Tuesday, July 30, 2019

உள்ளங்கள் பேசும்போது உலகம் மறைந்துவிடும்!

உள்ளங்கள் பேசும்போது உலகம் மறைந்துவிடும்!
***************-******************

"ஏங்க, சாப்பாடு முன்னால உட்கார்ந்து தூங்கரீங்களா? "

..."ஏண்டி, என்னப் பார்த்தா தூங்கு மூஞ்சி மாதிரியா இருக்கு? "

"வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு. கண்ண மூடிக்கொண்டே உட்கார்ந்திருக்கீங்க.
சரி, சாப்பிடுங்க."

"காதுக்கு ஏதும் இல்லாதபோது கொஞ்சம் வயிற்றுக்கும் போடப்படும்னு வள்ளுவரே  சொல்லியிருக்கார்.

உட்கார். செவிக்கு ஏதாவது போடு, அப்புறம் வயிற்றுக்குள் போட்டுக்கலாம்."

"சரி, இட்லிய மூடிவச்சிட்டு வாரேன்......ம், சொல்லுங்க."

..."எப்போவாவது கடவுள் உங்கிட்ட நேருக்கு நேர் பேசியிருக்கிறாரா?

இன்று பைபிள் வாசித்துக் கொண்டிருந்தபோது,

 "ஒருவன் தன் நண்பனோடு பேசுவதுபோல ஆண்டவர் மோயீசனோடு நேரிலே உரையாடிக் கொண்டிருப்பார்."
(யாத்.33:11)

என்ற வசனம் கண்ணிலும் சிந்தனையிலும் பட்டது.

அதைப்பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.''

''அதைப்பற்றி  என்ன சிந்தித்துக் கொண்டிருந்தீங்க?

நாம மோயீசனா இருந்திருக்கக் கூடாதான்னா?"

..."ஊஹூம்!

மோயீசனோடு பேசிய கடவுள்,

அபிரகாமோடு பேசிய கடவுள்,

அதேபோல நம்மோடு பேசினால் என்ன என்று நினைத்துப்  பார்த்தேன்.

ஏண்டி, உனக்கு இதைப்பற்றி ஏதாவது தோணுதா?"

"இப்போ நான் கேட்கதுக்குப் பதில் சொல்லுங்க.

நீங்க எப்போதாவது கடவுளிடம் பேசியிருகீங்களா?"

..."இது ஒரு கேள்வியா?

நான் கடவுளை நோக்கி செபம் செய்யும் போதெல்லாம் அவரோடு பேசத்தானே செய்கிறேன்."

"செபத்தின் ஒரு வகையை மட்டும்தான் சொல்லியிருக்கீங்க.

இன்னும் இரண்டு வகை?"

..."நீயே சொல்லிவிடு. நீ பேசி நான் கேட்கணும்போல இருக்கு."

"இருக்கும்.

முதல்லே செவிக்கு உணவு வேணும்னு சொல்லீட்டீங்களே.

நாம்
சிந்திக்கிறோம்.
பேசுகிறோம்.
செயல்புரிறோம்.

நமது வாழ்க்கையே இந்த மூன்றில்தான் அடங்கியிருக்கிறது.

சிந்தித்ததைத்தான் சொல்லுகிறோம்.

சிந்தித்ததைத்தான்
செய்கிறோம்.

நமது செபமும்,

அதாவது இறைவனோடு  நாம் செய்யும் உரையாடலும்,  

இம்மூன்றாலும்தான் நடைபெறுகிறது.

இறைவனைப் பற்றி
தியானிக்கிறோம், சிந்தனையால்.

செபம் சொல்கிறோம், வாயால்.

செபம் செய்கிறோம், உடலால்.

தியானிப்பதற்கும், செய்வதற்கும் மொழி தேவை இல்லை.

பாடுகளைப் பற்றி தியானிக்கும்போது  இயேசு பட்ட பாடுகள்,

அவர் இரத்த வியர்வை வியர்த்தது,

அவர் கைது செய்யப்பட்டது,

ஏரொது முன், பிலாத்துவின் முன் பட்ட அவமானங்கள்,

கசையடி வாங்கியது,

முள் முடி சூட்டப்பட்டது,

சிலுவையைச் சுமந்து சென்றது,

சிலுவைப் பாரத்தைத் தாங்க முடியாமல் கீழே விழுந்தது,

சேவகர்கள் செருப்புக் காலால் அவரை மிதித்து எழுப்பியது,

சிலுவையில் அறையப்பட்டது,

சிலுவையில் மரணம் அடைந்தது

போன்ற நிகழ்ச்சிகள் மனத்திரையில் தத்ரூபமாக ஓடிக்கொண்டிருக்கும்.

நமது மனக்கண்ணால்
அன்பு உணர்வோடும்,  மனஸ்தாப உணர்வோடும் அவற்றைத் தியானிப்போம்.

நமது உணர்வுக்கு மொழி தேவை இல்லை.

காலையில் விழித்தது முதல் மறுநாள் காலையில் விழிப்பது வரை நாம் செய்யும் அனைத்து செயல்களும்,

ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டால்,

செபமே.

இந்த வாழ்க்கைதான் செபம் செய்தல்.

செபம் செய்ய மொழி தேவை இல்லை.

செபம் சொல்லும்போது மட்டும்தான் மொழி தேவைப்படுகிறது.

ஆக நாம் மொழியின் உதவி இன்றி இறைவனோடு பேசுவதே அதிகம்.

மொழியின்றி நாம் பேசும்போது இறைவனும் நம்மிடம் மொழிஇன்றி பேசுகிறார்."

..."அதெப்படி மொழிஇன்றி பேசுகிறார்?"

"ஏங்க, நீங்க முதன்முதல்ல என்னோடு எப்படிப் பேசினீர்கள்?"

..."கண்ணால் பேசினேன். நீயும் கண்ணால்தான் பேசினாய்.

கண்ணும் கண்ணும் பேசும்போது கண்கள்மட்டுமா சந்தித்தன?

நமது உள்ளங்களும் சந்தித்தன.

நமது உள்ளத்து உணர்வுகளும் தாங்கள் சுமந்து வந்த அன்போடு சந்தித்தன.

நமது அன்பு இணைந்தது.

நாமும் இணைந்தோம்."

"இப்போ அப்படியே Locationஅ shift பண்ணுங்க,

உங்கள் மனக்கண்ணையும் இறைவனின் மனக்கண்ணையும்

அப்படியே
close up ல சந்திக்க விடுங்க.

Wait. நான் ஒரு close up shot எடுத்துவிடுகிறேன்.

அடேயப்பா! பிரம்மாதமுங்க!

இருவர் கண்கள் இணையும்போது ஒரு ஒளி தோன்றியதே!

ஏங்க,  ஏங்க.

அப்போ சரி.

கண்ணால் பேச ஆரம்பிச்சிட்டீங்க.

இப்போ என்னோடு பேசமாட்டீங்க!

நீங்க பேசிக்கிட்டிருங்க.

பேசி முடித்தபின் வர்ரேன்.

உள்ளங்கள் பேசும்போது உலகம் மறைந்துவிடுமே!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment