Friday, February 8, 2019

ஆண்டவரே, உம் அடியானைக் காப்பாற்றும்.

ஆண்டவரே, உம் அடியானைக் காப்பாற்றும்.
***************************************
"தம்பி, இங்கே வா.''

"சார்...''

"நீதான நன்மை கொடுக்கும்போது கோவிலுக்கு வெளியே இருந்து வந்து, நன்மை எடுத்தவுடன் வெளியே பொனது? "

"நான் மட்டுமில்ல சார், எங்கூட ஐந்து பேர் வந்தாங்க."

"உன் கூடக் கொஞ்சம் பேசலாமா? "

"பேசலாமே."

"எதுக்காக  நன்மை எடுத்த? "

"பூசைக்கு வாரவங்களெல்லாம் எடுக்கிறாங்க. நானும் எடுக்க்கிறேன்.
கல்யாணவீட்டிற்குப் போறவங்க சாப்பிடறது மாதிரிதான். "    
-
"சரி. நன்மை வாங்கும்போது யாரை வாங்குகிறோம் என்பது தெரியும்னு நினைக்கிறேன்."

"அதெப்படித் தெரியாம இருக்கும். வாத்திமாருக்கு மட்டும்தான் தெரியுமா?  நம்ம ஆண்டவரத்தான் வாங்குகிறோம்."

"ரொம்ப சந்தோசம். உங்க வீட்டுக்கு மாவட்டக் கலெக்டர் வாரார்னா எப்படி இருக்கும்?"

"நடக்கக்கூடிய விசயமா கேளுங்க, சார். கலெக்டராவது என் வீட்டுக்கு வர்ரதாவது! "

"ஹலோ! கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.

நீங்க செய்த ஒரு நல்ல காரியத்துக்கு உங்களப் பாராட்டுததுக்கு  கலெக்டர்   உங்க வீட்டுக்கு வருகிறார்னு வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படி இருக்கும்? "

"ஒரே பரபரப்பா,  thrilling ஆ இருக்கும்."

"வீட்ட. எப்படி வச்சிருப்பீங்க? "

"சுத்தமா வச்சிருப்பேன்."

"இயேசு உலகைப் படைத்த கடவுள்னு உங்களுக்குத்  தெரியும்.

சர்வ வல்லபர்னும் உங்களுக்குத் தெரியும்.

நன்மை வாங்கும்போது கடவுளைத்தான் வாங்கப் போறோம்னும் உங்களுக்குத் தெரியும்.

நன்மை வாங்கப்போகும்போது ஒரு பரபரப்பு, thrilling உணர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டிருக்கா? "

"எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே ஏற்படுவதாகத் தெரியவிலை.

பாம்புன்னு  சொல்லும்போதே பய உணர்ச்சி ஏற்படுகிறது.

புளியங்காய்னு  சொன்னவுடனே நாக்கில் நீர் சுரக்கிறது.

தேன்னு சொன்னவுடனேயே சாப்பிடணும்போல் இருக்கிறது.

இயேசுன்னு சொன்னவுடனே பக்தி உணர்வு ஏற்படுகிறது.

ஆனால் இயேசுவாகிய நற்கருணையை வாங்கும்போது ஏன் நீங்கள் எதிர்பார்க்கும் உணர்வு ஏற்படமாட்டேங்கிறது? "

"நான் இதைப்பற்றி உன்னிடம் பேசக்காரணமே நீ நன்மை வாங்கியவுடன் கையை வீசிக்கொண்டு கோவிலை விட்டு வெளியே போனதுதான்

இப்போது நீயே ஏன் என்று கேட்கிறாய். காரணத்தைக் கண்டுபிடியேன்."

"காரணம் மறைந்து கொண்டா இருக்கிறது கண்டுபிடிக்க? நம்மிடம்தான் காரணம் இருக்கிறது. ஆமா சார் நாம்தான், நாம் எல்லோரும்தான் காரணம்."

"அதைக் கொஞ்சம் விளக்கேன்."

"நீங்கள் வயதில் மூத்தவர். என் அப்பாவுக்கும் உங்க வயசு இருக்கும்.அவர் சில சமயங்களில் இது போன்ற ஆன்மீக காரியங்களை வீட்டில் வைத்துப் பேசுவார். அது  உங்க அனுபவத்திற்கும் உட்பட்டிருக்கும்."

"நீ சொல். நான் அமைதியாக் கேட்கிறேன்."

"அந்தக் காலத்தில திருச்சபையில் இருந்த நடைமுறைகள் நற்கருணைப்
பக்தியை ஊட்டக்கூடியதாய் இருக்குமாம்.

நடுப்பூசையில் எழுந்தேற்றத்தின்போது எல்லா மக்களும்

'என் ஆண்டவரே! என் தேவனே!' என்பார்களாம்.

அவ்வார்த்தைகளில் பக்தி உணர்ச்சி பொங்குமாம். அந்த வினாடிமுதல் மக்கள் இயேசுவின் பிரசன்னத்தை உணர ஆரம்பித்துவிடுவார்களாம்.

அப்பாஆபீஸ்ல இருந்து வந்தவுடனே 'அப்பா வந்தாச்சி'ன்னு சப்தமா சொல்லிக்கொண்டே அப்பாவைக்
கட்டிப்பிடிக்கிற சின்னப்பையனைப்போல

எழுந்தேற்றத்தின்போது  இயேசுவின் வருகையை உணர்ச்சிகரமாக ஏற்றனர் விசுவாசிகள்.

அந்த உணர்ச்சி நீடித்து நிலைக்கும் வகையில் விசுவாசிளின் ஒவ்வொரு செயலும் இருக்கும்.

இயேசுவின் இறைத்தன்மையை மனதார ஏற்கும்வகையில் முழந்தாழ்ப்படியிட்டு, நாவில் நற்கருணையைப் பெற்றனர்.

இச்செயல்கள் இயேசுவை வெளிப்படையாக இறைவன் என ஏற்று

அவருக்கே உரிய ஆராதனையை பக்தியுடன் செய்ய உதவியாய் இருந்திருக்கிறது.

ஆனால் இப்போது எழுந்தேற்றத்தின்போது

'என் ஆண்டவரே! என் தேவனே!'

என்று சப்தமாக அறிக்கையிட அனுமதி இல்லை.

இறை மகனை முழந்தாழ்ப்படியிட்டுப் பெறும் வழக்கம் போய்

ஏதோ தின்பண்டத்தைக் கையில் வாங்குவது போல் நின்றுகொண்டே நற்கருணையை இடது கையில் வாங்கும் பழக்கம் வந்து விட்டது.

முன்பெல்லாம் ஒரு நற்கருணை கைதவறிக் கீழே விழுந்துவிட்டால் சுவாமியார் முழந்தாழ்ப்படியிட்டு நற்கருணையை எடுத்துவிட்டு,  அந்த இடத்தை நீர் கொண்டு துடைத்து எடுப்பாராம், அப்பா சொல்லுவார்.

இப்போது?  ஒரு நாள் நற்கருணைக் கீழே விழுந்து உருண்டு ஓடியது. ஒரு பையன் அதை எடுத்துவந்து சாமியாரிடம் கொடுத்தார். சாமியார் அவனிடமே கொடுத்தார். பையன் வாயிலிட்டுக்கொண்டு போனான்.

ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்த்தீங்களா!

முன்பெல்லாம் நற்கருணைப் பேழை பீடத்தின் மையத்தில் இருக்குமாம்.

இப்பபோது ஓரங்கட்டப்பட்டு விட்டது.

இப்போ சொல்லுங்க சார், நற்கருணைப் பக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தது யார் 'சார்?  நானா?

ஒரு அதிர்ச்சியான விசயம் சொல்லட்டுமா?  நான் கணணால பார்த்தது.

ஒருவர்  நற்கருணையைக் கையில் வாங்கி

அதை உடனே உண்ணாமல்

தன்  Seatக்கு வரும்போது

அதைப்பிய்த்து

தன் சின்னப்பையனுக்குக் கொடுக்க

அவன் சாப்பிட்டான் சார்.

இது நான் கண்ணால் பார்த்த உண்மை.

நற்கருணைக்கு ஏற்பட்ட மரியாதைக்குக் காரணம் யார்?

கையில் வாங்கியவனா? கையில் கொடுக்கும் பழக்கத்தைப் புகுத்தியவர்களா?

என்ன சார், பதில் சொல்லமாட்டேங்கிறீங்க? "

"தம்பி, அநேக விசயங்கள் நமது கட்டுப்பாட்டைத் தாண்டி போய்விட்டன.

அவர்களாக எங்காவது முட்டி மோதித் திருந்தட்டும்.

நாம் நம்மால் இயன்றமட்டும் சரியாக நடப்போமே.

இனி நாம் ஒரு இடத்தில் முழங்காலில் இருந்து கொண்டு

நாம் இருக்கும் இடத்திற்குச் சாமியாரைக் கூப்பிடமுடியாது.

நாம் போய் நின்றுகொண்டு வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.

வாங்குவதைப் பக்தியோடு நாவில் வாங்குவோமே."

"சார், தப்பா நினைச்சிக்கிடாதீங்க.

கையில்தான் வாங்கவேண்டும் என்ற ஒழுங்கு வந்தால் என்ன செய்வீங்க? "

"ஆண்டவரே, உம் அடியானைக் காப்பாற்றும். சீக்கிரமாக என்னை அழைத்துக்கொள்ளும்."

"சார்...."

"நம்மால் வேற என்ன தம்பி செய்ய முடியும்,  வேண்டுவதைத் தவிர?"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment