ஆளுக்கொரு பைபிள்.
--------------------------------------
"ஏங்க, Boreனா என்ன அர்த்தம்?"
"Boarனா பண்ணின்னு அர்த்தம். "
"என்னது, பண்ணியா?
பொய் சொல்லாதீங்க. Pigன்னாதான் பண்ணி."
"Pigன்னா வீட்டுப் பண்ணி.
Boarனா காட்டுப் பண்ணி."
"அப்போ நான் காட்டுப் பண்ணியா? "
"யார்டி அப்படிச் சொன்னா? "
"உங்க பையன்."
"என் மகனா? அவன் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டான். சும்மா உளராத."
"பையன் உள்ள படிச்சிக்கிட்டுதான் இருக்கான். கூப்பிட்டுக் கேட்டுப்பாருங்க."
"டேய், பொடியா, இங்கே வா."
"என்னப்பா?"
"அம்மாவ Boar னு சொன்னியா? "
"ஆமா."
"ஆமாவா? அம்மாவை அப்படிச் சொல்லலாமா?"
"அவங்க காலையில 6 மணியிலிருந்து 7 மணி வரை ஒரே Advice ஆ பண்ணிக்கிட்டிருந்தாங்க. Advice கேட்க Interesting காவா இருக்கும்.அதான் Bore ன்னு சொன்னேன்."
"ஓ அந்த Bore ஆ! நான் Boar னு நினைச்சேன்."
"அப்பா ஒண்ணும் புரியல."
"அடியே, பொடியன் உன்ன
பண்ணின்னு சொல்லல.
நீ கூட நேற்று சாமியார் பிரசங்கம் எப்படி இருந்ததுன்னு சொன்ன? "
"Boring ஆ இருந்ததுன்னு சொன்னேன்."
"ஏன் அப்படிச் சொன்ன?"
"வழக்கமா பிரசங்கம் வைக்கும்போது ஊடே ஊடே கத சொல்லுவாரு, ஜோக் சொல்லுவாரு.
நேற்று கதையும் இல்ல, ஜோக்கும் இல்ல. வெறும் விளக்கம் மட்டும் இருந்தது.
Interesting ஆகவே இல்ல. அதான் அப்படிச் சொன்னேன்."
"அம்மா, உங்க Advice ம் Interesting ஆக இல்ல. அதான் அப்படிச் சொன்னேன்."
"உன் அப்பா நீ பண்ணி ன்னு சொன்னன்னு சொன்னாரு."
"அப்படியாப்பா?"
"அம்மா ஒரு வார்த்தைக்கு அர்த்தம்
கேட்டா.
அவா B. O. R. E. bore னு சொல்லியிருக்கா.
நான் B. O. A. R. boar னு நினைச்சி அர்த்தம் சொல்லிட்டேன்.
Misunderstanding."
"இல்ல.Mr. and Mrs. understanding!"
"பையன் என்ன சொல்றான்?"
"நீ Miss இல்லியாம், Mrs.ஆம். அதத்தான் சொல்றான்."
"புரியுது. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?
உங்க அக்கா புருசன் பழையபடி குடிக்க ஆரம்பிச்சிட்டான்."
"குடிக்க ஆரம்பிச்சிட்டானா? பைபிள் மேல கை வச்சி 'குடிக்க மாட்டேன்'னு சத்தியம் பண்ணியவனா குடிக்க ஆரம்பிச்சிட்டான்?"
"ஆமா. இப்பவும் பைபிள் மேல கை வச்சிதான் குடிக்க ஆரம்பிச்சிருக்கான்.
கேட்டா, பைபிள்தான் குடிக்கச் சொல்லுதுன்னு சாமியார்தான் பிரசங்கத்தில சொன்னார்ங்கிறான்."
"சாமியார் எப்படிச் சொல்வார். இவன் பொய் சொல்றான்."
"மாமா சொல்றது 'பொய்' இல்ல. Twisting,
அதாவது ஒரு கூற்றின் பொருளை தனது விருப்பத்திற்கு ஏற்ப திரித்துக் கூறுதல்.
சென்ற வார பிரசங்கத்தில சாமியார் விரோதிகளை நேசியுங்கள்னு சொன்னார். ஞாபகம் இருக்கா?"
"ஆமா.
'நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.' '(மத்.5:44)
என்ற பைபிள் வசனத்திற்கு விளக்கம் கொடுத்தார்."
"இந்த வாரப் பிரசங்கத்தில் குடியின் தீமைகள் குறித்து விளக்கினார்."
"ஆமா. விளக்கத்தின் ஊடே 'குடியைவிட்டு விலகி இருங்கள். அது உங்கள் நண்பன் அல்ல, விரோதி'என்றார்."
" இப்படிப்பட்ட விசயங்களில் மாமாவுக்கு மூளை வேகமாக வேலை செய்யும்.
சென்ற வாரப் பிரசங்கத்தையும், இந்த
வாரப் பிரசங்கத்தையும் வேகமாக முடிச்சிப்போட்டார்.
'விரோதிகளை நேசியுங்கள்.
குடி உங்கள் விரோதி.
ஆகவே,
குடியை நேசியுங்கள்.
எப்படி Logic!"
"சின்னப் பையங்க கையில ஆளுக்கொரு கத்தியைக் கொடுப்பதுபோல
மக்கள் கையில ஆளுக்கொரு பைபிளக் கொடுத்திட்டாங்க.
கத்தியைப் பயன்படுத்தத் தெரியாத பையங்க கத்தியைக் கொடுத்தா என்ன ஆகும்?
மக்கள் கையில பைபிள் இருந்தா மட்டும் போதாது.
பைபிள் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கவும் தெரியணும்.
குருக்கள்
வருடக்கணக்காய்
பைபிளைப்பற்றியும், பைபிளையும் படித்துவிட்டு
அதை விளக்கும் தகுதியுடன்
பட்டம் பெற்று பணி செய்ய வருகிறார்கள்.
சாதாரண மக்கள்?
சாதாரண மக்கள் பைபிளை வாசித்தாலும் அதற்கான விளக்கத்தைக் குருக்களிடமிருந்துதான் பெறவேண்டும்.
மருந்துச் சீட்டையும், மருந்தையும் நோயாளியிடம் கொடுத்துவிட்டாலும்
மருந்தைப் பற்றியும், அதைப் பயன்படுத்தும் முறை பற்றியும் டாக்டர்தான் சொல்ல வேண்டும்.
மருந்து நல்லது. ஆனால் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் மருந்தினால் தீமைதான் விளையும்.
பைபிளை மக்களுக்குக் கொடுப்பதில் உள்ள முயற்சி, அதில் அவர்களைப் பயிற்றுவிப்பதிலும் இருக்கவேண்டும்.
வருடத்தில் 10 நாட்கள் சிறுவர்ளுக்கு விவிலிய பயிற்சி கொடுத்தால் போதுமா?
அதிலும் சிலநாட்கள் கலைநிகழ்ச்சிகள் தயாரிப்பில் போய்விடும்.
யானைக்கு ஒரு எள்ளுருண்டையைக் கொடுத்துவிட்டு, முழுச் சாப்பாடு போட்டதுபோல பெருமைப் பட்டுக்கொண்டால் எப்படி?
கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவினை சபைகள் இருப்பதற்குக் காரணமே
பைபிள் வசனங்களுக்கு அவரவர் இஸ்டப்படி விளக்கம் கொடுப்பதுதான்.
நம்மிடையே தினசரி வாசகங்களுக்கு விளக்க நாட்குறிப்புப் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான்.
ஆனாலும் அது பற்றாது.
முழு பைபிளுக்கும் விளக்க உரைகள் வெளிவரவேண்டும்.
மக்களில் இஸ்டப்படி ஆங்காங்கே உள்ள வசனங்களை அவற்றின் Context ல் இருந்து உருவி எடுத்து, அவற்றிற்குச் சம்பந்தம் இல்லாத Context ல் பொருத்தி பொருள் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு விவிலியம் வாசிக்கப் பயிற்சி கொடுக்கப்படாததுதான் காரணம்."
" 'இயேசுவை நோக்கி செபிப்பவர்கட்கு மோட்சம் கிடைக்காது என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்' என்று ஒருவன் கூறியதோடு, தனக்கு ஆதரவாக இயேசுவையே மேற்கோள் காட்டியிருக்றான்.
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்." (மத்.7:21)
இதுதான் அவன் காட்டிய மேற்கோள்.
இதுதான் Context ல் இருந்து உருவி எடுப்பது.
Context: இயேசு 'தன்னை நோக்கி அழைத்தால் போதாது, தன் போதனைப்படி நடக்கவேண்டும். நடப்பவனுக்குதான் விண்ணரசு' என்கிறார்.
அதாவது போதனைப்படி நடக்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
அவர் கூறுவது,
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
"நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்."
"நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடக்காதவன் எவனும் மணல்மீது தன் வீட்டைக் கட்டிய மூடனுக்கு ஒப்பாவான்."
ஒரு வசனத்தின் பொருள் அதன் Context ல் தான்.
ஒரு நாத்திகன் சொன்னான்,
"கடவுள் இல்லை என்று பைபிளே கூறுகிறது."
"அப்படியா? எங்கே? "
"சங்.13."
அங்கே திறந்து பார்த்தால்,
"கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்: "
என்று இருக்கிறது
அதாவது "கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்."
இப்படி பைபிளை தங்கள் இஸ்டத்துக்குப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.
அதைத்தான் 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்கள்.
"யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,
தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.
வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்."
(மத்.12:48-50)
அன்னை மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத நம் பிரிந்த சகோதரர்கள் தங்களுக்கு Support க்கு இயேசுவையே அழைக்கிறார்களாம்.
அவரது தந்தை விருப்பப்படி நடப்பவர்கள் அவருடைய சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவதால்
அவர்களுக்குதான் முக்கியத்துவமாம்.
ஆகவே இயேசு தன் தாய்க்கு விசேசமான முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம்.
இயேசுவின் வார்த்தைகளுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கப்படி பார்த்தாலும்கூட தாய்வரிசையில் மரியாள்தான் முதலில் இருக்கிறாள்.
ஏனென்றால், "இதோ ஆண்டவருடைய அடிமை, உம் வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது"
எனக்கூறி தந்தையின் விருப்பப்படி நடந்த முதல் பெண்மணி அவள்தான்.
ஒரு நபரைப் பெருமைப் படுத்தவேண்டுமென்றால் அவரை அவரைவிட சிறந்தவரோடு ஒப்பிடுவோமா? குறைந்தவரோடு ஒப்பிடுவோமா?
காமராசரைப் பெருமைப் படுத்த அவரைத் 'தென்னாட்டு காந்தி' என்று மகாத்மாவோடுதானே ஒப்பிடுகிறோம்!
இதனால் மகாத்மாவுக்குப் பெருமையா? சிறுமையா?
பெருமைதானே!
அதேபோல்தான் இயேசு தன் சீடர்களை, தன் தந்தையின் விருப்பப்படி நடந்துகொண்டிருந்த தன் தாயோடு ஒப்பிடுகிறார்.
அது அவரைப் பெற்ற தாய்க்குப் பெருமைதானே.
பிரிவினை சகோதரர்கள் இயேசு தன் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறும்போது இயேசுவைதான் இழிவுடுத்துகிறார்கள்."
"எப்படீப்பா?"
"இயேசு நாலாம் கட்டளையை அனுசரிக்கவில்லை என்று அவர்கள் கூறுவதாகதானே அவர்களது விளக்கம் சுட்டிக்காட்டும்.
அவர்கள் (பிரிவினை சகோதரர்கள்) மாதாவை மதிக்வில்லை
மாதாவை மதிக்காதவர்கள் மைந்தனையும் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்."
"ஏங்க, விவிலியத்தை மக்கள் கையில் கொடுத்தது தப்புறீங்களா?"
"இல்லவே இல்லை. விவிலிய விளக்கத்தோடு கொடுக்க வேண்டும்னு சொல்றேன்.
பொடியா இங்கே வா."
"என்னப்பா? "
"உன்னுடைய தமிழ்ப் பாடநூலை எடு."
"Text book இன்னும் வாங்கல. கோனார் Notes தான் முதல்ல வாங்கினேன்."
"பாருடி. உன் பையன் பிழைக்கத் தெரிந்தவன்.
Bible Text book ன்னா சாமியார் பிரசங்கம்தான் நோட்ஸ்.
நோட்ஸ வாசித்தால்தான் Text விளங்கும். புரியுதா?"
"புரியுது."
"மக்களுக்கும் இது புரியணும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment