Monday, August 20, 2018

"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்.''

"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்.''
*****-*****-**********-----********

"ஹலோ! பாக்கியம்! எப்படி இருக்கீங்க? "

"ஒரே Tension ஆ இருக்கேன்."

"காரணம்?"

"நான் வாசித்த ஒரு கட்டுரை,

அது என்னைக் குழப்பிவிட்டது. நீங்க சொல்லுங்க.

'பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.' என்று இயேசு ஏன் சொன்னார்? "

"சொல்லுகிறேன்.  முதலில் உங்கள் Tension னுக்கான காரணத்தைச் சொல்லுங்க. "

"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்.'' என்ற வார்த்தைகளுக்கு ஒரு கட்டுரையாளர் கொடுத்த விளக்கம் என்னைக் குழப்பிவிட்டது."

"என்ன விளக்கம் கொடுத்தார்?"

"அது போகட்டும். நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறுங்கள்."

"உலகிலுள்ள மொத்த மனித இனத்தையும் இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.

1.உலகிற்கு ஊழியம் செய்வோர்.

2.இறைவனுக்கு ஊழியம் செய்வோர்.

யாருக்கு ஊழியம் புரிகிறோமோ அவர்மேல்தான் நமக்கு அதிகம் பற்று இருக்கும்.

பணம், சொத்து, பொருட்கள் போன்ற உலகைச் சார்ந்த பொருட்கள்மேல் அதிகம் பற்று உள்ளோரிடம்

'உலகம் வேண்டுமா?  இறைவன் வேண்டுமா?

என்று கேட்டால், 

உலகைத்தான் தேர்ந்தெடுப்பர்.

இதே கேள்வியை இறையடியார்களிடம் கேட்டால், 'இறைவன்தான் வேண்டும்' என்பார்கள்.

இப்போது புரிந்திருக்கும் விண்ணரசில் யார் நுழைவர் என்று."

"அது புரிகிறது.

என் கேள்வி அது அல்ல.

'பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.'

என்றால் என்ன பொருள்? "

"நீங்கள் 'பணக்காரன்'என்ற சொல்லைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள்.  

இயேசு அவரிடம் வந்த வாலிபனை நோக்கி,

'நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.'

என்றபோது அவன் என்ன செய்தான்? '

"வருத்தத்துடன் சென்றான்."

"ஏன்  வருத்தத்துடன் சென்றான்? "

"அவனுடைய உடமைகள் மீது அவனுக்குப் பற்று அதிகம்.

அவற்றைப் பிரிய அவனுக்கு மனமில்லை.

பணத்தின்மீது பற்று உள்ளவன்தான் பணக்காரன்.

எவ்வளவு பணம் இருந்தாலும்  அதன் மீது பற்று இல்லாதவன் 'எளியமனத்தவன்'.

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

நாம் இவ்வுலகில்தான் படைக்கப்பட்டோம்,

இவ்வுலகில்தான் வாழ்கிறோம்.

ஆனால் இவ்வுலகிற்காக வாழாமல்

இறைவனுக்காக வாழ்ந்தால்

விண்ணரசு நம்முடையதே."

"அதாவது பணக்காரன் என்றால்  'பணத்தின்மீது பற்றுள்ளவன்' என்று பொருள். சரிதானே? "

"கரெக்ட்."

"இயேசுவின் சீடர்கள் ஏன்,

'அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?'

என்றார்கள்?"

"சீடர்கள் Training periodல் உள்ளவர்கள்தானே.

உங்களுக்கு வந்த குழப்பம் அவர்கட்கும் வந்திருக்கும்.

அதுதான் விளக்கம் கேட்கிறார்கள்."

"இயேசுவின் விளக்கத்தை விளக்குங்களேன்."

"இயேசு,

'மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்'

என்கிறார்.

மனிதர்களிடம் ஏராளமான பணம் வரும்போது  அதன்மீது  பற்று ஏற்படுவது இயல்பு.

ஒரு பழத்திற்கு ஆசைப்பட்டு இறைவனது கட்டளையை மீறிய ஒரு அம்மாவின் பிள்ளைகள்தானே
நாம்! 

நமது சுபாவத்திற்கு 'Fallen nature' என்று பெயர் வைத்திருக்கிறோம்.

நமது Fallen nature படி உலகின்மீதுள்ள பற்றை நீக்குவது கடினம்தான்.

ஆனால் கடவுளால் எல்லாம் முடியும்."

"இந்த வாக்கியத்துக்குதான் பொருள் புரியவில்லை."

"உங்களால் ஒரு முக்கியமான காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால்,  என்ன செய்வீர்கள்?"

"செய்யமுடிந்தவர்கள் உதவியை நாடுவேன்."

"இதோ புரிந்துகொண்டீர்களே!

நமக்குக் கடினமாக இருந்தால்

எல்லாம் வல்ல இறைவனின் உதவியை நாடவேண்டும்.

அவரால் எல்லாம் முடியும்.

அவர் தமது வல்லமை மிக்க அருளால்

நமது உலகப்பற்றை நீக்கி

நம்மை இறைப்பற்றால் நிறப்புவார்.

ஆனால் நாம் அவரை நாடி உதவி கேட்கவேண்டும்."

"இப்போ புரிகிறது.

'கேளுங்கள் தரப்படும்'

என்று சொல்லியிருக்காரே."

கேட்போமாக!

லூர்து செல்வம்.
  

No comments:

Post a Comment