Wednesday, August 8, 2018

உண்டாகவேண்டியது அமைதியா? சமாதானமா?

உண்டாகவேண்டியது
அமைதியா? சமாதானமா?
1111111111111111111111111

"செல்வம்,  Busyயா இருக்கீங்களா?       Freeயா இருக்கீங்களா?"

"Freeதான். சொல்லுங்க."

"நான் சிறுமியாயிருக்கும்போது வானவர் கீதத்தில 'பூவுலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக'ன்னு படிப்பாங்க.

ஆனால் இப்போது 'அமைதி உண்டாகுக'ன்னு படிக்கிறாங்க.

சமாதானமும், அமைதியும் ஒண்ணா?"

(அமைதி என்ற வார்த்தைக்கு
இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1.Silence.
2. Peace of mind.

இரண்டு பொருள் உள்ள வார்த்தைகளை முக்கியமான விசயங்களை,  அதுவும் விசுவாசம் சம்பந்தப்பட்ட விசயங்களை விளக்கப் பயன்படுத்தக்கூடாது.

பயன்படுத்தினால் தவறாக பொருள் கொள்ள இடம் உண்டாகும்)

"நாம இப்போ பேசிக்கிட்டு இருக்கோமா?  அமைதியா இருக்கோமா?"

"பேசிக்கிட்டுதான் இருக்கோம்."

"பேசிக்கிட்டு இருக்கோமா? சமாதானமா இருக்கோமா?"

"சமாதானமாகத்தான் பேசிக்கிட்டிருக்கோம்."

"நாம் சமாதானமா இருக்கோமுன்னா என்ன அருத்தம்?"

"நம் இருவர் மனங்களும் ஒன்றையொன்று,

அன்புடனும்,

விரோதமில்லாமல்

ஏற்றுக்கொண்டுள்ளன என்று அருத்தம்."

"Correct.

சுரூக்கமா,

மனம் ஒத்திருந்தால் சமாதானம்.

வாய் பொத்தியிருந்தால் அமைதி."

"அதாவது,

நல்ல மனதுள்ளவர்கள் மட்டுமே சமாதானமாய் இருக்கமுடியும்.

யார் வேண்டுமானாலும் அமைதியாய் இருக்கலாம்."

"ஒருவரோடு ஒருவர் விரோதம் பாராட்டும்,

அதாவது சமாதானமில்லாத,

இருவர்கூட,

மனதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டே,

வாயளவில் அமைதியாக இருக்கலாம்."

"அமைதியும், சமாதானமும் ஒன்றல்ல.."

"உறுதியாக.

1.மனிதரே இல்லா இடத்தில்கூட அமைதி இருக்கலாம்.

மனிதர்களிடம் மட்டுமே சமாதானம் இருக்கமுடியும்.

2. இறந்தவர்கள் புதையுண்ட இடத்தில் அமைதி நிலவும்.

உயிருள்ளவர்களிடமே சமாதானம் இருக்க முடியும்.

3. ,அமைதியாய் இருக்க ஒருவர் போதும்.

சமாதானமாய் இருக்க குறைந்தபட்சம் இருவர் தேவை.

4.  அமைதியே இல்லாத இடத்தில்கூட சமாதானம் நிலவலாம்.

சமாதானம் அரசோச்சும்  இல்லங்கள் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்.

பெற்றோரும், பிள்ளைகளும் எப்போதுமே பேசாது அமைதியாகவே இருந்தால் அவர்களிடையே சமாதானம் இல்லை என்பது பொருள். "

"அது சரி, மன அமைதி(Peace of mind) ஒரு ஆசீர்வாதம்தானே."

"உலகில் உள்ள அத்தனை செல்வங்களிலும் மன அமைதியே (சஞ்சலம் இல்லாமை) மேலானது.

ஆனால் இறைவனோடு சமாதானமாய் உள்ள மனதில்தான் அமைதி
நிலவும்.

பசிபிக் கடலுக்கு (Pacific ocean) அப்பெயர்(அமைதிக் கடல்) வரக்காரணம்

அங்கு மற்ற கடல்களைப்போல் அலைகள் இல்லாமை.

சஞ்சல அலைகள் இல்லாத மனம் அமைதியான மனம்.

சாவன பாவம் கோலோச்சும் மனதில் அமைதி (Peace of mind) இருக்காது.

மனசாட்சி குத்திக்கொண்டே இருக்கும்.

பாவசங்கீத்தனம் மூலமாக பாவமன்னிப்பு பெற்றபின்,

அதாவது,  இறைவனோடு  சமாதானம் ஆனபின் ,

குருவானவர்,

'சமாதானமாகச் செல்லுங்கள்' (Go in peace) என்று சொல்கிறார்.

நாம் பாவசங்கீத்தனம் செய்வது மன அமைதிக்காக அல்ல,

இறைவனோடு சமாதானம் செய்துகொள்ளவே பாவமன்னிப்பு  கேட்கிறோம்.

எதற்காக உண்கிறோம்?

பசி நீங்கவா?

இல்லை.

உடல் சக்தியும்  வளர்ச்சியும் அடைய.

உண்ணாமலிருக்கும்போது பசிப்பது போல,

பாவம் செய்யும்போது அமைதி நீங்குகிறது.

உண்ணும்போது பசி நீங்குவதுபோல,

பாவமன்னிப்பு பெறும்போது அமைதி திரும்புகிறது.

எதற்காக இறந்தபின் மோட்சத்திற்குச் செல்லவேண்டும்?

நித்தியத்துக்கும் இறைவனோடு இணைந்து வாழ்வதற்காக.

இவ்வாழ்வு நமக்கு பேரின்பத்தைத் தரும். 

ஆனால் அவ்வின்பத்திற்காக அல்ல,

இறைவனோடு வாழவே நாம் விண்ணகம் செல்கிறோம்.

பேரின்பம் இறைவன் தரும் பரிசு.

இறைமகன் மனுவுரு எடுத்தது

நாம் நமது பாவத்தினால் இழந்த இறை உறவை மீட்டுத்தர,

அதாவது, இறைவனோடு நம்மை சமாதானத்தில் இணைக்க.

அதனால்தான் உலக மீட்ப.ர் பிறந்த அன்று இறைத் தூதர்கள்,

' விண்ணுலகில்  இறைவனுக்கு மகிமையும்,

  பூலகில் நல்மனதோர்க்கு சமாதானமும் உண்டாகுக'

"Glory to God in the highest, and on earth peace to men of good will." (Luke.2:14)

என்று வாழ்த்துக்கீதம் பாடினார்ள்.

இப்போ சொல்லு, நமக்கு உண்டாகவேண்டியது அமைதியா? சமாதானமா?"

இது வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த செல்வத்தின் மகன், ஒரு பொடியன்,

"அப்பா, நீங்க சொல்கிற வாழ்த்துரை பைபிளில் இல்லை."

"ம்.. சொல்லு."

"நீங்க மேற்கோள் காட்டிய லூக்காஸ்.1:14ல்

'உலகில் அவருக்கு உகந்தோருக்கு
அமைதி உண்டாகுக!'
என்றுதான் இருக்கிறது.

நல்மனதோர்க்கு என்று இல்லை."

பாக்கியம்:  "அது புதிய மொழிபெயர்ப்பில்."

பொடியன்: "ஏம்பா,

ஒரே இயேசு,

அவர் ஒரு முறைதான்
பிறந்தார்.

ஒரு முறைதான் சம்மனசுக்கள் வாழ்த்தினார்கள்.

புதிய மொழிபெயர்ப்பாளர்கட்காகத்
திரும்பவும்  அவர்களிடம் வந்து வித்தியாசமாக வாழ்த்திவிட்டுப் போனார்களோ?'

"தெரியலியப்பா!

அதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்."

லூர்து செல்வம். 

Sunday, August 5, 2018

அன்னை மரியாள் அருள் நிறைந்தவளா? அருள் மிகுந்தவளா?

அன்னை மரியாள் அருள் நிறைந்தவளா?  அருள் மிகுந்தவளா?
******-***-----*******************
செல்வமும் பாக்கியமும் சந்திக்கிறார்கள்.


"ஹலோ! செல்வம், ஒரு நிமிசம். "

"சொல்லுங்க, பாக்கியம்."

"செபமாலை சொல்லும்போது சிலர் 'அருள் நிறைந்த மரியே வாழ்க'ன்னு சொல்றாங்க.

சிலர் 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க'ன்னு சொல்றாங்க.

இந்த இரண்டுல எந்த வாழ்த்து மாதாவுக்கு ஏற்றது?"

"பாக்கியம்,  நீங்க கணிதத்தேர்வுல நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருப்பதாக வைத்துக்கொள்வோம்.

மதிப்பெண் பட்டியல வகுப்புல வாசிக்கும்போது

உங்க ஆசிரியர்

நீங்க நூற்றுக்கு  தொன்னூற்றெட்டு மதிப்பெண் பெற்றிருப்பதாக வாசித்தா

உங்களுக்கு எப்படி இருக்கும்?"

"வாசித்தவர் மேல கோபம் கோபமா வரும்."

"ஏன் கோபம் வரும்?"

"என்னுடைய தகுதியைக்  குறைத்து மதிப்பீடு செய்தால் சந்தோசமா வரும்?

நான் உடனே எழுந்து, 'சார், என் மதிப்பெண் நூறு. பார்த்து வாசிங்க'ன்னு கத்துவேன்."

"நூறுக்கும், தொன்னூற்றெட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லையே?"

"வித்தியாசம் இருக்கிறதா?  இல்லையா?

ஒரு கிணற்றின் உள் அகலம் 99 அடி என்று வைத்துக்கொள்வோம்.

ஒருவன் கிணற்றைத் தாண்டுகிறான்.

100 அடி தாண்டினால் கிணற்றைத் தாண்டிவிடுவான்.

98 அடி தாண்டினால்,  கிணற்றுக்கு உள்ளேதான் விழுவான்.

'அதிக வித்தியாசம் இல்லையே'ன்னு சொல்லுவீங்களோ?"

"நிச்சயமா சொல்லமாட்டேன்.

உனக்குப் புரியவைக்கதான்  அப்படிச் சொன்னேன்.

'நிறைந்த'  என்ற வார்த்தைக்கும்,

'மிகுந்த' என்ற வார்த்தைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஒரு பாத்திரம் ஒரு பொருளால் 'நிறைந்திருந்தால்',

(If a container is full)

அதில் வேறு பொருளுக்கு இடம் இல்லை.

ஒரு பாத்திரத்தில் ஒரு பொருள் 'மிகுதியாக' இருக்கிறது என்றால்,

முக்கால் பாத்திரம் இருக்கலாம்,

முக்காலே அரைக்கால் பாத்திரம் இருக்கலாம்,

முக்காலே முண்டாணி பாத்திரம்கூட இருக்கலாம்

அதைவிட அதிகமாகவும் இருக்கலாம்

ஆனால் நிறைந்திருக்கவேண்டிய அவசியமில்லை.

100%ஐ 'நிறைந்த' என்றால்

98% ஐ   'மிகுந்த' என்போம்.

அருள் நிறைந்தவரிடம்

சிறு குறைகள்கூட

ஒரு இம்மி கூட இருக்காது.

இயேசுவின் தாய்  சென்மப்பாவமின்றி பிறந்ததோடு,

அவளுடைய வாழ்வில் ஒரு சிறு மாசு மருகூட இருந்ததில்லை.

"அவள் உன் தலையை நசுக்குவாள்:

நீயோ அவளுடைய குதிங்காலைத்  தீண்ட முயலுவாய்."

இறைவன் சாத்தானை நோக்கிச் சொன்ன இவ்வார்த்தைகளில்

'அவள்' மரியாளைக் குறிக்கும்.

அவள் சாத்தானின் தலையை நசுக்குவாள்.

சாத்தான் அவளுடைய குதிங்காலைத்   தீண்ட முயலும். ஆனால் தீண்ட முடியாது.

அதாவது பாவமாசு அவளை நெருங்காது.

மாதாவைத் தவிர மற்ற புனிதர்கள் 'அருள் மிகப்' பெற்றவர்கள்.

Headmaster ஐ Headmaster என்றுதான் அழைக்கவேண்டும்,

Asst.Headmaster என்று அழைக்கக்கூடாது.

இறைவனின் தாயை 'அருள் நிறைந்த மரியே' என்றுதான்
அழைக்கவேண்டும்.

மற்ற புனிதர்களை 'அருள்மிகப் பெற்றவர்களே' என்று அழைக்கவேண்டும்.

நமது அன்னையின் பெருமையை நாமே குறைத்து மதிப்பிடலாமா?

அது நல்ல பிள்ளைக்கு அழகா?

என்ன பாக்கியம், புரிகிறதா?"

"நீங்க சொல்றது புரிகிறது.

ஆனால் புரியாத புதிர் ஒன்று இருக்கிறது.

நீங்கள் உங்களது கூற்றை எண்பிக்க ஆதியாகமத்திலிருந்து காட்டிய மேற்கோள் புதிய பொது மொழிபெயர்ப்பில் இல்லையே.

"நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்” என்றுதானே இருக்கிறது.

இங்கு 'அதன்' அவளின் வித்துவைத்தானே குறிக்கிறது.

அவளின்  வித்து இயேசுதானே."

"இது கணக்கைத் தவறாகச் செய்துவிட்டு,  அதைச் சரிசெய்ய வாய்ப்பாட்டை   மாற்றிய கதையாய் இருக்கிறது.

மேற்கோளை நான் காட்டவில்லை.

மரியாளின் அமல உற்பவத்தை எண்பிக்க

தாய்த் திருச்சபை காலங்காலமாக காட்டிய மேற்கோளைத்தான்

நான் காட்டினேன்.

'பொது மொழிபெயர்ப்பு'
என்றாலே 'நமக்கும்,  நம்மிடமிருந்து பிரிந்துசென்ற சகோதரர்கட்கும் பொதுவான மொழிபெயர்ப்பு.'

பிரிந்துசென்ற சகோதரர்கட்கு
மரியாளைப் பிடிக்காது.

மாதாவைப் பற்றிய விசுவாச சத்தியத்தில் கைவைக்க பைபிளில்  கைவைத்திருக்கிறார்கள்,

அதாவது,

மாதாவின் அமல உற்பவத்தை எண்பிக்க காலங்காலமாய் திருச்சபை காட்டிய ஆதாரத்தில் கைவைத்திருக்கிறார்கள்.

நமது மொழிபெயர்ப்பாளர்கள்

படித்தவர்கள்,

  பட்டம் பெற்றவர்கள்,

அவர்களை விமர்சிக்க

அடியேன் அருகதை அற்றவன்.

ஆனால் அவர்களது மொழிபெயர்ப்பில் பிழைகள்  உள்ளன.

அது உண்மை.

நம் அன்னையின் அமல உற்பவத்தின் ஆதாரங்களில் கைவைத்தது யாருடைய வேலையாய் இருக்கும்?

மாதாவின் எதிரி
'அவளுடைய குதிங்காலைத்   தீண்ட' முயல்கிறது.

ஆனால் முயற்சியில் வெற்றி பெறாது.

ஏனெனில், அவள் ஆண்டவரின் அடிமை."

"இப்போ புரிகிறது.

'அருள் நிறைந்த மரியே,

பொது மொழிபெயர்ப்பாளர்கட்காக வேண்டிக்கொள்ளும்'.

செல்வம், நன்றி.

God be with you."

"Thank you.*

லூர்து செல்வம்.

Saturday, August 4, 2018

விண்ணிலிருந்து இறங்கிய உயிருள்ள உணவு.


விண்ணிலிருந்து இறங்கிய உயிருள்ள உணவு.
++++++++++++++++++++++++

இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அளித்த உணவு

அவர்களை 

"உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்" என்று எண்ணவைத்தது.

அவர்கள் அவரை அரசர் ஆக்க விரும்பினர்.

இதை அறிந்த இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.

இரவானதும் இயேசுவின்  சீடர் கடலுக்கு வந்து, படகில் ஏறி, அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்குப் புறப்பட்டனர்.

இயேசு அப்படகில் போகாததால்  மக்கள்  உணவு உண்ட இடத்திலேயே இருந்தனர்.

ஆனால் இயேசு கடல்மேல் நடந்து மறுகரைக்குச் சென்றுவிட்டார்.

இரவானபின்னும் இயேசு அங்கு இல்லாததால், மறுநாள் மக்கள்கூட்டமும் அவரைத்தேடி  படகுகளில் ஏறி மறுகரைக்குச் சென்றது.

இயேசு அங்கு ஏற்கனவே வந்துவிட்டதைக் கண்டு,

"ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.

அவர்கள் அவரைத் தேடியது மறுபடியும் அற்புத அப்ப உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்.

  இதைத் தெரிந்திருந்த  இயேசு மறுமொழியாக:

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று,

அப்பங்களை வயிறார உண்டதால்தான்.

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்.

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்:

ஏனெனில்,

அவருக்கே தந்தையாகிய கடவுள்

தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்" என்றார்

அவர்கள் அவரை நோக்கி, "கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?" என்று கேட்டனர்.

இயேசு,

"அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.

அவர்கள், அவரை விசுவசிக்க ஓர் அருங்குறி  கேட்டார்கள்.

அவர்களது முன்னோர் பாலைவனத்தில் மன்னா  உண்ட நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினர்.

அந்தக்கால யூதர்களிடையே ஒரு தவரான எதிர்பார்ப்பு இருந்தது.

அதாவது வாக்களிக்கப்பட்ட மெசியா வரும்போது

மோயீசன் காலத்தில் வானிலிருந்து இலவசமாக மன்னா அருளப்பட்டதுபோல்

மன்னா உணவைத் தருவார் என்று நம்பினார்கள்.

ஆகவேதான்

"உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்"

என்று நம்பியதோடு அவரை அரசராக்கவும் விரும்பினர்.

அவர்களது எதிர்பார்ப்பு தவரானது என உணர்த்த,

இயேசு,

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்.

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்."
என்றார்.

மக்களது தவறான எதிர்பார்ப்புகளைச் சரிப்படுத்தவே இவ்வாறு சொன்னார்.

மோயீசன் காலத்தில் விண்ணிலிருந்து விழுந்த மன்னா உணவு தற்காலமானது.

அது உடல் சம்பந்தப்பட்டது.

அதை உண்டவர்கள் இறந்து விட்டார்கள்.

நாம் தேடவேண்டியது நித்தியத்துக்கும் இறவா வரம் தரும் ஆன்மீக உணவைத்தான்.

"வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.

ஏனெனில்,

வானினின்று இறங்கி வந்து

உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு" என்றார்.

இயேசு குறிப்பிட்டது உடலை வாழவைக்கும் உயிரை அல்ல,  ஆன்மாவை வாழவைக்கும் உயிரை.

அதாவது தேவஇஸ்டப்பிரசாதத்தை. (Sanctifying grace.)

ஆனால் பாலைவனத்தில் விழுந்த மன்னா உணவைத் தேடும்  சாதாரணமக்களுக்கு இந்த விபரம் தெரிந்திருக்குமா?

சந்தேகம்தான்.

தெரிந்திருந்தால் இயேசுவின் பதிலைக் கேட்டதும் அவரைவிட்டுப் போயிருக்கமாட்டார்கள்.

"அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.

இயேசு,

"நானே உயிர் தரும் உணவு.

நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்.

நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
என்றார்.

மக்களோ
"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று தங்களுக்குள்ளே வாதிடத்தொடங்கினர்.

ஆனால்  இயேசு,

"என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.

என் தசையைத் தின்று,

என் இரத்தத்தைக் குடிப்பவன்

என்னில் நிலைத்திருக்கிறான்,

நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்." என்று கூறினார்.

ஆனால் அவருடைய சீடரில் பலருக்கு இது புரியவில்லை.

"இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது,

யார் இதைக் கேட்பார் ?" என்று சொல்ல ஆரம்பித்தனர்.

இயேசுவின் வார்த்தைகனைப்  புரிந்துகொள்ளாதவர்கள் அவரை விட்டுப்போய்விட்டனர்.

இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.

அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ?

முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நீரே கடவுளின் பரிசுத்தர்:

இதை நாங்கள் விசுவசிக்கிறோம்:

இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.

ஆக, இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியது

தன் மரணத்திற்கு முந்திய நாளில் என்றாலும்,

அதுபற்றிய விபரத்தை கப்பர்நாகூமிலேயே கொடுத்துவிட்டார்.

"Behold the Lamb of God,

behold Him Who takes away the sins of the world. 

Blessed are those called to the supper of the Lamb."

"இதோ! கடவுளுடைய செம்மறி:

இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர்  பேறுபெற்றோர்."

திருவிருந்துக்கு முன்பு,

நற்கருணை நாதரைக் கையில் எடுத்து,

குருவானவர் கூறும் இவ்வார்த்தைகள்

வெற்று வார்த்தைகள் அல்ல.

உயிருள்ள வார்த்தைகள்.

திருப்பலியின்போது பலியிடப்படுபவர் இறைமகன். (கடவுளுடைய செம்மறி.)

பலியிடப்பட்ட இறைமகன் தன்னையே நமக்கு உயிருள்ள  உணவாகத் தருகிறார்.

இறை நமது இரையாகிறார்.

அவர் தரும் உயிருள்ள உணவு நம்மை என்றென்றும் வாழ வைக்கும்.

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்." (அரு.6:51)

என்றென்றும் வாழ்வு தரும் உணவை உண்டால்

அதற்குறிய வளர்ச்சி மாற்றம்

நம் ஆன்மாவிலும்,

வாழ்க்கையிலும் ஏற்படவேண்டும்.

சத்துள்ள உணவை உண்பவன் சக்தியைப் பெறவேண்டும்.

பெறாவிட்டால் உண்டும் பயனில்லை.

இறைமகனை உணவாக உண்டபின்னும் அவருடைய பண்புகளான

அன்பு,

கருணை,

பிறருக்கு உதவியாக இருத்தல்,

தியாகம்

ஆகியவை நம் வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் நம்மிடம் எங்கோ கொளாறு இருக்கிறது என்று அர்த்தம் .

நம்மில் இறைமகனைச் சுமந்துகொண்டு

நம் விருப்பம்போல் வாழ்ந்தால்,

அது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம்.

நமது விருப்பங்கள் அவரது விருப்பங்களாக மாறவேண்டும்.

அம்மாற்றம் நம் வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.

தகுந்த தயாரிப்போடு

இயேசுவை உண்போம்.

அவரோடு இணைந்து  என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, August 3, 2018

"நம்மிடையே குடிகொண்டார்." (அரு.1:14)

"நம்மிடையே குடிகொண்டார்." (அரு.1:14)
*******************---****-*****
இறைவன் எங்கும் இருக்கிறார்.

அவருடைய அறிவினாலும், ஞானத்தினாலும், அன்பினாலும், வல்லமையாலும் எங்கும் இருக்கிறார்,

நாம் படைக்கப்படுவதற்கு முன்பே

நித்திய காலமாக

அவரது சிந்தனையில் நாம் இருந்தோம்.

நாம் ஒரு பொருளைச் செய்யுமுன் முதலில் நமது கற்பனையில் அதற்கு உருக் கொடுக்கிறோமல்லவா,

அதேபோல்தான் இறைவனும் நித்திய காலமாக தனது சிந்தனையில் நமக்கு உருக் கொடுத்திருந்தார்.

நித்திய காலமாகவே நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்தார்,

நம்மைப் படைத்த பின்பும் அவரது  அன்பு சிறிதேனும் குறையாமல் தொடர்கிறது.

குறையாத அவரது அன்பு நமக்குள்ளே இருக்கிறது.

நாம் அவருக்குள்ளே இருக்கிறோம்.

படைக்கப்படுமுன் அவரது சிந்தனையில் கருத்தாக(Idea) இருந்த நாம்,

படைக்கப்பட்ட பின் 'உண்மை ஜீவி' யாக(Real being)யாக இருக்கிறோம்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள காரண, காரிய நெருக்கம் எவ்வளவு இறுக்கமானதென்றால்,

அவர் ஒரு வினாடியில் பல கோடியில் ஒரு பங்கு நம்மை மறந்தாலும்,

நாம் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பிவிடுவோம்.

ஆனால் அவர் நம்மை எக்காரணத்திற்காகவும் மறக்கமாட்டார்.

ஆக இறைவன் ஒவ்வொரு வினாடியும் நம்மை நினைத்து நேசிப்பதால்தான் நாம் நாமாக இருக்கிறோம்.

"பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ?

பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ?

அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும்,

நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!" (இசை.49:15)

இதுவரைப் பார்த்தது இறைவன் தனது தேவசுபாவத்தில் நம்மோடு இருப்பது பற்றி.

இறைமகன் இயேசு நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதற்காக

மனிதனாகி சிலுவையில் மரணமடைந்த பின்பும்

தனது மனித சுபாவத்திலும் நம்மோடு இருக்க விரும்பினார்.

தேவசுபாவத்தில் நமது உள்ளும், புறமும்

நம்மோடு இருக்க விரும்பினார்.

அதற்காகவே திவ்யநற்கருணையை ஏற்படுத்தினார்.

திவ்யநற்கருணையயில் இயேசு தனது தேவசுபாவத்திலும், மனித சுபாவத்திலும் உண்மையாகவே இருக்கிறார்.

Jesus is really present in the Holy Eucharist.

நற்கருணை உட்கொள்ளும்போது,

கன்னிமரியின் வயிற்றில் கருத்தரித்த அதே இயேசுவை,

நசரேத்தூரில் தச்சுவேலை செய்து மரியாளையும், சூசையப்பரையும் காப்பாற்றிய அதே இயேசுவை,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்து, சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசுவை,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள்பட்டு சிலுவையில் அறையுண்டு மரித்த அதே இயேசுவை,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த  அதே இயேசுவை,

உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணகம் எய்திய அதே இயேசுவை

உட்கொள்கிறோம்,

நாம் அவரை உணவாக உட்கொள்ளும்போது நம்முள் இருக்கிறார்.

எல்லா நேரங்களிலும்

நமக்காக, 

நம்மோடு உரையாடுவதற்காகத்

திவ்யநற்கருணைப் பேழையில் காத்திருக்கிறார்.

ஆதியிலே வார்த்தை இருந்தார்.

அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்.

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.

வார்த்தை மனுவுருவானார்.

மனுவுருவான வார்த்தை நம்மிடையே குடிகொண்டிருக்கிறார். 

அதாவது நம்மோடு வாழ்கிறார்.

மனுவுரு எடுத்த இயேசு

நமது உயிராக,

நமது உணவாக,

நமது வழியாக,

வழியின் ஒளியாக

நம்மோடு வாழ்கிறார்.

நாம் என்னமோ பெரிய சாதனையாளர்கள்போல உட்காரக்கூட நேரமின்றி என்னவெல்லாமே செய்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் நம்மைப் படைத்த சர்வ வல்லப தேவனின் ஒரே வேலை

நம்மை அன்பு செய்வது மட்டுமே.

வெற்று அன்பல்ல, செயல்களோடு கூடிய அன்பு.

  பெற்ற தாய் தன் பிள்ளையைக் காப்பதைவிட பன்மடங்கு மேலாய் நம்மைக்     காப்பாற்றும் அன்பு.

ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்குக் கண்ணாய் கவனித்துக்கொண்டிருக்கும் அன்பு.

பெற்ற தாய் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்ப்பதுபோல், 

தன் சதையையும் இரத்தத்தையும்

நமது ஆன்மீக உணவாக ஊட்டி வளர்க்கும் அன்பு.

இத்தகைய அன்புடன் நம்மோடு எப்போதும் குடிகொண்டிருக்கும் வார்த்தையானவரை எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா?

ஒவ்வொரு வினாடியும் நமக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவருக்காக எவ்வளவு நேரம் வாழ்கிறோம்?

சிந்திப்போம்.

செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 1, 2018

"வார்த்தைமனுவுருவானார்:" (அரு.1:14)

"வார்த்தைமனுவுருவானார்:"
(அரு.1:14)
*****************---**********-***
பரிசுத்த தமதிரித்துவத்தின்
இரண்டாம் ஆளாகிய இறைமகன் மனிதன் ஆனார்.

இறை தந்தை,  ஒரு ஆள், ஒரு சுபாவம், தேவசுபாவம்.

தூய ஆவி, ஒரு ஆள், ஒரு சுபாவம், தேவசுபாவம்.

இறைமகன் , ஒரு ஆள், இரண்டு சுபாவம்  (மனு உரு எடுத்தபின்),

1.தேவ சுபாவம்.
2. மனித சுபாவம்.

இயேசு மனுவுரு எடுத்தபோதும் இறைப்பண்பு
முழுவதும் அப்படியே இருந்தது.

ஆகவே இயேசு முழுமையாக கடவுள்.

Jesus is fully God.

இயேசு மனுவுரு  எடுத்தபின், பாவம் தவிர,  மற்ற எல்லா பண்புகளிலும் நம்மைப்போலவே இருந்தார்.

இயேசு முழுமையாக மனிதன்.

Jesus was fully man, with all the human attributes,  except sin.   

மாற்றம், வளர்ச்சி,  தளர்ச்சி, துன்பம், பயம், அழுகை, மகிழ்ச்சி, மரணம்  போன்ற எல்லா மனித பண்புகளையும் இயேசு ஏற்றுக்கொண்டார், நமக்காக.

இயேசுவால் தேவசுபாவத்தில் துன்பப்ப முடியாது.

துன்பப்படவேண்டும் என்பதற்காகவே மனித சுபாவத்தை ஏற்றார்.

நிறைவான இறைவன் ஏன் குறைகள் உள்ள மனித சுபாவத்தை ஏற்கவேண்டும்?

தன்னால் படைக்கப்பட்ட உலகில் வாழ்ந்துவிட்டு

நித்தியமும் தன்னோடு வாழவேண்டும் என்பதற்காக மனிதனைப் படைத்தார்.

படைக்கப்பட்டபோது மனிதன் பாவம் இன்றி இறைவனோடு அருள் உறவோடிருந்தான்.

ஆனால் பாவம் செய்தவுடன் மனிதன் இறைவனோடு கொண்டிருந்த அருள் உறவை இழந்தான்.

அதாவது நித்தியத்துக்கும் இறைவனோடு வாழக்கூடிய தகுதியை இழந்தான்.

இழந்த தகுதியை திரும்பவும் பெறவேண்டுமென்றால் தான் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்யவேண்டும்.

ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரத்தை எப்படிச் செய்வது?

இறை நீதியின்படி

மனிதன் செய்ய வேண்டிய பரிகாரம்

அளவற்றதாக இருக்க வேண்டும்.

அது முடியாத காரியம்.

ஆகவே கடவுளே,

தன் அளவற்ற அன்பின் காரணமாக, 

மனிதனாகி,

மனிதன் செய்யவேண்டிய பரிகாரத்தைச் செய்ய

நித்திய காலமாகத் தீர்மானித்தார்.

இத்தீர்மானத்தை நிறைவேற்றவே

இரண்டாம் ஆளாகிய மகன் கடவுள் மனிதனானார்.

இறைமகன் மனிதனாகக் காரணமாக இருந்தது இறைவனுடைய

அளவற்ற நீதியும்,

அளவற்ற அன்பும்தான்.

நீதி பரிகாரத்தைக் கேட்டது,

அன்பு பரிகாரத்தைச் செய்தது.

இரண்டும் ஒரே இறைவனின் செயல்தான்.

இயேசு மனிதனாக இருந்ததால்

அவர் செய்த பரிகாரம்

மனித இனம் செய்த பாவத்திற்கு

மனிதனே செய்த பரிகாரமாகிறது.

அவர் கடவுளாகவும் இருந்ததால்

அவர் செய்த பரிகாரம் அளவற்ற கடவுளுக்கு ஏற்றதாகிறது.

ஆக, இறைவனது நீதியும், அன்பும் அவர் மனிதனாகக் காரணமாய் இருந்தன.

இறைவனின் நீதி தண்டிக்காது, மன்னிக்க மட்டுமே செய்யும்.

''நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை,

உலகை மீட்கவே வந்தேன்." (அரு.12:47)

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல்,

முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு

கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்" (அரு.3:16)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது

அதற்குத் தீர்ப்பளிக்கவன்று,

அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு.3:17)

நம்மை அன்பு செய்யும் இறைவனை நாமும் அன்பு செய்வோம்,

இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.