நமது விண்ணகத் தந்தையிடம் எல்லோருக்காகவும் பரிந்து பேசுவோம்.
**********************************
"கடவுள் நம்மைப் படைத்தார்.
யாருடைய சிபாரிசின் பேரிலும் நம்மைப் படைக்கவில்லை.
அவரது அளவற்ற அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தார்.
நாம் ஒரு பூஞ்செடி நட்டால் அதை எப்படிப் பேணி வளர்க்க வேண்டும் என்று நமக்குத் தெரியாதா?
அதுபோலவே நாம் கேளாமலேயே நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மை எப்படிப் பேணவேண்டும் என்று தெரியாதா?
எதற்காக அவரை நேரடியாகவும், புனிதர்கள் மூலமாகவும் 'அது வேணும், இது வேணும்' என்று கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டும்?"
"அப்போ நாம என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்?"
."ஏண்ணே, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் பதிலுக்கு நீங்களும் ஏண்ணே கேள்வி கேட்கிறீர்கள்? "
.."நீயும் அதைத்தானே செய்கிறாய்! "
."எதை?"
.."நான் கேட்ட கேள்விக்கு.........."
."முதலில் கேட்டது நான்......"
.."தெரியும். எனது கேள்விக்கு நீ கூறும் பதிலிலிருந்துதான் உன் கேள்விக்குரிய என் பதிலைத் தொடங்க வேண்டும்.
சொல்லு, அப்போ நாம என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்?"
."நம்மைப் படைத்ததற்கு நன்றி கூறவேண்டும்"
.."அப்புறம்?"
."அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும்."
.."அவரது கட்டளைகள்? "
."இறைவனை அன்பு செய். உன் அயலானை அன்பு செய்."
.."எப்படி அன்பு செய்வாய்? "
."இருதயத்தால் அன்பு செய்வேன்.
வார்த்தைகளால் அன்பை வெளிப்படுத்துவேன்.
அன்பு செயல்கள் மூலம் சேவை செய்வேன்."
.."உன் அயலானுக்கு ஒரு கஸ்டம். உன்னால் தீர்க்க முடியாத கஸ்டம். எப்படி உதவுவாய்?"
."எல்லாம் வல்லபர் கடவுள். நண்பனின் கஸ்டத்தை நீக்கும்படி கடவுளை வேண்டுவேன்."
.."உன் நன்பனைப் படைத்த கடவுளுக்கு அவனுக்கு என்ன தேவை என்று தெரியாது?
நீ ஏன் அவனுக்காக வேண்டவேண்டும்?"
."என்னைப் படைத்த கடவுள்தான் அவனையும் படைத்திருக்கிறார். அவர் தந்தை, நாங்கள் சகோதரர்கள். சகோதரனுக்காக தந்தையிடம் பரிந்து பேசுவதில் என்ன தவறு?"
.."'நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மை எப்படிப் பேணவேண்டும் என்று தெரியாதா?
எதற்காக அவரை நேரடியாகவும், புனிதர்கள் மூலமாகவும் 'அது வேணும், இது வேணும்' என்று கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டும்?' என்று நீதானே கேட்டாய்.
இப்போ நீயே
'என்னைப் படைத்த கடவுள்தான் அவனையும் படைத்திருக்கிறார். அவர் தந்தை, நாங்கள் சகோதரர்கள். சகோதரனுக்காக தந்தையிடம் பரிந்து பேசுவதில் என்ன தவறு?'
என்று என்னிடமே கேட்கிறாய்.
ஏண்டா, எனக்கு பரீட்சை வைக்கிறாயா?"
."ஏண்ணே, ஒருவன் பயில்வான் மாதிரி நம் முன் வந்து நிற்கிறான். அவன் நல்ல சுகமாக இருக்கிறான் என்று நமக்கே தெரியும். ஆனாலும், 'தம்பி, சுகமாக இருக்கியா'ன்னு ஏன் கேட்கிறோம்?
பேச்சை ஆரம்பிக்கத்தானே!"
.."Very good. நீ முதலில் கேட்ட கேள்விக்கு நீயே பதில் கூறவேண்டும்."
."முழுப்பதிலையுமா?"
.."சாப்பிடச் சொன்னால் 'முழுச் சாப்பாட்டையுமா?' என்று கேட்பதுபோல் இருக்கிறது."
."முழுச் சாப்பாட்டையும் நானே சாப்பிடுகிறேன்.
இறைவார்த்தை நமது ஆன்ம உணவுதானே!"
.."ம். சாப்பிட ஆரம்பி."
."கடவுள் மனிதனை தனி மனிதனாகப் படைக்கவில்லை.
மனுக்குலமாக, குடும்பமாகப் படைத்தார்.
எப்படி பிரபஞ்சம் புவி ஈர்ப்பு விசையால் இணைக்கபட்டு இயங்குககிறதோ,
அப்படியே மனித குலம் அன்பு என்னும் ஈர்ப்பு சக்தியால் இணைக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.
அன்பின் பிறப்பிடம் கடவுள்.
கடவுளிடமிருந்து புறப்பட்ட அன்பு மனித குலத்தவரை ஒருவரோடொருவர் பிணைப்பதோடு,
ஒவ்வொரு உறுப்பினரையும் அன்பின் ஊற்றாம் இறைவனோடு இணைக்கிறது.
இறைவன் மனுக்குலத்தை மொத்தமாக மட்டுமல்ல, ஒவ்வொருவரையும் தனித்தனியே முழு அன்புடன் நேசிக்கிறார்.
இறைவனையும், மனுக்குலத்தையும் இடைவிடாது இணைத்து வைத்திருப்பது இறையன்பும், அதிலிருந்து பிறக்கும் பிறர் அன்பும்தான்.
அன்பு எப்போதும் செயலாற்றிக்கொண்டே யிருக்கும்.
Love is always active.
அன்பர்கள் எப்போதும் இணை பிரியாது இருப்பர்.
நம்மை நேசிக்கும் இறைவன் எப்போதும் நம் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
நாம் இறைவனை நேசித்தால் அவரது கட்டளைகளைக் கடைபிடித்து, அவருடனே வாழ்வோம்.
அன்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதையும், சேவை செய்வதையுமே வாழ்வாகக் கொண்டிருப்பர்.
நம்மைப் படைத்த எல்லாம் வல்ல கடவுளே,
நம்மீது கொண்ட அன்பின் மிகுதியால்,
நமக்குப் பணிபுரிந்து, நம்மை மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்தார்.
"மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."(மத்.20:28)
நாமும் இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நமது வாழ்நாளை இறைப்பணிக்கும், பிறர் பணிக்கும் அர்ப்பணிக்க வேண்டும்.
பிறர் பணியின் ஒரு பகுதிதான் பரிந்து பேசுதல்.
இப்புவியில் வாழும் நமது சகமனிதர்களும்,
விண்ணுலகில் வாழும் புனிதர்களும்
மனுக்குலம் என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
எல்லோரையும் படைத்த மூவொரு கடவுள்தான் நமது கடவுள்.
குடும்பத்தினர் தங்களை இணைக்கும் அன்பை ஒருவருக்கொருவ பரிமாரி மகிழும் எளிய வழி உரையாடல்.
உரையாடலின்போது நமது அன்பைத் தெரிவிப்பதோடு,
அவர்களது தேவைகளைக் கேட்டு அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்ய முயல்கிறோம்.
பூர்த்தி செய்வது நமது சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால், யாரால் முடியுமோ அவர்கள் மூலமாக உதவுகிறோம்
இம்முயற்சியின் விளைவுதான் அயலானுக்கு உதவும்படி இறைவனை வேண்டுதல்.
இறைவனை வேண்டாவிட்டால் இறைவன் அயலானுக்கு உதவமாட்டார் என்று அர்த்தமல்ல.
உதவுவார், ஏனெனில் அவனும் அவர் பிள்ளைதானே.
வேண்டுவதன் மூலம் நமது குடும்ப உணர்வை வெளிப்படுத்துகிறோம்.
புனிதர்கள் மூலம் வேண்டும்போது அவர்களும் நம் உடன்பிறந்தோர் என்பதை ஏற்றுக் கொள்வதோடு,
நாமும் வருங்கால விண்ணகவாசிகளே என்ற நம்பிக்கை உணர்வையும் வெளியிடுகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனே நம் ஒரே தந்தை என்ற விசுவாசத்தை ஏற்றுக் கொள்வதோடு,
நாம் எல்லோரும் நமது எல்லா தேவைகளுக்கும் இறைவனை மட்டும்தான் சார்ந்திருக்கிறோம்
என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்கிறோம்.
சுருக்கமாக,
நாம் எல்லோரும் ஒருவர் ஒருவருக்காக இறைவனிடம் பரிந்து பேசுவதன் மூலம்
மனிதர் ஒருவரை யொருவரையும்,
தனித்தனியாகவும், மொத்தமாகவும் இறைவனையும் சார்ந்துள்ள ஒரே குடும்பம் என்பதை
செயல்ரீதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
எதாவது விடுபட்டிருக்கிறதா?"
.."உன் கருத்துக்கள் எதுவும் விடுபடவில்லை.
அதோடு என் கருத்துக்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.
இறைவன் எல்லோரையும் சமமாகப் படைக்காமல் ஏற்றதாழ்வுடன் படைத்ததே
நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
எல்லோரும் ஒன்றுபோல் பிறந்துவிட்டால் யார் யாருக்கு உதவுவது?
இறைவன் நமக்கு கஸ்டங்களையும், தேவைகளையும் அனுமதிப்பதே
நாம் அவரோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான்.
நமக்குத் துன்பங்கள் வரும்போது அதற்காக வருந்துவதை விட்டுவிட்டு,
கடவுளோடுபேசி, அவற்றை அவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டு
நமது மோட்ச இன்பத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் சுயமாக இயங்கக் கூடிய மனிதனாக மாறிவிட்டால்,
பெற்றோர் பிள்ளை பாசம் எப்படி ஏற்படும்?
பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதே குடும்பம் ஒன்றாக வாழ்வதற்காகத்தான்.
அல்லது ஒரு பய அப்பா, அம்மாவைத் தேடமாட்டான்.
நமது விண்ணகப் பயணத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும்
நம்மைப் படைத்த திரிஏக தேவனின் நித்திய திட்டமே!
நன்றியோடு அதனை ஏற்போம்.
நமது விண்ணகத் தந்தையிடம் எல்லோருக்காகவும் பரிந்து பேசுவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment