Saturday, August 4, 2018

விண்ணிலிருந்து இறங்கிய உயிருள்ள உணவு.


விண்ணிலிருந்து இறங்கிய உயிருள்ள உணவு.
++++++++++++++++++++++++

இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அளித்த உணவு

அவர்களை 

"உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்" என்று எண்ணவைத்தது.

அவர்கள் அவரை அரசர் ஆக்க விரும்பினர்.

இதை அறிந்த இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.

இரவானதும் இயேசுவின்  சீடர் கடலுக்கு வந்து, படகில் ஏறி, அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்குப் புறப்பட்டனர்.

இயேசு அப்படகில் போகாததால்  மக்கள்  உணவு உண்ட இடத்திலேயே இருந்தனர்.

ஆனால் இயேசு கடல்மேல் நடந்து மறுகரைக்குச் சென்றுவிட்டார்.

இரவானபின்னும் இயேசு அங்கு இல்லாததால், மறுநாள் மக்கள்கூட்டமும் அவரைத்தேடி  படகுகளில் ஏறி மறுகரைக்குச் சென்றது.

இயேசு அங்கு ஏற்கனவே வந்துவிட்டதைக் கண்டு,

"ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.

அவர்கள் அவரைத் தேடியது மறுபடியும் அற்புத அப்ப உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்.

  இதைத் தெரிந்திருந்த  இயேசு மறுமொழியாக:

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று,

அப்பங்களை வயிறார உண்டதால்தான்.

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்.

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்:

ஏனெனில்,

அவருக்கே தந்தையாகிய கடவுள்

தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்" என்றார்

அவர்கள் அவரை நோக்கி, "கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?" என்று கேட்டனர்.

இயேசு,

"அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.

அவர்கள், அவரை விசுவசிக்க ஓர் அருங்குறி  கேட்டார்கள்.

அவர்களது முன்னோர் பாலைவனத்தில் மன்னா  உண்ட நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினர்.

அந்தக்கால யூதர்களிடையே ஒரு தவரான எதிர்பார்ப்பு இருந்தது.

அதாவது வாக்களிக்கப்பட்ட மெசியா வரும்போது

மோயீசன் காலத்தில் வானிலிருந்து இலவசமாக மன்னா அருளப்பட்டதுபோல்

மன்னா உணவைத் தருவார் என்று நம்பினார்கள்.

ஆகவேதான்

"உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்"

என்று நம்பியதோடு அவரை அரசராக்கவும் விரும்பினர்.

அவர்களது எதிர்பார்ப்பு தவரானது என உணர்த்த,

இயேசு,

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்.

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்."
என்றார்.

மக்களது தவறான எதிர்பார்ப்புகளைச் சரிப்படுத்தவே இவ்வாறு சொன்னார்.

மோயீசன் காலத்தில் விண்ணிலிருந்து விழுந்த மன்னா உணவு தற்காலமானது.

அது உடல் சம்பந்தப்பட்டது.

அதை உண்டவர்கள் இறந்து விட்டார்கள்.

நாம் தேடவேண்டியது நித்தியத்துக்கும் இறவா வரம் தரும் ஆன்மீக உணவைத்தான்.

"வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.

ஏனெனில்,

வானினின்று இறங்கி வந்து

உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு" என்றார்.

இயேசு குறிப்பிட்டது உடலை வாழவைக்கும் உயிரை அல்ல,  ஆன்மாவை வாழவைக்கும் உயிரை.

அதாவது தேவஇஸ்டப்பிரசாதத்தை. (Sanctifying grace.)

ஆனால் பாலைவனத்தில் விழுந்த மன்னா உணவைத் தேடும்  சாதாரணமக்களுக்கு இந்த விபரம் தெரிந்திருக்குமா?

சந்தேகம்தான்.

தெரிந்திருந்தால் இயேசுவின் பதிலைக் கேட்டதும் அவரைவிட்டுப் போயிருக்கமாட்டார்கள்.

"அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.

இயேசு,

"நானே உயிர் தரும் உணவு.

நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்.

நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
என்றார்.

மக்களோ
"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று தங்களுக்குள்ளே வாதிடத்தொடங்கினர்.

ஆனால்  இயேசு,

"என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.

என் தசையைத் தின்று,

என் இரத்தத்தைக் குடிப்பவன்

என்னில் நிலைத்திருக்கிறான்,

நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்." என்று கூறினார்.

ஆனால் அவருடைய சீடரில் பலருக்கு இது புரியவில்லை.

"இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது,

யார் இதைக் கேட்பார் ?" என்று சொல்ல ஆரம்பித்தனர்.

இயேசுவின் வார்த்தைகனைப்  புரிந்துகொள்ளாதவர்கள் அவரை விட்டுப்போய்விட்டனர்.

இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.

அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ?

முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நீரே கடவுளின் பரிசுத்தர்:

இதை நாங்கள் விசுவசிக்கிறோம்:

இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.

ஆக, இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியது

தன் மரணத்திற்கு முந்திய நாளில் என்றாலும்,

அதுபற்றிய விபரத்தை கப்பர்நாகூமிலேயே கொடுத்துவிட்டார்.

"Behold the Lamb of God,

behold Him Who takes away the sins of the world. 

Blessed are those called to the supper of the Lamb."

"இதோ! கடவுளுடைய செம்மறி:

இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர்  பேறுபெற்றோர்."

திருவிருந்துக்கு முன்பு,

நற்கருணை நாதரைக் கையில் எடுத்து,

குருவானவர் கூறும் இவ்வார்த்தைகள்

வெற்று வார்த்தைகள் அல்ல.

உயிருள்ள வார்த்தைகள்.

திருப்பலியின்போது பலியிடப்படுபவர் இறைமகன். (கடவுளுடைய செம்மறி.)

பலியிடப்பட்ட இறைமகன் தன்னையே நமக்கு உயிருள்ள  உணவாகத் தருகிறார்.

இறை நமது இரையாகிறார்.

அவர் தரும் உயிருள்ள உணவு நம்மை என்றென்றும் வாழ வைக்கும்.

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்." (அரு.6:51)

என்றென்றும் வாழ்வு தரும் உணவை உண்டால்

அதற்குறிய வளர்ச்சி மாற்றம்

நம் ஆன்மாவிலும்,

வாழ்க்கையிலும் ஏற்படவேண்டும்.

சத்துள்ள உணவை உண்பவன் சக்தியைப் பெறவேண்டும்.

பெறாவிட்டால் உண்டும் பயனில்லை.

இறைமகனை உணவாக உண்டபின்னும் அவருடைய பண்புகளான

அன்பு,

கருணை,

பிறருக்கு உதவியாக இருத்தல்,

தியாகம்

ஆகியவை நம் வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் நம்மிடம் எங்கோ கொளாறு இருக்கிறது என்று அர்த்தம் .

நம்மில் இறைமகனைச் சுமந்துகொண்டு

நம் விருப்பம்போல் வாழ்ந்தால்,

அது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம்.

நமது விருப்பங்கள் அவரது விருப்பங்களாக மாறவேண்டும்.

அம்மாற்றம் நம் வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.

தகுந்த தயாரிப்போடு

இயேசுவை உண்போம்.

அவரோடு இணைந்து  என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment