Saturday, June 29, 2019

அன்பு செய்வது அவ்வளவு எளிதா?

அன்பு செய்வது அவ்வளவு எளிதா?
++++++++++++++++++++++++

தேனாய் இனிக்கிறது தேன்,  ஆனால் அதைச் சுவைத்துப் பார்ப்பது அவ்வளவு எளிதா?

சுவைத்துப் பார்க்க அது நாவிற்கு வரவேண்டும்.

நாவிற்கு வருமுன் கைக்கு வரவேண்டும்.

அது கைக்கு வருமுன் மரத்தின் உச்சியில் தேனீக்கள் கட்டியுள்ள கூட்டை அடையவும்

தேன்அடையை எடுக்கவும் படவேண்டிய கஸ்டத்தை

மரம் ஏறி, தேனீக்களிடமிருந்து முகமெங்கும் கொட்டு வாங்கியவர்களே அறிவார்கள்!

காதலிப்பதும் கல்யாணம் புரிவதும் இனிமையான அனுபவங்கள்தான்.

ஆனால் அந்த அனுபவங்களை அனுபவிக்க படவேண்டிய கஸ்டங்கள் பட்டவனுக்குதான் தெரியும்.

புதிய வீட்டில் குடியேறுவது மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதற்காகப் படவேண்டிய கஸ்டங்கள்?

கட்டியவனைக் கேளுங்கள், அவன் சொல்லுவான்.

அன்பு செய்வதும் அப்படித்தான்.

நம்மை அன்பு செய்கிற கடவுள்,  நமது அன்பைப் பெறுவதற்காக பட்ட கஸ்டங்கள்!

சிலுவையைக் கேளுங்கள்!
தன் கண்ணீர் அனுபவத்தைச் சொல்லும்!

அன்பு மயமான கடவுள் நம்மைப் படைத்தது அன்பு செய்வதற்கு மட்டும்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்ய,

நம்மைப் போல் நம் அயலானை அன்பு செய்ய.

உலகத்திலேயே மிக இனிமையான காரியம் அன்பு செய்வதுதான்,

மிகக் கடினமான காரியமும் அன்பு செய்வதுதான்.

இருதயத்தில் மட்டுமே அன்பு செய்து கொண்டிருப்பது மிக எளிது.

ஆனால் அது முழுமையான அன்பு அல்ல.

அது Starting point தான்.

பந்தய ஓட்டம் ஓடுபவன் துவக்கக் கோட்டிலேயே அசையாமல்   நின்று கொண்டிருந்தால் எப்படி வெற்றி பெறுவான்?

ஓடினால்தான் முடிவுக்கோட்டைக் கடக்க முடியும்.

இருதயத்தில் பொங்கிவரும் அன்பு சொல்லிலும் செயலிலும் இறங்கி அன்பு செய்யப்படுவோரை மகிழ்விக்க
வேண்டும்.

அது எளிதான காரியமல்ல.

கடினமானது மட்டுமல்ல, கஸ்டங்களும், பிரச்சனைகளும் கூட  நிறைந்ததாக இருக்கும்.

நம் ஆண்டவர் இயேசு நம்மீது கொண்டுள்ள  தன் அன்பை சொல்லிலும், செயலிலும் காட்ட விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிவந்தார்.

பாவிகளாகிய நம்மைத் தேடிவந்தவர் நமக்காகப் பட்ட அவமானங்களும்,கஸ்டங்களும் கொஞ்சமா?

நம்மீது அவருக்கிருந்த அன்பு அவருக்குப் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் தேடித்தந்தது. 

அதுதான் முழுமையான அன்பு.

நம்மை சிலுவை மூலம் அன்பு செய்த இயேசுவை நாம் எப்படி அன்பு செய்கிறோம்?

இயேசுவை நோக்கி,

"Jesus, I love you."

"இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்."

என்று அடிக்கடி சொல்கிறோம்.

நமது இருதயத்திலிருந்து எழுந்துவரும் இந்த செபம் இனிமையானது மட்டுமல்ல, சக்திவாய்ந்ததும்கூட.

சொல்லால் நமது அன்பைத் தெரிவித்த நாம், செயல்மூலம் எப்படித் தெரிவிப்பது? 

அதற்காகத்தான் நம்மைத் தனியாகப் படைக்காமல் ஒரு குடும்பத்தில் படைத்திருக்கிறார். 

நாம் பிறந்து வளரும் சிறிய அமைப்பு மட்டுமல்ல, மனித சமுதாயமே நமது குடும்பம்தான்.

மனித குலத்தினர் அனைவரும் நமது சகோதர, சகோதரிகள்தான்.

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

நமது அயலானுக்கு  நாம் என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கே செய்கிறோம்.

அயலானை நேசிக்கும்போது, இயேசுவையும் நேசிக்கிறோம்.

அயலானை நேசிக்காவிட்டால் இயேசுவை நேசிக்கிறோம் என்று சொல்வது பொய்.

"நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு, ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்." (1அரு.4:20)

அயலானை நேசிப்பது அவ்வளவு எளிதான காரியமா?

அயலானை நேசிப்பது அதாவது பிறரன்பு ஒரு தடை ஓட்டம் (Obstacle race) மாதிரி.

தடையோட்ட களத்தில் இடையூராக தடைகள் நிறைய இருக்கும்.

அவற்றை எல்லாம் தாண்டி ஓடி வெல்ல வேண்டும்.

பிறருக்கும் நமக்கும் இடையே உள்ள தடைகளுக்கு கணக்கே கிடையாது.

"என்னை வெறுப்பவனை நான் எப்படி அன்பு செய்வது? "

இங்கே வெறுப்பு ஒரு தடையாக இருக்கிறது.

அத்தடையைத் தாண்டி அவர்களை அன்பு செய்ய இயேசு கேட்கிறார்.

"உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? "

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்."

நம்மை வெறுப்பவர்களை நேசிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு நன்மையும் செய்ய வேண்டும்.

இது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஆனால் இயேசுவின் அருளால் எல்லாம் முடியும்.

பகைவரையும் நேசிக்க அருள்வரம் கேட்டு இயேசுவை மன்றாட வேண்டும்.

சாதி, சமய, இன வேறுபாடுகள் போன்ற தடைகளும் இடையே வரும்.

எல்லோரும் நம்மைப் படைத்த அதே தந்தையின் பிள்ளைகள்தான் என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இத்தடைகள் நீங்கிவிடும்.

நமது அன்பைக் காண்பிக்க இயலாத சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

நமது மனிதகுடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம்  போன்ற இயற்கை நிகழ்வுகளால் வெளிநாடுகளில் மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தால் நாம் நேரடியாக நமது அன்பைத் தெரிவிக்க இயலாது.

பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதன்மூலம் நமது அன்பைக் காட்டவேண்டும்.

அன்பைப் பரிமாறிக்கொள்ள எளிய வழிகள் நிறைய உள்ளன.

சந்திப்பவர்களை நோக்கி புன்முறுவல் பூப்பது,

அவர்களின் நலன் விசாரிப்பது,

அவர்களை வாழ்த்துவது,

அவர்களுக்கு ஆறுதல் கூறுவது,

அவர்களிடம் மகிழ்ச்சியோடு பேசி நமது மகிழ்ச்சியை அவர்களோடு பரிமாறிக்கொள்வது

இவை எல்லாம் செலவே இல்லாத எளிய வழிகள்.

மற்றவர்களைப் பற்றி கெடுத்துப் பேசாதிருப்பது மிக எளிய வழி.

சிலருக்கு இது கடினமான வழியாகத் தோன்றலாம்.

பிறரைக் கெடுத்துப் பேச சோதனை வந்தால் வாயைத் திறக்காமலே இருப்பது நல்லது.

தடைகளைத் தாண்டி அன்பு செய்வோம்.

கொடைகளின் வள்ளலாம் ஆண்டவர் அருள் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment