அம்மாவைப் பார்க்க வேண்டும்!
------------------------------------------
இயேசு தன் தாயைத் தன் பிரியமான சீடர் அருளப்பர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு,
தன் உயிரைத் தன் தந்தையிடம் ஒப்படைத்தார்.
அதன்பின் அருளப்பருடைய வீட்டில்தான் மாதா இருந்தார்.
அருளப்பர் தான் நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடங்களுக்கெல்லாம் தாயை அழைத்துச் செல்லவில்லை.
முப்பது ஆண்டுகளாய் அம்மாவிடம் இருந்த இயேசுவே நற்செய்திப் பணி செய்த இடங்களுக்கெல்லாம் தாயை அழைத்துச் செல்லவில்லை.
அப்பப்போ போய்ப் பார்த்துக்கொண்டார்.
மாதாவும் அப்பப்போ மகன் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த இடங்களுக்குப் போய்ப் பார்த்துக் கொண்டார்.
அதேபோல் அருளப்பரும் நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடங்களுக்கெல்லாம் தாயை அழைத்துச் செல்லவில்லை
மாதா சுகமில்லாமல் படுத்தவுடன் அருளப்பருக்குச் சொல்லி அனுப்பினாள்.
உடனே வந்து பார்த்த அருளப்பர் மாதாவின் இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து மற்ற அப்போஸ்தலர்களுக்குச் சொல்லி அனுப்பினார்.
ஒவ்வொருவராக வந்தார்கள்.
இந்தியாவிலிருந்து தோமையாரும் புறப்பட்டார்.
ஆனால் அவரால் மாதா இறக்குமுன் வந்து சேரமுடியவில்லை.
அவர் வருமுன் அப்போஸ்தலர்கள் மாதாவை அடக்கம் செய்துவிட்டார்கள்.
அடக்கம் முடிந்து நாலாவது நாள்தான் தோமையார் வந்து சேர்ந்தார்.
தோமை: "நான் வருமட்டும் காத்திருக்கக் கூடாதா?"
இரா: "எப்படிக் காத்திருக்க முடியும். இறந்தவுடன் அடக்கம் செய்வதுதானே முறை."
தோ: "பரவாயில்லை.
நான் அம்மாவைப் பார்க்கவேண்டும்."
அரு : "அம்மாவை வீட்டிற்குள் மறைத்து வைத்திருப்பது போல பேசுகிறீர்கள்!
அம்மா இறந்து, அடக்கம் செய்தாகிவிட்டது.
கல்லறைக்குள் இருப்பவர்களை எப்படிப் பார்க்க முடியும்?"
தோ: "அம்மாவை நான் பார்த்தாகவேண்டும்.
கல்லறையைத் திறங்கள்."
அரு: "அல்லது நம்பமாட்டீர்களோ?"
தோ: "நம்புகிறேன்.
ஆனாலும் அம்மாவைப் பார்த்தாக வேண்டும்."
அரு: "இராயப்பரே, தோமையார் பிடிவாதம் பிடிக்கிறாரே. என்ன செய்வோம்?"
இ: "அவரது ஆசையை ஆண்டவரே நிறைவேற்றினாரே!
நாமும் நிறைவேற்றுவோம்."
கல்லறையைத் திறந்தார்கள்.
உள்ளே மாதாவின் உடல் இல்லை.
எல்லோருக்கும் அதிர்ச்சி.
தோமை: "அம்மா! தாயே!
ஆன்ம சரீரத்தோடு மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டீர்களா!
உமது திருமகன் வந்தாரா!
வந்து எடுத்துச் சென்றாரா!
வந்திருப்பார்!
தன் தாயின் உடலை மண் தின்க எப்படிச் சம்மதிப்பார்?
நான் பார்க்காமல் இருக்கும்போது முக்கிய காரியங்களைச் செய்வது உமக்கு வழக்கமாகிவிட்டது.
ஆனாலும், ஆண்டவரே! நான் விசுவசிக்கிறேன்.
மற்ற சீடர்களைவிட நான்தான் அதிக பாக்கியசாலி,
ஏனெனில், நான் பார்க்காமல் விசுவசித்துவிட்டேனே!"
மற்ற அப்போஸ்தலர்கள் தோமையாரையும், கல்லறையையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாகள்.
அரு: "நாம் எல்லோரும் அம்மா சாகும்போது அவங்ககூடே இருந்தோம்.
ஆனால் அம்மா ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முக்கிய செய்தியை அறிவிக்க தோமையார்தான் வரவேண்டி யிருக்கிறது!
தோமா, நீங்க சந்தேகத் தோமா இல்லை, விசுவாசத்தோமா!"
வியாகப்பர்: "அருளப்பா, ஏன் ஆண்டவர் அம்மாவை இப்படி எடுத்துச் சென்றுவிட்டார்?"
இரா: "நான் சொல்லுகிறேன்.
பாவத்தின் விளைவாகத்தான் மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணுக்கே திரும்புகிறான்.
ஆனால் அம்மா சென்ம மாசு இன்றி உற்பவித்தவர்கள்.
வாழ்நாளெல்லாம் அற்ப மாசுகூட இன்றி அருள் நிறைந்து வாழ்ந்தவர்கள்.
பாவத்தின் விளைவு அவர்களை எப்படி நெருங்கும்?
ஆகவேதான் நம் ஆண்டவர் அம்மாவை ஆன்ம சரீரத்தோடு மோட்சத்திற்கு எடுத்துக் கொண்டார்."
வியா.: "மரணமும் பாவத்தின் விளைவுதானே!
பின் ஏன் அம்மா இறந்தார்கள்?"
இரா:"பாவத்தின் விளைவாக அல்ல.
தன் மகனின் பாடுகளில் முழுதும் பங்கு பெறுவதற்காக அம்மா மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள்."
தோமா: "நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்.
நான் உடனடியாக என் இந்திய மக்களுக்கு அம்மாவைப் பற்றிய செய்தியை அறிவிக்க வேண்டும். வரட்டுமா?"
இரா: "தோமா, ஒரு நிமிசம்.
நீங்க பிந்தி வந்தபோது மனதுக்குச் சங்கடமாக இருந்தது,
உங்களால் அம்மாவைப் பார்க்க முடியவில்லையே என்று.
இப்போ உணர்கிறேன் அது இறைவன் திட்டமென்று,
முன்னமே வந்திருந்தால் அம்மாவின் விண்ணேற்பு பற்றிய உண்மை நமக்குத் தெரிந்திருக்குமா?
இறைவனுக்கு நன்றி.
தோமா, சென்று மாதாவின் புகழைப் பரப்புங்கள்.
எல்லோருக்கும் இன்றைய செய்தி இதுதான்.
அன்னையின் விண்ணேற்புச் செய்தியை அனைவருக்கும் அறிவிப்போம்.
மாதா வழியாக இரட்சகரைப் பெற்ற நாம்,
அவர் வழியாகவே
இரட்சகரை அடைவோம்."
அன்று முதல் அன்னையின் விண்ணேற்புச் செய்தி திருச்சபை இருந்த இடமெல்லாம் பரவியது.
மாதா பக்தி வளர்ந்ததோடு, எங்கும் விண்ணேற்பு விழா கொண்டாடப்பட்டது.
ஏற்கனவே
உலகெங்கும் தெரிந்திருந்த
மாதாவின் விண்ணேற்பு உண்மையை
1950ல் பாப்பரசர் 12ஆம் பத்திநாதர்
ஆயர்களின் ஆலோசனையோடு
தன் தவறாவரத்தைப் பயன்படுத்தி
திருச்சபை முழுவதற்கும்
அதிகாரப்பூர்வமாக
விசுவாச சத்தியமாக அறிவிதார்.
விண்ணக, மண்ணக அரசியே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment