Sunday, June 2, 2019

வாங்க, ருசிப்போம், அனுபவிப்போம்!

வாங்க,
ருசிப்போம், அனுபவிப்போம்!
*********************************

"இப்படி வாங்க."

"எப்படி? "

"சரி, நானே வந்திடுறேன்....

இந்த புத்தகத்தக் கொஞ்சம் பாருங்க."

"கொஞ்சம் என்ன, நிறையவே பார்த்திட்டேன். உனக்கு இப்ப என்ன வேணும்?"

."ஒரு வாக்கியத்திற்கு விளக்கம் வேண்டும்.

'கடவுளை அறியாவிட்டால், கடவுளைப் பற்றி அறிந்தும் பயனில்லை.'

கடவுளை அறிவதற்கும், கடவுளைப் பற்றி அறிவதற்கும் என்னங்க வித்தியாசம்?"

.."இப்ப நான் சொல்றதில இருந்து கண்டுபிடி.

'நமக்கு இமயமலையைப்  பற்றித் தெரியும், ஆனால் இமயமலையைத் தெரியாது.

எனக்கு உன்னைப்பற்றியும், உன்னையும் தெரியும்."

."கண்டுபிடிச்சிட்டேங்க.

'கடவுளைப்பற்றி அறிவது' என்றால் கடவுளைப் பற்றிய விபரங்களை அறிவது.

உதாரணத்திற்கு, 

'ஒரே கடவுள், மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

கடவுள் அன்பு மயமானவர்.

எங்கும் இருக்கிறார்.'

இது போன்ற விபரங்களைத் தெரிந்துகொள்வது.

'கடவுளை' அறிவது என்றால்

'கடவுளை' நமது வாழ்வாக்குவது.

நமது வாழ்வால் அவரை அறிவது.

சரியா?"

.."கரைக்ட்.

'To know about God' is to gain knowledge about God.

'To know God' is to live Him.

'லட்டு' பற்றி அறிந்து என்ன பயன், அதை நாவினால் சுவைக்காவிட்டால்!?

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்: "
(சங்.33:8)

என்று பைபிள் சொல்கிறது."

."ஆண்டவரை சுவைத்துப் பார்ப்பது எப்படீங்க?"

.."இது பற்றி ஏற்கனவே பேசியிருக்கோம்.

திரும்பவும்,

ஒரு திரும்பவும் மட்டுமல்ல,

வாழ்நாள் முழுவதும்

திரும்பவும், திரும்பவும் பேசிக்கொண்டே இருந்தாலும் தப்பே இல்லை.

நமது சிந்நனையாலும், சொல்லாலும், செயலாலும் இறைவனை சதா சுவைத்துக்கொண்டே யிருக்க வேண்டும்.

சிந்தனையால் சுவைத்து வாழ்வதைத் தியானம் (Meditation) என்கிறோம்.

மலர்த் தோட்டங்களுக்கு நமது பெண்பிள்ளைகளை அழைத்துச் சென்றால்,

பூக்களின் அழகை இரசிப்பதற்குப் பதிலாக,

"அப்பா, ஒரு பூ "

மலர்களை பறித்துக் கொடுக்க விண்ணப்பதிலே குறியாக இருப்பார்கள்.

நாமும் அப்படியேதான் இறைவனை நினைக்க ஆரம்பித்த உடனேயே விண்ணப்பங்களைப் போட ஆரம்பித்து விடுகிறோம்.

பல சமயங்களில் விண்ணப்பங்களைப் போடுவதற்காகத்தான் இறைவனை நினைக்கவே செய்கிறோம்.

விண்ணப்பங்களைப் போடுவது தியானம் அல்ல.

இறைவனை மனதில் இரசிப்பதுதான் தியானம்.

ஒரு ஆளையோ அல்லது பொருளையோ பார்த்தவுடனே அவருடைய அல்லது அதனுடைய ஏதாவது ஒரு அம்சம் மனதைக் கவரும்.

அதையே  சதா நினைத்துக் கொண்டிருக்கச் சொல்லும்.

இறைவனை பொறுத்தமட்டில் அவருடைய எல்லா பண்புகளுமே நமது மனதைக் கவரக்கூடிமவைதான்.

ஆனாலும் அவருடைய எல்லா பண்புகளையும் ஒருசேரத் தியானிப்பதைவிட

ஒரு நேரத்தில் ஒரு பண்பைத் தியானிப்பது பலன் தரும்.

உதாரணத்திற்கு இறைவனது சர்வ வல்லமையை (Almightiness of God) எடுத்துக்கொள்வோம்.

இறைவன் உருவமற்றவர். நாம் உருவம் உள்ள படைப்பாகையால் நம்மால்  ஒரு உருவத்தைதான் கற்பனை செய்யமுடியும்.

ஒருவகையில் கடவுளை உருவமாகக் கற்பனை செய்யமுடியாதது நல்லதுதான்.

இது கடவுளை அவருடைய படைப்புகள் மூலம் பார்க்க உதவியாயிருக்கும்.

ஒன்றுமில்லாமை யிலிருந்து
அவரால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தை (Universe) சிறிது நினைத்துப் பார்த்தாலே அவரது அளவு கடந்த வல்லமை நம்மைப் பிரமிக்க வைக்கும்.

நாம் இருக்கும் இடத்தை மையப் புள்ளியாக வைத்துக்கொண்டு கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் ஆரமாக உள்ள ஒரு வட்டத்தைக் கற்பனை செய்வோம்.

ஒரு ஒளியாண்டு =
1, 86,000 × 60 × 60 × 24 × 365 மைல்கள்

முதலில் கற்பனை செய்த வட்டத்தை நமது கற்பனையால் எவ்வளவு முயுமோ அவ்வளவு விரித்துக் கொண்டே போவோம்.

இவ்வட்டப்பகுதிக்குள் இயங்கி வருகின்ற கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அவற்றை வலம் வந்து கொண்டிருக்கும் கோள்களும் நம்மைப் படைத்த அதே கடவுளால்தான் படைக்கப்பட்டன!

அவை எல்லாம் அவரால் கொடுக்ப்பட்ட இயற்கையின் சட்டப்படி,  சிறிதுகூட பிசகாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிவருகின்றன.

நட்சத்திரங்கள் தங்களுக்குரிய வட்டப் பாதையில் கொஞ்சங்கூட தடம்மாறாமல்

கடவுளால் கொடுக்கப்பட்ட ஈர்ப்புவிதிப்படி(Law of gravitation) வலம் வருகின்றன.

இந்த உண்மைகள் எல்லாம் நமது பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தில் கற்றவைதான்,  தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்காக!

இவற்றை கடவுளின் சர்வ வல்லமையோடு இயைபுபடுத்தி நினைத்துப் பார்ப்பதுதான் அவரது வல்லமையை சுவைத்துப் பார்த்தல்!

பிரபஞ்சத்தை    மொத்தமாக மட்டுமல்ல,

அதன் ஒவ்வொரு   அணுவையும் கடவுள்தான்   இயக்கி வருகிறார்.

இவ்வுலகில் ஒவ்வொரு பொருளும் கவுளின் வல்லமையின் விளைவுதான்.

அவரன்றி அணுவும் அசையாது!

பிரபஞ்ச அதிசயங்களை நினைத்துப் பார்ப்பது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல,

இறைவனை அனுபவிப்பதற்காக.

இறைவனை மனக்கண்ணால் பார்த்துப் பார்த்து ரசிப்பதற்காக.

மலையில் மட்டுமல்ல மலரிலும் அவரது வல்லமை வெளிப்படுகிறது!

ஆல விதைக்குள் அடங்கிக்கிடக்கும் ஆலமரத்தில் அவரது வல்லமை வெளிப்படுகிறது!

கானாவூர் திருமணத்தில் தண்ணீரை ரசமாக மாற்றிய அதே கடவுள்

நாம் உண்ணும் விதவிதமான உணவுவகைகளை நமது இரத்தமாகவும், சதையாகவும், எலும்பாகவும் மாற்றுகிறார்!

நாம் உண்ணும்போது கூட கடவுளின் வல்லமையை ரசித்துக் கொண்டே உண்ண வேண்டும்!

மனிதன் தனது அறிவியல் சாதனைகளை நினைத்துப் பெருமைப் படுகிறான்.

உண்மையில் அறிவியலின் கர்த்தராகிய கடவுளை நினைத்துதான்  பெருமைப்பட வேண்டும்!

காண்பவற்றிலெல்லாம் இறைவனைக் காண்பதும், ரசிப்பதும்,சுவைப்பதும்தான் இறை அனுபவம்!

இந்த இறை அனுபவம்

இறைவன் மீதான நம்பிக்கையை வளர்க்கிறது.

துன்ப நேரத்தில்  நமக்கு ஆறுதலைத் தருகிறது.

நாம் காணும் ஒவ்வொரு பொருளிலும் இறைவனின் வல்லமையைக் காண்கின்றோம்.

நமது உடலும் இறைவனின் படைப்பு, அதன் ஒவ்வொரு அணுவையும் இயக்கிவருபவர் அவர்தான்.

சர்வ வல்லப கடவுளின் அரவணைப்பில்தான் நாம் ஒவ்வொரு வினாடியும் இருக்கிறோம்.

நம்மைப் படைத்தவரின் சர்வ வல்லப கரங்களில் நாம் இருக்கும்போது நாம் எதற்கு அஞ்சவேண்டும்?

கடவுளே கொடுத்த இயற்கை விதிகட்கு உட்பட்டு நடக்கும் இயற்கை நிகழ்வுகளை

இறைக்கண்ணோக்கில் நோக்குவதற்கும்,

உலகியல் கண்ணோக்கில் நோக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இறைவன் உலகம் முழுவதையும் பராமரிப்பதற்காக, உலகின் எதிர்கால நலனையும் கருத்திற்கொண்டு இயற்கை நிகழ்வுகளைத் திட்டமிடுகிறார்.

மனிதன் ஒவ்வொரு நிகழ்வும் தன்னை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு அதை விமர்சிக்கிறான்.

நிலநடுக்கங்கள், சுனாமி, வெள்ளப் போன்ற இயற்கை நிகழ்வுகள் எவ்வாறு உலகின் ஆக்கத்திற்குப் பயன்படும் என்பது அவற்றைத் திட்டமிட்ட இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.

மனிதனுக்கு அதன் உடன் விளைவுகள் மட்டும்தான் தெரியும்.

ரோஜா செடியின் பழைய கிளைகளைக் கத்தரித்துவிடும் தோட்டக்காரனுக்குத் தெரியும்

கத்தரிக்கப்பட்ட செடி புதுத் தளிர்விட்டு புதுப்பொலிவுடன் வளர்ந்து நிறைய மலகளைப் பூக்கும் என்று!

இறைப்பற்றுள்ள, அவருடைய வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் என்ன நடந்தாலும் மக்களது நன்மைக்காகத்தான் நடக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

"என்ன நடந்தாலும் நன்றிகூறுங்கள்."  சங்கீதம்.

நமது உடல் நமது இரட்சண்ய பயணத்தில் ஆன்மாவிற்கு உதவுவதற்காக இறைவனால் தரப்பட்ட கருவிதான்.

அவர் தந்த கருவியை எப்படிப் பராமரிப்பதென்று அவருக்குத் தெரியும்.

நற்சுகம் மட்டுமல்ல, நோய் நொடிகளும் அவருடைய திட்டம்தான்.

நற்சுகம் ஆசீர்வாதம் என்றால் 
நோய் நொடிகளும் ஆசீர்வாதம்தான்.

நாம் சுமப்பதற்காக கடவுள் தந்த சிலுவைகள்.

உலகியல் கண்ணோக்கில் பார்க்காமல் விசுவாசக் கண்ணோடு பார்த்தால்

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் விண்ணோக்கிய இரட்சண்ய பாதையில் ஒரு மைல்கல் என்று.

பிறப்பு ஒரு ஆசீர்வாதம் என்றால்,

இறப்பும் அஒரு ஆசீர்வாதமே.

பிறப்பினால் இவ்வுலகிற்குள் நுழையும் நாம்,

இறப்பினால் நிலை வாழ்விற்குள் நுழைகிறோம்.

இதெல்லாம் நிகழ்வது இறைவனின் வல்லமையால்தான்."

"ஆக, நாம் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும்

இறைவனின் வல்லமையை ருசித்து அனுபவிக்கதான்!"

"Exactly! "

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment