Monday, February 25, 2019

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு பங்குசாமியார்.

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு பங்குசாமியார்.
*********************************

தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு கேள்வி தோன்றும்,

"அது எப்படி, ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு பங்குசாமியார்? 

பங்குன்னா பங்குக் கோவில் இருக்கிற ஊரோடு கிளைக் கிராமங்களும் இருக்கும்,

அந்தக்  கிராமங்களுக்கும் அவர்தானே பங்குச்சாமியார்.

எப்படி ஒரு ஊருக்கு மட்டும் ஒரு சாமியார் போடுவாங்க? ''

இந்தக் கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லை. 

ஆனால் ஒரு சின்ன ஊரு, கூடப்போனா ஒரு முப்பது குடும்பங்கள்தான் இருககும்.

அந்த ஊருக்கு மட்டும்தான் அவர் பங்குச்சாமியார்.

அதில மகிழ்ச்சியான செய்தி என்னென்னா,

அந்த ஊர்ல உள்ள அத்தனை குடும்பங்களும் கத்தோலிக்கக் குடும்பங்கள்.

எல்லாக் குடும்பங்களும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பங்கள்.

ஆனால் பக்தியுள்ள குடும்பங்கள்.

சாமியார்கூட ஒரு பக்தியுள்ள ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான்.

பட்டம் பெற்றவுடன் இரண்டு ஆண்டுகள் உதவித் தந்தையாகப் பணியாற்றியவரை

இந்த ஊரில் பங்குத் தந்தையாகப் போட்டுவிட்டார்கள்.

அவர் ஒரு இளைஞர், கொஞ்சம் வித்தியாசமான இளைஞர்.

பட்டம் பெறுமுன்னாலேயே தனது  வெளிப்பறத்தோற்றம் பற்றி சில முக்கியமான தீர்மானங்கள் எடுத்திருந்தார்.

1.Shaving பண்ணக்கூடாது.

2.மக்கள் முன் வரும்போது அங்கி, கச்சை அணிந்துதான் வரவேண்டும்.

ஆன்மாவின் தோற்றம் இறைவனுக்கு மட்டும் தெரியும்.

ஆனால் வெளிப்புறத்தில் மக்கள் தன்னைப் பார்த்தவுடன் ஒரு குருவானவர் என்று அடையாளம் காணவேண்டும்.

எனக்கு இந்தக் கொள்கை பிடிக்கும்.

பங்குக் கோவில் ஆரோக்கியமாதா கோவில்.

ஊருக்கு ஏற்றபடி சின்ன ஓட்டுக்கட்டிடம்

அந்த ஊர் மக்களுக்குப் போதுமானது.

அறைவீடு மிக எளிமையானது.

பங்கு மக்களை சந்திக்க ஒரு அறை.

ஒரு படுக்கையறை.

ஒரு சமையலறை.

சீசப்பிள்ளை கிடையாது. தேவைப்படும்போது சாமியார்தான் சமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் சபை மக்களே தந்தைக்கு உணவு கொடுக்கும் பழக்கம் இருப்பதால் எப்போதாவதுதான் சமைக்கவேண்டியிருக்கும்.

அங்கு  பள்ளிக்கூடம் கிடையாது, ஆகவே உதவிக்கு ஆசிரியர்களும் கிடையாது.

பிரயாணம் செய்ய ஒரு சைக்கிள் இருந்தது, அவருடைய அப்பா வாங்கிக் கொடுத்தது.

பக்கத்து ஊர்களிலிருந்து சாமியார் யாராவது உதவிக்குக் கூப்பிடால் தவிர வேறு வெளியூர்ப் பயணங்கள் கிடையாது.

அவரது முழு நேரமும் பங்கு மக்களுக்காகத்தான்.

தினமும் காலையில் 6 மணிக்குப் பூசை.

தினமும் கோவில் நிறைந்திருக்கும்.

தினமும் பூசை முடிந்தபின்தான் பெரியவர்கள்  கூலி வேலைக்குப் போவார்கள்

பிள்ளைகள் பக்கத்து ஊரிலுள்ள அரசுப் பள்ளிக்குப் போவார்கள்.

சுவாமியார் தினமும் ஒரு குடும்பத்தைச்  சந்திப்பார்.

பகலில் வேலைக்குப் போக முடியாத வயதானவர்கள் மட்டும் வீட்டில் இருப்பார்கள்.

தினமும் ஒரு தாத்தாவைப் பார்க்கப் போவார். பக்கத்து வீட்டுத் தாத்தாவும் அங்கே வருவதுண்டு. 

கோவிலுக்கு வர முடியாத தாத்தாக்களுக்கு தினமும் நற்கருணை நாதரை அழைத்துச் செல்வார்.

தாத்தா சாப்பிடும் பழைய சாதத்தையே மதிய உணவாக சாமியார் சாப்பிட்டுக்கொள்வார்.

ஊருக்குள் நடந்துதான்போவார்.

காண்போரிடமெல்லாம் சிறிது நேரம் பேசிவிட்டுப் போவார்.

சிறுவர்களைக் கண்டால் கொடுப்பதற்கு அங்கி பைக்குள் எப்போதும் பிஸ்கட், பெப்பர்மிண்ட் இருக்கும்.

குடும்பச் சந்திப்பு சாயங்காலம் ஆட்கள் வேலையிலிருந்து திரும்பியவுடன் இருக்கும்.

நலம் விசாரித்தல். ஆன்மீக ஆலோசனைகள், செபம், ஞான விசயங்களில் சந்தேக நிவர்த்தி போன்ற ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் குடும்பச் சந்திப்புகளில் இடம் பெறும்.

அன்றைய இரவு உணவு அந்த மக்களோடுதான்.

அங்கேயே குடும்பத்தோடு இரவு செபம் சொல்லிய பிறகே அறைவீடு திரும்புவார்.

பள்ளிக்கூட நிர்வாகமோ, நில நிர்வாகமோ, பணநிர்வாகமோ எதுவும் சாமியாருக்கு இல்லை.

முழுக்கமுழுக்க ஆன்மீகப்பணி மட்டுமே.

பங்கு மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக மட்டுமே தன்னை முற்றிலும் அர்ப்பணித்துள்ளார்.

மக்கள் ஒழுங்காகப் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

ஒழுங்காகப் பூசைக்கு வருகிறார்கள்.

ஒழுங்காக இரவு செபம் சொல்லுகிறார்கள்.

பிள்ளைகட்கு ஒழுங்காக ஞானோபதேச வகுப்புகள் நடைபெறுகின்றன.

உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வரும்போதே  இறையழைத்தல் பற்றிய ஆவல் மனதில் பதிக்கப்படுகிறது.

குருமடம் செல்ல இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவில் திருவிழா ஆடம்பரமின்றி, திருவிழா வரியின்றி நடைபெறுகிறது.

பங்கு மக்கள் பங்குச் சாமியாரை உண்மையாகவே நேசிக்கிறார்கள்.

பங்குச் சாமியாரும் மக்களை உண்மையாகவே நேசிக்கிறார்.

பங்கே ஒரு குடும்பமாக இயங்குகிறது.

இது ஆன்மீகத்தில் வளர்ந்து வரும் ஏழைப்பங்கு.

ஏழைப் பங்குத் தந்தை என்றென்றும் வாழ்க!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment