Friday, August 17, 2018

மிகப்பெரிய தியாகிகள்!

மிகப்பெரிய தியாகிகள்!
********************-**-*********

சிம்மாசனம் ஏறியபோது, தன் தந்தையிடமிருந்து பெற்ற சிறிய இராட்சியத்தை

தான் பெற்ற பல வெற்றிகளால் சாம்ராஜ்யமாக மாற்றிய மாமன்னன் ஒருவனும்,

முற்றும் துறந்த முனிவர் ஒருவரும் சந்திக்க நேர்ந்தது.

மன்னன் முனிவரை நோக்கி,

"சுவாமி, இவ்வுலக செல்வங்களையும்,  இன்பங்களையும்

முற்றிலும் தியாகம் செய்துவிட்டு

இறைவனுக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும்

ஒப்பற்ற தியாக முனிவர் ஒருவர்

என் நாட்டில் வாழ்வது

நான் பெற்ற மிகப் பெரிய பாக்கியம்!"

"மன்னா, ஒருவர் செய்த தியாகத்தை வைத்து அவரது பெருமையை மதிப்பிடுவதானால்

என்னைவிட நீங்கள்தான் பெரிய பாக்கியசாலி."

"அதெப்படி? 

நான் உலகத்தின் பெரும் பகுதியை வென்று கைப்பற்றியிருக்கிறேன்.

நீங்களோ உலகை முழுவதும் துறந்திருக்கிறீர்கள்.

நீங்கள்தான் பெரிய தியாகி."

"மன்னா, எதை வைத்து தியாகத்தின் பெருமையை மதிப்பிடுவீர்கள்?"

"தியாகம் செய்யப்பட்ட பொருளின் மதிப்பிலிருந்து."

"அழியாத பேரின்பம்,

அழியும் சிற்றின்பம் -

இவை இரண்டில்

எது அதிக மதிப்பு வாய்ந்தது?"

''அழியாத பேரின்பம்தான்."

"மன்னா, நீங்கள் அழியாத பேரின்பத்தைத் தியாகம் செய்து,

இவ்வுலகின் அழியும் சிற்றின்பத்தைச் சம்பாதித்திருக்கிறீர்கள்.

நான் சிற்றின்பத்தைதான் தியாகம்  செய்திருக்கிறேன்.

இப்போ சொல்லுங்கள்.

யார் பெரிய தியாகி?"

"பேரின்பத்தை தியாகம் செய்து,

சிற்றின்பத்தைச் சம்பாத்தியம் செய்திருக்கிறேன்னு சொல்றீங்க.

என் தியாகத்துக்கு என்ன பரிசு கிடைக்கும்?"

"மன்னா, நீங்கள் பரிசைத்தான் தியாகம் பண்ணியிருக்கீங்க."

மேற்படி மன்னனைப்பற்றி எங்கேயோ வாசித்ததாக ஞாபகம்.

இதேபோன்ற நவீன மன்னர்கள் நிறையபேர் நம்மிடையே வாழ்கின்றார்கள்.

ஒரு முறை நண்பர் ஒருவர் அவரது ஊர்க் கோயில் திருவிழாவிற்கு என்னை அழைத்திருந்தார்.

நானும் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன்.

திருவிழா வேலைகளில் அவர் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து நான் வியந்தேன்.

சப்பரத்தை அலங்கரித்தல்,
சப்பரச் சுற்றுப்பிரகாரத்தின்போது அதைத் தோள் கொடுத்துத் தூக்கிச்செல்லுதல்  போன்ற வேலைகளை உற்சாகமாகச் செய்தார்.

பத்தாம் திருநாள் காலையில் அவரைக் காணவே முடியவில்லை.

திருவிழா வேலைகளில் அவ்வளவு ஈடுபாடு.

மதிய உணவிற்குச் சற்று முன்னால்தான் அவரைக் காணமுடிந்தது.

"காலையில் ஆளைக் காணவே முடியவில்லை.
அவ்வளவு  வேலையா? "

"அதை ஏன் கேட்கிற. காலை ஐந்தரை மணிக்குக் கசாப்புக் கடைக்குப் போனேன்.

பயங்கரக்கூட்டம்.

10 மணிக்குதான் கறி கிடைத்தது."

''10 மணிவரை கடையிலேயா நின்றுகொண்டிருந்தீர்கள்?"

"பிறகு?  கசாப்புக் கடையில் சோபாவா போட்டு வச்சிருப்பான்? "

"பூசை?"

"பூசைக்கு வந்திருந்தால் மதியச் சாப்பாடு இரவு 12 மணிக்குதான் கிடைக்கும்.

இன்று மட்டுமல்ல, திருவிழாக் காலங்களில ஒரு நாள்கூட பூசைக்குப் போக Time கிடைக்கல.

அவ்வளவு வேலை."

"அப்போ எதுக்காகத் திருவிழாக் கொண்டாடுறீங்க?

பூசையைத் தியாகம் செய்து விட்டுச் சப்பரம் தூக்கி என்ன பயன்?

இது சடையை விற்று சடைமாட்டி வாங்கியதுபோலிருக்கிறது. "

"வேறு வழியில்லை தம்பி.

திருவிழா என்றால்
ஆயிரம் வேலை இருக்கும், ஆயிரம் செலவு இரூக்கும்.

அதை எல்லாம் யார் பாப்பா? "

''ஆண்டவர் நமக்காகத் தன்னையே பலியாக்கினார்.

நாம் அவரது பலியைப் பலிகொடுத்துதான்

அவரது பலியைக் கொண்டாட வேண்டுமா?"

இப்படி திருவிழாவையே (பரிசுத்தமான விழாவாகிய திருப்பலி) தியாகம் செய்து

திருவிழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) கொண்டாடும் ஆட்கள் நிறையவே நம்மிடம் இருக்கிறார்கள்!

அவர்கள்தான் மிகப்பெரிய தியாகிகள்!

லூர்து செல்வம்


1 comment:

  1. Some of us are more interested in eating food rather than worshipping God. If you read the miracle of 5 loaves and 2 fish, people has not eaten for 3 days and they were with Jesus to listen to his words and see his wonders.

    ReplyDelete