Thursday, December 2, 2021

''நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்.."(மத். 7:24)

''நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்.
(மத். 7:24)

ஆண்டவர் நமது ஆன்மீகத்தை 
 நாம் வாழ கட்டும் வீட்டுக்கு ஒப்பிடுகிறார்.

ஒரு வகை வீடு கற்பாறையின் மேல் கட்டப்பட்டது. மற்றொரு வகை மணல்மேல் கட்டப்பட்டது.

 அவரது போதனைகளை வாழ்வதன் அடிப்படையில் கட்டப்பட்ட ஆன்மீகம் கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு. எதிரிகளின் தாக்குதல்களால் அதை வீழ்த்த முடியாது.

இஷ்டம்போல் வாழ்வதன் அடிப்படையில் கட்டப்பட்ட ஆன்மீக வீடு மணல்மேல் மேல் கட்டப்பட்டது..இதனால் எதிரிகளின் தாக்குதல்களுக்கு தாக்குபிடிக்க முடியாது.

இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் வாழக்கூடிய ஆன்மீகம்தான் சாத்தானின் சோதனைகளை முறியடித்து விண்ணகமாகிய நோக்கத்தை. அடையும்.

முதலில் இயேசுவின் போதனைகளை கேட்க வேண்டும். பின் அதன்படி வாழ வேண்டும்.

முதலில் 'கேட்க வேண்டும்' என்ற சொற்றொடரைச் சிறிது தியானிப்போம்.

பூசையில் ஆண்டவரது வாக்கு வாசிக்கப்படுகிறது, நாம் கேட்பதற்காக.

சாமியார் அந்த வாக்கைப் பற்றி பிரசங்கம் வைக்கிறார், நாம் கேட்பதற்காக.

எப்படி கேட்பதற்காக?

சில சமயங்களில் மற்றவர்கள் பேசுவது நமது காதில் விழும்,
 ஆனால் நாம் அதை காதில் வாங்குவது இல்லை.

அதாவது காதில் விழுவதை நமது மனதிற்குள் கொண்டு செல்வதில்லை.

இறைவாக்கை ஒரு காது வழியே வாங்கி மற்றொரு காது வழியே வெளியே விட்டுவிடக் கூடாது.

 அதை உட்கிரகித்து மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.

மனதில் ஆழமாக பதிவதுதான் சிந்தனையாகவும், சொல்லாகவும், செயலாகவும், அதாவது, வாழ்க்கையாக வெளிப்படும்.

மனதில் பதிந்த இறைவாக்கின்படி வாழ்வதுதான் உண்மையான ஆன்மீக வாழ்க்கை.

சிலர் கோவிலுக்கு பைபிள் கொண்டு வருவார்கள்.

 நல்ல பழக்கம்தான். 

ஆனால் பூசையின் போது பீடத்திலிருந்து வாசிக்கப்படுவது நாம் காதுகொடுத்து கேட்பதற்கு.

நமது பைபிளில் அது எங்கே இருக்கிறது என்று தேடி கொண்டிருப்பதற்கு அல்ல.

சாமியார் நற்செய்தியை வாசிக்கும்போது நாம் நமது கையில் இருக்கும் பைபிளை புரட்டி கொண்டு இருந்தால் நமது கவனம் சிதறும்.

விருந்துக்குச் செல்லும் போது அங்கு கொடுக்கப்படும் உணவை சாப்பிட வேண்டுமே தவிர 

நாம் கொண்டு செல்லும் உணவை அங்கே வைத்து சாப்பிட்டால் விருந்து கொடுப்பவருக்கு மனது சங்கடமாக இருக்கும்.

சாமியார் வாயிருந்து வருவதை நாம் காது கொடுத்து வாங்கி, கருத்தில் ஏற்ற வேண்டும்.

 பிரசங்கத்தின்போது, சாமியார் அன்றைய வாசகங்களை விளக்கிக் கொண்டிருப்பார்.

சிலர் அதை கவனிக்காமல் தங்களது கையில் இருக்கும் பைபிளை வாசித்து கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு எப்படி சாமியார் கொடுத்த விளக்கம் தெரியும்?

சில சமயங்களில் சாமியார் பைபிளில் உள்ள வசனங்களை வாசிக்க சொல்வார்.

 அப்படிச் சொல்லும்போது பைபிளை திறந்து வாசித்துவிட்டு,

 தொடர்ந்து சாமியாரின் பிரசங்கத்தை கேட்க வேண்டும். தொடர்ந்து கையில் இருக்கும் பைபிளில் மூழ்கி விட கூடாது.

திருப்பலியின்போது நாம் முழுவதும் குருவானவரோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

ஏனெனில் அவரோடு இணைந்து நாமும் திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறோம்.

நாம் பார்வையாளர்கள் அல்ல பங்கெடுப்பாளர்கள்.

இயேசு தன்னையே சிலுவையில் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தபோது,

அன்னை மரியாளும், சிலுவை அடியில் நின்று, அவரோடு இணைந்து தன் மகனைப் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

குருவானவரோடு நாமும் அதையே செய்ய வேண்டும்.

வீட்டிற்கு வந்தபின் பூசையின் போது வாசிக்கப்பட்ட வாசகத்தை நமது பைபிளில் நாம் எத்தனை தடவைகள் வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.

வாசிக்க வேண்டும்.  

சாமியார் கொடுத்த விளக்கத்தோடு பைபிளை வாசிக்கும்போது அது நன்கு புரியும்.

திருப்பலியின்போது நாம் கேட்டதை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

கேட்டது செயலாக மாறாவிட்டால் கேட்டும் பயனில்லை.

சில சமயங்களில் இறைவன் பைபிள் மூலம் மட்டுமல்ல 


நமது அயலான் மூலமும், சந்தர்ப்பம் சூழ்நிலைகள் மூலமாகவும் கூட பேசலாம்.

உதாரணத்திற்கு ஒருவன் மது அருந்த புறப்பட்டு நிற்கும்போது ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டால் அது இறைவன் கொடுக்கும் தடங்கல்.

இன்றைய வைரஸ் தொற்றுகள் மூலமாகவும் இறைவன் பேசுகிறார

"மக்களே, திருந்துங்கள்.
மரணத்திற்கு பயப்படுவதை விட, அதற்காகத் தயாரிப்பதே சிறந்தது."

இந்த தொற்றுகள் ஆசிரியர் கையில் வைத்திருக்கும் பிரம்பு மாதிரி.

இதைப் புரிந்து கொண்டால் மனம் திருந்தி விடும்.

 வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடக்கிறவன் எவனும் கற்பாறையின் மீது தன் வீட்டைக் கட்டியவனுக்கு ஒப்பாவான்.

 நடக்காதவன் மணல் மீது தன் வீட்டைக் கட்டியவனுக்கு ஒப்பாவான்.

ஒழுங்காக கோவிலுக்குப் போகிறோம்.

 இறைவாக்கைக் கேட்கிறோம். அதன்படி நடக்கிறோமா?

 சிந்தித்துப் பார்ப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment