Friday, June 28, 2019

இயேசுவை நம் இருதயத்துக்குள் குடியேற்றுவோம்.

இயேசுவை நம் இருதயத்துக்குள் குடியேற்றுவோம்.
----------*-----------*---------------*

ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டார் :

LOVE is a four lettered word.

மாணவர்களைப் பார்த்து,

"இந்த ஆங்கிலச் சொற்றொடரை ஆங்கிலம் கலவா தூய தமிழில் மொழியர்க்க வேண்டும்.

தாள் ஒன்றை எடுத்து மொழி பெயர்ப்பை எழுதுங்கள்." என்றார்.

மாணவர்கள் எழுதிமுடித்தவுடன் பேப்பர்களை வாங்கி, விடைகளை  வாசித்துப் பார்த்தார்.

அநேக மாணவர்கள்,

"அன்பு நான்கெழுத்து வார்த்தை" என்று எழுதியிருந்தார்கள்.

வார்த்தை வார்த்தையாக சரி,
ஆனால், மொத்தத்தில் தப்பு!

சிலர்
"Love நான்கெழுத்து வார்த்தை"
என்று எழுதியிருந்தார்கள்.

வாக்கியம் சரி, விடைதப்பு.

ஒருவன்,
"லவ் நான்கெழுத்து வார்த்தை''
என்று எழுதியிருந்தான்.

முழுவதும் தப்பு.

ஒருவன்

"கடவுள் நான்கெழுத்து வார்த்தை''
என்று எழுதியிருந்தான்!

Super correct!

God is Love.

கடவுள் =  Love.

கடவுள் அன்புமயமானவர் என்று நம் புத்திக்குத் தெரியும்.

இருதயத்துக்குத் தெரியுமா?

தாய் குழந்தையைப் பெற்றவுடன் அது அவளது இருதயத்தில் குடியேறிவிடுகிறது!

புத்தி அறிவின் இருப்பிடம்.
இருதயம் அன்பின் இருப்பிடம்.

அன்பைச் சுவைக்க வேண்டுமென்றால் இருதயத்தில் குடியேற வேண்டும்.

ஒரு இளைஞன் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறான்.

அவனது புத்திக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவனது இருதயம் அவளை வரவேற்கிறது, புத்தி சொல்லாமலேயே இருதயம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது!

நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவில் புத்தியைவிட இருதயத்துக்கே வேலை அதிகம்.

அறிவையும் ஞானத்தையும் விட அன்பே முக்கியமானது.

கிராமங்களிலுள்ள எழுத வாசிக்கத் தெரியாத,  படிப்பறிவில்லாத அநேகருக்கு  இயேசு  நமது இரட்சகர் என்பது மட்டும் தெரியும்.

இயேசுவுக்குத் தங்கள் இருதயத்தைக் கொடுத்துவிட்டு அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

படித்துப் பட்டம் பெற்றவர்களைவிட அதிக பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள்.

பைபிளில் Quiz program நடத்தினால் 0 மதிப்பெண்தான் பெறுவார்கள்.

அவர்களது பக்தியை அளக்க நம்மிடம் அளவுகோல்கள் இல்லை.

ஞாயிறு பிரசங்கம்தான் அவர்கட்கு பைபிள்.

பிரசங்கம் வைக்கும் சாமியார்தான் அவர்கட்கு கிறிஸ்து.

கீழ்ப்படிதல்தான் வாழ்க்கை.

இறையன்புதான் அவர்ளுக்கு உயிர்.

இயேசு அன்புமயமானவர் என்பதால்தான் இயேசுவை நினைக்கும்போது அவரது இருதயம் ஞாபகத்துக்கு வருகிறது.

நமது புத்தியில் அறிவுநிலையில் மட்டும் இருப்பவர்களால் நம்மையோ, நமது வாழ்க்கையையோ மாற்றமுடியாது.

வரலாற்றைப் படிக்கும்போது நமது புத்திக்குள் நிறையபேர் ஏறியிருப்பார்கள்.

யாராலும் நமது சிந்தனைமுறையும், வாழ்க்கைமுறையும் மாறியிருந்தால் அவர்கள் நமது இதயத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

நமது இருதயத்தில் இருப்பவர்களால் மட்டுமே நம்மை மாற்றமுடியும்.

பைபிள் வாசிக்கிறோம். பூசையில் பிரசங்கம் கேட்கிறோம். பைபிள் இறை வார்த்தை, பிரசங்கம் அதற்கான விளக்கம்.

பைபிள் வாசகம் நமது வாழ்க்கையை மாற்றியிருக்கிறதா?

எந்த அளவுக்கு மாற்றியுள்ளதோ அந்த அளவுக்கு இறைவார்த்தை நமது இருதயத்தில் இடம்பிடித்துள்ளது என்று அர்த்தம்.

எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காவிட்டால் அறிவெல்லாம் தலைக்குள் மாட்டிக்கொண்டது என்று அர்த்தம்.

இருதயத்திற்குள் இறங்காமல் எல்லாம் தலைக்குள் மாட்டிக்கொண்டால் தலை கனமாகிவிடும்!

அது ரொம்ப ஆபத்து!

அறிவு நிலையிலுள்ள வார்த்தை உணர்வுநிலைக்கு, (அன்பைத்தான் உணரமுடியும்)

அதாவது இருதயத்திற்குள் வந்தால்தான் அது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நாமும் இயேசுவாக மாறிக்கொண்டிருப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நாம் நமது  விரோதிகளை நேசிப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நமக்குத் தீமை செய்தவர்கட்கு நன்மை செய்வோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நம்மை அவமானப் படுத்துபவர்களை மன்னிப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் பாவிகளை நேசிப்போம், அவர்களை இயேசுவிடம் கூட்டிவருவோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் இறைவன் விருப்பமே நமது விருப்பமாக மாறும்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர்களோடு வீண் அரட்டை அடிப்பதை விட்டுவிட்டு, அவர்கட்கு நற்செய்தியை அறிவிப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர் நலனுக்காக நம்மையே தியாகம் செய்வோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர்களைப் பற்றி கெடுத்துப் பேசமாட்டோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் தேவைப்படுவோருக்கு  உதவி செய்வோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர்களைத் தீர்ப்பிடமாட்டோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் உள்ளத்தில் ஏழைகளாக (Poor in spirit),
உலகப் பொருட்கள்மீது பற்றற்றவர்களாக வாழ்வோம்.

புத்தி (Intellect),

மனது (Mind),

அன்பு (Love)

ஆகிய மூன்று தத்துவங்களுமே இறைவன் நமக்கு அளித்துள்ள நன்கொடைகளே.

புத்தி அறிகிறது.

மனது நினைக்கிறது.

அன்பு நேசிக்கிறது.

அறிவதும், நினைப்பதும் நேசிப்பதற்காகத்தான்.

அன்பு இல்லாவிட்டால் மற்ற இரண்டும் இருந்தும் பயனில்லை.

அன்புதான் ஆன்மீக வாழ்வின் உயிர்.

நம்மைப் படைத்த இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது
அன்பை மட்டும்தான்.

உண்மையான அன்பு சும்மா இருக்காது.

நற்செயல்களால் செழித்து வளரும்.

அன்பின் இருப்பிடம்  இருதயம்.

ஆகவே அன்பின் தேவன் இயேசுவை நம் இருதயத்துக்குள் குடியேற்றுவோம்.

அவரையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும்
அன்பு செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment