Monday, December 13, 2021

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்."(மத்.21:31)

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்."
(மத்.21:31) 

தலைமைக்குருக்களும், மக்களின் மூப்பரும் இயேசுவிடம் வந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

ஒரு தந்தையின் இரு மக்களுள் ஒருவன் ஒரு வேலையை செய்வதாகச் சம்மதித்து விட்டு வேலையை செய்யவில்லை.

அடுத்தவன் வேலையை செய்ய சம்மதிக்காமல் இருந்துவிட்டு, வேலையை செய்து முடித்தான்.

இவ்விருவரில் எவன் தந்தையின் விருப்பப்படி நடந்தவன் என்று கேட்டார்.

 சம்மதிக்காவிட்டாலும் வேலையை செய்தவன்தான் தந்தையின் விருப்பப்படி நடந்தவன்தான் என்றனர்.


தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் இறைவன் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்தவர்கள். ஆனால் அருளப்பர் காட்டிய நீதிநெறியைக் நம்பவில்லை. 

ஆயக்காரரும், விலைமாதரும் இறைவன் திட்டத்தை  நிறைவேற்றுவதாக வாக்கு கொடுக்காமல் பாவம் செய்தார்கள்.

ஆனால் அருளப்பர் போதித்த போது அவரது போதனையை ஏற்றுக்கொண்டு பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனம்  திரும்பினார்கள்.
ஆகவே அவர்கள்
கடவுள் அரசில் நுழைவார்கள்.

நாம் பாவம் செய்பவர்களைப் பார்த்தவுடன் இவர்கள்   விண்ணகம் செல்ல மாட்டார்கள் என்று தீர்மானித்து விடக்கூடாது.

எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும்,

 எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் மனம் திரும்பி விட்டால் அவர்களுக்கு விண்ணகம் உறுதி.


ஒரு தாய் சுகமில்லாத தன் குழந்தை மீது அதிக அக்கறை காட்டுவது போல கடவுளும் பாவிகள் மீது அதிக அக்கறை காட்டுகிறார்.

இறைமகன்  மனுமகன் ஆகி உலகிற்கு வந்ததே   பாவிகளைத் தேடித்தான்.

நல்ல ஆயன் தனது மந்தையில் இருந்து காணாமல் போன ஆட்டை தேடி அலைவது போல நமது ஆண்டவரும் காணாமல் போன பாவிகளைத் தேடி உலகிற்கு வந்தார்.

அவர் பாவிகள் வீட்டில் உண்பதை கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து,

 "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.


12 இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

13 " பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள்.

 ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:11-13)

இயேசு தலைமைக்குருக்களிடம் கேட்ட கேள்விகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது:

"என்னை இறைப்பணிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது,

உண்மையிலேயே அர்ப்பண வாழ்வு வாழவேண்டும்.

அர்ப்பண வாழ்வு வாழாவிட்டால் 
அவர்கள் உலகில் வாழ்வது பயனற்றது."

"நமது முன்னால் பாவிகளாக வாழ்பவர்கள் அனைவரும் நரகத்திற்கு போவார்கள் என்று தீர்மானித்து விடக்கூடாது, 

 ஏனெனில் அவர்கள் எந்த நேரத்தில்,

 மரண நேரத்திலும் கூட, 

மனம் திரும்பினாலும் அவர்களுக்காக விண்ணகத்தின் கதவு திறந்தே இருக்கும்.

நல்ல கள்ளன் இதற்கு ஒரு உதாரணம்."

இறை பணிக்கு தங்களை அர்ப்பணிப்பவர்கள் அன்னை மரியாளைப் போல வாழ்நாள் முழுவதும் அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும்.

 பாவிகளாய் வாழ்பவர்கள்  மதலேன்மரியாளைப் போல மனம் திரும்பி புனித வாழ்வு வாழ வேண்டும்.

உயிர்த்த  இயேசு முதல் முதல் காட்சி கொடுத்தது தன்னை பெற்ற அன்னைக்குத்தான்.

அடுத்து தனது அப்போஸ்தலர்களுக்குக் காட்சி கொடுப்பதற்கு முன்பாகவே அவர்  மனம் திரும்பிய பாவியாகிய மதலேன் மரியாளுக்குக் காட்சி கொடுத்தார்.

அவள் மூலமாக தான் உயிர்த்த செய்தியை அவர்களுக்கு இயேசு அறிவித்தார்.

'இதோ! இயேசு, அவர்களுக்கு

 (மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,) 

எதிர்ப்பட்டு, "வாழ்க" என்றார். அவர்கள் அணுகி, அவர் பாதங்களைத் தழுவிக்கொண்டு அவரைப் பணிந்தனர்.

10 இயேசு அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், நீங்கள் என் சகோதரரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்று சொன்னார்.
(மத்.28:9,10)

மதலேன் மரியாள் மனம் திரும்பியதால் அப்போஸ்தலர்களுக்கே அப்போஸ்தலராக விளங்கும் பாக்கியத்தைப் பெற்றாள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக பாவியாக வாழ்ந்து கொண்டிருந்த அகுஸ்டினார் மனம் திரும்பிய பின் புனித அகுஸ்டினாராக மாறினார்.

பாவங்களுக்கு மனஸ்தாபப்பட  நேரம் காலம் எல்லாம் தேவையில்லை.

விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பெண்ணைக் கூட இயேசு தீர்ப்பிட  விரும்பவில்லை.


"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ"
(அரு. 8:11)

"இனிமேல் பாவஞ்செய்யாதே" என்று கூறியதால் பழைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்று எடுத்துக் கொள்ளலாம்.

 மன்னிக்கப்பட்டிருக்க வேண்டுமானால் அந்தப் பெண் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டிருக்க வேண்டும்.


விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்தாலும் இயேசுவை பார்த்தவுடன் அவள் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டிருக்க வேண்டும்.

பாவியாக வாழ்ந்த சக்கேயு கூட இயேசுவைப் பார்த்தவுடன்
மனம்திரும்பி விட்டானே!

இயேசுவும் அவன் வீட்டில்  தங்க ஆசைப் பட்டதுமல்லாமல் 

அவன் மனம் திறந்து பேசிய உடன் 
இயேசு 

"இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

10 இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

மீட்பு என்ற வார்த்தையிலே மனஸ்தாபமும், மன்னிப்பும் அடங்கியுள்ளன.

 நாமும் நமது  மனக்கண் முன்
 இயேசுவை நிறுத்தி  அவரைப்  பார்த்துக்  கொண்டிருந்தால் மனஸ்தாபம் வந்துவிடும்.

எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவன் நரகத்திற்கு போய்விட்டான் என்று கூற நமக்கு உரிமை இல்லை.

 இயேசுவை மரணத்திற்கு தீர்ப்பிட்ட பிலாத்து கூட 

நம்மை வரவேற்க மோட்சத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தால் கூட ஆச்சரியபடுவதற்கில்லை.

நாம் எல்லோருமே பாவிகள்தான்.

 நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு,

 இறைவனின் சித்தப்படி நடந்தால்  நம் அனைவருக்கும் விண்கை வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment