Monday, June 17, 2019

நீங்கள் பெற்ற கடவுளின் அருளை வீணாக்க வேண்டாம்." (2கொரி.6:1)

"நீங்கள் பெற்ற கடவுளின் அருளை வீணாக்க வேண்டாம்."
(2கொரி.6:1)
+++++++++++++++++++++++++

நமது பெற்றோரைப் பற்றி நமக்குத் தெரியும்.

பெற்றோர் தம் வாழ்நாளின் ஒவ்வொரு மூச்சையும் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவும்,  உயர்வுக்காகவும்தான் அர்ப்பணம் செய்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.

பெற்றோரின் அர்ப்பண வாழ்வைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுகிற பிள்ளைகளும் இருக்கிறார்கள்,

அதை வீணாக்கி தங்கள் வாழ்வையே வீணாக்குகிற பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இறைவன் ஒரு நல்ல தந்தை. அன்பே உருவானவர்.

உலகப் பெற்றோர் தங்கள் திருப்திக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே குழந்தைகளைப் பெற்று வளர்க்கின்றனர்.

ஆனால் இறைத்தந்தை நாம் இல்லாமலேயே நிறைவானவர்.

அவரது பண்புகள் அனைத்துமே அளவற்றவை,  நிறைவானவை.

தந்தை, மகன், தூயஆவி

ஆகிய மூன்று தேவ ஆட்களும்

ஒரே கடவுளாய்

அளவற்ற அன்புடன் வாழும்

நித்திய வாழ்வே

பரிபூரணமானது.

நம்மால் அவரது  பரிபூரணத்திற்கு ஏதும் சேர்க்க இயலாது.

We cannot add to His perfection.

கடவுள் நம்மை நமது நன்மைக்காகவே படைத்தார்.

அவரது அன்பின் மிகுதியால் நம்மை அவரது சாயலாகவே படைத்தார்.

அன்பு, நீதி, ஞானம், சுதந்திரம் போன்ற அவரது பண்புகள் அனைத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பகிர்ந்துகொண்டது மட்டுமன்றி அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டிய அருளையும் (Grace) குறைவின்றி தருகிறார்.

அவரது அருளின்றி நம்மால் நற்செயல் எதுவுமே செய்ய இயலாது.

நமது சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டிய அருளைத் தருகிறார்.

அவர் தரும் அருளைப் பயன்படுத்தாததின் விளைவுதான் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்.

அருள் நமது ஊனக் கண்ணால் பார்க்கப்படக்கூடிய பொருள் அல்ல.

இறைவன்

நமது ஆன்மீக வாழ்வில்

பாவங்களைத் தவிர்த்து,  புண்ணியத்தில் வளர

நமக்கு இலவசமாக தரும்

தெய்வீக உதவியே (Divine favour) அருள் எனப்படும்.

நமது ஆன்மாவினால் இந்த உதவியை அதாவது அருளை உணர முடியும்.

உதாரணத்துக்கு,

கற்புக்கு எதிராகப் பாவம் செய்ய சோதனை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

சோதனை வந்தவுடனே கடவுளின் அருள் தன் வேலையை ஆரம்பிக்கும்.

சிற்றின்பத்திற்கு எதிரான உணர்வுகள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.

மனதில் பாவத்திற்கு எதிரான உந்துதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

அருளினால் உந்தப்பட்டு மனசாட்சி நம்மை எச்சரித்துக் கொண்டேருக்கும்.

இன்னொருபுறம் சாத்தான் சிற்றின்ப ஆசையைத் தூண்டிக் கொண்டிருப்பான்.

சாத்தானுக்கும் நமக்குமான இந்தப் போரில் நாம் இறையருள் பக்கம் நின்று சாத்தானை எதிர்க்க வேண்டும்.

சாத்தானின் சோதனை அதிகமாயிருந்தால், 

சிலுவை அடையாளம் வரைந்து,

இன்னும் அதிகமான அருளுதவியை இறைவனிடம் கேட்டு செபிக்க வேண்டும்.

அருளின் வரத்து அதிகமாகும்.

சிலுவை அடையாளத்தையும், செபத்தையும் காணும் சாத்தான் பின்வாங்குவான்.

நாமும் சோதனையில் வெற்றி பெறுவோம்.

நாம் கேட்காமலேயே இறைவன் தரும் அருளையும் கவனியாமல் வீணடித்துவிட்டு,

அருள் உதவியைக் கேட்டு செபிக்காமலும் இருந்தால்

சோதனை நம்மை வென்று விடும்.

நமது தோல்விக்கு நாம்தான் பொறுப்பு.

நாம் பாவத்தில் விழுந்து விட்டாலும் இறைவன் சும்மா இருக்கமாட்டார்.

பாவத்திற்கு மனஸ்தாபப் படுவதற்கான அருளைப் பொழிந்து கொண்டுதான் இருப்பார்.

பாவம் அதிகம் உள்ள இடத்திற்கு  அருளின் வரத்து அதிகமாக இருக்கும்.

அருளுடன் ஒத்துழைத்து பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு,

பாவசங்கீர்த்தனத்தின் மூலம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் தரும் அருளை வீணாக்கக்கூடாது.

இறைவனது அருள் வேறு வழிகள் மூலமும் நமக்கு அனுப்பப்படும்.

இறை வார்த்தையை ஒழுங்காகப் பக்தியுடன் வாசிக்கும்போதெல்லாம்

பாவத்திற்கு எதிராகவும், புண்ணியவாழ்வுக்கு ஆதரவாகவும் இறையருள் நம்மீது இறங்கிக்கொண்டே இருக்கும்.

மனவல்லப செபங்கள்,

செபமாலை,

திருப்பலி,

சுவாமியாரின் பிரசங்கம்,

திவ்ய நற்கருணை விருந்து,
(அருளின் மிகப்பெரிய ஊற்று)

சிறியசிறிய பிறர் உதவிச் செயல்கள்,

கஸ்டங்களை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல்...

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இறைவனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் அருளின் ஊற்றுதான்.

இதில் விசேசம் என்னவென்றால்,

ஒரு நற்செயல் செய்ய இறைவன் தரும் அருளை நாம் பயன்படுத்தினால்,

அந்நற்செயல் இன்னும் அதிக அருளைப் பெற்றுத்தரும்.

இதனால் நற்செயல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

அருளின் வரத்து அதிகமாகிக் கொண்டே வரும்.

அருளின் வரத்து அதிகமாக அதிகமாக

சோதனைகளை வெல்வதும்,

புண்ணியங்களை ஈட்டுவதும் எளிதாகும்.

இறைவனுக்காக வாழும் செபவாழ்வின் ஒவ்வொரு செயலும் நற்செயல்தான்,

ஒவ்வொரு நற்செயலும் அருளின் ஊற்றுதான்.

நாம் பெறும் தேவத்திரவிய அனுமானங்கள் நமக்கு மிக அதிக அளவில் இறைவனின் அருளை ஈட்டித் தருகின்றன.

தேவத்திரவிய அனுமானங்களும், நமது நற்செயல்களும்தான்

நமது இரட்சண்ய பாதையில் நம்மைப் பத்திரமாக சுமந்து செல்லும் வாகனங்கள்.

இறையருள் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

அதை வீணாக்கினால் ஆன்மீகப் பாதையில் முன்னேற முடியாது.

அருளை வீணாக்குபவன் தன் வாழ்க்கையையே வீணாக்குகிறான்.

ஒரு சிறிய விதைக்குள் ஒரு பெரிய ஆலமரமே அடங்கியுள்து.

அந்த விதையைத் தொலைக்கிறவன் ஒரு மரத்தையே தொலைக்கிறான்.

ஒரு சிறிய நற்செயல் ஒரு பெரிய ஆன்மீக வாழ்வின் நுழை வாயிலாக இருக்கலாம்.

அந்த சிறிய நற்செயலுக்கான அருளை வீணாக்குபவன், பெரிய வாழ்வை இழக்க நேரிடலாம்.

ஆகவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் இறையருளை அலட்சியப்படுத்தவோ, வீணாக்கவோ கூடாது.

இறையருளைப் பயன்படுத்தப் பயன்படுத்த

துளியளவு கிடைத்த அருள் அருட்கடலாக வளர்ச்சி அடையும்.

முடிவில்லா நித்திய பேரின்பத்திற்குள் நுழைய அருள் வாழ்வு ஒன்றே வழி.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment