பேரின்ப வாழ்வுக்கான வழி.
*******************************
மனிதன் பிறப்பது வாழ்வதற்காக,
இறப்பதும் வாழ்வதற்காக!
பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் மண்ணக வாழ்வு,
இறப்புக்குப் பிறகு விண்ணக வாழ்வு.
மண்ணக வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்தது,
விண்ணக வாழ்வு பேரின்பத்தின் நிறைவு.
மண்ணக வாழ்வின் தர அளவுதான், விண்ணக வாழ்வின் பேரின்ப அளவை நிர்ணயிக்கும்.
உலகில் செப வாழ்வு வாழ்ந்தால்தான் விண்ணில் பேரின்பம் கிட்டும்.
செப வாழ்வு என்றால்?
செபமாக மாறும் வாழ்வு செப வாழ்வு.
செபம் என்றால்?
இறைவனுக்கும், நமக்கும் உள்ள நல்லுறவு.
இறையுறவில் வாழ்வதே செபம்.
இறையுறவு என்றால்?
இறைவன் நம்முள்ளும், நாம் இறைவனுள்ளும் வாழும் நிலை.
இறைவனை நேசித்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தால் இறைவனே நம்மில் தங்குவார்.
அவரது இதயத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.
இறைவன் நம் இதயத்திலும், நாம் இறைவன் இதயத்திலும்,
தங்கி வாழும் வாழ்வே நாம் வாழவேண்டிய செபவாழ்வு.
செபவாழ்வு வாழும்போது விண்ணக வாழ்வை முன்சுவைக்கிறோம்,
ஏனெனில் விண்ணக வாழ்வும் இறைவனோடு கலந்து வாழும் வாழ்வுதான்.
இறைவனது கட்டளைகள்?
இனிமையின் மறுபெயர்.
அன்பு செய்வதைவிட இனிமையான செயல் வேறு உண்டா?
அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் இறைவனின் கட்டளை.
இறைவனை நேசிக்க வேண்டும்.
நமது அயலானையும் நேசிக்கவேண்டும்.
அதாவது நாம் இறைவனோடும், அயலானோடும் நல்லுறவில் வாழ வேண்டும்.
இறைவனோடு நல்லுறவில் வாழாதவனால் அயலானோடு நல்லுறவில் வாழ முடியாது.
இப்படி நல்லுறவில் வாழ்வதுதான் செபவாழ்வு.
செபவாழ்வில் இறைவன் நமது இதயத்தில் நிறைந்திருப்பார்.
இறைவனுக்காக நமது இதயத்தைத் தூய்மையாக வைத்திருப்போம்.
செபவாழ்வு வாழ்வோரின் ஒவ்வொரு செயலும்,
சாப்பிடுவதும் தூங்குவதுங்கூட,
செபமாக மாறும்.
செபத்திற்கு வார்த்தைகள் தேவை இல்லையா?
ஆரம்ப நிலையில் தேவை, பயிற்சிக்காக.
காதலன் காதலியிடம் முதலில்
"I love you." சொல்ல வார்த்தைகள் தேவை.
காதல் ஏற்றுக் கொள்ளப் பட்டபின் இரண்டு இதயங்களும் கண்ணால்தான் பேசும்.
செபத்தில் பயிற்சி பெறும்போது மனதை ஒருநிலைப் படுத்த உதவியாக வார்த்தைகளைப் பயன் படுத்துகின்றோம்.
மனது இறைவனில் ஒன்றியாமல் வெற்று வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லை.
நன்கு பயிற்சி பெற்றபின் வாயை விட இதயம்தான் அதிகம் வேலை செய்யும்.
வாய் சப்தமாகப் பேசும்.
இதயம் உணர்வுகளோடு பேசும்.
வார்த்தைகள் இல்லாவிட்டால் ஆலயங்களில் வழிபாடு செய்வது எப்படி?
நான் விபரித்துக் கொண்டிருப்பது தனிப்பட்ட மனிதனின் செபவாழ்வு.
பொது செப வழிபாடுகளில்
ஆலயங்களில் சப்தமாக செபிக்கும்போதும் வார்த்தைகள் இதயத்திலிருந்து புறப்பட்டு வாய் வழியாக வரவேண்டும்.
அப்போதுதான் மனது ஒருநிலைப் படும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செபிக்க வேண்டும்?
24 மணி நேரமும்.
24 மணி நேரமும் செபித்துக் கொண்டிருந்தால் வேலை செய்வது, சாப்பிடுவது, தூங்குவது எப்படி?
தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது கண்காளிப்பாளர் நம் நினைவில் இருப்பதில்லை?
அதே போன்று நாம் நமது அந்தஸ்தின் கடமைகளைச் செய்யும்போது நம்மைக் கண்காணிக்கும் இறைவன் நம் நினைவில் இருக்க வேண்டும்.
அதுதான் செபம்.
தாய் வீட்டில் இருக்கும்போது குழந்தை பயப்படாமல் விளையாடிக் கொண்டிருக்கும்.
காரணம், தாய் வீட்டில் இருப்பது அதன் நினைவில் இருப்பதுதான்.
நாம் என்ன வேலை செய்தாலும்
இறைவன் முன்னிலையில்,
அவரது பிரசன்னத்தை நினைவில் இருத்தி
செய்யவேண்டும்.
நாம் தனியாக இருப்பதில்லை. நாம் எங்கிருந்தாலும் கடவுள் அங்கு இருக்கிறார்.
அவருக்குத் தெரியாமல் எதையும் செய்ய இயலாது.
இந்த உணர்வு எப்போதும் உள்ளத்தில் இருக்கவேண்டும்.
தூங்கும்போதுகூட. கடவுள் நமது அருகில் அமர்ந்திருக்கிறார் என்ற எண்ணம் மனதில் இருக்கவேண்டும்.
சுருக்கமாக,
இறைவனுக்காக வாழும் வாழ்வே செப வாழ்வு.
இவ்வுலகின் செப வாழ்வுதான்,
மறுவுலகின் பேரின்ப வாழ்வுக்கான வழி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment