Thursday, December 9, 2021

" மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்: அவரை " இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்", என்கிறார்கள்" (மத்.11:19)

" மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்: அவரை " இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்", என்கிறார்கள்" (மத்.11:19)

நாம் என்ன செய்தாலும் நம்மை படைத்த எல்லாம் வல்ல இறைவனுடைய மகிமைக்காக செய்ய வேண்டுமே அல்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களை திருப்தி படுத்துவதற்காக அல்ல.

நாம் இந்த உலகத்தில் வாழ காரணமாய் இருப்பவர் சர்வ வல்லவராகிய கடவுள். 

அவரை திருப்திப்படுத்துவது ஒன்றே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும் நம்மை சுற்றி உள்ளவர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது.

இது நமது ஆண்டவரே அனுபவித்த அனுபவப்பூர்வமான உண்மை.

ஸ்நாபக அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பிடிக்காதவர்கள் அவரைப் பேய்பிடித்தவன் என்றார்கள்.

நமது ஆண்டவரோ சாதாரண மக்களோடு உண்டார், குடித்தார்.

அவரை பிடிக்காதவர்கள் அவரைப் 
போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்றார்கள்.

கடவுளுக்கே இந்த பாடு என்றால் நமது பாடு எப்படி இருக்கும்!

ஆன்மீக வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாத இந்த உலகைச் சார்ந்தவர்களுக்கு 

 ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் பைத்தியக்காரத்தனம் ஆகியவை போன்றே தோன்றும்.

நமது விசுவாசம் அவர்களுக்கு புரியாது.

ஒரு முறை நமது சமயத்தைச் சாராத நண்பர் ஒருவர்,

"எதன் அடிப்படையில் நீங்கள் விசுவசிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

விசுவாசத்தின் அடிப்படையை அவருக்கு புரிய வைப்பதற்காக 

"உங்கள் அப்பா யார் என்று உங்களுக்குத் தெரியுமா?"

 என்று கேட்டேன். 

"தெரியும்" என்றார்.

"எப்படித் தெரியும்?" என்று கேட்டேன்

"அம்மா சொல்லி தெரியும்." என்றார்.

"எதன் அடிப்படையில் அம்மா சொன்னதை ஏற்றுக் கொண்டீர்கள்? '' 

என்று கேட்டேன்.

"அம்மா பொய் சொல்ல மாட்டார்கள்" என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

"நாங்கள் கத்தோலிக்க திருச்சபையை தாயாக ஏற்றுக் கொள்கிறோம்.

தாய் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

அதன் அடிப்படையில்தான் கத்தோலிக்க திருச்சபை சொல்வதை விசுவசிக்கிறோம்.

திருச்சபையை தாயாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எங்களது விசுவாசம் புரியாது."

அதற்குமேல் அவரைப் புரிய வைக்க முடியாது.

நம்மைப் பொறுத்த மட்டில் விசுவாசம் இறைவன் கொடுத்த நன்கொடை.

அதன் அடிப்படையில்தான் திருச்சபையைத் தாயாக ஏற்றுக் கொள்கிறோம்,

 தாய் சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

கிணற்றுக்குள் விழுந்தவனை தூக்க வேண்டும் என்றால் நாம் கிணற்றுக்குள் குதித்தாக வேண்டும்.

இயேசு பாவிகளை மீட்கவே
 இந்த உலகிற்கு வந்தார்.

பாவிகளோடு பழகாமல் எப்படி அவர்களை மீட்க முடியும்?

இது தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பரிசேயர்களுக்குப் புரியவில்லை.

ஆகவே அவர் பாவிகளோடு உண்டதால் அவரை ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும் நண்பன் என்றார்கள்.

இயேசு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை, ஏனெனில் உண்மையாகவே அவர் பாவிகளின் நண்பர்தான்.

எப்படி ஒரு மருத்துவர்
 நோயாளிகளின் நண்பரோ,

அப்படியே இயேசுவும் பாவிகளின் நண்பர்தான்.

கத்தோலிக்க திருச்சபையைக்கூட 'பாவிகளின் கூடாரம்' என்றுதான் அழைக்கிறோம்.

எப்படி மருத்துவமனை நோயாளிகளின் கூடாரமோ 

அப்படியே திருச்சபையும் பாவிகளின் கூடாரம்தான்.

எப்படி குணமாக விரும்பும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கிறார்களோ 

அதேபோல்தான் மீட்கப்பட விரும்பும் பாவிகள் எல்லோரும் கத்தோலிக்க திருச்சபைக்குள் நுழைகிறார்கள்.

இயேசு பாவிகளின் நண்பன் என்பது நமக்குப் பெருமைதான்,

 ஏனெனில் நாம் பாவிகள்,

 அவர் நமது நண்பன்.

அவர் பாவிகளின் நண்பன் என்பதால் 

நாம் அவரிடம் நம்பிக்கையோடு வரலாம்.

 அவரிடம் மனம் திறந்து பேசலாம்,

 நமது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பு பெறலாம்.

இயேசு நமது குருக்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும்  முக்கியமான அதிகாரம் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்.  .


இயேசு உலகிற்கு வந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு நமது குருக்களுக்கு கொடுத்திருக்கிறார்.

நம்மில் எத்தனை பேர் அதைப் பயன்படுத்துகிறோம்?

எத்தனை பேர் பாவசங்கீர்த்தன தொட்டியை நாடி செல்கிறோம்?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

திருப்பலியின் போது அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றும் அதே குருவானவர்தான் 

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

ஆகவே திருப்பலி பீடத்திற்குக் கொடுக்கும்  முக்கியத்துவத்தை 

பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கும் கொடுப்போம்.

நாம் பாவிகள்.

 இயேசு நமது நண்பர்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment