Tuesday, December 14, 2021

நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ்கின்றோமா?

நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ்கின்றோமா?

உலகியல் வாழ்க்கை வாழ்வோர் தங்களை மையமாக வைத்துக் கொண்டு வாழ்வார்கள், அதாவது அவர்கள் தங்களுக்காக வாழ்வார்கள்.

தங்களது சூழ்நிலையை தங்கள் வாழ்வுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

தங்களுக்கு பயன் படாதவற்றைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் ஆன்மீக வாழ்க்கை வாழ்வோர் இறைவனை மையமாக கொண்டு வாழ்வார்கள். அதாவது இறைவனுக்காகவே வாழ்வார்கள்.

இறைவனை மகிமை படுத்துவது மட்டுமே அவர்களது வாழ்வின் குறிக்கோளாக இருக்கும்.

இறைவனது மகிமைக்காக தங்களையே தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மை மையமாக வைத்து வாழ்கின்றோமா?

 அல்லது 

இறைவனை மையமாக வைத்து வாழ்கின்றோமா?

இந்த கேள்வியே வினோதமாகத் தெரியும்,

 ஏனெனில் கிறிஸ்தவர்கள் வாழவேண்டியது ஆன்மீக வாழ்க்கை.

கிறிஸ்தவர்கள் வாழவேண்டியது ஆன்மீக வாழ்க்கை என்பதில் ஐயமில்லை.

ஆனால் ஆன்மீக வாழ்க்கையை ஆன்மீகத் தனமாக வாழ்கின்றோமா, 

உலகியல் தனமாக வாழ்கின்றோமா என்பதுதான் கேள்வி.

இறைவனை மையமாக வைத்து வாழவேண்டிய ஆன்மிக வாழ்க்கையை,

நம்மை மையமாக வைத்து வாழ்ந்தால் அது 
உலகியல்தனமாக மாறிவிடும்.


 நாம் இறைவனுக்காக வாழ்ந்தால் மட்டுமே அது உண்மையான ஆன்மீக வாழ்க்கை.

 நமது தேவைகள் நிறைவேறுவதற்காக இறைவனை பயன்படுத்துவதற்காக வாழ்ந்தால் அது உலகியல் வாழ்க்கை.

ஒருவன் பள்ளிக்கூடத்திற்கு போவதால் மட்டும் அறிவை பெற்று விடுவதில்லை,

 அவன் எதற்காக பள்ளி செல்கின்றானோ, அதைச் செய்தால் தான், அதாவது பாடங்களை படித்தால் தான் அறிவைப் பெற முடியும்.

அதேபோல ஒருவன் கோவிலுக்குப் போவதால் மட்டும்,

அல்லது 

செபங்களைச் சொல்வதால் மட்டும் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து விடுவதில்லை.

இறைவனை ஆராதித்து வழிபடுவதற்காகவும்,

இறைவனது பராமரிப்புக்கு நன்றி சொல்வதற்காகவும்,

இறைவனுக்காக வாழ தேவையான அருள் வரங்களை கேட்பதற்காகவும்,

இறைவனோடு இணைந்து இருப்பதற்காகவும் 

கோவிலுக்கு சென்று செபம் செய்தால் மட்டுமே அவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இவை எதையும் செய்யாமல் தனது உலக வசதிகளை பெறுவதற்காக இறைவனிடம் வேண்ட கோவிலுக்கு சென்றால் அதில் ஆன்மீகம் இல்லை.

வங்கியிலிருந்து கடன் பெறுவதற்காக வங்கிக்கு சென்றால் அது சொந்த நலனுக்காக,

 வங்கியின் நலனுக்காக அல்ல. 

அதேபோல

நமது உலக வசதிகளை பெற வேண்ட கோவிலுக்கு சென்றால் அது நமது நலனுக்காக, இறைவனது மகிமைக்காக அல்ல.

இறைவனது மகிமைக்காக அன்றி எதைக் செய்தாலும் அது உண்மையாக ஆன்மீகம் இல்லை.

நாம் தேட வேண்டியது இறையரசை மட்டுமே,

நமது வாழ்க்கைக்கு என்ன தேவை என்று இறைவனுக்கு தெரியும்.

நாம் கேட்காமலேயே அவற்றை நமக்கு தருவார்.

பிள்ளைக்கு என்ன என்ன வேண்டும் என்று பெற்ற தாய்க்கு தெரியாதா?

படைக்கப்பட்ட நமக்கு என்னென்ன தேவை என்று படைத்தவருக்கு தெரியாதா?

"எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.


32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.


33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:31 - 33)

நமது வாழ்வின் ஆன்மீக நோக்கத்தை மறந்து விட்டு,

உலக வாழ்க்கைக்காக மட்டும் இறைவனைத் தேடினால் நாம் வாழ்வது உலகியல் வாழ்க்கையே.

உலகம் அல்லது உடல் சம்பந்தப்பட்ட வசதிகளை இறைவனிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை,

 ஆனால் அவற்றை ஆன்மீக நோக்கத்திற்காக கேட்க வேண்டும்.

அதாவது அவை நமது உண்மையான ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கும்படியாக கேட்க வேண்டும். 

இறைவனுக்காக மட்டுமே என்பதை மறந்துவிட்டு, நமது வசதிக்காக மட்டுமே எந்த அடிப்படையில் கேட்கும் எந்த உதவியும் உலகியல் சம்பந்தப்பட்டதே.

இறைவனுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளில்கூட 
உலகியல்தனம் கலந்து விடக்கூடாது.

"தேர்வில் வெற்றி , வேலை, சம்பளம் கூடுதல் போன்ற உலக நோக்கங்கள் நிறைவேறினால்

 கோவிலுக்கு இவ்வளவு காணிக்கை செலுத்தி விடுகிறேன்"

 என்று நேர்ந்தால் அது வேலைக்காக அரசியல்வாதியிடம் லஞ்சம் கொடுப்பது போல ஆகிவிடும்.

 நமது காணிக்கையை இறைவனுக்கு கொடுக்கும் லஞ்சமாக மாற்றிவிடக் கூடாது.

இறைவனது பராமரிப்புக்கு நன்றியாக,

வேறு நிபந்தனை ஏதுமின்றி,

செலுத்தப்படுவதே காணிக்கை.

நமது பிறரன்பு பணிகள் கூட நமது இறை அன்பின் , அதோடு இணைந்த பிறர் அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க வேண்டும்.

நிபந்தனைகள் அடிப்படையில் செய்யும் பிறரன்பு பணிகள் உண்மையில் பணிகள் அல்ல.

நமது பெருமைக்காக செய்யும் பணிகளும் பணிகள் அல்ல.

அன்பின் அடிப்படையில் செய்யும் பணிகளே பணிகள். 

நமது இறை அன்பும் பிறர் அன்பும் பணிகளாக மாற வேண்டும்.

அவையே அன்பே உருவான இறைவனுக்கு பிடிக்கும்.

அவை மட்டுமே உண்மையான ஆன்மீகத்தின் வெளிப்பாடு.

நமது ஆன்மீக வாழ்க்கையை இறைவனுக்காக வாழ்கின்றோமா அல்லது நமக்காக வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment