெண் பெற ஆசைப்படுவது எதற்காக?

  அது இறைவன் சித்தம் என்பதாலா?

இல்லை.

நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக.

நல்ல வேலை எதற்காக?

அது இறைவன் சித்தம் என்பதாலா?

இல்லை.

நல்ல சம்பளம் பெறுவதற்காக.

நல்ல சம்பளம் எதற்காக?

அது இறைவன் சித்தம் என்பதாலா?

இல்லை.

குடும்ப செலவுகட்காக, பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்கவைப்பதற்காக.

பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்கவைப்பது எதற்காக?

அது இறைவன் சித்தம் என்பதாலா?

இல்லை.

அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதற்காக.

அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கவேண்டியது
எதற்காக?

தொடர்ந்து எத்தனை முறை கேட்டுக்கொண்டே போனாலும் உலகு சம்பந்தமான பதில்தான் வருமே தவிற

அது இறைவன் சித்தம் என்பதற்காக என்ற பதில் வராது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலும் நமது திருப்திக்காக வாழ்கிறோமே தவிர

இறைவன் சித்தத்தை நிறைவேற்ற அல்ல.

இறைவன் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக வாழ என்ன செய்யவேண்டும்?

இறைவனின் திருச்சித்தத்தை குறிப்பாக அறிந்து செயலாற்றுவது எப்படி?

மிக எளிது.

1.அமைதியான தியானத்தில் ஆண்டவர் பேசுகிறார்.

படுகின்ற ஆசை, எடுக்கவிருக்கும் முடிவு ஆகியவற்றை முன்வைத்து

இறைவன் சந்நிதியில் தியானிக்கும்போது

நமது உள்ளுணர்வின் மூலம் இறைவன் பேசுகிறார்.

2. எதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்ற கடவுளிடம் வேண்டும்போது,

"இது எனது ஆசை. உமக்குச் சித்தமாக இருந்தால் இதை நிறைவேற்றியருளும்.

இன்றேல் உமது தருவுளப்படி வழிநடத்தும்."

நமது விருப்பத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு

அப்புறம் என்ன நடந்தாலும் 'இதுதான் இறைவன் திருவுளம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு,

ஒருவருக்கு டாக்டர் ஆகவேண்டும் என்று ஆசை.

ஆசையை ஆண்டவரிடம் சமர்ப்பித்துவிட்டு நன்கு படிக்கிறார், நன்கு தேர்வு எழுதுகிறார்.

ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துவிடுகிறது.

இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு, பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்ற படிப்பை செப உணர்வோடு தேடுகிறார்.

கிடைக்கும் படிப்புதான்  இறைவனின் சித்தம்.

இறைவனுக்கு நன்றி கூறுகிறார்.

'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.'

நாம் தோல்வி என நினைப்பது
தோல்வி அல்ல, திருப்புமுனை.
(Turning point).

Let us surrender ourselves fully before God and take life as it comes.

நம்மை முழுவதும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு வரும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

அப்படிப் பட்ட வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்காது.

செபம் இருக்கும்.

முயற்சி இருக்கும்.

திருப்புமுனைகள் இருக்கும்.

திருப்தி இருக்கும்.

நிம்மதி இருக்கும்.

இறுதியில்

வெற்றி இருக்கும்.

"இறைவா, நீரே என் செல்வம்.

உமது  சித்தம் எனது பாக்கியம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment