"குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்."(லூக்.9:11)
++++++++++++++++++++++++
"அதை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அவர்களை வரவேற்றுக் கடவுளின் அரசைப்பற்றி அவர்களுக்குப் போதித்து, குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்." (லூக்.9:11)
இயேசு தன்னைப் பின்தொடர்ந்த மக்களுக்குக் கடவுளின்
அரசைப்பற்றிப் போதித்தார்.
குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்.
முதலாவது இறையரசைப்பற்றி
போதித்தார்.
அடுத்து நோயாளிகளைக் குணமாக்கினார்.
லூக்காஸ்
'நோயாளிகளை' என்று எழுதாமல்
'குணமாக வேண்டியவர்களை'
என்று எழுதுகிறார்.
ஏன்?
குணமாக வேண்டாதவர்களும் இருக்கிறார்களா?
கடவுளின் பராமரிப்பைப் பற்றி தியானித்தால்
கடவுள் ஒவ்வொரு மனிதனையும் படைக்குமுன்பே அவனுக்கென்று ஒரு பராமரிப்புத் திட்டத்தை நித்தியகாலமாகவே வைத்திருப்பதும்,
அவர் தன் திட்டத்தின்படியே பராமரிப்பதும் புரியும்.
நமது கடந்த கால வாழ்வின் நிகழ்வுகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்
சில உண்மைகள் புரியவரும்.
சில நிகழ்வுகள் நாம் கேட்காமலேயே நிகழ்ந்திருக்கும்.
சில செபத்தில் கேட்டு நிகழ்ந்திருக்கும்.
சில கேட்டும் நிகழ்ந்திருக்காது.
நாம் எந்த ஊரில், எந்தக்குடும்பத்தில்,
எந்த சீதோஸ்ணப்பகுதியில்
பிறந்து வளர வேண்டுமென்பது இறைவன் வகுத்த திட்டம்.
நாம் கேட்டு இறைவன் நம்மைப் படைக்கவில்லை.
படைத்த பின்புகூட நாம் கேட்காமலேயே அநேக காரியங்களை நமது வாழ்வில் நிகழ்த்திவருகிறார்.
நான் இத்தனை ஆண்டுகள் உலகில் வாழ வேண்டும் இறைவனிடம் கேட்கவே இல்லை.
ஆனாலும் என்னை 82 ஆண்டுகளாக வாழவைத்திருப்பது அவரது பராமரிப்பு.
இந்நென்ன நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்டு,
நாம் கேட்டபடி நடந்த நிகழ்வுகளும் நம் வாழ்வில் இருக்கின்றன.
சில நிகழ்வுகள் நடக்க வேண்டும் இறைவனிடம் கேட்டும் நிகழாதவையும் உண்டு.
உலக நோக்கில் பேசுபவர்கள்,
"ஆண்டவரிடம் கெஞ்சிக் கேட்டேன், அவர் தரவில்லை"
என்று வருத்தத்தோடு கூறுவார்கள்.
உலகக் கண்ணோக்கோடு பார்க்காமல் நமது விசுவாசக் கண்ணோடு நோக்கினால்
இறைவன் திட்டப்படி நடந்தவை எல்லாம் நமது ஆன்மீக நன்மைக்குதான் என்பது புரியும்.
நாம் கேட்டும் தராப்படாதிருந்தாலும் அதுவும் நமது நன்மைக்கே.
நமக்கு எது நன்மை பயக்கும் இறைவனுக்கு தெரியும்.
நோய்கள் நாம் சுமக்க வேண்டிய சிலுவைகள், நாம் சுமக்க வேண்டும் என்பதற்காகவே இறைவனால் அனுமதிக்கப் படுபவை.
ஆனாலும் அவற்றின் பழுவைக் குறைக்க வேண்டுமென்றோ,
அவற்றை முற்றிலும் நீக்க வேண்டுமென்றோ
இறைவன் நமது அன்புள்ள தந்தை என்ற முறையில் அவரிடம் வேண்டுவதற்கு நமக்கு முழு உரிமை உண்டு.
இயேசுவே அதற்கு ஒரு உதாரணம்.
பாடுகள்பட்டு மரித்து பலியாக வேண்டும் என்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்தவர் நம் ஆண்டவர்.
அதற்காகவே அவர் பாவம் தவிர
(அவரால் பாவம் செய்ய முடியாது, ஏனெனில் அவர் கடவுள்.)
எல்லா மனித பலகீனங்களையும் தன் மனித சுபாவத்தில் ஏற்றுக் கொண்டார்.
பயம் ஒரு மனித பலகீனம்.
தான் அனுபவிக்கப் போகும் பாடுகளின் வேதனையை முன்னறிந்து,
பயந்து, பயத்தில் இரத்த வேர்வை சிந்தி, தன் தந்தையை நோக்கி,
"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:
எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"
என்று செபித்தார்"
இயேசுவைப் போலவே நாமும்
செபிக்கலாம்.
நமது செபமும்
"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"
என்ற வார்த்தைகளோடு நிறைவு பெற வேண்டும்.
நமது வார்த்தைகள் இருதயத்திலிருந்து வரவேண்டும்.
அப்போதுதான் நாம் கேட்டது கிடைத்தாலும்,கிடைக்கா விட்டாலும்,
நிறைவேறியது இறைவன் சித்தம்தான் என்று மகிழ்ச்சியோடிருப்போம்.
நாம் சுகமில்லாதிருக்கும்போது
நாம் நமது சுகத்திற்காக வேண்டும்
செபம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்
நாம் குணமாக வேண்டியவர்கள்.
ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால் சிலுவையைச் சுமக்கவேண்டியவர்கள்.
இரண்டுமே இறைவன் சித்தம்தான்.
இயேசுவும் அதைத்தான் செய்தார்.
தன் துன்பக்கலம் நீங்கும்படி செபித்தாலும்,
பிதாவின் சித்தப்படி சிலுவையைச் சுமந்தாரே!
"விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே,
உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல
இவ்வுலகிலும் நிறைவேறுக."
என்பதுதான் இயேசுவே நமக்குக் கற்றுத்தந்த செபம்.
சில சமயங்களில் கடவுள் நமக்கு சிலுவைகளை அனுப்புவது நாம் அவரை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
நாம் கடவுளை மறந்திருக்கும்போது,
நமது மறதியிலிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்து,
அவரோடு செபத்தொடர்பை ஏற்படுத்துவதற்காகவே சிலுவைகளை அனுப்புவார்.
உண்மையில் அவரது அருள் உதவியின்றி
நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.
ஆனால் பிரச்சனை ஏதும் இல்லாதிருக்கும்போது
ஏதோ நமது திறமையினாலேயே நாம் சாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கர்வம் ஏற்பட்டால்,
அக்கர்வத்திலிருந்து நம்மை மீட்டு, அவர்பால் ஈர்ப்பதற்காக ஒரு சிலுவையை அனுப்புவார்.
அது நோய் , தொழிலில் நட்டம், குடும்பத்தில் பிரச்சனை போன்ற எந்த ரூபத்திலாவது வரலாம்.
எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் சுயமாக தீர்வுகாண முடியாத அளவில் இருக்கும்.
அப்போதுதான் கடவுள் இருப்பதே நமது ஞாபகத்திற்கு வரும்.
இந்த நிலையில் நாம் கடவுளை நேரடியாகவோ புனிதர்கள் மூலமாகவோ தேட ஆரம்பிப்போம்.
கடவுளை நோக்கி மன்றாடுவோம்.
விசுவாசத்தோடு மன்றாடினால் நமது மன்றாட்டு கேட்கப்படும்.
துன்பங்கள் நீங்கியபின் நாம் கடவுளை மறந்துவிடக்கூடாது.
நமக்கு சிலுவைகள் வருவதே நமக்கு இரட்சண்யம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
ஆகவே என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
இறைவன் நம்மைக் காப்பார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment