Thursday, February 28, 2019

ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்(மாற்கு.9:50)

ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்
(மாற்கு.9:50)
+++++++++++++++++++++++++

உள்ளங்கள் ஒன்றையொன்று அன்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதுதான் சமாதானம்.

அன்பின் அடிப்படையில் எல்லாம் வல்ல இறைவன் மனிதனைப் படைத்தபோது இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே பரிபூரண சமாதானம் நிலவியது.

ஆனால் மனிதன் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்ததின்மூலம் இறைவனோடு கொண்டிருந்த சமாதானத்தை முறித்துக்கொண்டு வந்துவிட்டான்.

ஆனால் இறைவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

அவரால் மாற்றிக் கொள்ளவும் முடியாது, ஏனைனில் இயல்பிலேயே அவரால் மாறமுடியாது.

By nature He cannot change.

ஆகவே அவர் நம்மை அவரோடு சமாதான நிலைக்குள் இழுத்துக்கொள்ள

நாம் செய்த பாவத்திற்கு

அவரே பரிகாரம் செய்ய நித்திய காலமாகவே தீர்மானித்தார்.

ஆனால் தேவ சுபாவத்தில் பரிகாரம் செய்யமுடியாது.

ஆகவே மனிதனைய்ப் பிறந்து மனித சுபாவத்தில் பரிகாரம் செய்யத் தீர்மானிதார்.

இந்த நோக்கோடுதான் அவரது அன்பு மகன் மனிதன் ஆனார்.

இறைமகன் மனுமகன் ஆன நோக்கத்தை இறைத் தூதர்கள் விண்ணினின்று இசைத்த பாடல்மூலம் மண்ணுலகோர்க்கு அறிவித்தனர்

"விண்ணுகில் இறைவனுக்கு மகிமையும்,

மண்ணுலகில் நன்மனதோற்கு சமாதானமும் உண்டாகுக."

சமாதான தேவனின் மண்ணுலக வருகையை அறிவிக்கவந்த இறைத்தூதர்கள்

சமாதானத்திற்கு ஒரு நிபந்தனையும் கூறியுள்ளனர்.

'நன்மனதோற்குச் சமாதானம்."

'Peace to men of good will.'

இறைமகன் தன் சிலுவை மரணம் மூலம் மனித குலம் இழந்த சமானத்தை மீட்டுவிடுவார்.

அதை நாம் அனுபவிக்க நமக்கு நல்ல மனது வேண்டும்.

நல்ல மனது

1.பாவம் இல்லாதிருக்கும்.

2.தனக்கும் மற்றவர்கட்கும் நல்லதையே நினைக்கும்.

3.யார் மீதும் பொறாமையோ, கோபமோ கொள்ளாது.

4.எல்லோரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும்.

5.பாரபட்சம் இல்லாமல் அன்பு செய்யும்.

இறைவன் பாடுபட்டு,

இரத்தம் சிந்தி,

உயிரைக்  கொடுத்துப்
பெற்றுத்தந்த சமாதானத்தை

நாமும்  அனுபவித்து

மற்றவர்கட்கும் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு திருப்பலியிலும்

நமது பலியை
இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்

என்பதற்காகத்தான் பலியின் ஆரம்பத்திலேயே

உத்தம மனஸ்தாபப்பட்டு

நமது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்புக்கேட்கிறோம்.

திருவிருந்தில் கலந்து கொள்ளுமுன்பு அருகில் உள்ளவர்களோடு நமது சமாதானத்தைப் பரிமாறிக்கொள்கிறோம்.

இது வெறும் சடங்கல்ல.

ஆண்டவர் கோவிலில் காணிக்கை செலுத்தும் முறைபற்றிக் கூறும்போது,

"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,


24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து."(மத்.5:24)

என்று கூறுகின்றார்.

சாதாரண காணிக்கையைச் செலுத்தும்போதே   சமாதானத்தை எதிர்பார்க்கும் இறைவன்,

தன் மகனையே பலியாகக் கொடுக்கும்போது சமாதானத்தை எதிர்பார்க்காமலிருப்பாரா?

உள்ளத்தில் பகைமையை வைத்துக்கொண்டு நாம் செலுத்தும் பலி எப்படி இறைவனுக்கு ஏற்றதாய் இருக்கும்.

உண்மையில் நாம் திருப்பலிக்குச் செல்லுமுன்பே மனத்தாங்கல் இருப்பவர்களோடு சமாதானம் செய்துவிட வேண்டும்.

ஆனால் இப்போது 'சமாதானம்' ஏன்ற வார்த்தைக்குப் பதில் 'அமைதி' என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள்.

அதனால்தான் பகைவரைப் பார்த்தவுடன் எதுவும் பேசாமல் அமைதியாக வந்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன்!

இரண்டு பகைவர்கள் அமைதியாயிருந்தால் சமாதானமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

அமைதியாய் இருப்பவர்களெல்லாம்
சமாதானமாய் இருக்கிறார்கள்  என்றும் அர்த்தமல்ல.

முதல் உலகப்போர் முடிந்தபின் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அப்புறம் நாடுகள் அமைதியாய் இரண்டாம் உலகப்போருக்குத் தயாரிக்க ஆரம்பித்தனர்!

பாவத்தினால் நமது முதல் பெற்றோர் இழந்த சமாதானத்தை இயேசு மீட்டுத்தந்திருக்கிறார்.

அந்த சமாதானத்தோடு வாழ்வோம் இறைவனோடும், நம் அயலானோடும்.

லூர்து செல்வம்.

Tuesday, February 26, 2019

இராயப்பரோடு இரண்டு வார்த்தைகள்.

இராயப்பரோடு  இரண்டு வார்த்தைகள்.
***************************----

"அப்பா வணக்கம்."

"ஆண்டவர் எனக்கு வைத்த பெயர் இராயப்பர்."

"திருச்சபை என்ற நமது ஆன்மீகக் குடும்பத்துக்குத் தலைவராக ஆண்டவர் உங்களைத்தானே நியமித்தார்.

நாங்க குடும்பத் தலைவர அப்பான்னுதான் கூப்பிடுவோம்.

அதுவும் தவிர உங்கள பெயர்சொல்லி கூப்பிடுவதாயிருந்தாலும் 'இராயப்பா'ன்னுதான் கூப்பிடணும்."

"ஹலோ! மோட்ச வாசல திறந்துதான் வைத்திருக்கேன்.நேரா உள்ளே போகவேண்டியதுதான. எங்கிட்ட ஏன் வம்பளந்துக்கிட்டு இருக்க! "

"இராயப்பரே,  எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அத ஆண்டவரிடம் கேட்டா பொருத்தமாயிருக்கும்.

ஆனாலும் அதுல நீங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால உங்ககிட்ட கேட்டாலே போதும்னு நினைக்கிறேன்.

நீங்க மறுத்திட்டா யூதாஸ்ட்ட கேட்கவேண்டியிருக்கும்."

"யூதாஸ்ட்டையா?"

"ஆமா. அவரும் சம்பந்தப்பட்டிருக்கார்ல்ல."

"என்னது? நானும் யூதாசும் சம்பந்தப்பட்டிருக்கோமா? என்ன கதை விடுற? "

"கத இல்லீங்க. உண்மைங்க.

இன்னும் சொல்லப்போனா இதில ஆண்டவரும்
சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அவரிடத்திலே போய்க் கேட்டிருவேன்.

ஆனால் அவரச்சுத்தி பெரிய கூட்டம் இருக்கும்னு பார்க்கிறேன்."

"சரி, எங்கிட்டயே கேளு."

"ஆண்டவர் உங்களை ஒரு முறை  'சாத்தானே'ன்னு சொன்னார்.

யூதாஸ 'நண்பனே'ன்னு அழைத்தார்.

திருச்சபையின் தலைவர் ஆகப்போகிறவரை 'சாத்தானே'ன்னும்

காட்டிக்கொடுத்தவனை நண்பனே'ன்னும் அழைத்த காரணம் என்ன?''

"இவ்வளவுதானா. பைபிள ஒழுங்கா வாசிச்சிருந்தா இந்த சந்தேகம் வந்திருக்காது."

"பைபிள வாசிச்சதினாலதான் இந்தக் கேள்வியே பிறந்தது."

"வாசிச்சா மட்டும் போதாது. செப உணர்வோடு வாசிக்கணும்.

ஆண்டவர் எப்போ என்னைச் சாத்தான்னு சொன்னாரு

எப்போ யூதாச 'நண்பா'ன்னு சொன்னார்னு ஞாபகம் இருக்கா? '

"எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் கம்மி. நீங்களே சொல்லிடுங்களேன்."

"ஆண்டவர் எதற்காகத் மனுசனாப்பிறந்தார்னு ஞாபகம் இருக்கா? "

"நமக்காகப் பாடுபட்டு,  சிலுவையிலே அறையப்பட்டு, மரித்து நம்மை இரட்சிக்க மனுசனாப்பிறந்தார்."

"நீ ஒரு கல்யாண வீட்டுக்கு  வந்திருக்க."

"இராயப்பரே, நான் மோட்சத்துக்கு வந்திருக்கேன்."

"தெரியுது. சொல்றதக் கேளு. கல்யாணவீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதற்காக பந்தியில உட்கார்த. அப்போ ஒரு ஆள் வந்து 'நீ சாப்பிடக்கூடாது'ன்னு சொன்னா உனக்கு எப்படி இருக்கும்? "

"சொன்ன ஆள் மேல கோபம் வரும்."

"ஆண்டவர்

'மனுமகன் பாடுகள் பல படவும்

மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு,

மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'னு சொன்னபோது, 

நான் அன்பின் காரணமாக அவர் துன்பப்படுதத விரும்பாததினால,

அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டேன்.

மனிதரை மீட்பதற்காக பாடுபட வந்தவரை பாடுபட வேண்டாம்னு யார் சொல்லுவா?"

"மனித மீட்பை விரும்பாத சாத்தான்தான் சொல்லும்."

"இப்போ புரியுதா ஆண்டவர் என்னை ஏன் 'சாத்தான்'னு சொன்னார்னு? "

"அது புரியுது. ஆனாலும் நீங்க அவர் மேல பாசத்துனாலதான அப்படிச் சொன்னீங்க! "

"அது ஆண்டவருக்கும் தெரியும். ஆனால்  அவர் எந்த அளவிற்க்கு மனித மீட்பில் ஆர்வமாக இருந்தார் என்கிறத நான் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா. அதனால்தான் என்னை அப்படி அழைத்தார்."

"ஆனாலும் அவர் உங்களிடம்

'உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே'

என்றுதானே சொன்னார். சாத்தானுடைய கருத்துக்கள்னு சொல்லவில்லையே."

"ஆமா. அவர் 'மனிதனுடைய கருத்துகளே'  என்றுதான் சொன்னார்.

ஆயினும் சொன்ன சூழ்நிலையிலிருந்து (context) நான் புரிந்துகொண்டேன், 

அவை இன்னும் மீட்பு அடையாத, அதாவது சாத்தானின் பிடியிலிருந்து இன்னும் விடுபடாத மனிதனின் கருத்துகளே என்று.

ஆன்மீகத்தில் நடுநிலைமை என்பதே கிடையாது.  (No neutrality).

மோட்சத்தை நோக்கிய பாதை

அல்லது

நரகத்தை நோக்கிய பாதை .

நடுநிலைப் பாதை கிடையாது.

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(மத்.12:30)

ஆகையினால்

மனிதனின் கருத்துக்கள்

இயேசுவின் கருத்துகட்கு எதிராயிருந்தால்,

அவை சாத்தானின் கருத்துக்களே.

இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகள்தான் இயேசுவின் போதனைகள்.

ஆகவே பைபிளின் வசனங்களுக்கு நாம் கொடுக்கும் விளக்கங்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகட்கு எதிராக இருந்துவிடக்கூடாது."

'புரிகிறது.

நான் மோட்சத்துக்கு வந்துவிட்டேன்.

பூமியில் உள்ளவர்கட்குப் புரியவேண்டும்.

யூதாசை ஏன் இயேசு 'நண்பா' என்றார்?"

("மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

32 இதெல்லாம் வெளிப்படையாகச் சொன்னார். இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டார்.

33 அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, "போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்."
மாற்கு.8:31-33)


"ஒன்றைப் புரிந்துகொள், என்னைச் சீடனாக்கிய அதே இயேசுதான் யூதாசையும் சீடனாக்கினார்.

சீடர்கள் எல்லோரிடமும் குறைகள் இருந்தன.

எங்கள் குறைகளை நீக்கதான் இயேசு பயிற்சி  கொடுத்தார்.

எங்களிடம் விசுவாசம் இருந்தது,

குறைகளும் இருந்தன.

யூதாசிடம் பண ஆசை அதிகம் இருந்தது.

அவர் இயேசுவின் மீது வெறுப்புகொண்டோ, கோபம் கொண்டோ காட்டிக்கொடுக்கவில்லை.

காட்டிக் கொடுத்தால் தனக்குப் பணம் கிடைக்கும், இயேசு எப்படியும் தப்பித்துவிடுவார் என்று எண்ணிதான் காட்டிக் கொடுத்தார்.

ஆனால் அவர் தப்பவில்லை என்று அறிந்தவுடன் மனம் உடைந்துபோனார்.

"அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,

4 "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்."(மத்.27:3,4)

யூதாஸ் செய்தது பாவம்.

ஆண்டவர் 'விரோதிகளை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்பவர்கட்கு நன்மை செய்யுங்கள்'னு நமக்கு சொல்லியிருக்கார்.

அதன் அடிப்படையில தனக்குத் தீமை செய்த யூதாசை

உண்மையான நேசத்துடன் 'நண்பா' என்று அழைத்தார்.

அதுமட்டுமல்ல யூதாசின் பாவம் இயேசுவின் இரட்சண்யப் பாதையில், உதவியிருக்கிறதே!

இயேசு நம் பாவங்கட்காக பாடுபட்டு, மரிக்கவே மனிதன் ஆனார்.

அவர் கொலையாளிகளின் கையில் அகப்பட உதவியதன் மூலம் நமக்காக இயேசு மரிக்க யூதாஸ் உதவியிருக்கிறாரே .

நமக்கு இரட்சண்யம் பெற்றுத்தர இயேசுவுக்கு உதவி செய்தவரை அவர் நண்பா என்று அழைத்ததில் ஆச்சரியமே இல்லை."

"அப்படியானால் இயேசுவைக் காட்டிக்கொடுத்தது சரி  என்கிறீர்களா?"

"காட்டிக்கொடுத்தது மிகப் பெரிய பாவம்.

ஆனால் அதிலிருந்து இரட்சண்யம் என்ற நன்மையை இயேசு வரவழைத்திருக்கிறாரே!

உனக்கு இன்னொன்று தெரியுமா?

ஆதாம் ஏவாள் செய்த பாவத்தைத் திருச்சபை உயிர்ப்பு விழாவிற்கு முந்திய இரவு வழிபாட்டில்,

“O Happy Fault that merited such and so great a Redeemer!”

"எங்களுக்கு இவ்வளவு பெரிய இரட்சகரைப் பெற்றுத் தந்த பாக்கியமான பாவமே"

என்று அழைக்கிறது!

ஆதாம், ஏவாள் பாவம் செய்திருக்காவிட்டால்
நமக்கு இரட்சகர் கிடைத்திருக்க மாட்டாரே!

"sin has its own valuable positive character in God’s plan.”

எதிர்மறைச் (Negative) செயலான பாவத்தைக்கூட

இறைவனால்

Positive செயலாக மாற்றமுடியும்,

ஏனெனில் அவர் சர்வ வல்லபர்.

நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்ததால் தான் இறைவனை வென்று விட்டதாக சாத்தான் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் பாவத்திலிருந்து நம்மை மீட்க இறைமகனே மனிதன் ஆனார்.

சாத்தான் மனுமகனைக் கொல்ல யூதாசையும், யூத மதவல்லுனர்களையும் ஏவி விட்டான்.

ஆனால் அவர்கள் இயேசுவுக்குக்  கொடுத்த மரணமே நமக்கு இரட்சண்யமாயிற்று.

சாத்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டான்.

மனிதனை கடவுளிடமிருந்து பிரிக்கவே
சாத்தான் பாவத்தைப் புகுத்தினான்.

ஆனால் அதுவே இறை, மனித உறவு முன்னைவிட நெருக்கமாகக் காரணமாயிற்று!

ஆனாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் பாவம் செய்யக்கூடாது."

"இப்போ புரிகிறது, ஏன் கடவுள் தீமையை அனுமதிக்கிறார் என்று.

அதிலிருந்து ஒரு பெரிய நன்மையை வரவழைக்க இறைனால் முடியும்!

God allows evils to happen in order to bring a greater good therefrom.

இராயப்பரே, நன்றி.

உள்ளே போகலாமா? "

"கதவு திறந்துதான் இருக்கு. உள்ளே போங்க."

"இராயப்பரே, இன்னும் ஒரு சந்தேகம்..."

"உள்ளே போங்க. அடுத்த சந்தேகத்த யூதாசிடம் சொல்லுங்க.

உயிர் பிரியப்போகும் கடைசி வினாடி எப்படி மனஸ்தாபப்படணும்னு அவர் சொல்லித் தருவாரு.

அவருக்காகவும்,

மற்ற கொலையாளிகட்காகவும்

அவர்களை மன்னிக்கும்படி

நம் ஆண்டவரே

சிலுவையில் தொங்கும்போது

தன் தந்தையிடம் பரிந்து பேசியது ஞாபகம் இருக்கில்ல. ."

"ஞாபகம் இருக்கு.

வரட்டுமா?"

"வந்து ரொம்ப நேரமாச்சி. உள்ள போங்க."

லூர்து செல்வம்.

Monday, February 25, 2019

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு பங்குசாமியார்.

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு பங்குசாமியார்.
*********************************

தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு கேள்வி தோன்றும்,

"அது எப்படி, ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு பங்குசாமியார்? 

பங்குன்னா பங்குக் கோவில் இருக்கிற ஊரோடு கிளைக் கிராமங்களும் இருக்கும்,

அந்தக்  கிராமங்களுக்கும் அவர்தானே பங்குச்சாமியார்.

எப்படி ஒரு ஊருக்கு மட்டும் ஒரு சாமியார் போடுவாங்க? ''

இந்தக் கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லை. 

ஆனால் ஒரு சின்ன ஊரு, கூடப்போனா ஒரு முப்பது குடும்பங்கள்தான் இருககும்.

அந்த ஊருக்கு மட்டும்தான் அவர் பங்குச்சாமியார்.

அதில மகிழ்ச்சியான செய்தி என்னென்னா,

அந்த ஊர்ல உள்ள அத்தனை குடும்பங்களும் கத்தோலிக்கக் குடும்பங்கள்.

எல்லாக் குடும்பங்களும் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பங்கள்.

ஆனால் பக்தியுள்ள குடும்பங்கள்.

சாமியார்கூட ஒரு பக்தியுள்ள ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான்.

பட்டம் பெற்றவுடன் இரண்டு ஆண்டுகள் உதவித் தந்தையாகப் பணியாற்றியவரை

இந்த ஊரில் பங்குத் தந்தையாகப் போட்டுவிட்டார்கள்.

அவர் ஒரு இளைஞர், கொஞ்சம் வித்தியாசமான இளைஞர்.

பட்டம் பெறுமுன்னாலேயே தனது  வெளிப்பறத்தோற்றம் பற்றி சில முக்கியமான தீர்மானங்கள் எடுத்திருந்தார்.

1.Shaving பண்ணக்கூடாது.

2.மக்கள் முன் வரும்போது அங்கி, கச்சை அணிந்துதான் வரவேண்டும்.

ஆன்மாவின் தோற்றம் இறைவனுக்கு மட்டும் தெரியும்.

ஆனால் வெளிப்புறத்தில் மக்கள் தன்னைப் பார்த்தவுடன் ஒரு குருவானவர் என்று அடையாளம் காணவேண்டும்.

எனக்கு இந்தக் கொள்கை பிடிக்கும்.

பங்குக் கோவில் ஆரோக்கியமாதா கோவில்.

ஊருக்கு ஏற்றபடி சின்ன ஓட்டுக்கட்டிடம்

அந்த ஊர் மக்களுக்குப் போதுமானது.

அறைவீடு மிக எளிமையானது.

பங்கு மக்களை சந்திக்க ஒரு அறை.

ஒரு படுக்கையறை.

ஒரு சமையலறை.

சீசப்பிள்ளை கிடையாது. தேவைப்படும்போது சாமியார்தான் சமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் சபை மக்களே தந்தைக்கு உணவு கொடுக்கும் பழக்கம் இருப்பதால் எப்போதாவதுதான் சமைக்கவேண்டியிருக்கும்.

அங்கு  பள்ளிக்கூடம் கிடையாது, ஆகவே உதவிக்கு ஆசிரியர்களும் கிடையாது.

பிரயாணம் செய்ய ஒரு சைக்கிள் இருந்தது, அவருடைய அப்பா வாங்கிக் கொடுத்தது.

பக்கத்து ஊர்களிலிருந்து சாமியார் யாராவது உதவிக்குக் கூப்பிடால் தவிர வேறு வெளியூர்ப் பயணங்கள் கிடையாது.

அவரது முழு நேரமும் பங்கு மக்களுக்காகத்தான்.

தினமும் காலையில் 6 மணிக்குப் பூசை.

தினமும் கோவில் நிறைந்திருக்கும்.

தினமும் பூசை முடிந்தபின்தான் பெரியவர்கள்  கூலி வேலைக்குப் போவார்கள்

பிள்ளைகள் பக்கத்து ஊரிலுள்ள அரசுப் பள்ளிக்குப் போவார்கள்.

சுவாமியார் தினமும் ஒரு குடும்பத்தைச்  சந்திப்பார்.

பகலில் வேலைக்குப் போக முடியாத வயதானவர்கள் மட்டும் வீட்டில் இருப்பார்கள்.

தினமும் ஒரு தாத்தாவைப் பார்க்கப் போவார். பக்கத்து வீட்டுத் தாத்தாவும் அங்கே வருவதுண்டு. 

கோவிலுக்கு வர முடியாத தாத்தாக்களுக்கு தினமும் நற்கருணை நாதரை அழைத்துச் செல்வார்.

தாத்தா சாப்பிடும் பழைய சாதத்தையே மதிய உணவாக சாமியார் சாப்பிட்டுக்கொள்வார்.

ஊருக்குள் நடந்துதான்போவார்.

காண்போரிடமெல்லாம் சிறிது நேரம் பேசிவிட்டுப் போவார்.

சிறுவர்களைக் கண்டால் கொடுப்பதற்கு அங்கி பைக்குள் எப்போதும் பிஸ்கட், பெப்பர்மிண்ட் இருக்கும்.

குடும்பச் சந்திப்பு சாயங்காலம் ஆட்கள் வேலையிலிருந்து திரும்பியவுடன் இருக்கும்.

நலம் விசாரித்தல். ஆன்மீக ஆலோசனைகள், செபம், ஞான விசயங்களில் சந்தேக நிவர்த்தி போன்ற ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் குடும்பச் சந்திப்புகளில் இடம் பெறும்.

அன்றைய இரவு உணவு அந்த மக்களோடுதான்.

அங்கேயே குடும்பத்தோடு இரவு செபம் சொல்லிய பிறகே அறைவீடு திரும்புவார்.

பள்ளிக்கூட நிர்வாகமோ, நில நிர்வாகமோ, பணநிர்வாகமோ எதுவும் சாமியாருக்கு இல்லை.

முழுக்கமுழுக்க ஆன்மீகப்பணி மட்டுமே.

பங்கு மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக மட்டுமே தன்னை முற்றிலும் அர்ப்பணித்துள்ளார்.

மக்கள் ஒழுங்காகப் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

ஒழுங்காகப் பூசைக்கு வருகிறார்கள்.

ஒழுங்காக இரவு செபம் சொல்லுகிறார்கள்.

பிள்ளைகட்கு ஒழுங்காக ஞானோபதேச வகுப்புகள் நடைபெறுகின்றன.

உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வரும்போதே  இறையழைத்தல் பற்றிய ஆவல் மனதில் பதிக்கப்படுகிறது.

குருமடம் செல்ல இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவில் திருவிழா ஆடம்பரமின்றி, திருவிழா வரியின்றி நடைபெறுகிறது.

பங்கு மக்கள் பங்குச் சாமியாரை உண்மையாகவே நேசிக்கிறார்கள்.

பங்குச் சாமியாரும் மக்களை உண்மையாகவே நேசிக்கிறார்.

பங்கே ஒரு குடும்பமாக இயங்குகிறது.

இது ஆன்மீகத்தில் வளர்ந்து வரும் ஏழைப்பங்கு.

ஏழைப் பங்குத் தந்தை என்றென்றும் வாழ்க!

லூர்து செல்வம்.

Sunday, February 24, 2019

இறைத் திட்டம் ஏற்போம், என்றென்றும் வாழ்வோம்.

இறைத் திட்டம் ஏற்போம்,

என்றென்றும் வாழ்வோம்.
*****************************

இறைவன் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

தன்னிலே நிறைவாக(Perfect)
இருப்பவர்,

நிறைவான தன் அன்பினால் உந்தப்பட்டு,

தான் அன்பு செய்யவும்,

அன்பு செய்யப்படவும்

சம்மனசுக்களையும், மனிதனையும் படைத்தார்.

படைக்கப்பட்ட நமக்குத் துவக்கம் உண்டு,

ஆனால் நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பிற்குத் துவக்கமே இல்லை.

நாம் படைக்கப்படுமுன்பே, நித்தியகாலமாக நம்மை அன்பு செய்கிறார்.

இறைவன் நம்மை விளையாட்டிற்காகவும், பொழுது போக்கிற்காகவும் படைக்கவில்லை.

ஒரு  உன்னதமான நோக்கத்தோடு நம்மைப் படைத்திருக்கிறார்.

நாம் ஒன்றுமில்லாது இருந்தவர்கள்.

நாம் உலகிற்பிறந்து அறிவு வேலை செய்ய ஆரம்பித்தபின்புதான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற விபரமே நமக்குத் தெரியும்.

எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற விபரமே நமக்குத் தெரியாது.

ஆகவே நாம் அடையவேண்டிய நோக்கத்தை அடைய

நம்மை வழி நடத்தவேண்டிய பொறுப்பை முற்றிலும் இறைவனே ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு இறைவனின் பராமரிப்பு

(Providence of God)

என்று பெயர்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் காட்டுகிற வழியே செல்ல வேண்டியது மட்டும்தான்.

அவர் காட்டுகிற வழியை அறிந்து கொள்வதற்காகத்தான்

புத்தி, அறிவு, ஞானம் என்ற பண்புகளையும்,

அன்பு ஆன்மீக உயிரையும் நமக்கு நன்கொடையாகத் தந்துள்ளார்.

நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக

நித்தியகாலத் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்.

நம் வாழ்வில் என்ன நடந்தாலும் அது இறைவன் திட்டப்படிதான் நடக்கும்,

அது நமது நன்மைக்காகத்தான் நடக்கும் என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு ஒரு சந்தேகம் வரும்.

ஏல்லாம் அவர் திட்டப்படி நடந்தால் நமது சுதந்திரத்துக்கு என்ன வேலை?

உண்மையைப் புரிந்துகொண்டால் இந்த சந்தேகம் வராது.

நமது வாழ்வில் திருமணம் முடிந்தவுடன் என்ன செய்கிறோம்?

பிறக்கயிருக்கும் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது, எங்கே படிக்கவைப்பது, என்ன வேலை வாங்குவது என்றெல்லாம் திட்டம் போடுகிறோம்.  

ஆனால் நாம்  நாம் விரும்புகிறபடி படிப்பதில்லை.

நாம் விரும்புகிற வேலையைப்   பார்ப்பதுமில்லை.

தங்களுக்கு விருப்பமான
வேலையைத்தான் செய்கிறார்கள்.

நமது திட்டம் தோல்வி அடையக்  காரணம் என்ன?

நமக்கு எதிர்காலம் தெரியாது.

பிறக்கப்போகும் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பு நமக்குத் தெரியாது

ஆனால்  இறைவன் மட்டற்ற ஞானம் உள்ளவர்.

நமது முக்காலமும் அவருக்கு நிகழ்காலமே!

உலகம் உண்டான காலமுதல் உலக இறுதி நாள்வரை

வாழ்ந்த, வாழும், வாழவிருக்கும்

கோடிக் கணக்கான மக்களுள்

ஒவ்வொரும் தங்கள் சுதந்திரத்தை எப்படிப் பயன்டுத்துவார்கள்

என்பது இறைவனுக்கு நித்தியகாலமாகவே  தெரியும்.

மனித சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடமாட்டார்.

மனிதன் தன் சுதந்திரத்தைப் பாவம் செய்யப் பயன்படுத்தினாலும்

அதிலிருந்து அவனது இரட்ண்யத்துக்குச் சாதகமான நன்மையை வரவழைக்க இறைவனுக்குத் தெரியும்.

இறைத் திட்டம் மனிதர்களின்  சுதந்திரசெயல்பாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கும்

உதாரணத்திற்கு நமது முதல் பெற்றோரைப் படைக்க நித்தியகாலமாகத் திட்டமிட்டபோதே

அவர்கள் பாவம் செய்வார்கள் என்று இறைவனுக்குத் தெரியும்.

ஆனால் அவர்களுடைய சுதந்திரச் செயலில் குறுக்கிடாமல்

அதை நடக்கவிட்டுவிட்டு

அவர்களுடைய தீமையிலிருந்தும்

ஒரு நன்மையை வரவழைக்க நித்தியமாக திட்டமிட்டார்.

ஆதாம், ஏவாளைப் படைக்கத்திட்டமிட்டபோதே

அவர்கள் செய்யவிருக்கும் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய

தன்மகன் மனுவுருவெடுத்து

தன் உயிரையே பலியிடவேண்டும்

என்ற திட்டத்தையும் தீட்டிவிட்டார்.

இரண்டுமே அததற்குரிய காலக்கட்டங்களில் நிறைவேரவிருந்த

நித்திய காலத் திட்டங்கள்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இறைமகன் இயேசு சொன்னார்.

இயேசுவுக்கு முக்காலமும் தெரியும்.

யார் யார் என்ன கேட்கப் போகிறார்கள்,

அதற்கு அவருடைய பதில் என்னவாயிருக்கும்

என்பது இயேசுவுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

உதாரணத்திற்கு,

நாம் ஒரு பொருள் நமக்குப் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்பி

அதை இறைவனிடம் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.

நாம் அதைக் கேட்பது இன்றாக இருந்தாலும்,

நாம் கேட்போம் என்ற விபரம் இறைவனுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அது நமக்குப் பயனுள்ளதாயிருக்குமா, இருக்காதா என்ற விபரமும் அவருக்குத் தெரியும்.

நமக்கு எந்தப்பொருள் பயனுள்ளதாயிருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.

நமக்குப் பயன்படும் பொருளைத் தர அவர் நித்திய காலமாகவே திட்டமிட்டிருப்பார்.

அவரது திட்டம் நிறைவேறும்.

நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்க ஒரு எளிதான வழி இருக்கிறது.

அதுவும் இயேசு காண்பித்த வழிதான்.

"ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.........

....கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."(மத்.6:31,33)

இறையரசைப் பரப்புவதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக்கொண்டு செயல்படுபவர்கள்,

தங்கள் இதர தேவைகள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

அவை அவர்கட்குக்  கொடுக்கப்படும்.

ஆக, நமது சுதந்திரம், நமது செயல், நமது செபம் போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டுதான் இறைவன் நமக்கான நித்திய திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்.

எதுவும் தற்செயலாக நடப்பதில்லை, இறைவன் திட்டப்படிதான் நடக்கிறது.

நமது விருப்பங்கள் நிறைவேறா விட்டாலும், அதுவும் நமது நன்மைக்கான இறைவன் திட்டமே.

.
நம் வாழ்விவில்,    துன்பங்கள், மரணம் உட்பட, எது நடந்தாலும்,

அது நமது நன்மைக்கே,

அதாவது நமது ஆன்மா நிலைவாழ்வு பெற உதவுவதற்கே

என்ற உண்மையை உணர்ந்து,

மகிழ்வுடன் ஏற்று நடந்தால் நமக்கு நித்திய வாழ்வு உறுதி.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்,

  நிலை வாழ்வு பெற வேண்டுமென்பதற்காகவே    நம்மைப் படைத்தவர்,

நாம் நித்தியமாக வாழத் தன் உயிரையே கொடுத்தவர்,

நாம் ஆன்ம வாழ்வில் வளரத் தன்னையே உணவாகத் தருபவர்

என்ன செய்தாலும் நமது நன்மைக்காகவே செய்வார்.

இறைத் திட்டம் ஏற்போம்,

என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.