Thursday, December 23, 2021

"அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்."(லூக். 1:64)

 "அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்."
(லூக். 1:64)

எலிசபெத்தம்மாளுக்கு குழந்தை பிறந்த எட்டாவது நாள் அதற்கு பெயர் சூட்டு விழா வைத்தார்கள்.

 மற்றவர்கள் அதற்கு அதன் தந்தையின் பெயரை சூட்டுவார்கள் என்று எண்ணினார்கள்.

 ஆனால் எலிசபெத்தம்மாள் குழந்தைக்கு அருளப்பன் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார்.

 தந்தையை சைகை காட்டி கேட்டபோது அவரும் 

"இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதிக் காட்டினார்.

 அதுவரை பேச முடியாமல் இருந்த
 சக்கரியாஸ் பேச ஆரம்பித்தார்.


அதுவரை அவர் ஏன் பேச முடியாமல் இருந்தார்?

கபிரியேல் தூதர் சக்கரியாசிடம் அவரது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும், 

அவருக்கு " அருளப்பர் " எனப் பெயரிட வேண்டும் என்று சொன்னபோது
 
அவரால் நம்ப முடியவில்லை.

அவர் தூதரிடம், " இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ? நானோ வயதானவன், என் மனைவியும் வயது முதிர்ந்தவள் " என்றார்.

தூதர் மறுமொழியாக,

"இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். 

ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்.

இப்போது நமது மனதில் ஒரு கேள்வி எழும்.

வானதூதர் கூறியதை 
நம்பாததிற்காகத் தண்டனையாக பேசமுடியாது இருந்தாரா?

இக்கேள்வி மனிதர்கள் மனதில் எழுவது இயல்பு.

நாம்தான் தண்டனை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

அன்பே உருவாக இறைவன் நம்மை பராமரிக்கும் போது செய்யக்கூடிய காரியங்களை அப்படியே விளக்குவதற்கு உரிய வார்த்தைகள் மனித மொழியில் இல்லை என்று நினைக்கிறேன்.

மனித அனுபவத்தில் கூட அன்பினால் மட்டும் இயக்கப்பட்டு நம்மைக் கவனிப்பவர்களுக்கும்,

 சட்டத்தினால் மட்டும் இயக்கப்பட்டு நம்மை கவனிப்பவர்களுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

அரசாங்கம் சட்டத்தினால் நம்மை ஆள்கிறது.

 சட்டத்தை மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் நம்முடைய பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோர் நம்மை அன்பினாலும், அக்கரையினாலும் கவனிக்கிறார்கள்.

பெற்றோர் சொல்வதை 
மீறும்போதும்,

ஆசிரியர்களின் உத்தரவுகளை மீறும்போதும்

அவர்கள் நம் மீது எடுக்கும் நடவடிக்கையை தண்டனை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

 "பிரம்பை எடுக்காதவன் பிள்ளையைப் பகைக்கிறான்,"

என்பது வேதவாக்கு.

பெற்றோரும் சரி, ஆசிரியரும் சரி பிரம்பை பயன்படுத்துவது பிள்ளைகளை திருத்தி நல்லவர்கள் ஆக்குவதற்காக,

 அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. 

மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஆசிரியர் கையில் பிரம்பை எடுக்கிறார்.

இறைவனும் அப்படியே.

அன்பே உருவான அவர்  தன்னால் படைக்கப்பட்டவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்,

  நிலை வாழ்வுக்கு தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும்

என்பதற்காகவே  கையில் பிரம்பை எடுக்கிறார்,

தண்டிப்பதற்காக அல்ல.

விசுவாசக் குறைவின் காரணமாக சக்கரியாஸ் கபிரியேல் தூதரின் வார்த்தைகளை நம்பத் தயங்கினார்.

அவரை முழுமையான விசுவாசம் உள்ளவராக மாற்றுவதற்காகத்தான் 

இறைவன் அவரை அவரது மகன் பிறந்து 

பெயரிடப்படு மட்டும் 
பேசாதிருக்கும்படி செய்தார்.

அவரும் இறைவனின் விருப்பப்படி முழுமையான விசுவாசத்தை பெற்று,

"இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதிய உடனேயே

 பேசும் திறனைத் திரும்பவும் பெற்று,

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று 
ஆண்டவரை போற்றினார்.

சக்கரியாசின் இந்த அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம்.

 நமது விசுவாசக் குறைவின் காரணமாகத்தான் நமக்கு சில சமயங்களில் துன்பங்கள் வருகின்றன.

நமக்கு துன்பங்கள் வரும்போது நாம் நமது விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவோம்.

துன்பங்கள் நமது விசுவாசத்தை ஆழமாக உதவும் ஆசீர்வாதங்கள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

ஆழமான விசுவாசம்தான் நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்திச் செல்லும்.

நாம் விண்ணகத்திற்குள் நுழையும்போது இயேசு நம்மை நோக்கி 

"உனது விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்பார்.


லூர்து செல்வம்

No comments:

Post a Comment