இறைத் திட்டம் ஏற்போம்,
என்றென்றும் வாழ்வோம்.
*****************************
இறைவன் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர்.
தன்னிலே நிறைவாக(Perfect)
இருப்பவர்,
நிறைவான தன் அன்பினால் உந்தப்பட்டு,
தான் அன்பு செய்யவும்,
அன்பு செய்யப்படவும்
சம்மனசுக்களையும், மனிதனையும் படைத்தார்.
படைக்கப்பட்ட நமக்குத் துவக்கம் உண்டு,
ஆனால் நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பிற்குத் துவக்கமே இல்லை.
நாம் படைக்கப்படுமுன்பே, நித்தியகாலமாக நம்மை அன்பு செய்கிறார்.
இறைவன் நம்மை விளையாட்டிற்காகவும், பொழுது போக்கிற்காகவும் படைக்கவில்லை.
ஒரு உன்னதமான நோக்கத்தோடு நம்மைப் படைத்திருக்கிறார்.
நாம் ஒன்றுமில்லாது இருந்தவர்கள்.
நாம் உலகிற்பிறந்து அறிவு வேலை செய்ய ஆரம்பித்தபின்புதான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற விபரமே நமக்குத் தெரியும்.
எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற விபரமே நமக்குத் தெரியாது.
ஆகவே நாம் அடையவேண்டிய நோக்கத்தை அடைய
நம்மை வழி நடத்தவேண்டிய பொறுப்பை முற்றிலும் இறைவனே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு இறைவனின் பராமரிப்பு
(Providence of God)
என்று பெயர்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் காட்டுகிற வழியே செல்ல வேண்டியது மட்டும்தான்.
அவர் காட்டுகிற வழியை அறிந்து கொள்வதற்காகத்தான்
புத்தி, அறிவு, ஞானம் என்ற பண்புகளையும்,
அன்பு ஆன்மீக உயிரையும் நமக்கு நன்கொடையாகத் தந்துள்ளார்.
நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக
நித்தியகாலத் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்.
நம் வாழ்வில் என்ன நடந்தாலும் அது இறைவன் திட்டப்படிதான் நடக்கும்,
அது நமது நன்மைக்காகத்தான் நடக்கும் என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கு ஒரு சந்தேகம் வரும்.
ஏல்லாம் அவர் திட்டப்படி நடந்தால் நமது சுதந்திரத்துக்கு என்ன வேலை?
உண்மையைப் புரிந்துகொண்டால் இந்த சந்தேகம் வராது.
நமது வாழ்வில் திருமணம் முடிந்தவுடன் என்ன செய்கிறோம்?
பிறக்கயிருக்கும் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது, எங்கே படிக்கவைப்பது, என்ன வேலை வாங்குவது என்றெல்லாம் திட்டம் போடுகிறோம்.
ஆனால் நாம் நாம் விரும்புகிறபடி படிப்பதில்லை.
நாம் விரும்புகிற வேலையைப் பார்ப்பதுமில்லை.
தங்களுக்கு விருப்பமான
வேலையைத்தான் செய்கிறார்கள்.
நமது திட்டம் தோல்வி அடையக் காரணம் என்ன?
நமக்கு எதிர்காலம் தெரியாது.
பிறக்கப்போகும் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பு நமக்குத் தெரியாது
ஆனால் இறைவன் மட்டற்ற ஞானம் உள்ளவர்.
நமது முக்காலமும் அவருக்கு நிகழ்காலமே!
உலகம் உண்டான காலமுதல் உலக இறுதி நாள்வரை
வாழ்ந்த, வாழும், வாழவிருக்கும்
கோடிக் கணக்கான மக்களுள்
ஒவ்வொரும் தங்கள் சுதந்திரத்தை எப்படிப் பயன்டுத்துவார்கள்
என்பது இறைவனுக்கு நித்தியகாலமாகவே தெரியும்.
மனித சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடமாட்டார்.
மனிதன் தன் சுதந்திரத்தைப் பாவம் செய்யப் பயன்படுத்தினாலும்
அதிலிருந்து அவனது இரட்ண்யத்துக்குச் சாதகமான நன்மையை வரவழைக்க இறைவனுக்குத் தெரியும்.
இறைத் திட்டம் மனிதர்களின் சுதந்திரசெயல்பாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கும்
உதாரணத்திற்கு நமது முதல் பெற்றோரைப் படைக்க நித்தியகாலமாகத் திட்டமிட்டபோதே
அவர்கள் பாவம் செய்வார்கள் என்று இறைவனுக்குத் தெரியும்.
ஆனால் அவர்களுடைய சுதந்திரச் செயலில் குறுக்கிடாமல்
அதை நடக்கவிட்டுவிட்டு
அவர்களுடைய தீமையிலிருந்தும்
ஒரு நன்மையை வரவழைக்க நித்தியமாக திட்டமிட்டார்.
ஆதாம், ஏவாளைப் படைக்கத்திட்டமிட்டபோதே
அவர்கள் செய்யவிருக்கும் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய
தன்மகன் மனுவுருவெடுத்து
தன் உயிரையே பலியிடவேண்டும்
என்ற திட்டத்தையும் தீட்டிவிட்டார்.
இரண்டுமே அததற்குரிய காலக்கட்டங்களில் நிறைவேரவிருந்த
நித்திய காலத் திட்டங்கள்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இறைமகன் இயேசு சொன்னார்.
இயேசுவுக்கு முக்காலமும் தெரியும்.
யார் யார் என்ன கேட்கப் போகிறார்கள்,
அதற்கு அவருடைய பதில் என்னவாயிருக்கும்
என்பது இயேசுவுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
உதாரணத்திற்கு,
நாம் ஒரு பொருள் நமக்குப் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்பி
அதை இறைவனிடம் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.
நாம் அதைக் கேட்பது இன்றாக இருந்தாலும்,
நாம் கேட்போம் என்ற விபரம் இறைவனுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
அது நமக்குப் பயனுள்ளதாயிருக்குமா, இருக்காதா என்ற விபரமும் அவருக்குத் தெரியும்.
நமக்கு எந்தப்பொருள் பயனுள்ளதாயிருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.
நமக்குப் பயன்படும் பொருளைத் தர அவர் நித்திய காலமாகவே திட்டமிட்டிருப்பார்.
அவரது திட்டம் நிறைவேறும்.
நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்க ஒரு எளிதான வழி இருக்கிறது.
அதுவும் இயேசு காண்பித்த வழிதான்.
"ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.........
....கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."(மத்.6:31,33)
இறையரசைப் பரப்புவதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக்கொண்டு செயல்படுபவர்கள்,
தங்கள் இதர தேவைகள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
அவை அவர்கட்குக் கொடுக்கப்படும்.
ஆக, நமது சுதந்திரம், நமது செயல், நமது செபம் போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டுதான் இறைவன் நமக்கான நித்திய திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்.
எதுவும் தற்செயலாக நடப்பதில்லை, இறைவன் திட்டப்படிதான் நடக்கிறது.
நமது விருப்பங்கள் நிறைவேறா விட்டாலும், அதுவும் நமது நன்மைக்கான இறைவன் திட்டமே.
.
நம் வாழ்விவில், துன்பங்கள், மரணம் உட்பட, எது நடந்தாலும்,
அது நமது நன்மைக்கே,
அதாவது நமது ஆன்மா நிலைவாழ்வு பெற உதவுவதற்கே
என்ற உண்மையை உணர்ந்து,
மகிழ்வுடன் ஏற்று நடந்தால் நமக்கு நித்திய வாழ்வு உறுதி.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்,
நிலை வாழ்வு பெற வேண்டுமென்பதற்காகவே நம்மைப் படைத்தவர்,
நாம் நித்தியமாக வாழத் தன் உயிரையே கொடுத்தவர்,
நாம் ஆன்ம வாழ்வில் வளரத் தன்னையே உணவாகத் தருபவர்
என்ன செய்தாலும் நமது நன்மைக்காகவே செய்வார்.
இறைத் திட்டம் ஏற்போம்,
என்றென்றும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment