(லூக்.7: 30)
ஸ்நாபக அருளப்பர் காலத்தில் வாழ்ந்த யூத மக்களை அவர்களின் ஆன்மீகத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.
1. படிப்பறிவில்லாத சாதாரண மக்கள். பாவிகளாகக் கருதப்பட்ட வரி தண்டுவோர் (ஆயக்காரர்),
பாவத்தில் வாழ்ந்த விலைமாதர்.
2.தங்களை பரிசுத்தவான்கள் என்று தற்பெருமையாக எண்ணிக் கொண்டிருந்த சட்டம் பயின்ற பரிசேயரும், சட்டவல்லுநரும்.
இதில் முதல் வகையினர்தான் அருளப்பரின் ஞானஸ்நானத்தால் ஆன்மீகப் பயன் பெற்றார்கள்.
அவர்களைப் பற்றி,
"அருளப்பர் சொன்னதை மக்கள் எல்லாரும் கேட்டு,
அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்று,
கடவுளின் திட்டம் ஏற்றத்தக்கது என்று காட்டினார்கள்.
ஆயக்காரரும்கூட ஞானஸ்நானம் பெற்றனர்.
ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்."
என்று நம் ஆண்டவர் கூறினார்.
ஆனால் இரண்டாவது பிரிவினர் அருளப்பரது போதனையாலும், ஞானஸ்நானத்தாலும் பயன் எதுவும் பெறவில்லை.
அவர்களைப் பற்றி,
"ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்."
என்று நம் ஆண்டவர் கூறினார்.
அருளப்பர் நீதிநெறியைக் காட்ட அவர்களிடம் வந்தார்: அவர்களோ அவரை நம்பவில்லை.
ஆண்டவருடைய போதனையாலும் பயன்பெற்றவர்கள் முதல் பிரிவினரே.
அவர்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்கவும், தங்கள் வியாதிகளிலிருந்து குணம் பெறவும், மனம் திரும்பி பாவமன்னிப்பு பெறவும் அவர் சென்ற இடமெல்லாம் அவர் பின்னே சென்றார்கள்.
ஆனால் பரிசேயர்களும், சட்ட வல்லுநர்களும் அவரது பேச்சில் குறை காணவும், அவரை கொல்வதற்காகவும் அவர் பின்னாலே சென்றனர்.
இந்த இரண்டு வகையினரைப் பற்றிய நற்செய்திப் பகுதியை வாசிக்கும் நாம் அதன் மூலமாக
ஆன்மீகப் பயன்பெற வேண்டும்.
ஆன்மீகப் பயன் பெறாவிட்டால் நற்செய்தியை வாசித்தும் பயனில்லை.
ஆன்மீகப் பயன்பெற வேண்டுமென்றால்
நாம் எந்த வகையினரைச் சார்ந்தவர்கள் என்று தியானித்து அறிய வேண்டும்.
ஆயக்காரரும் விலைமாதரும் தங்களை பாவிகள் என்று ஏற்றுக் கொண்டு மனம் திரும்பியது போல்
நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொண்டு மனம் திரும்ப விருப்பம் உள்ளவர்களா,
அல்லது
பரிசேயர்களை போல நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைத்துக் கொண்டு மாற விருப்பம் இல்லாதவர்களா என்பதை சிந்தித்து அறிய வேண்டும்.
நமது வசதிக்காக இரண்டு பிரிவினருக்கும் இரண்டு பெயர்கள் வைத்துக் கொள்வோம்.
முதல் பிரிவினருக்கு ஏற்போர் எனவும்,
இரண்டாவது பிரிவினருக்கு மறுப்போர் என்றும் பெயர்கள் வைத்துக் கொள்வோம்.
நாம் ஏற்போரா? மறுப்போரா?
வியாதியஸ்தன் தனக்கு வியாதி உள்ளது என்று ஏற்றுக் கொண்டால் தான் மருத்துவம் பெற்று குணமடைய முடியும்.
வியாதியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மருத்துவம் பெறவோ குணமடையவோ முடியாது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் மத்தியில் வாழ்ந்த அருளப்பர் இன்று நம்மிடையே இல்லை.
ஆனால் அன்று வாழ்ந்த அதே இயேசு இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது மனித சுபாவத்துக்கு உரிய ஆன்மாவோடும், உடலோடும், இரத்தத்தோடும் திவ்ய நற்கருணையில் நம்மிடையே வாழும் இயேசு,
தேவ சுபாவத்தில் நமது உள்ளம் என்னும் கோவிலில் நமக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அன்று யூத மக்களிடையே வாய்திறந்து பேசிய இயேசு இன்று நம்மோடு உள்ளம் திறந்து பேசுகிறார்.
அன்று பாவிகள் அவரது பேச்சை கேட்டு மனம் திரும்பியது போல நாமும் அவரது பேச்சை கேட்டு அதன்படி நடக்கிறோமா,
அல்லது
பரிசேயர்களைப் போல செயல்படுகிறோமா?
நமது வார்த்தைகளில்,
நாம் ஏற்போரா? மறுப்போரா?
நமது உள்ளத்தில் எண்ணங்கள் மூலம் இயேசு பேசுகிறார்.
அதிகாலையில் கண் விழித்தவுடன்
இயேசு பேசுகிறார், உள்ளத்தில் தோன்றும் எண்ணம் மூலம்,
"சிலுவை அடையாளம் வரைந்து எழு, காலை ஜெபத்தை சொல்லிவிட்டு, பைபிளில் இன்றைய வாசகத்தை வாசி."
நாம் ஏற்போராக இருந்தால் உடனே அப்படியே செய்வோம்.
அன்று முழுவதும் வாசகம் நம்மை வழி நடத்தும்.
மறுப்போராக இருந்தால் Cell phone ஐத் தேடுவோம்.
ஏற்போராக இருந்தால் நாளின் ஒவ்வொரு வினாடியும் இயேசு நல்ல எண்ணங்களால் நம்மோடு பேசிக் கொண்டிருப்பார்.
நாமும் அவர் சொன்னபடி செய்து கொண்டிருப்போம்.
எப்போதும் நமது முகத்தில் புன்சிரிப்பு இருக்கும்.
தேவைப் படுவோருக்கு உதவிகள் செய்வோம்.
நம்மை காயப்படுத்துவோரை மன்னிப்போம்.
நமக்கு தீங்கு செய்வோருக்கு நன்மை செய்வோம்.
நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
இயேசுவின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறி விட்டால்
வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் போலவே வாழ்வோம்.
மறுப்போராக இருந்தால் இயேசு பேசுவது எதுவும் கேட்காது.
இஷ்டபடி வாழ்வோம்.
இயேசு பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தார்.
பாவிகளை மிகவும் அதிகமாக நேசிக்கிறார்.
இயேசுவின் நேசத்தை நாம் உணர வேண்டுமென்றால் முதலில் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டால்தான் பாவங்களுக்காக மனஸ்தாபப் படுவோம்.
பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டால்தான் பாவங்கள் மன்னிக்கப்படும்.
பாவங்கள் மன்னிக்கப் பட்டால்தான் நாம் பரிசுத்தர்களாக மாறுவோம்.
பரிசுத்தர்களாக மாறினால்தான் விண்ணகத்தில் நுழைய முடியும்.
நலம் பெற விரும்புகிறவன் முதலில் தனக்கு வியாதி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல்தான் பரிசுத்தர்களாக வாழ விரும்புவோர் முதலில் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.
பாவிகளை தேடி வந்த இயேசு எப்போதும் நம்மோடு இருப்பார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment