காதலோ காதல்!
*********************************
"செல்வம். கொஞ்சம் வா இங்க."
"ஏங்க, உங்களுக்கு டீ வேண்டாமா? "
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். டீய விட மிக முக்கியமான விசயம் பற்றி பேச வேண்டியிருக்கு. வந்து உட்கார்."
"டீய விட மிக முக்கியமான விசயம்னா காபியைப் பற்றியா? "
".நான் காபிய விட்டு 15 வருசம் ஆகுது. அதப்பற்றி இப்ப எதுக்கு பேசப்போறேன். நமக்குக் கல்யாணம் ஆகி எத்தன வருசம் ஆகுது?"
"அடுத்த மே 21வந்தா 61வருசம் ஆகும். இப்ப எதுக்கு அந்தக் கணக்கு?"
"உன்ன Interview பண்ணி சில விசயங்களக் கறக்கப் போறேன்."
"கறந்து?"
"ஒரு கட்டுரை எழுதப்போறேன்."
"Very good . ஆனால் சொன்னத அப்படீயே எழுதணும். உங்க Commentary ஒண்ணும் சேர்க்கக் கூடாது."
"சரி. எனக்கு வேல இலேசு.
காதல்னா என்ன அருத்தம்?"
"அகராதியிலிருந்து அப்புறப்படுத்தப் படவேண்டிய வார்த்தை."
"ஏண்டி என்ன நீ காதலிக்கவேயில்லையா?"
"உங்களை நேசிக்கிறேன். உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.
உங்களை நேசிப்பதைப் போலவே நமது பிள்ளைகளையும், நமது குடும்பத்தினர் அனைவரையும், உறவினர்களையும் நேசிக்கிறேன்.
நமது ஆண்டவர் அவரையும், அயலானையும் நேசிக்கத்தான் சொன்னார்."
"நேசம், பாசம், அன்பு ஆகியவை பொதுவான வார்த்தைகள்.
காதல் கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் உறவைக் குறிப்பது.
அது தவறு இல்லையே! அந்த வார்த்தை உனக்கு ஏன் பிடிக்கவில்லை?"
"ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதைப் பார்த்து காதல் வருகிறது? அழகான உடலைப் பார்த்துதானே!
அன்பு எதைப் பார்த்தும் வருதில்லை.
இறைவனின் கட்டளையிலிருந்து வருகிறது.
நான் உங்களது அழகைப்பார்த்தோ, உள்ளத்தைப் பார்த்தோ நேசிக்கவில்லை.
உங்களுக்கு அழகு என்று ஒன்று இல்லாவிட்டாலும், நீங்கள் என்னை வெறுத்தாலும் நான் உங்களை நேசிப்பேன்.
ஏனெனில் நான் கடவுளின் பிள்ளை. நீங்களும் கடவுளின் பிள்ளை.
கடவுள் அன்பு மயமானவர்.
அன்பு அவரது இயல்பு.
நமக்கும் அன்பு இயல்பாக இருக்க வேண்டும்."
" அப்போ கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்புக்கும், மற்றவர்களிடையே இருக்கும் அன்புக்கும் வித்தியாசம் இல்லையா? "
"அன்பில் வித்தியாசம் இல்லை. ஆனால் கடமையில் வித்தியாசம் இருக்கிறது.
குழந்தை பெறுவது கணவன், மனைவிக்கிடையே உள்ள கடமை.
அது சம்பந்தமான உரிமைகளும் உள்ளன.
உடலுறவு அவர்கள் உரிமை.
திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.
கடவுளே நிருவியது.
பிரபஞ்சத்தை (Material universe) 'உண்டாகுக' என்ற சொல்லால் படைத்த கடவுள் மனிதனை செயலால் படைக்கிறார்.
அதுமட்டுமல்ல, தான் தொடர்ந்து படைப்புத் தொழிலுக்கு திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்.
God is using our marriage for human procreation.
ஆன்மாக்களை நேரில் படைத்தாலும் அவற்றுக்கான உடல்களை உருவாக்கும் உன்னதமான பணியை குடும்பத்திடம் விட்டுவிட்டார்.
இறைவன் நமக்குப் பசியைக் கொடுத்திருப்பது நாம் உண்பதற்காக.
அவ்வாறே கணவன் மனைவி உறவில் இன்பத்தைக் கொடுத்திருப்பது அவர்களது Procreation பணிக்காக.
அவ்வின்பத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் பாவம்.
குழந்தைப் பேற்றைத் தடுக்க செயற்கை முறைகளைப் பயன்படுத்தினால் அது பாவம்"
"அதிகக் குழந்தைகளைப் பெறாதிருக்க என்ன செய்ய வேண்டும்?"
"ஒன்றுமே செய்யவேண்டாம்.
புரியும் என்று நினைக்கிறேன்."
"புரிகிறது. Self control.
Love marriage, arranged marriage இரண்டில் எது சிறந்தது?"
".ஒரெ பதில்தான். உண்மையான அன்பு என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட திருமணமே சிறந்தது."
"Love marriage ல் ஒருவரை புரிந்து கொள்ளலாம், புரிந்து செய்யப்படும் திருமணம் நிலைக்கும் என்கிறார்ககளே! "
"நான் கேட்கும் கேள்விகட்குப் பதில் சொல்லுங்கள்.
கடவுளை நேசிக்கிறீர்களா?"
"நேசிக்கிறேன்."
"கடவுளைப் புரிந்துகொண்டு நேசிக்கிறீர்களா?"
"விசுவாசத்தின் அடிப்படையில் நேசிக்கிறேன்.
கடவுள் அளவு கடந்தவர். அவரை புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் அவரை விசுவசிக்கிறேன் ஆகவே நேசிக்கிறேன்.
கடவுள் அளவுகடந்தவர். ஆகவே புரியமுடியாது. மனிதன் அளவுள்ளவன்தானே!"
"மனிதன் அளவுள்ளவன்தான்.
ஆனால் ஒரு மனிதனின் மனதை மற்றொரு மனிதனால் வாசிக்கமுடியுமா?
திருமணத்திற்கு முன்னால் லவ் செய்கிறவன் தன் குறைகளை வெளிக்காட்டுவானா?
உள்ளொன்றை வைத்துப் புறமொன்றைப் பேசுபவனை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
யாராலும் யாரையும் முற்றிலும் புரிய முடியாது.
மனிதன் என்றாலே குற்றம் குறைகள் இருக்கத்தான் செய்யும்.
குறைகளும் இருக்கும்
நிறைகளும் இருக்கும்,
இயன்றமட்டும் விசாரித்து திருமணம் நிச்சயம் செய்தபின்
குறை, நிறைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திருமணத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இறைவன் அளித்த பரிசு.
பரிசைப் புரிந்து கொள்வதை விட ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது."
"அது எப்படி என்று புரியவில்லை."
"உங்கள் உடலை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?
அதை முற்றிலும் புரிந்துகொண்டா?
உடலில் என்னென்ன வியாதி எங்கே மறைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாது."
"அப்புறம் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?"
"இது என் உடல்.
என் உடல் எந்த நிலையில் இருந்தாலும்
நான் அதை ஏற்றுதான் ஆகவேண்டும்.
என் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது.
அதற்காக அதைச் சீவியா போடமுடியும்?"
"சீவணும்னா முடி வேணுங்க! "
"தேவை இல்லை. கத்தியே போதும்!
உண்மைதான். என் தலையில் முடியில்லை, வாயில் பல் இல்லை, காலில் தெம்பில்லை.
ஆயினும் என்னை நான் இருக்கிறபடியே ஏற்றுக்கொள்கிறேன்."
"நீங்க மட்டுமல்ல, நானும் உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு கணவனும், மனைவியும் இறைவன் தந்த பரிசு என்பதற்காக மட்டும் ஏற்றுக்கொண்டு
அப்பரிசினை உயிருள்ள வரை நேசித்தால்
அவர்களுக்கான விண்ணகப்பரிசு மிகப் பெரியதாய் இருக்கும்."
"ஒரு சிறு திருத்தம். அன்பு உயிருள்ள வரை மட்டுமல்ல உயிர் பிரிந்த பின்னும் விண்ணகத்தில் தொடரும்.
அடுத்த கேள்வி.
குடும்ப வாழ்வில் வரும் பிரச்சினைகளை எவ்வாறு அணுகவேண்டும்?"
"பிரச்சினை இல்லாத வாழ்க்கையே இல்லை,
பிரச்சனை இல்லாட்டி அது வாழ்க்கையே இல்லை..."
"ஏண்டி நாம என்ன நாடகத்துக்கு ஒத்திகையா பார்த்துக்கிட்டிருக்கோம், வசனம் பேசிக்கிட்டிருக்க.."
"சரி, வாழ்க்கையில் ஏற்படும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு ஒண்ணேஒண்ணுதான், அன்பு.
ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைக்கு அவர்கள்தான் தீர்வுகாண வேண்டும்,
பெற்றோரிடமோ, மற்ற உறவினர்களிடமோ பிரச்சனைகளை எடுத்துச் செல்லக்கூடாது.
மூன்றாவது நபரிடம் சென்றால் பிரச்சனை பெரிதாகுமேதவிர தீர்வு வராது.
அது மட்டுமல்ல தீர்வுகாண விவாதமுறையைப் பயன்படுத்தக்கூடாது.
கலந்துரையாட வேண்டும்.
No argument,
only discussion.
Argue செய்யும்போது நமது நிலைதான் சரி என்று எண்பிக்க முயல்வோமேதவிர
உண்மையை அறிய முயலமாட்டோம்."
"சில பிரச்சனைகளை ஆறப்போட்டாலே பிரச்சனை தீர்ந்து விடும்."
"கிறிஸ்துவையும், அவரது மதிப்பீடுகளையும் மையமாக வைத்து வாழ்ந்தால் பிரச்சனைகளே வராது.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித் திருச்சபை என்பதை உணர்ந்து, இறை வார்த்தைப்படி வாழ்ந்தால் பிரச்சனை எட்டிக்கூடப் பார்க்காது."
"யாரோ எட்டிப்பார்க்கிறாங்க.''
"யாரோ இல்ல, நம்ம பேரன்.
உங்க தாத்தாவுக்குப் பேசிக்கிட்டிருக்கத் துணை வேண்டுமாம். உட்கார்.
டீப்போட்டு எடுத்திட்டு வாரேன்."
"பாட்டி, பண்டம்."
"என்ன பண்டம்?"
"ஏதாவது. "
லூர்து செல்வம்.
It's true and touching Grandfa.
ReplyDelete