Friday, August 3, 2018

"நம்மிடையே குடிகொண்டார்." (அரு.1:14)

"நம்மிடையே குடிகொண்டார்." (அரு.1:14)
*******************---****-*****
இறைவன் எங்கும் இருக்கிறார்.

அவருடைய அறிவினாலும், ஞானத்தினாலும், அன்பினாலும், வல்லமையாலும் எங்கும் இருக்கிறார்,

நாம் படைக்கப்படுவதற்கு முன்பே

நித்திய காலமாக

அவரது சிந்தனையில் நாம் இருந்தோம்.

நாம் ஒரு பொருளைச் செய்யுமுன் முதலில் நமது கற்பனையில் அதற்கு உருக் கொடுக்கிறோமல்லவா,

அதேபோல்தான் இறைவனும் நித்திய காலமாக தனது சிந்தனையில் நமக்கு உருக் கொடுத்திருந்தார்.

நித்திய காலமாகவே நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்தார்,

நம்மைப் படைத்த பின்பும் அவரது  அன்பு சிறிதேனும் குறையாமல் தொடர்கிறது.

குறையாத அவரது அன்பு நமக்குள்ளே இருக்கிறது.

நாம் அவருக்குள்ளே இருக்கிறோம்.

படைக்கப்படுமுன் அவரது சிந்தனையில் கருத்தாக(Idea) இருந்த நாம்,

படைக்கப்பட்ட பின் 'உண்மை ஜீவி' யாக(Real being)யாக இருக்கிறோம்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள காரண, காரிய நெருக்கம் எவ்வளவு இறுக்கமானதென்றால்,

அவர் ஒரு வினாடியில் பல கோடியில் ஒரு பங்கு நம்மை மறந்தாலும்,

நாம் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பிவிடுவோம்.

ஆனால் அவர் நம்மை எக்காரணத்திற்காகவும் மறக்கமாட்டார்.

ஆக இறைவன் ஒவ்வொரு வினாடியும் நம்மை நினைத்து நேசிப்பதால்தான் நாம் நாமாக இருக்கிறோம்.

"பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ?

பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ?

அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும்,

நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!" (இசை.49:15)

இதுவரைப் பார்த்தது இறைவன் தனது தேவசுபாவத்தில் நம்மோடு இருப்பது பற்றி.

இறைமகன் இயேசு நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதற்காக

மனிதனாகி சிலுவையில் மரணமடைந்த பின்பும்

தனது மனித சுபாவத்திலும் நம்மோடு இருக்க விரும்பினார்.

தேவசுபாவத்தில் நமது உள்ளும், புறமும்

நம்மோடு இருக்க விரும்பினார்.

அதற்காகவே திவ்யநற்கருணையை ஏற்படுத்தினார்.

திவ்யநற்கருணையயில் இயேசு தனது தேவசுபாவத்திலும், மனித சுபாவத்திலும் உண்மையாகவே இருக்கிறார்.

Jesus is really present in the Holy Eucharist.

நற்கருணை உட்கொள்ளும்போது,

கன்னிமரியின் வயிற்றில் கருத்தரித்த அதே இயேசுவை,

நசரேத்தூரில் தச்சுவேலை செய்து மரியாளையும், சூசையப்பரையும் காப்பாற்றிய அதே இயேசுவை,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்து, சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசுவை,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள்பட்டு சிலுவையில் அறையுண்டு மரித்த அதே இயேசுவை,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த  அதே இயேசுவை,

உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணகம் எய்திய அதே இயேசுவை

உட்கொள்கிறோம்,

நாம் அவரை உணவாக உட்கொள்ளும்போது நம்முள் இருக்கிறார்.

எல்லா நேரங்களிலும்

நமக்காக, 

நம்மோடு உரையாடுவதற்காகத்

திவ்யநற்கருணைப் பேழையில் காத்திருக்கிறார்.

ஆதியிலே வார்த்தை இருந்தார்.

அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்.

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.

வார்த்தை மனுவுருவானார்.

மனுவுருவான வார்த்தை நம்மிடையே குடிகொண்டிருக்கிறார். 

அதாவது நம்மோடு வாழ்கிறார்.

மனுவுரு எடுத்த இயேசு

நமது உயிராக,

நமது உணவாக,

நமது வழியாக,

வழியின் ஒளியாக

நம்மோடு வாழ்கிறார்.

நாம் என்னமோ பெரிய சாதனையாளர்கள்போல உட்காரக்கூட நேரமின்றி என்னவெல்லாமே செய்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் நம்மைப் படைத்த சர்வ வல்லப தேவனின் ஒரே வேலை

நம்மை அன்பு செய்வது மட்டுமே.

வெற்று அன்பல்ல, செயல்களோடு கூடிய அன்பு.

  பெற்ற தாய் தன் பிள்ளையைக் காப்பதைவிட பன்மடங்கு மேலாய் நம்மைக்     காப்பாற்றும் அன்பு.

ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்குக் கண்ணாய் கவனித்துக்கொண்டிருக்கும் அன்பு.

பெற்ற தாய் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்ப்பதுபோல், 

தன் சதையையும் இரத்தத்தையும்

நமது ஆன்மீக உணவாக ஊட்டி வளர்க்கும் அன்பு.

இத்தகைய அன்புடன் நம்மோடு எப்போதும் குடிகொண்டிருக்கும் வார்த்தையானவரை எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா?

ஒவ்வொரு வினாடியும் நமக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவருக்காக எவ்வளவு நேரம் வாழ்கிறோம்?

சிந்திப்போம்.

செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment