இராயப்பரோடு இரண்டு வார்த்தைகள்.
***************************----
"அப்பா வணக்கம்."
"ஆண்டவர் எனக்கு வைத்த பெயர் இராயப்பர்."
"திருச்சபை என்ற நமது ஆன்மீகக் குடும்பத்துக்குத் தலைவராக ஆண்டவர் உங்களைத்தானே நியமித்தார்.
நாங்க குடும்பத் தலைவர அப்பான்னுதான் கூப்பிடுவோம்.
அதுவும் தவிர உங்கள பெயர்சொல்லி கூப்பிடுவதாயிருந்தாலும் 'இராயப்பா'ன்னுதான் கூப்பிடணும்."
"ஹலோ! மோட்ச வாசல திறந்துதான் வைத்திருக்கேன்.நேரா உள்ளே போகவேண்டியதுதான. எங்கிட்ட ஏன் வம்பளந்துக்கிட்டு இருக்க! "
"இராயப்பரே, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அத ஆண்டவரிடம் கேட்டா பொருத்தமாயிருக்கும்.
ஆனாலும் அதுல நீங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால உங்ககிட்ட கேட்டாலே போதும்னு நினைக்கிறேன்.
நீங்க மறுத்திட்டா யூதாஸ்ட்ட கேட்கவேண்டியிருக்கும்."
"யூதாஸ்ட்டையா?"
"ஆமா. அவரும் சம்பந்தப்பட்டிருக்கார்ல்ல."
"என்னது? நானும் யூதாசும் சம்பந்தப்பட்டிருக்கோமா? என்ன கதை விடுற? "
"கத இல்லீங்க. உண்மைங்க.
இன்னும் சொல்லப்போனா இதில ஆண்டவரும்
சம்பந்தப்பட்டிருக்கிறார்.
அவரிடத்திலே போய்க் கேட்டிருவேன்.
ஆனால் அவரச்சுத்தி பெரிய கூட்டம் இருக்கும்னு பார்க்கிறேன்."
"சரி, எங்கிட்டயே கேளு."
"ஆண்டவர் உங்களை ஒரு முறை 'சாத்தானே'ன்னு சொன்னார்.
யூதாஸ 'நண்பனே'ன்னு அழைத்தார்.
திருச்சபையின் தலைவர் ஆகப்போகிறவரை 'சாத்தானே'ன்னும்
காட்டிக்கொடுத்தவனை நண்பனே'ன்னும் அழைத்த காரணம் என்ன?''
"இவ்வளவுதானா. பைபிள ஒழுங்கா வாசிச்சிருந்தா இந்த சந்தேகம் வந்திருக்காது."
"பைபிள வாசிச்சதினாலதான் இந்தக் கேள்வியே பிறந்தது."
"வாசிச்சா மட்டும் போதாது. செப உணர்வோடு வாசிக்கணும்.
ஆண்டவர் எப்போ என்னைச் சாத்தான்னு சொன்னாரு
எப்போ யூதாச 'நண்பா'ன்னு சொன்னார்னு ஞாபகம் இருக்கா? '
"எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் கம்மி. நீங்களே சொல்லிடுங்களேன்."
"ஆண்டவர் எதற்காகத் மனுசனாப்பிறந்தார்னு ஞாபகம் இருக்கா? "
"நமக்காகப் பாடுபட்டு, சிலுவையிலே அறையப்பட்டு, மரித்து நம்மை இரட்சிக்க மனுசனாப்பிறந்தார்."
"நீ ஒரு கல்யாண வீட்டுக்கு வந்திருக்க."
"இராயப்பரே, நான் மோட்சத்துக்கு வந்திருக்கேன்."
"தெரியுது. சொல்றதக் கேளு. கல்யாணவீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதற்காக பந்தியில உட்கார்த. அப்போ ஒரு ஆள் வந்து 'நீ சாப்பிடக்கூடாது'ன்னு சொன்னா உனக்கு எப்படி இருக்கும்? "
"சொன்ன ஆள் மேல கோபம் வரும்."
"ஆண்டவர்
'மனுமகன் பாடுகள் பல படவும்
மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு,
மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'னு சொன்னபோது,
நான் அன்பின் காரணமாக அவர் துன்பப்படுதத விரும்பாததினால,
அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டேன்.
மனிதரை மீட்பதற்காக பாடுபட வந்தவரை பாடுபட வேண்டாம்னு யார் சொல்லுவா?"
"மனித மீட்பை விரும்பாத சாத்தான்தான் சொல்லும்."
"இப்போ புரியுதா ஆண்டவர் என்னை ஏன் 'சாத்தான்'னு சொன்னார்னு? "
"அது புரியுது. ஆனாலும் நீங்க அவர் மேல பாசத்துனாலதான அப்படிச் சொன்னீங்க! "
"அது ஆண்டவருக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த அளவிற்க்கு மனித மீட்பில் ஆர்வமாக இருந்தார் என்கிறத நான் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா. அதனால்தான் என்னை அப்படி அழைத்தார்."
"ஆனாலும் அவர் உங்களிடம்
'உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே'
என்றுதானே சொன்னார். சாத்தானுடைய கருத்துக்கள்னு சொல்லவில்லையே."
"ஆமா. அவர் 'மனிதனுடைய கருத்துகளே' என்றுதான் சொன்னார்.
ஆயினும் சொன்ன சூழ்நிலையிலிருந்து (context) நான் புரிந்துகொண்டேன்,
அவை இன்னும் மீட்பு அடையாத, அதாவது சாத்தானின் பிடியிலிருந்து இன்னும் விடுபடாத மனிதனின் கருத்துகளே என்று.
ஆன்மீகத்தில் நடுநிலைமை என்பதே கிடையாது. (No neutrality).
மோட்சத்தை நோக்கிய பாதை
அல்லது
நரகத்தை நோக்கிய பாதை .
நடுநிலைப் பாதை கிடையாது.
"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(மத்.12:30)
ஆகையினால்
மனிதனின் கருத்துக்கள்
இயேசுவின் கருத்துகட்கு எதிராயிருந்தால்,
அவை சாத்தானின் கருத்துக்களே.
இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும்.
கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகள்தான் இயேசுவின் போதனைகள்.
ஆகவே பைபிளின் வசனங்களுக்கு நாம் கொடுக்கும் விளக்கங்கள்
கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகட்கு எதிராக இருந்துவிடக்கூடாது."
'புரிகிறது.
நான் மோட்சத்துக்கு வந்துவிட்டேன்.
பூமியில் உள்ளவர்கட்குப் புரியவேண்டும்.
யூதாசை ஏன் இயேசு 'நண்பா' என்றார்?"
("மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
32 இதெல்லாம் வெளிப்படையாகச் சொன்னார். இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டார்.
33 அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, "போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்."
மாற்கு.8:31-33)
"ஒன்றைப் புரிந்துகொள், என்னைச் சீடனாக்கிய அதே இயேசுதான் யூதாசையும் சீடனாக்கினார்.
சீடர்கள் எல்லோரிடமும் குறைகள் இருந்தன.
எங்கள் குறைகளை நீக்கதான் இயேசு பயிற்சி கொடுத்தார்.
எங்களிடம் விசுவாசம் இருந்தது,
குறைகளும் இருந்தன.
யூதாசிடம் பண ஆசை அதிகம் இருந்தது.
அவர் இயேசுவின் மீது வெறுப்புகொண்டோ, கோபம் கொண்டோ காட்டிக்கொடுக்கவில்லை.
காட்டிக் கொடுத்தால் தனக்குப் பணம் கிடைக்கும், இயேசு எப்படியும் தப்பித்துவிடுவார் என்று எண்ணிதான் காட்டிக் கொடுத்தார்.
ஆனால் அவர் தப்பவில்லை என்று அறிந்தவுடன் மனம் உடைந்துபோனார்.
"அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,
4 "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்."(மத்.27:3,4)
யூதாஸ் செய்தது பாவம்.
ஆண்டவர் 'விரோதிகளை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்பவர்கட்கு நன்மை செய்யுங்கள்'னு நமக்கு சொல்லியிருக்கார்.
அதன் அடிப்படையில தனக்குத் தீமை செய்த யூதாசை
உண்மையான நேசத்துடன் 'நண்பா' என்று அழைத்தார்.
அதுமட்டுமல்ல யூதாசின் பாவம் இயேசுவின் இரட்சண்யப் பாதையில், உதவியிருக்கிறதே!
இயேசு நம் பாவங்கட்காக பாடுபட்டு, மரிக்கவே மனிதன் ஆனார்.
அவர் கொலையாளிகளின் கையில் அகப்பட உதவியதன் மூலம் நமக்காக இயேசு மரிக்க யூதாஸ் உதவியிருக்கிறாரே .
நமக்கு இரட்சண்யம் பெற்றுத்தர இயேசுவுக்கு உதவி செய்தவரை அவர் நண்பா என்று அழைத்ததில் ஆச்சரியமே இல்லை."
"அப்படியானால் இயேசுவைக் காட்டிக்கொடுத்தது சரி என்கிறீர்களா?"
"காட்டிக்கொடுத்தது மிகப் பெரிய பாவம்.
ஆனால் அதிலிருந்து இரட்சண்யம் என்ற நன்மையை இயேசு வரவழைத்திருக்கிறாரே!
உனக்கு இன்னொன்று தெரியுமா?
ஆதாம் ஏவாள் செய்த பாவத்தைத் திருச்சபை உயிர்ப்பு விழாவிற்கு முந்திய இரவு வழிபாட்டில்,
“O Happy Fault that merited such and so great a Redeemer!”
"எங்களுக்கு இவ்வளவு பெரிய இரட்சகரைப் பெற்றுத் தந்த பாக்கியமான பாவமே"
என்று அழைக்கிறது!
ஆதாம், ஏவாள் பாவம் செய்திருக்காவிட்டால்
நமக்கு இரட்சகர் கிடைத்திருக்க மாட்டாரே!
"sin has its own valuable positive character in God’s plan.”
எதிர்மறைச் (Negative) செயலான பாவத்தைக்கூட
இறைவனால்
Positive செயலாக மாற்றமுடியும்,
ஏனெனில் அவர் சர்வ வல்லபர்.
நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்ததால் தான் இறைவனை வென்று விட்டதாக சாத்தான் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தான்.
ஆனால் பாவத்திலிருந்து நம்மை மீட்க இறைமகனே மனிதன் ஆனார்.
சாத்தான் மனுமகனைக் கொல்ல யூதாசையும், யூத மதவல்லுனர்களையும் ஏவி விட்டான்.
ஆனால் அவர்கள் இயேசுவுக்குக் கொடுத்த மரணமே நமக்கு இரட்சண்யமாயிற்று.
சாத்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டான்.
மனிதனை கடவுளிடமிருந்து பிரிக்கவே
சாத்தான் பாவத்தைப் புகுத்தினான்.
ஆனால் அதுவே இறை, மனித உறவு முன்னைவிட நெருக்கமாகக் காரணமாயிற்று!
ஆனாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் பாவம் செய்யக்கூடாது."
"இப்போ புரிகிறது, ஏன் கடவுள் தீமையை அனுமதிக்கிறார் என்று.
அதிலிருந்து ஒரு பெரிய நன்மையை வரவழைக்க இறைனால் முடியும்!
God allows evils to happen in order to bring a greater good therefrom.
இராயப்பரே, நன்றி.
உள்ளே போகலாமா? "
"கதவு திறந்துதான் இருக்கு. உள்ளே போங்க."
"இராயப்பரே, இன்னும் ஒரு சந்தேகம்..."
"உள்ளே போங்க. அடுத்த சந்தேகத்த யூதாசிடம் சொல்லுங்க.
உயிர் பிரியப்போகும் கடைசி வினாடி எப்படி மனஸ்தாபப்படணும்னு அவர் சொல்லித் தருவாரு.
அவருக்காகவும்,
மற்ற கொலையாளிகட்காகவும்
அவர்களை மன்னிக்கும்படி
நம் ஆண்டவரே
சிலுவையில் தொங்கும்போது
தன் தந்தையிடம் பரிந்து பேசியது ஞாபகம் இருக்கில்ல. ."
"ஞாபகம் இருக்கு.
வரட்டுமா?"
"வந்து ரொம்ப நேரமாச்சி. உள்ள போங்க."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment