"தாயைப்போல பிள்ளை."
***************************-*****
இறைமகன் இயேசுவின் தாயை நம் தாயாக ஏற்றுக்கொள்கிறோம்.
இதன் மூலம் இறைமகனை நமது சசோதரனாக ஏற்றுக்கொள்கிறோம்.
இயேசுவே தன் தந்தையை நமது தந்தையென அழைக்க நமக்கு உரிமை தந்திருக்கிறார்.
ஆகவே நாம் இறைவனின் ஆன்மீகக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில் நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
We belong to a royal family.
நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பெருமை பாராட்டிக்கொண்டால் மட்டும் போதாது.
நமது வாழ்விலும் நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டும்.
'தாயைப்போல பிள்ளை' என்பார்கள்.
நமது வாழ்விலும் நாம் விண்ணக அரசியின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்கவேண்டும்.
"தினமும் மாதாவை நோக்கி வேண்டுவதாலோ,
செபமாலை சொல்வதாலோ,
மாதாவின் திருத்தலங்களுக்குச் செல்வதாலோ,
மாதாவுக்கு விமரிசையாக விழா எடுப்பதாலோ
நாம் மாதாவின் பிள்ளைகள் ஆகிவிட முடியாது.
இவையெல்லாம் வேண்டும்.
ஆனாலும், மாதாவைப்போல் வாழ்ந்தால் மட்டுமே நாம் அவளுடைய பிள்ளைகள் ஆகமுடியும்.
மாதாவைப்போல் வாழ்வது எப்படி?
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன்,
தன்னையே மறுத்துத்
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு
என்னைப் பின்தொடரட்டும்."(மத்.16:24)
இயேசு தன் பொதுவாழ்வின்போதுதான் இவ்வறிவுரையைச் சொன்னார்.
ஆனால் இயேசு இதைச் சொல்வதற்கு முன்னாலேயே சிலுவை வாழ்வை வாழ ஆரம்பித்துவிட்டாள்.
விண்ணகம் நோக்கிய அவளுடைய ஆன்மீகப் பாதை மலர்ப் பாதை அல்ல,
முட்பாதை,
துன்பங்களும், துயரங்களும் நிறைந்த பாதை.
அவளுடைய வயிற்றில் கருத்தரித்து வளர்ந்தது
மனித உரு எடுத்த எல்லாம் வல்ல இறைவனது திருமகன் என்பது அவளுக்குத் தெரியும்.
கபிரியேல் தூதர் அவள் இறைவனின் தாயாகவிருக்கும் நற்செய்தியை அறிவித்தபோது
அவள், "நான் இறைவனின் தாயாகவேண்டுமென்றால் எனக்கு வசதியான வாழ்க்கையயைத் தரவேண்டும்" என்று நிபந்தனை ஏதும் போடவில்லை.
மாறாக, ''இதோ ஆண்டவரின் அடிமை" என்று தன்னையே தாழ்த்திக்கொண்டாள்.
தொடர்ந்து தன் வாழ்நாளின் கடைசிவரை
இறைவனின் 'அடிமை'யாக,
அவரது திருச் சித்தத்தை
எதிர்க்கேள்வி கேட்காமல் நிறைவேற்றுபவளாக வாழ்ந்தாள்.
பிறர் அன்பு பிறர் பணியில் வெளிப்படவேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
மரியாள் யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து நடந்தே சென்று,
கர்ப்பிணியான எலிசபெத்தம்மாளுக்குப் பணிபுரிந்தாள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது,
மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து பிறந்த கட்டளைப்படி
பெயரைப் பதிவுசெய்யக்
கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு,
யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
இப்போதுபோல போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ,
சூசையப்பரும்,
நிறைமாத கர்ப்பிணியான மாதாவும்
எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்!
ஆயினும் இறைவனது சித்தத்தை முணுமுணுக்காமல் நிறைவேற்றினார்கள்.
சென்ற இடத்தில் சத்திரத்தில்கூட இடம் கிடைக்காமல்,
ஒரு மாட்டுத்தொழுவில்,
அங்கு வீசியிருக்கும் சாணி நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு
இறை இயேசுவைப் பெற்றெடுக்க வேண்டுமென்பது
இறைவனின் சித்தம்.
மாதா மலர்ந்த முகத்துடன் இறைவன் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்தாள்!
மாட்டுத்தொழுவில்
படுக்கக்கூட இடமில்லாமல்
மாடுகளின் தீவனத்தொட்டியில் படுத்து உறங்கிய
ஏழைப்பாலகனின் பிறப்பைக் கொண்டாட
எத்தனை இலட்சங்கள் செலவழிக்கிறோம்!
இது அவரைக் கேலி செய்வது மாதிரி இல்லை?
கிறிஸ்மஸ் விழாவை எளிமையாகக் கொண்டாடலாமே!
இலட்சங்கள் கையை உறுத்திக்கொண்டிருந்தால்,
தேவையில் வாடும் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே!
இறைவன் உத்தரவுக்குப் பணிந்து,
ஏரோது மன்னனிடமிருந்து இயேசு பாலகனைக் காப்பாற்ற,
சூசையப்பரும், மாதாவும் குழந்தை இயேசுவை எடுத்துக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள்.
இயேசு சர்வவல்லப தேவன்.
அவர் நினைத்திருந்தால் ஏரோதுவைக் காலிபண்ண ஒரு வினாடிகூட ஆகாது.
ஆனால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகப்
பாடுபடுவதற்கென்றே மனிதனாகப் பிறந்தார்.
அப்பாடுகளில்
அவரைப் பெற்ற மாதாவும்,
வளர்த்த சூசையப்பரும்,
நாமுங்கூட,
பங்கெடுக்கவேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
"அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்."
திருக்குடும்பம் எகிப்துக்குச் சென்ற செய்தியை ஒரு வாக்கியத்தில் முடித்துவிட்டார் நற்செய்தி ஆசிரியர் மத்தேயு.
ஆனால் அவர்களது எகிப்திய பயணத்தின்போது
என்னென்ன கஸ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்று
சிறிது எண்ணிப்பாருங்கள்.
சூசையப்பர் வயது முதிர்ந்தவர்,
மாதாவுக்கு 15 வயது,
இயேசு குழந்தை,
கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து எகிப்துக்கு நடைப்பயணம்,
சாப்பாட்டிற்கு என்ன செய்திருப்பார்கள்,
இரவுகளில் எங்கு தங்கியிருப்பார்கள்,
கொசுக்கடியால் தூங்காமல் எத்தனை இரவுகள் கஸ்டப்பட்டிருப்பார்கள்
என்பதை எல்லாம் நினைத்துப் பார்த்தால்
இயேசுவுக்காக சூசையப்பரும், மாதாவும் சுமந்த
சிலுவையின் கனம் புரியும்.
பிரயாணத்தின்போது நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள்பற்றி,
(வாய்வழிச் செய்தியாய் வந்தவை)
நான் நடுநிலைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது
என் தாய் கூறியவை
என் ஞாபகத்தில் பசுமையாக உள்ளன.
ஒரு மலைப்பபகுதி வழியாக
திருக்குடும்பம் நடந்துகொண்டிருந்தபோது
தூரத்தில் கையில் வாள்களுடன் படைவீரர்கள் வருவது
சூசையப்பர் கண்ணில் பட்டது.
உடனே அவசர அவசரமாக மாதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த. ஒரு குகைக்குள் நுழைந்துவிட்டார்.
கொஞ்ச நேரத்தில் குதிரைகளில் வீரர்கள் அந்தப்பக்கம் வந்தார்கள்.
ஒரு வீரன் சொன்னான்,
"இந்த குகைக்குள் அவர்கள் நுழைந்ததை நான் பார்த்தேன்."
இன்னொருவன் குகை அருகே சென்று குகை வாயிலைப் பார்த்துவிட்டு,
"வாயில் முழுவதும் சிலந்திகள் வலை பின்னியிருப்பதைப் பாருங்கள்.
மாதக்கணக்காக வாயிலில் யாரும் நுழைந்திருக்க முடியாது."
என்றான்.
வீரர்கள் அவன் சொன்னதை ஏற்று அவ்விடம் விட்டு அகன்றனர்.
குகைக்குள் பாலன் இயேசு புன்முறுவல்பூத்துக் கொண்டிருந்தார்.
அன்றைய இரவை அங்கே கழித்துவிட்டு,
காலையில் எழுந்து சென்றனர்.
அப்போது அங்கு சிலந்தி வலை ஏதும் இல்லை.
மற்றொரு நிகழ்வு.
சூசையப்பரும், மாதாவும், குழந்தை இயேசுவும் வயல் வழியே நடந்து சென்றார்கள்.
அப்பொழுது வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தார்கள்.
மறுநாள் காலை வயலுக்கு வந்தவர்கட்கு ஒரே ஆச்சரியம்.
பயிர் வளர்ந்து விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது.
அப்போது வாளுடன் வந்த வீரர்கள்,
"இந்த வழியே ஒரு வயதானவரும், 15. வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஒரு குழந்தையுடன் இந்த வழியே சென்றதைப் பார்த்தீர்களா? "
ஒரு விபசாயி,
"ஆமா. வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தபோது
போனார்கள்."
"இப்போது பயிர் அறுவடைக்குத் தயாராக உள்ளது.
அப்படியானால் மூன்று மாதங்களுக்கு முன்பே இவ்வழியே போயிருக்க
வேண்டும்.
அவர்கள் வெளிநாட்டுக்குப் போயிருப்பார்கள்,
வாருங்கள். மன்னனிடம் சொல்லுலவோம்"
என்று கூறி விட்டுப் போய்விட்டார்கள்.
எகிப்து ஒரு அந்நிய நாடு அங்கு சென்று வாழ சூசையப்பரும், மாதாவும் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்!
நாம் மாதாவின் பிள்ளைகள் என்று கூறிக்கொண்டு சொகுசாக வாழ ஆசிக்கிறோம்!
மரியாள் வாழ்நாளெல்லாம் இயேசுக்காகவே வாழ்ந்தார்கள்.
சிலுவைப்பாதை முழுவதும் இயேசுடன் இருந்தார்கள்.
நமக்காக தன் மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.
மாதாவை நமது தாயாகத் தந்துவிட்டுதான் இயேசு மரித்தார்.
மாதா எப்படி ஒவ்வொரு வினாடியும் இயேசுவுக்காக வாழ்ந்தார்களோ
அப்படியே நாமும் வாழ்ந்தால்தான் நாம் மாதாவின் பிள்ளைகள் என்று கூறலாம்.
மாதாவைப்போல நாமும் நமது சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின்தொடர்வோம்.
வாழ்க மரியாள்!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment