வார்த்தையை வாழ்வாக்குவோம்.
*******************************
"ஏன் தம்பி, மூஞ்சி இந்த வரத்து வருது?
கை வயிற்றை தடவிக்கிட்டிருக்கு என்ன பிரச்சினை?"
" கல்யாண வீட்டுச் சாப்பாடு பார்க்கிற வேல.
சீரணிக்கிற சாப்பாடாப் பார்த்து போடணும்.
வயிற்று வலிய,
வலியப் போய் இருநூறு ரூபாய்க் கொடுத்து வாங்கி வந்திருக்கேன்."
"உண்ட உணவு சீரணிக்கணும்னா வேலை பார்க்கணும்.
எதற்காக உண்கிறோமோ அதைச் செய்யாவிட்டால் உணவு வேண்டாத வேலையெல்லாம் பார்க்கும்.
வேலை செய்ய சக்திக்காக உண்கிறோம்.
உண்டுவிட்டு வேலை செய்யாவிட்டால் உணவு 'என்னை ஏண்டா சாப்பிட்டே'ன்னு திட்டிக்கிட்டேயிருக்கும்."
"உண்மைதான் அண்ணாச்சி. நான் இப்போ திட்டு வாங்கிக்கிட்டுதான் இருக்கேன்."
"இன்னொரு விசயம் தெரியுமா உனக்கு? "
"சொன்னாத்தானதெரியும். "
"உடலுக்கு உணவு இருப்பது போல ஆன்மாவுக்கும் உணவு இருக்கிறது. அது என்னவென்று தெரியுமா? "
"தெரியுமே, இறை வார்த்தைதான் அந்த உணவு.
பைபிள் வாசிப்பதால் இறை வார்த்தையாகிய உணவு கிடைக்கிறது."
"வாசிக்கும்போது மட்டுமல்ல, வாசித்தவர்கள் சொல்லும்போதும் கிடைக்கிறது. இந்த உணவும் சீரணமாகவேண்டும்."
"சீரணமாகவேண்டுமா? புரியவில்லை."
"உடலுக்கான உணவு சீரணமாகவேண்டும் என்று சொன்னால் என்ன அருத்தம்? "
"உணவிலுள்ள சத்து உடலோடு இரண்டறக் கலக்கவேண்டும்.
அப்போதான் உடலுக்கு வேண்டிய சக்தியும் வளர்ச்சியும் கிடைக்கும்."
"ஆன்மீக உணவாகிய இறை வார்த்தையும் சீரணம் ஆனால்தான்
ஆன்மீக வாழ்வுக்கான சக்தியும் வளர்ச்சியும் கிடைக்கும்.
சீரணம் ஆகாவிட்டால்
தலைக்கனம் ஏற்பட்டு, அதிகமாகும்."
"தலைக்கனமா? புரியவில்லை."
"உடலுக்கான உணவு சீரணம் ஆகாவிட்டால் வயிற்றுவலி ஏற்படுவதுபோல
ஆன்மீக உணவு சீரணம் ஆகாவிட்டால்,
தலைக்கனம் (Pride. The property of Lucifer) அதிகமாகும்."
"அதை ஏன் The property of Lucifer என்கிறீர்கள்? "
"படைப்பில் முதல் முதல் வீழ்ந்த Lucifer தான் முதல் தலைக்கனத்தினன்."
"அது சரி. இறைவார்த்தையை எப்படி சீரணிப்பது"
"இது கேள்வி.
உணவு வேலையாக மாறும்போது
சீரணிப்பது போல,
வார்த்தை வாழ்வாக மாறும்போது சீரணமாகிறது.
பகைவனை நேசி என்பது வார்த்தை.
பகைவனை நேசிப்பது வாழ்வு.
இறைவனின் கட்டளைகள் வார்த்தை.
கட்டளைப்படி நடப்பது வாழ்வு.
ஒவ்வொரு நாளும் நற்செய்தியை வாசிப்பது நற்செய்தியைப் பற்றிய அறிவை வளர்ப்பதற்காக அல்ல.
நற்செய்தியைப்பற்றி நம்மை விட சாத்தானுக்கு அதிகம் தெரியும்.
பயன்?
நற்செய்தியைப் பற்றி எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல.
தெரிந்ததில் எவ்வளவை, எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஒரு பாட்டிக்கு எழுத வாசிக்கத் தெரியாது.
அவளது பைபிள் அறிவு சாமியாருடைய ஞாயிறு பிரசங்கத்தின் அளவுதான்.
ஒருவர் பைபிளில் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார்.
அறிவுக்கும், வாழ்வுக்கும் உள்ள சமன்பாட்டை Percentage போட்டுக் கணக்குப் பார்க்க வேண்டும்.
" எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும். எவனிடம் அதிகம் ஒப்படைத்தார்களோ அவனிடம் இன்னும் அதிகமாய்க் கேட்பார்கள்".(லூக்.12:48)
நூறு மார்க் வாங்கவேண்டுமானல் பாட்டியைவிட முனைவர் பன்மடங்கு உழைக்கவேண்டும்! "
"அது தலைக் கனம் எப்படி ஆகும்?"
"வாழ்வாக்காமல் சேர்த்து வைக்கப்படும் அறிவின் அளவைப் பார்த்து தற்பெருமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
நற்செய்திப்படி வாழ்பவனிடம் தாழ்ச்சி இருக்கும், வாழாதவனிடம் தற்பெருமை இருக்கும்.
தற்பெருமைக்கு இன்னொரு பெயர் தலைக்கனம்.
தலைக்கனம் உள்ளவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள்.
சரி. வயிற்றுவலி எப்படி இருக்கிறது?"
"நாம் பேசிக்கொண்டிருந்ததால் வயிற்றுவலி இருந்ததே மறந்து விட்டது.
வார்த்தையை வாழ்வாக்குவோம் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது."
"சரி, நாளை சந்திப்போம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment