" உன் ஆசையை கடவுள் நிறைவேற்றுவார்."
------------------------------------------------
.."ஆள ரொம்ப நாளா காணல?"
."எந்த ஆள?"
.."எனக்கு முன்னால நின்னு பேசிக்கிட்டு இருக்க ஆள."
."நான்தான நின்னு பேசிக்கிட்டிருக்கேன்."
.."உன்னத்தான் கேட்கிறேன்."
."'உன்ன'ன்னு சொல்ல வேண்டியதுதான, 'ஆள'ன்னு சொல்ற? "
.."Sorry, நீ ஒரு ஆள்தானன்னு நினைச்சி 'ஆள'ன்னு சொல்லிட்டேன். மன்னிச்சிடு."
."இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. தினமும் நான் உன்னைப் பார்க்கிறேன், நீ என்னைப் பார்க்கிறாய்,
'ஆள ரொம்ப நாளா காணல'ன்னா என்ன அர்த்தம்? "
.."ரொம்ப நாளா காணல'ன்னு அர்த்தம்."
."தினமும் நாம் பார்த்துக் கொள்கிறோமேன்னு சொன்னது காதில விழல? "
."அது ரோட்டில, இப்போ நான் கேட்டது கோயிலில."
."நீ ரிட்டையர்ட் ஆயிட்ட, வேற சோலி கிடையாது, தினமும் கோவிலுக்கு வார,
நான் கூலி வேலைக்குப் போறவன், ரிட்டயர்ட்மென்றே கிடையாது, அதனால சம்பளம் தருகிற ஆளத்தேடித் தினமும் போறேன்.
தினமும் கோவிலுக்கு வந்தா சாப்பாடு யார் போடுவா? "
.."ஐயா சாமி தெரியாம கேட்டுட்டேன், மன்னிச்சிறு. இனிம இந்தக் கேள்வியக் கேட்கமாட்டேன்."
."அப்போ எந்தக் கேள்வியக் கேட்ப?"
.."இண்ணைக்கு என்ன அதிசயமா இந்தப் பக்கம்னு கேக்கட்டா? நீ அனுமதி கொடுத்தாத்தான்!"
."இது, தலையில ஓங்கிக் குட்டிட்டு, 'இந்தமாதிரி குட்டமாட்டேன்'னு சொல்றது மாதிரி இருக்கு.
சரி. நீ கேட்காமலேயே பதிலைச் சொல்லி விடுகிறேன்.
சாமியாரைப் பார்க்க வந்தேன்."
.."சாமியாரைப் பார்க்க வந்தியா? ஏண்டா, நீ கோவிலுக்கு வந்து ஒரு ஆறு மாசம் இருக்குமா?"
."இருக்கும்."
."சாமியார் பங்குப் பொறுப்பு ஏற்று நாலு மாதந்தான் ஆகுது. நீ யாருன்னே அவருக்குத் தெரியாது."
."தெரியாம இருக்கிறதுதான் நல்லது."
.."என்னடா சொல்ற?
சாமியாரைப் பார்க்க வந்தேன்னு சொல்ற.
தெரியாம இருக்கிறதுதான் நல்லதுங்கிற.
எனக்கு ஒண்ணும் புரியல."
."பாவசங்கீர்த்தனம் செய்து ஆண்டுக்கணக்கா ஆகுது.
அதுதான், பாவசங்கீர்த்தனம் செய்யலாம்னு பார்க்கிறேன்.
அதுக்கு என்னத் தெரியணும்னு அவசியம் இல்லைல்ல.''
.."ஏண்டா முதல்ல எப்படில்லாமோ பேசின."
."அது சும்மா தமாசுக்கு! "
.."சரி, சரி. போய்ச் சாமியாரப் பாரு. போ."
(போனவன் போன வேகத்திலேயே திரும்பிவந்தான்.)
.."என்னாச்சி? போன வேகத்திலேயே திரும்பிவந்திட்ட?"
."இன்னொரு நாள் பண்ணிக்கிடலாம்னு பார்க்கேன்."
(முகத்தில் ஏதோ பயம் தெரிந்தது.)
"ஏன்? என்னாச்சி?"
."ஒண்ணுமில்ல. நாளைக்குப் பண்ணலாம்னு பார்க்கிறேன்."
.."அதுதான் ஏன்னு கேட்டேன்."
."இன்றைக்குச் சூழ்நிலை சரி இல்லை."
."இங்க பார், ஆண்டவருடைய அருள் வரும்போது பற்றிக்கொள்ள வேண்டும்.
பாவசங்கீர்த்தனம் செய்யணும்னு வந்த ஆசை இறைவன் அருளால் வந்தது.
அது வந்த உடனேயே செயலில் இறங்கிவிட வேண்டும்.
நாளை நமக்கு உண்டா என்று நமக்கே தெரியாது.
இரவில் தூங்கப் போகிறவன் காலையில் கண் விழிப்பான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
போன நேரம் திரும்பி வராது.
போ. சாமியாரைப் பார்த்துவிட்டு வா. சாமியாரிடம் நீ வந்த காரணத்தைச் சொல்.
மீதியை அவர் பார்த்துக்கொள்வார்."
."இல்ல. ஆனால் நீ சொல்றதும் உண்மைதான்.
இண்ணைக்கே பண்ணிவிடுகிறேன்.
ஆனா நம்ம பங்குச் சாமியாரிடம் வேண்டாம்.
பக்கத்துப் பங்குக்குப் போவோமே.
Bike இருக்கு, உடனே போயிடலாம்."
."உனக்கு இப்போ என்னதான் பிரச்சனை?"
."நான் சொல்லித் தீரப்போற பிரச்சனை இல்ல. வா, நேரத்தை வீணாக்காம பக்கத்துப் பங்குக்குப் போவோம்."
மறு வார்த்தை பேசாமல் பைக்கை நோக்கி நகர்கிறான்.
"என்னாச்சி இவனுக்கு?" மனதிலே நினைத்துக் கொண்டு அவன் பின்னாலே இவனும் பைக்கில் தொத்திக் கொள்கிறான்.
பைக் பறக்கிறது. அடுத்த பங்கு வந்தாச்சி.
"நீ கோவிலில் உட்கார்ந்துகொள். நான் போய் சாமியாரைக் கூட்டி வருகிறேன்."
சாமியார் கோவிலுக்குள் வந்து பாவசங்கீத்தனத் தொட்டியில் அமர்கிறார்.
கோவிலில் அமர்ந்திருந்தவன் எழுந்து பக்கத்து வாசல் வழியாக வெளியேறுகிறான்.
பதஸ்டத்தில் இவனும்
வெளியேறுகிறான்.
அவன் பைக் அருகில் நிற்பதைப் பார்த்து,
"என்னடா ஆச்சி உனக்கு? சாமியார் அங்கு காத்திருக்கிறார். நீ பைக்கில் ஏறப் போகிறாய்."
."வா, வீட்டில் போய்ச் சொல்லுகிறேன்."
.."வீட்டில் போயா? உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?"
"இங்கேயே நின்றால் பிடித்தாலும் பிடித்துவிடும்."
."வா.உட்கார்ந்து பேசுவோம், உட்கார். நான் உதவி செய்கிறேன். ஒழிவுமறைவு இல்லாமல் சொல். ஏன் இரண்டு
சாமிமார்களையும் பார்த்தவுடன் ஓடுகிறாய்?"
."இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது
எதிர்த் திசையிலிருந்து இரண்டு பேர் அமர்ந்த பைக் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அவர்களுடைய பைக் என் பைக்கை நெருங்கி வந்தபோது
திடீரென்று அவர்களுடைய பைக் என் பைக்கை நோக்கித் திரும்ப,
நான் Sudden brake போட்டேன்.
அவர்களும் Sudden brake போட. இரண்டு பைக் வீல்களும் தரையில் உரசி Front wheels இரண்டும் மோதி நின்றன.
Balance upset ஆகி பைக்களோடு மூவருமே கீழே விழுந்தோம்.
எனக்குப் பயங்கர கோபம்.
பைக்கைத் தூக்காமல் நான் எழுந்து, அவர்களைத் திட்டிக்கொண்டே போய் எழுந்து நின்ற இரண்டு பேரையுமே ஓங்கி அடித்துவிட்டேன்.
" சாரி. சார். நாங்கள் வேண்டுமென்று பைக்கைத் திருப்பவில்லை.
ஒரு bike எங்களை Wrong sideல overtake பண்ணினான்.
நாங்கள் உரசிக் கொள்ளா திருப்பதற்காக பைக்கை சிறிது திருப்பினோம்.
இப்படி ஆகிவிட்டது.
மன்னித்துக் கொள்ளுங்க சார்" என்று பைக்கை ஓட்டியவர் கூறினார்.
நான் திரும்பிப் பார்த்தபோது
Wrong sideல overtake பண்ணியவர் நில்லாமல் போய்க்கொண்டிருந்தார்.
நான் பதில் ஒன்றும் கூறாமல் பைக்க எடுத்திட்டு வந்துவிட்டேன்."
.."அந்தக்கதை இப்போ எதற்கு?"
."ஏண்டா, ஒண்ணு கேட்கட்டுமா?
நான் அவங்கள அடிச்சது மகா பெரிய தப்பு."
.."நீ எங்கிட்டையா பாவசங்கீத்தனம் பண்ணிக்கிடிருக்க."
."ஒண்ணு கேட்கட்டுமா?ன்னு சொன்னம்ல, கேட்டபிற்பாடு பேசு.
நான் கோவிலுக்கு வராதவன்தான், ஆனால் சாமிமார் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்.
ஏன்னா அவங்க இறைப்பணிக்கு தங்கள முழுவதுமா அர்ப்பணிச்சவங்க.
அண்ணைக்கு அவங்க அங்கி போட்டிருந்தா அவங்களை அடிச்சிருப்பேனா? "
.."ஏலே, கதை எங்கேயோ போகுது. அண்ணைக்கு பங்குச் சாமிமாரையா......."
."இங்கபார், அவங்க சாமிமார்னு சத்தியமா எனக்குத் தெரியாது.
அவங்க அடையாளமான அங்கியப் போட்டிருந்தா நான் அந்தப் பாவத்தை செய்திருப்பேனா?
அங்கி வெறும் ட்ரஸ் இல்ல, அது நமது புனிதமான அடையாளம்.
பாவசங்கீத்தனம் செய்து பரிசுத்தமா வாழணும்னு முடிவெடுத்தேன்.
இனிம எநத மூஞ்ச வச்சிக்கிட்டு அவங்கட்ட போய் பாவசங்கீத்தனம் பண்ணுவேன்?"
"இந்த மூஞ்சே போதும்."
குரல் கேட்டு ஏறிட்டுப் பார்த்தார்கள், சாமியார் நின்று கொண்டிருந்தார்.
சட்டென்று இருவரும் எழுந்து
"மன்னிச்சிடுங்க, சாமி." என்றார்கள்.
"பரவாயில்ல. வாங்க கோவிலுக்குள்ள வாங்க."
பாவசங்கீத்தனம் முடிச்சி வெளியே வந்தவன் முகம் பிரகாசமாய் இருந்தது.
"சாமியார் ரொம்ப நல்லவர்டா!
அவரை எப்போதும் அங்கியோடு பார்க்கணும் போல் இருக்கு!"
" உன் ஆசையை கடவுள் நிறைவேற்றுவார்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment