Wednesday, July 24, 2019

"வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன." (மத்.13:4)

"வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன."
(மத்.13:4)
ooooooooooooooooooooooooo

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மக்கள் பூசைக்கு வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை முழுப்பூசை காண வேண்டியது நமது கடமை.(Obligation)

ஆயினும் வெறுமனே கடனுக்காக பூசைக்கு வரக்கூடாது.

உண்மையிலேயே திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நோக்குடன் வரவேண்டும்.

வேறு வழி இல்லையே என்று சாப்பிடுகிறவனுக்கும்,

பயங்கர பசியுடன் சாப்பிடுகிறவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒப்புக்குச் சாப்பிடுகிறவன் சோற்றை பிசைந்து போட்டுவிட்டுப் போவான்.

பசியுடன் சாப்பிடுபவன் ஒரு பறுக்கை கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டுவிடுவான்.

அவ்வாறுதான் உண்மையான ஆவலுடன் திருப்பலிக்கு வருபவன் முழுப்பூசையும் காண்பான்.

முழுப்பூசை என்றால் என்ன?

நாம் நமது வாழ்க்கையை தாயின் கருவறையில் தொடங்கி
கல்லறையில் முடிக்கின்றோம்.

யாரும் வாழ்க்கையை 5 வயதில் தொடங்குவதில்லை.

அது போல்தான் பிந்தி வருபவனின் விருப்பத்திற்கு ஏற்றபடி முழுப்பூசை ஆரம்பிக்காது.

முழுப்பூசை வருகைப் பாடல் (introit)  பாட ஆரம்பிக்கும்போது ஆரம்பிக்கிறது.

"சென்று வாருங்கள், பூசை முடிந்துவிட்டது" (Ite,  missa est)
என்ற குருவானவரின் முடிரையோடு முடிகிறது.

ஒரு நண்பர் தான் பூசை காணாததுக்கு சாமியாரை நொந்து கொண்டார்.

"நான் பூசை காணவேண்டும் என்ற ஆசையோடு ஓடோடி வந்தேன். நான் கோவிலின் Main gate பக்கம் வரும்போதே சாமியார்

"சென்று வாருங்கள், பூசை முடிந்துவிட்டது"

என்று கூறிவிட்டார்,

என்று தான் பூசை காண முடியாமைக்குப் பழியைச் சாமியார் மேல போட்டார்!

சில ஆசாமிகள் பூசை ஆரம்பிக்கும்போது இருப்பார்கள்.

சாமியார் பிரசங்கம் ஆரம்பிக்கும்போது நைசாக வெளியே போய்விடுவார்கள்,

பிரசங்கம் முடிந்தபின் ஆர அமர உள்ளே வருவார்கள். அதற்கு வசதியாக வாசல் பக்கம் அமர்ந்து கொள்வார்கள்.

திருப்பலியில் எல்லாப் பகுதிகளும் முக்கியமானவைதான்.

நம் ஆண்டவரின் வாழ்க்கையின் Climax அவருடைய சிலுவை மரணம்.

ஆனால் அது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில்தான் நடந்தது.

அவரது மூன்று வருட பொதுவாழ்வில் அவரது பாடுகள்வரை அவர் நற்செய்தி அறிவித்துக்கொண்டுதான் இருந்தார்.

திருப்பலியின் Climax எழுந்தேற்றம்தான்.

நற்செய்தி வாசித்தலும்,

வாசகங்களுக்கான விளக்கம்    தரும் பிரசங்கமும்

ஆண்டவரின் நற்செய்திப் பணியை நினைவுக்குக் கொண்டுவருவதால் 

அவையும் முக்கியமானவைதான்.

நற்செய்தி வாசகங்களின் நோக்கம் வெறும் செய்தி ஞானம் மட்டுமல்ல.

அந்த வார ஆன்மீக வாழ்க்கைதான் வாசிப்பின் நோக்கம்.

அதனால்தான்

அன்றைய வாசகத்தை எப்படி வாழ்வாக்குவது

என்ற விபரத்தை குருவானவர் பிரசங்கத்தில் விளக்குவார்.

விதை விதைப்பவனுடைய உவமையை இயேசுவே கூறினார்.

இறை வார்த்தையாகிய விதையை குருவானவர் நமது உள்ளமாகிய நிலத்தில் விதைக்கிறார்.

அந்த விதை முளைத்து பலன் தர வேண்டும் என்பதுதான் குருவானவரின் ஆசை.

இயேசுவின் ஆசையும் அதுதான்.

குருவானவரும், இயேசுவும் ஆசைப்பட்டால் போதுமா?

நாம்தான் உள்ளமாகிய நிலத்தைப் பண்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

பண்படுத்தி வைத்திருந்தால்மட்டும் போதாது,

காக்கா, குருவிகளிடமிருந்து விதையைப் பாதுகாக்க வேண்டும்.

அதென்ன காக்கா, குருவிகள்?

விதை நிலத்தில் விழாதபடி

விழும்போதே அபகரித்துக் கொள்ள

சாத்தான் பராக்குகளை அனுப்புவான்.

சில பராக்குகள் வெளியே இருந்து வரும்.

கோவிலை அளவுக்கு மீறி அலங்கரிப்பதும் பராக்குதான்.

பலிபீடத்தில் நடந்து கொண்டிருப்பதைக் கவனியாமல் பீட அலங்காரத்தையே இரசித்துக் கொண்டிருப்பவன்

எப்படி பூசையிலும், பிரசங்கத்திலும் கவனம் செலுத்துவான்?

Fashion show வுக்கு வருவதுபோல் dress செய்துகொண்டு வருபவர்கள்

பராக்குகளின் பிறப்பிடங்கள்!

சில சமயங்களில் நாமே நமக்கு எதிரிகளாகிவிடுவோம்.

வீட்டில் வரும் தூக்கத்தை விட பிரசங்க நேரத் தூக்கம் இனிமையாய் இருக்கும்.

விலக்கப்பட்ட கனிக்கு எப்பவுமே ருசி அதிகம்தான்!

சாமியார் பிரசங்கத்தை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்

எங்கிருந்தோ வந்த தூக்கம் கண் இமைகளில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

சிலர் தூங்கி விடுவர், சிலர் தூக்கத்தோடு போராடுவர்.

இரண்டிற்கும் net result ஒன்றுதான்.

பிரசங்கம் கேட்கும். வார்த்தைகள் காதில் விழாது.

இத்தகைய நிகழ்விலிருந்து தப்பிக்க

பிரசங்கத்திற்கு முன்பே மனவல்லப செபங்களால்

தூக்கத்திற்கு எதிராக நம்மையே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பிரசங்கம் முடிந்தவுடன் அந்த வாரத்திற்கான வழிகாட்டி வாக்கியம் ஒன்றைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு நற்செய்தி வாசகம்

எம்மாவூஸ் நகருக்கு சீடர்களோடு உயிர்த்த இயேசு சென்ற நிகழ்வு என்று வைத்துக்கொள்வோம்.

பிரசங்கத்திற்குப்பின் அந்த வார வழிகாட்டி வாக்கியம்

"இயேசுவே எங்களோடு/என்னோடு தங்கும்."

அந்த வாரம் முழுவதும் அந்த வாக்கியம்  வழிகாட்டியாய் இருக்கும்.

"இயேசுவே எங்களோடு வாரும்."

"இயேசுவே எங்களோடு பேசும்."

போன்ற வாக்கியங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்த வாரம் முழுவதும் அந்த செப விதையை

மறதி, அசமந்தம், சம்பந்தம் இல்லாத கற்பனைகள் போன்ற

காக்கா, குருவிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்காக அவற்றை உள்ளத்தில் ஆழப்பதித்து,  அப்பப்போ வாய்க்கும் கொண்டுவர வேண்டும்.

அவை நமக்கு வழிகாட்டியயாய் மட்டுமன்றி வழியாயும் பயன்பட வேண்டும்.

அந்தந்த வார வார்த்தைகள் அந்தந்த வாரத்திற்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் பயன்பட வேண்டும்.

நமக்குச் சோதனைகள் வரும்போதெல்லாம் அவற்றைப் பாதுகாப்புக் கேடையமாகப் பயன்படுத்துவோம்.

ஒவ்வொரு வாரமும் இதைச் செயல்படுத்தினால் நாமே  இறை வார்த்தைகளின் பொக்கிசமாக மாறிவிடுவோம்.

வானத்துப் பறவைகளிடமிருந்து இறைவார்த்தையைப் பாதுகாத்து,

வாழ்நாளெல்லாம் பயனடைவோம்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment