Friday, July 12, 2019

தாழ்ச்சியாய் இருப்போம். கர்வத்தை வெல்வோம்.


தாழ்ச்சியாய் இருப்போம். கர்வத்தை வெல்வோம்.
------------------------------------------------

கடவுள் ஒருவர், மூன்று ஆட்கள்.

மூன்று ஆட்களுக்கும்  ஒரே தேவசுபாவம்.

தேவசுபாவம் ஒன்று, ஆகவே கடவுள் ஒன்று.

முதல் ஆள், பிதா.

இரண்டாம் ஆள், சுதன்(இயேசு).
சுதனுக்கு இரண்டு சுபாவங்கள்,
தேவ சுபாவம், மனிதசுபாவம்.
இயேசு கடவுள்.
இயேசு  மனிதன்.

மூன்றாம் ஆள்,  பரிசுத்த ஆவி.

மூன்று ஆட்களும் ஒரே கடவுளாய் இருப்பதால்
மூவருக்கும் ஒரே சித்தம்.
மூவருக்கும் ஒரே வல்லமை.
மூவருக்கும் ஒரே ஞானம்.

இயேசு  "என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று சொல்லும்போது பிதாவின் விருப்பம் வேறு,  இயேசுவின் விருப்பம் வேறு
என்பது போல் தோன்றும்.

ஆனால் இயேசுவுக்குத் தெரியும்  இருவரின் விருப்பமும் ஒரே விருப்பம்தான் என்று.

இதைப் புரிந்து கொள்ளவேண்டிய விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மனித அனுபவத்தில்,

கணவன் ஒரு பொருளை விரும்புகிறான், மனைவி அதேபொருளை விரும்புகிறாள் என்றால்'

'எனது விருப்பம்தான் உங்கள் விருப்பம்'  என்று சொல்லுவோம்.

அதன் பொருள் 'உங்களைப் போன்றே நானும் அந்தப் பொருளை விரும்கிறேன்' என்பதுதான்.

'போன்றே'  என்ற வார்த்தைக்கு இறை விருப்பத்தில் இடம் இல்லை.

பிதாவுக்கும் சுதனுக்கும்  'ஒரே விருப்பம்.'

'ஜோசப்பைப் போலவே அவன் மகனும் ஆசிரியர்'னு சொல்கிறோம்.

ஆனால்  'பிதாவைப்போலவே சுதனும் கடவுள்'னு சொல்லக்கூடாது.

ஏனெனில் பிதாவும், சுதனும், பரிசுத்த ஆவியும் 'ஒரே கடவுள்.' (One God).

அதேபோல்தான்,

பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் 'ஒரே சித்தம்.'

மனித மொழியைத்தான் இறைவனைப் பற்றிப் பேச பயன்படுத்துகிறோம்.

சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசுவைப் பற்றிய, இயேசு சொல்லுகின்ற வார்த்தைகட்கு நமது அகராதியை வைத்துக் கொண்டு அர்த்தம் பார்க்கக்கூடாது.

அவர் சொல்ல விரும்புவதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

மனித உரு எடுத்தது யார்?

கடவுள்.

பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய மகன்.

எதற்காக மனுவுரு எடுத்தார்?

நம்மை இரட்சிப்பதற்காக.

மகன் கன்னி மரியாளிடம் பிறந்து,

நற்செய்தியை அறிவித்து,

பாடுகள் பட்டு,

சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இயேசுவின் இரட்சண்யப் பணியில் பிதாவுக்கும், பரிசுத்த ஆவிக்கும் பங்கு உண்டா?

கடவுளைப் பங்கு போடமுடியாது,
பிரிக்க முடியாது.

எந்த நிலையிலும் ஒரே கடவுள்தான்.

மகன் மனிதன் ஆகும்போது தேவசுபாவத்தை அப்படியே வைத்துக் கொண்டு,

மனித சுபாவத்தையும் எடுத்துக் கொண்டார்.

மனித சுபாவத்தில்தான் பாடுபட்டார்.

ஆனாலும் பாடுபட்டது தேவ ஆள்.

ஆகவே கடவுள்தான் மரியாளின் மகனாகப் பிறந்தார்,

கடவுள்தான் நற்செய்தி அறிவித்தார்.

கடவுள்தான் பாடுபட்டு மரித்தார்.

கடவுளைப் பிரிக்க முடியாது,

அதாவது மகன் 'மூன்றில் ஒரு கடவுள்' அல்ல,

பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுள்.

மனுவுரு எடுத்தது இரண்டாம் ஆளாகிய மகன் மட்டும்தான்,

ஆனால் இரட்சண்யத்திற்கான அத்தனையும் செய்தது,

நம்மை இரட்சித்தது பிரிக்கமுடியாத ஒரே கடவுள்.

தந்தையோடு  ஒரே கடவுளாக இருக்கும் மகன் ஏன்,

"தந்தை என்னிலும் மேலானவர்."
(அரு.14;28),

என்று சொன்னார்?

"தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
பிலி.2:7,8)

என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் அதற்கான விளக்கத்தைக் கொடுக்கும்.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் நமக்கு ஒரு நற்செய்தியை அறிவிப்பது மட்டுமல்ல,

அவர் நமக்கு முன் மாதிரியாக வாழ்ந்தார் என்பதையும் சுட்டிக்காட்டும்.

'நமக்குத் தாழ்ச்சியைக்  கற்பிக்க
சர்வ வல்லபரான மகன்

மனித உருவில் தோன்றி,தம்மைத் தாழ்த்தினார்.'

ஆன்மீகப் பயணத்தின் துவக்கமும், நடுவும், முடிவும் தாழ்ச்சிதான்.

லூசிபெருக்கு (Lucifer) தாழ்ச்சி இருந்திருந்தால் அவன் வீழ்ந்திருக்க மாட்டான்.

அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் அவனுடைய கர்வம்.

கர்வம் அவனை வீழ்த்தியது.

அவன் மனித குலத்தை பாவத்தில் விழச் செய்தான்.

ஆகவே நமது வீழ்ச்சிக்கு ஆதிகாரணம் கர்வம்.

வீழ்ச்சியிலிருந்து நாம் எழவேண்டுமானால் 

கர்வத்திற்கு எதிரான 'தாழ்ச்சி'யிருந்தால்தான் முடியும்.

ஆகவேதான் நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவந்த இறைமகன்

'அடிமையின் தன்மை பூண்டு,

மனிதருக்கு ஒப்பாக மனித உருவில் தோன்றி,

தம்மைத் தாழ்த்திச்

சாவை ஏற்கும் அளவுக்கு,

அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.'

நமக்குத் தாழ்ச்சியைக் கற்பிக்க

"தந்தை என்னிலும் மேலானவர்."

என்கிறார்.

இறைமகன் மனுமகனாய்ப் பிறந்தபோதே

பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும்

தன் மனித சுபாவத்தில்

தானே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

ஆகையால்தான் செத்சமனித் தோட்டத்தில் மனித பலகீனமான பயத்தை வெளிப்படையாகவே காண்பித்தார்.

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: "

என்று கூறும் அளவிற்குப் பயத்தை வெளிப்படுத்தினார்.

அப்படிப்பட்ட சமயங்களில் நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதைக் காண்பிக்கவே

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்."

பாடுபடவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றவே கடவுள் மனிதன் ஆனார்.

அந்தக் கடவுள்தான் இயேசு.

சர்வ வல்லபரான இயேசு நமக்கு பாடம் கற்பிக்க நம் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தி இவ்வாறு செபிக்கிறார்.

நமக்குத் துன்பம் வரும்போது இயேசுவின் வார்த்தைகளைப் பயன்படுத்தியே செபிக்கவேண்டும்.

"விண்ணிலிருக்கும் எங்கள் தந்தையே!

பயங்கர வலியால் அவதிப்படுகிறேன்.

தந்தையே,

உமக்கு விருப்பமானால், இந்த வலியை என்னிடமிருந்து அகற்றியருளும்:

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்."

இறைவனுக்கு விருப்பமானால் வலி நீங்கும்.

வலி நீடிக்க வேண்டுமென்பது அவரது சித்தமானால் அது நீடிக்கும்.

என்ன நேர்ந்தாலும் நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

இயேசு சர்வ வல்லமையுள்ள, அளவற்ற ஞானம் உள்ள கடவுளாக இருந்தாலும் அவருடைய பேச்சில் தாழ்ச்சி இருக்கும்.

அதற்கு ஒரு உதாரணம்:

விசுவாசத்தின் சக்தியை விளக்கவந்தவர் இவ்வாறு கூறுகிறார்,

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும்: செய்வான்: ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்: 
(அரு.14:12)

இயேசு மீது விசுவாசம் உள்ளவர்கள் அவர் செய்கிற காரியங்களை விட பெரிய காரியங்களைச் செய்வார்கள் என்று அவர் கூறுகிறார்.

இந்த வாக்கியம் ஒரே சமயத்தில் விசுவாசத்தின் வல்லமையையயும், இயேசுவின் தாழ்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது.

அவர் சர்வ வல்லவர்.

நாம் விசுவாசத்தின் மூலம் சாதிக்க வேண்டுமானால் அவர்மூலம்தான் சாதிக்க முடியும்.

ஆகவே அவர் செய்த சாதனைக்குப் பெருமை அவருக்குதான்   போய்ச்சேரவேண்டும்.

அவர் தன் பெருந்தன்மையால் அதை நமது விசுவாசத்துக்குக் கொடுக்கிறார்.

குணம் கொடுப்பது அவராக இருந்தாலும், அவர் சொல்வது,
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று!"

இயேசுவைப்போல் தாழ்ச்சியாய் இருப்போம்.கர்வத்தை வெல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment