Friday, June 7, 2019

ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார்.

ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார்.
******************************

சோகங்களில் எல்லாம் மிகப்பெரிய சோகம்

"தனக்கென்று கவலைப்பட யாருமே இல்லையே" என்று அனாதைபோல் நினைக்கும்போது ஏற்படுகிற  சோகம்தான்.

தான் அழும்போது தன் கண்ணீரைத் துடைக்க யாருமே இல்லை என்று நினைப்பவனுக்கு இந்த அழகான உலகம் இருந்தும் பயனில்லை.

இத்தகைய சோகத்தில் ஆழ்வோர் முக்கியமான ஒரு உண்மையை மறந்துவிடுகின்றனர்.

தாங்கள் யார் என்பதை.

நாம் நம் தாயின் வயிற்றில் கருவுரு முன்பு எங்கு இருந்தோம்?

ஒன்று மில்லாம லிருந்தோம் என்ற வழக்கமான பதிலைக் கூறாமல்,

இதைவிட சரியான பதில் ஒன்று இருக்கிறது

அதைக்கூற வேண்டும்.

நாம் இருந்தோம்.

தாயின் வயிற்றில் கருவுரு
முன்பு மட்டுல்ல,

இந்த உலகமே படைக்கப்படு முன்பே நாம் இருந்தோம்.

"நாம் அவரது திருமுன் பரிசுத்தரும் மாசற்றவருமாய் இருக்குமாறு, உலகம் உருவாகு முன்னரே அவர் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார்."(எபேசி.1:4)

எங்கு இருந்தோம்?

இந்தப் பிரபஞ்சமே படைக்கப்படு முன்பே

அதைப் படைத்த சர்வ வல்லப கடவுளின் உள்ளத்தில் நாம் ஒவ்வொருவரும் இருந்தோம்,

சத்தியமாக இருந்தோம்.

கடவுள் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

அவருடைய உள்ளத்தில் நாமும் நித்திய காலத்திலிருந்தே இருந்தோம்,

இப்பொழுதும் இருக்கிறோம்.

எப்பொழுதும் இருப்போம்.

வினைச் சொல்லின்  காலத்தை (tense) கடவுளுக்குப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனம் தேவை.

உலகில் பிறந்த நமக்கு, உலக சொல்லியல்படி காலம் உண்டு.
(நிகழ் காலம், இறந்த காலம் எதிர்காலம்.)

ஆனால்,

கடவுள் காலங்களைக் கடந்தவர்.

இருந்தாலும் நாம் புரிந்து கொள்வதற்காக மனித மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆகவே மனித மொழியில்

'கடவுள் நித்திய காலமாக இருக்கிறார்.' (Ever present tense, நித்திய நிகழ்காலம்)

ஆகவே நாமும் கடவுளோடு நித்திய காலமாக இருக்கிறோம்.

அது எப்படி?

இருத்தல் (Being) இரண்டு நிலையிலானது.

1.எண்ணமாக (idea) இருத்தல்.
2. உண்மையாக(Reality) இருத்தல்.

நாம் வீடுகட்ட ஆசைப்பட்டால் முதலில் திட்டமிடுகிறோம்.(Plan)

அப்புறம் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

வீட்டிற்கான திட்டம், உண்மையான வீடாக மாறுகிறது.

நாம் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டவர்கள்.

உண்மை சாயலில் பிரதிபலிக்கும்.

கடவுள் ஒவ்வொரு சிறு பொருளையும்,

அது ஒரு சிறு கொசுவாக இருந்தால்கூட,

திட்டமிட்டபின்தான் படைக்கிறார்.

அவரது திட்டம் நித்தியமானது.

நாம் அவரது நித்திய திட்டத்தில்,

நித்திய காலமாக

அவர் உள்ளத்தில் ideaவாக இருந்தோம்.

ஒரு நாள் அவர் திட்டப்படி real beingஆக மாற்றப்பட்டோம், அதாவது படைக்கப்பட்டோம்.

நாம் எங்கு, யாரிடம் பிறப்போம்,
எப்படி வளர்வோம்,
என்னென்ன குறும்பு பண்ணுவோம்,
எங்கு படிப்போம்,
எப்படிப் படிப்போம்,
என்ன வேலை பார்ப்போம்,
யாரைக் கல்யாணம் செய்வோம், எத்தனை பிள்ளைகள் பெறுவோம்,
எப்போது எப்படி இறப்போம்
என்ற எல்லா விபரங்களும் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

ஆகவே  நாம்    கடவுளின் உள்ளத்தில் நித்திய காலமாக,  இருக்கிறோம்,

பிறக்குமுன் எண்ணமாகவும், மனிதனாக கருத்தரித்தபின் உண்மையாகவும்.

ஒரு சிறு குழந்தை கடவுளிடம் வேண்டியதாம்:

"கடவுளே,  நாங்கள் உமது கரங்களில்தான் இருக்கிறோம்.

உமக்கு ஒரு பிரச்சனையும் வராதவரை எங்களுக்கும் ஒரு பிரச்சனையும் வராது.

நீர் நல்லா இருந்தால் நாங்களும் நல்லா இருப்போம்.

ஆகையினால உம்மைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளும்.

எங்களுக்கு அது போதும்."

ஒவ்வொரு முறை நற்கருணைப் பேழை முன் போகும்போதெல்லாம் அது சொல்லுமாம்,

"ஆண்டவரே, நல்லா இருக்கீங்களா?

நல்லா இருங்க.

வரட்டுமா?

நீங்களும் என்கூட வாங்களேன்!"

நாமும் குழந்தைகளாக மாற வேண்டும்.

மாறினால் ஒரு உண்மை புரியும்:

"நமது கஸ்ட காலத்தில் இந்த உலகமே நம்மைக் கைவிட்டாலும்,

ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார்.

அவரால் நம்மைக் கைவிட முடியாது."

நாம் எப்போதும் இறைவனின் உள்ளத்தில்தான் இருக்கிறோம்.

பிறக்கு முன்பும் அங்குதான் இருந்தோம்.

இப்போதும் அங்குதான் இருக்கிறோம்.

இறந்தபின்னும் அங்குதான் இருப்போம்.

கடவுள் நம்மைக் கைவிடமாட்டார்.

நாம் அவரைக் கைவிட்டுவிடக்கூடாது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment