Tuesday, December 21, 2021

" என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?"(லூக். 1:43)

" என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?"
(லூக். 1:43)

கபிரியேல் தூதர் அன்னை மரியாளிடம் மங்கள வார்த்தை சொல்லி,

அவள் அதை ஏற்றுக்கொண்ட வினாடியிலேயே 

இறைமகன் அவள் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

" இதோ ஆண்டவருடைய அடிமை." என்று அன்னை மரியாள் ஒப்புக்குச் சொல்லவில்லை.

 தனது உண்மை நிலையைத்தான் வானதூதரிடம் அவள் எடுத்துரைத்தாள்.

மூன்று வயதிலிருந்தே கோவிலில் வளர்ந்தவள்.

 இறையன்பால் நிறைந்திருந்ததோடு,

பிறரன்புப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வளர்ந்தவள்.

இப்போது அன்பே உருவான கடவுளே அவரது அடிமையின் மகனாக மனித உரு எடுத்திருக்கிறார்.

அதாவது நம்மைப் படைத்த இறைவனே நமக்குப் பணிபுரிவதற்காகத் தன்னை ஒரு அடிமையின் நிலைக்குத் தாழ்த்தியிருக்கிறார்.

இயேசு மனுவுரு எடுத்த மறு வினாடியே அன்னை மரியாள் தனது உறவினளான எலிசபெத்தைச் சந்தித்துப் பணிபுரிய புறப்படுகிறார்.

எலிசபெத்தின் வீடு யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊரில் இருக்கிறது.

மரியாள் வாழ்ந்த நாசரேத் ஊருக்கும், எலிசபெத் வாழ்ந்த ஊருக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 81 மைல்கள்.

அவ்வளவு தூரத்தையும் மரியாள் வயிற்றில் குழந்தையோடு நடந்தே கடக்கிறார்.

அவ்வளவு பிறரன்பு!

சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.

எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.

 என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?


 உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது."

என்கிறாள்.

எலிசபெத் மரியாளைப் பார்த்ததும் அவள் ஆண்டவரின் தாயார் என்பதை அடையாளம் கண்டுகொண்டாள்.

அவர் மட்டுமல்ல 
அவர் வயிற்றிலிருந்த குழந்தையும் (ஸ்நாபக அருளப்பர்) இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு மகிழ்ச்சியினால் துள்ளினார்.

அந்நேரமே பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவரது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டது.

அன்னை மரியாள் மட்டுமே சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்தாள்.

அன்னை மரியாள், ஸ்நாபக அருளப்பர் ஆகிய இருவரும் சென்மப் பாவம் இல்லாமல் பிறந்தார்கள்.

எலிசபெத்தம்மாளும், ஸ்நாபக அருளப்பரும் மரியாளின் வயிற்றில் இருந்த குழந்தையை அடையாளம் கண்டு கொண்டதைப் பற்றி வாசிக்கும் நாம்,

திருப்பலியின்போது 
குருவானவரோடு நம்மை நோக்கி வரும் இயேசுவை அடையாளம் கண்டு கொள்கின்றோமா?

அடையாளம் கண்டு கொண்டால் நமது உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்க வேண்டாமா?

திருவிருந்தின்போது உணவாக நம் நாவில் வருவது அன்னை மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்த அதே இயேசுதானே!

மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து  வளர்ந்த அதே 
இயேசுதானே!

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த அதே இயேசுதானே!

கணக்கற்ற நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசுதானே!

நமக்காக பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கிய அதே 
இயேசுதானே!

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசுதானே!

அவரை உண்மையிலேயே நாம் அடையாளம் கண்டுகொண்டால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்!

அன்னை மரியாள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடாக நமது மகிழ்ச்சியும் இருக்க வேண்டுமே!

கொஞ்சம் சிந்தித்தால் அதைவிட அதிகமான மகிழ்ச்சி நம்மிடம் இருக்க வேண்டும்,

ஏனெனில் இயேசு அன்னை மரியாளின் வயிற்றில் பத்து மாதங்கள் இருந்தார்.

பிறந்தபின் மடியில் வளர்ந்தார்.

வளர்ந்தபின் அவரோடு இருந்தார்.

ஆனால் நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதே இயேசுவை நமது நாவில் வாங்கி உணவாக உட்கொள்ளுகிறோமே!

இயேசு நமது ஆன்மாவோடும், 
 உடலோடும் கலந்து விடுகிறாரே!

அவரோடு மட்டுமல்ல, அவராகவே வாழ்கிறோமே!

நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்!

இயேசுவோடு உரையாடவும், உறவாடவும் நமக்கு பாக்கியம்  கிடைத்திருக்கிறதே!

அதை நினைப்போம்.

வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்போம்.

மோட்சத்திற்கு செல்லும்போது மரியாளைப் பார்த்து,

"அம்மா, நாங்கள் உங்களை விட பாக்கியசாலிகள்! 

ஏன் தெரியுமா?

 நீங்கள் இயேசுவை ஒருமுறைதான் பெற்றீர்கள்,

 நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் அவரைப் பெற்றோமே!"

அம்மா நம்மைக் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பார்கள்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment