Sunday, August 5, 2018

அன்னை மரியாள் அருள் நிறைந்தவளா? அருள் மிகுந்தவளா?

அன்னை மரியாள் அருள் நிறைந்தவளா?  அருள் மிகுந்தவளா?
******-***-----*******************
செல்வமும் பாக்கியமும் சந்திக்கிறார்கள்.


"ஹலோ! செல்வம், ஒரு நிமிசம். "

"சொல்லுங்க, பாக்கியம்."

"செபமாலை சொல்லும்போது சிலர் 'அருள் நிறைந்த மரியே வாழ்க'ன்னு சொல்றாங்க.

சிலர் 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க'ன்னு சொல்றாங்க.

இந்த இரண்டுல எந்த வாழ்த்து மாதாவுக்கு ஏற்றது?"

"பாக்கியம்,  நீங்க கணிதத்தேர்வுல நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருப்பதாக வைத்துக்கொள்வோம்.

மதிப்பெண் பட்டியல வகுப்புல வாசிக்கும்போது

உங்க ஆசிரியர்

நீங்க நூற்றுக்கு  தொன்னூற்றெட்டு மதிப்பெண் பெற்றிருப்பதாக வாசித்தா

உங்களுக்கு எப்படி இருக்கும்?"

"வாசித்தவர் மேல கோபம் கோபமா வரும்."

"ஏன் கோபம் வரும்?"

"என்னுடைய தகுதியைக்  குறைத்து மதிப்பீடு செய்தால் சந்தோசமா வரும்?

நான் உடனே எழுந்து, 'சார், என் மதிப்பெண் நூறு. பார்த்து வாசிங்க'ன்னு கத்துவேன்."

"நூறுக்கும், தொன்னூற்றெட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லையே?"

"வித்தியாசம் இருக்கிறதா?  இல்லையா?

ஒரு கிணற்றின் உள் அகலம் 99 அடி என்று வைத்துக்கொள்வோம்.

ஒருவன் கிணற்றைத் தாண்டுகிறான்.

100 அடி தாண்டினால் கிணற்றைத் தாண்டிவிடுவான்.

98 அடி தாண்டினால்,  கிணற்றுக்கு உள்ளேதான் விழுவான்.

'அதிக வித்தியாசம் இல்லையே'ன்னு சொல்லுவீங்களோ?"

"நிச்சயமா சொல்லமாட்டேன்.

உனக்குப் புரியவைக்கதான்  அப்படிச் சொன்னேன்.

'நிறைந்த'  என்ற வார்த்தைக்கும்,

'மிகுந்த' என்ற வார்த்தைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஒரு பாத்திரம் ஒரு பொருளால் 'நிறைந்திருந்தால்',

(If a container is full)

அதில் வேறு பொருளுக்கு இடம் இல்லை.

ஒரு பாத்திரத்தில் ஒரு பொருள் 'மிகுதியாக' இருக்கிறது என்றால்,

முக்கால் பாத்திரம் இருக்கலாம்,

முக்காலே அரைக்கால் பாத்திரம் இருக்கலாம்,

முக்காலே முண்டாணி பாத்திரம்கூட இருக்கலாம்

அதைவிட அதிகமாகவும் இருக்கலாம்

ஆனால் நிறைந்திருக்கவேண்டிய அவசியமில்லை.

100%ஐ 'நிறைந்த' என்றால்

98% ஐ   'மிகுந்த' என்போம்.

அருள் நிறைந்தவரிடம்

சிறு குறைகள்கூட

ஒரு இம்மி கூட இருக்காது.

இயேசுவின் தாய்  சென்மப்பாவமின்றி பிறந்ததோடு,

அவளுடைய வாழ்வில் ஒரு சிறு மாசு மருகூட இருந்ததில்லை.

"அவள் உன் தலையை நசுக்குவாள்:

நீயோ அவளுடைய குதிங்காலைத்  தீண்ட முயலுவாய்."

இறைவன் சாத்தானை நோக்கிச் சொன்ன இவ்வார்த்தைகளில்

'அவள்' மரியாளைக் குறிக்கும்.

அவள் சாத்தானின் தலையை நசுக்குவாள்.

சாத்தான் அவளுடைய குதிங்காலைத்   தீண்ட முயலும். ஆனால் தீண்ட முடியாது.

அதாவது பாவமாசு அவளை நெருங்காது.

மாதாவைத் தவிர மற்ற புனிதர்கள் 'அருள் மிகப்' பெற்றவர்கள்.

Headmaster ஐ Headmaster என்றுதான் அழைக்கவேண்டும்,

Asst.Headmaster என்று அழைக்கக்கூடாது.

இறைவனின் தாயை 'அருள் நிறைந்த மரியே' என்றுதான்
அழைக்கவேண்டும்.

மற்ற புனிதர்களை 'அருள்மிகப் பெற்றவர்களே' என்று அழைக்கவேண்டும்.

நமது அன்னையின் பெருமையை நாமே குறைத்து மதிப்பிடலாமா?

அது நல்ல பிள்ளைக்கு அழகா?

என்ன பாக்கியம், புரிகிறதா?"

"நீங்க சொல்றது புரிகிறது.

ஆனால் புரியாத புதிர் ஒன்று இருக்கிறது.

நீங்கள் உங்களது கூற்றை எண்பிக்க ஆதியாகமத்திலிருந்து காட்டிய மேற்கோள் புதிய பொது மொழிபெயர்ப்பில் இல்லையே.

"நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்” என்றுதானே இருக்கிறது.

இங்கு 'அதன்' அவளின் வித்துவைத்தானே குறிக்கிறது.

அவளின்  வித்து இயேசுதானே."

"இது கணக்கைத் தவறாகச் செய்துவிட்டு,  அதைச் சரிசெய்ய வாய்ப்பாட்டை   மாற்றிய கதையாய் இருக்கிறது.

மேற்கோளை நான் காட்டவில்லை.

மரியாளின் அமல உற்பவத்தை எண்பிக்க

தாய்த் திருச்சபை காலங்காலமாக காட்டிய மேற்கோளைத்தான்

நான் காட்டினேன்.

'பொது மொழிபெயர்ப்பு'
என்றாலே 'நமக்கும்,  நம்மிடமிருந்து பிரிந்துசென்ற சகோதரர்கட்கும் பொதுவான மொழிபெயர்ப்பு.'

பிரிந்துசென்ற சகோதரர்கட்கு
மரியாளைப் பிடிக்காது.

மாதாவைப் பற்றிய விசுவாச சத்தியத்தில் கைவைக்க பைபிளில்  கைவைத்திருக்கிறார்கள்,

அதாவது,

மாதாவின் அமல உற்பவத்தை எண்பிக்க காலங்காலமாய் திருச்சபை காட்டிய ஆதாரத்தில் கைவைத்திருக்கிறார்கள்.

நமது மொழிபெயர்ப்பாளர்கள்

படித்தவர்கள்,

  பட்டம் பெற்றவர்கள்,

அவர்களை விமர்சிக்க

அடியேன் அருகதை அற்றவன்.

ஆனால் அவர்களது மொழிபெயர்ப்பில் பிழைகள்  உள்ளன.

அது உண்மை.

நம் அன்னையின் அமல உற்பவத்தின் ஆதாரங்களில் கைவைத்தது யாருடைய வேலையாய் இருக்கும்?

மாதாவின் எதிரி
'அவளுடைய குதிங்காலைத்   தீண்ட' முயல்கிறது.

ஆனால் முயற்சியில் வெற்றி பெறாது.

ஏனெனில், அவள் ஆண்டவரின் அடிமை."

"இப்போ புரிகிறது.

'அருள் நிறைந்த மரியே,

பொது மொழிபெயர்ப்பாளர்கட்காக வேண்டிக்கொள்ளும்'.

செல்வம், நன்றி.

God be with you."

"Thank you.*

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment