ஒரு நபர். நண்பர் அல்ல.. ஆனால் ரோட்டில் அடிக்கடி பார்த்திரருக்கிறேன். ஆனால் ஒருநாளும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதில்லை. அவர் யார், எந்த ஊர் என்றுகூட எனக்குத் தெரியாது.
ஒரு நாள் என்னை பார்த்தவுடன் ",வணக்கம், சார்" என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எனக்கு பழக்கம் இல்லாத ஒருவர், இதுவரை என்னோடு ஒரு வார்த்தை கூட பேசாத ஒருவர் திடீரென்று எதிர்பாராத விதமாய் ஏன் "வணக்கம்" போட்டார் என்று .தெரியவில்லை.
ஆயினும் நான் பதிலுக்கு வணக்கம் சொன்னேன்.
' அதன் பின் சில நாட்கள் வணக்கம் தொடர்ந்தது.
திடீரென்று ஒரு நாள் , "சார், காபி சாப்பிட வரிங்களா" என்று அழைத்தார்.
" இல்லை, நான் காபி சாப்பிடுவது இல்லை." என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
ஆனாலும் ஏன் இந்த அழைப்பு என்பது புரியவில்லை.
அதிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து என்னை பார்த்தவர் "வணக்கம்" சொல்லிவிட்டு உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.
" என்ன விஷயம்" என்று கேட்டேன்.
"உங்கள் சாமியார் ஏழைகள் வீடு கட்ட இலவசமாய் அமெரிக்கன் கோதுமை கொடுக்கிறறாராமே.
எனக்காக அவரிடம் கொஞ்சம் பேசி கோதுமை வாங்கி தர முடியுமா?"
இப்போதுதான் அவர் போட்ட வணக்கங்களில் அர்த்தம் புரிந்தது!
"அதற்கு வேறு ஒரு ஆள் பொறுப்பாக உள்ளார். அவரைச் சென்று பாருங்கள்" என்று அவரது பெயரை கூறிவிட்டு நகர்ந்தேன். அதற்குப்பிறகு வணக்கங்கள்
மாயமாகி போய்விட்டன.
***
நண்பர் ஒருவர்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு ஒழுங்காக வருவார். பக்தியுடன் பூசை காண்பார். பூசை முடிந்தவுடன் சாமியாரிடம் சென்று
கொஞ்ச நேரம் பேசிவிட்டு நெற்றியில் சிலுவை வாங்கிக்கொண்டுதான் வீட்டுக்கு செல்வார்.
"பூசை முடிந்தவுடன் சுவாமியிடம் பேசிவிட்டுப் போவது நல்ல பழக்கம்."
"நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ தெரியாது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் பூசைக்கு வருவது சுவாமிக்கு தெரிய வேண்டும். அதற்காகத் தான் பேசிவிட்டு வருகின்றேன்"
"எதற்காக சுவாமிக்கு தெரிய வேண்டும்?"
" நான் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் கொடுத்திருக்கிறேன். பூசைக்கு வராவிட்டால் எப்படி வேலை தருவார்?
பூசைக்கு வருவதற்குக்கூட வேலை தேவைப்படுகின்றது !
***
"சைக்கிளில் தூரமா?"
" உவரி அந்தோணியார் கோவிலுக்கு சைக்கிளிலேயே போகப் போகிறேன்."
"ஏன், பஸ்ஸில் போகக் காசு இல்லையா?"
"இல்லை. நான் விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைத்துவிட்டால் உவரிக்கு சைக்கிளில் திருயாத்திரை போவதாக நேர்ந்திருக்கிறேன்."
ஆக இவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பதற்காகவே அந்தோணியார் மோட்சத்திற்கு சென்றிருக்கிறார்!
***
அனேகர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே கிறிஸ்தவர்களாக வாழ்கின்றார்களே தவிர உண்மையான விசுவாசத்தினால் அல்ல.
"விசுவாசிக்கிறேன்" என்று சொல்வதால் மட்டுமே விசுவாசம் வந்துவிடுவதில்லை.
உண்மையான விசுவாசம் அடி மனதின் ஆழத்தில் இருந்து தன்னை கொண்டிருப்பவரை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க வைக்கும்.
உண்மையாக விசுவாசம் உள்ளவர்களிடம் உலக நாட்டம் கொஞ்சம் கூட இருக்காது.
தாங்கள் வாழும் உலகத்தையே கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து விட்டு அதில் அவருக்காகவே வாழ்வார்கள்.
***
அனேகர் கிறிஸ்தவர்களைப் போல் வாழ்வார்கள், ஆனால் கிறிஸ்தவர்களாக வாழ மாட்டார்கள்.
எப்படி?
ஜெபம் சொல்லுவார்கள், கோவிலுக்குப் போவார்கள்,
பூசை காண்பார்கள்,
நன்மை எடுப்பார்கள்,
கோவிலுக்கு ஒழுங்காக வரி கொடுப்பார்கள்,
திருவிழா கொண்டாடுவார்கள்.
ஆனால் எதிலேயும் ஆன்மீக நோக்கம் இருக்காது.
இவ்வுலகம் சம்பந்தப்பட்ட நன்மைகளை பெறுவதற்காகவே இவற்றை எல்லாம் செய்வார்கள்.
குழந்தை கிடைக்க,
தேர்வில் வெற்றி பெற,
நோயிலிருந்து சுகம் கிடைக்க,
வேலை கிடைக்க,
அதிகமான சம்பளம் கிடைக்க, திருமணம் கூடிவர
போன்ற உலக சம்பந்தப்பட்ட நோக்கங்களுக்காகவே எல்லாவற்றையும் செய்வார்கள்.
அதாவது இறைவனுக்காக வாழ மாட்டார்கள்.
இறைவனை தங்கள் உலக வாழ்க்கைக்காக பயன்படுத்திக் கொள்ளவே வாழ்வார்கள்.
தாங்கள் கேட்டது எதுவுமே கிடைக்காவிட்டால் எல்லாவற்றையும் விட்டு விடுவார்கள்.
இலவச டிவி, மிக்ஸி கிடைக்கும் என்பதற்காக ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு,
எதுவுமே கிடைக்காவிட்டால் மற்றொரு கட்சிக்கு மாறி விடுவது போலவே இவர்களது சமய வாழ்க்கையும் இருக்கும்.
இப்படி ஆன்மிக நோக்கமின்றி உலக வாழ்க்கைக்காகவே இறைவன்மீது பக்தி வைத்திருப்பவர்கள்தான்
தங்கள் ஆன்மீக வீட்டை மணல் மீது கட்டுபவர்கள்.
ஒரு சோதனை வந்ததும் வீடு விழுந்துவிடும்.
நாம் இவ்வுலகில் வாழ்கிறோம், ஆனால் உலகத்திற்காக வாழவில்லை.
இறைவனுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்பதை மனதில் கொண்டு
அவரது சித்தப்படி மட்டும் நடப்பவர்களே தங்கள் ஆன்மீக வீட்டை பாறை மீது கட்டுபவர்கள்.
நாம் நமது ஆன்மீக வீட்டைப் பாறை மீது கட்டிக் கொண்டிருக்கிறோமா?
அல்லது மணல் மீது கட்டிக் கொண்டிருக்கிறோமா?
சிந்திப்போம்.
செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment