Wednesday, August 22, 2018

"நம்ம சாமியார் சுத்த மோசம்.''

"நம்ம சாமியார் சுத்த மோசம்.''
-*****-*****-**--*********-------***

"ஹலோ! என்ன ஆச்சி? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? "

"நம்ம சாமியார் சுத்த மோசம்.''

"ஏன்? என்னாச்சி?

சாமியார் மேல என்ன கோபம்?

நல்லாத்தான இருந்தீங்க."

''நல்லாத்தான் இருக்கோம்."

"பிறகு என்ன கோபம்?

நேற்று ஞாயிறு பூசைக்குப் பிந்தி வந்தீயே, அதுக்குச் சத்தம் போட்டாரா? "

"இல்ல.''

" 'ஏண்டா திவ்யநற்கருணை முன்பு முழந்தாள்படியிடுத'ன்னு கேட்டாரா?"

"இல்ல. அவரே முழந்தாள்படியிட்டுதான் வணங்குவார்."

''அங்கி இல்லாம busல போனாரா?"

"அதுல்லாம் இல்ல. அவர் roomலகூட அங்கியோடுதான இருப்பார்."

"பிறகு என்னதான் பிரச்சனை? "

"நேற்று எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் தந்தார்."

"இதுக்கா அவர்மேல கோபம்?

இது சந்தோசப்பட வேண்டிய விசயமுல்லா.  அதுக்கு ஏன் கோபம்?"

"ரூபா எதுக்கண்ணே?"

"செலவழிக்கதான்."

"அவர் தந்த ரூபாயைச் செலவழிச்சிட்டேன். அதுக்கு என்மேல் கோபப்படுறார்.
இது நியாயமா?"

"நீ சொல்றது ஒண்ணும் புரியல."

"என்ன புரியல. தமிழிலதானே சொல்லுதேன். உங்களுக்கு தமிழ் தெரியாதா?"

"உங்கிட்ட எதுக்கு பத்தாயிரம் ரூபாய் தந்தாரு?"

"ரூபாய் எதுக்கு தருவாங்க?  செலவழிக்கதான்."

"இன்ன செலவுக்குன்னு சொல்லியிருப்பாருல்ல."

"சொன்னாரு. ஒரு listஏ தந்தாரு."

"என்ன list?"

"இந்தா பாரு."

"இது நம்ம கோவிலுக்கு வேண்டிய சாமான்கள் லிஸ்ட் மாதிரி தெரியுது."

"மாதிரி என்ன மாதிரி, அதேதான்."

"அப்போ இந்த லிஸ்ட்ல உள்ள பொருட்கள் வாங்கதான் சாமியார் பத்தாயிரம் தந்தார்."

"ஆமா."

"வாங்கினதுல என்ன பிரச்சனை?"

"வாங்காததுதான் பிரச்சினை."

"அப்போ நீ ஒரு பொருளும் வாங்கல!''

"வாங்கினேன். இந்த லிஸ்ட்ல உள்ள ஒரு பொருளும் வாங்கல."

"ஏன்? "

"டிப்போ பூட்டி இருந்தது."

"வேறு என்னதான் வாங்கின?"

"இதோ பார்.  நல்லா இருக்குல்ல?"

"அப்போ கோவிலுக்குப் பொருட்கள் வாங்க தந்த ரூபாய்க்கு உனக்கு Smart phone. வாங்கியிருக்க!"

"ஆமா. டிப்போ திறக்கல. அதனால் கோவில் பொருட்கள் வாங்கல.

அதுக்கு கோபமா சப்தம் போடறாறு."

"சாமியாராவது சப்தம் மட்டும் போட்டாரு. 

நானா இருந்தால்
பிரம்பாலே வெளுத்திருப்பேன்."

"நீங்க பழைய ஞாபகத்தில பேசரீங்க. நீங்க ரிட்டயர்ட் ஆகி 21வருசம் ஆகுது.

பிரம்பத் தூக்குகிற சக்தி உங்களுக்குக் கிடையாது. "

"உலகத்தில முக்கால்வாசிப்பேர் உன்னப்போலதான் இருக்காங்க."

"என்னப்போல Smart phone வாங்கராங்களோ?"

"Smart phoneலேயே நில்லுங்க.

கொஞ்சம் இறங்கி வந்து நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.''

"இது வரை அதைத்தானே செஞ்சிட்டிருக்கேன்."

"சரி. தொடர்ந்து செய்யுங்க. 

கடவுள் ஏன் உலகைப் படைத்துவிட்டு கடைசியில் மனிதனைப் படைத்தார்?"

"உணவு தயாரான பின்புதானே ஆட்கள் பந்தியில் அமர முடியும்.

அதேமாதிரிதான், மனிதன் பயன்படுத்துவதற்குத்தானே உலகம் படைக்கப்பட்டது.

அதனால்தான் கடவுள் உலகைப் படைத்தபின் மனிதனைப் படைத்தார்."

" விசுவாச அடிப்படையில் மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டான்?"

"இறைவனை அறிந்து,

நேசித்து,

அவருக்கு ஊழியம் செய்து,

அவரோடு என்றென்றும் வாழ படைக்கப்பட்டான்."

"அப்போ உலகைப் பயன்படுத்த படைக்கப்படவில்லை? "

"நீங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு அருவியில் குளிப்பற்காகச் செல்கிறீர்கள்.

தூரம் காரணமாக நடக்க முடியாதகையால் பஸ்ஸில் செல்கிறீர்கள்.

குற்றாலம் செல்ல பஸ் பயன்படுகிறது.

நோக்கம் அருவியில் குளிப்பு.

உதவுவது பஸ்.

'பஸ்ஸில் ஏறுவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டேன்' என்றா சொல்வீர்கள்?

அதேபோல்தான் இறைவனை அறிந்து, நேசித்து, சேவை செய்ய உலகம் உதவுகிறது.

அப்படி உதவுவதற்காகவே உலகம் முதலில்  படைக்கப்பட்டது,

பிரயாணம் செய்யவே பஸ் உண்டாக்கப்பட்டதுபோல."

"Very good.

இப்போ ஒரு கேள்வி.

பஸ்ஸில் ஏறிய நான்

அதன் வசதியில் மயங்கி

குற்றாலத்திற்குப் போகாமலிருந்தால்

என்னைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?"

"முட்டாள் என்று நினைப்பேன்."

"இப்போ உங்களைப்பற்றி என்ன நினைக்கட்டும்? "

"என்னைப்பற்றியா?  நான் என்ன செய்தேன்?"

"என்ன செய்தேனா? 

எதை வாங்க சாமியார் பணம் கொடுத்தாரோ அதை வாங்காமல்

அதைக்கொண்டு Smart phone வாங்கியிருக்கீங்களே!"

"ஆமா, என்ன.

நான் முட்டாள்தான்.

ஆனால் சாமியார்  என்னை அப்படி அழைக்கவில்லை.

அவர் நல்ல சாமியார்."

"தவற்றிலிருந்தும் பாடம் கற்கலாம்.

உன் தவற்றிலிருந்து என்ன பாடம் கற்கிறாய்?"

"இறைவனுக்கும்,நம் அயலானுக்கும் சேவை செய்யவே

இவ்வுலகம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது,

சுய இன்பத்திற்காக அல்ல.

இறைவனையும், அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இறைவனது கட்டளை.

இந்நேசத்தைச் செயலில் காட்டவே,

அதாவது, நற்செயல்கள் செய்யவே  இவ்வுலகும் அதிலுள்ள பொருட்களும் தரப்பட்டுள்ளன.

நிலையற்ற இவ்வுலகப் பொருட்களைக் கொண்டு

நிலையான பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்

அவற்றைக்கொண்டு மற்றவர்கட்கு உதவுவதன்மூலம்."

"Very good. முதலில் சாமியார் தந்த லிஸ்ட்ல உள்ள பொருட்களை வாங்கு.

அப்புறம் அவரிடம் போ."

"Thank you."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment