Friday, December 10, 2021

"உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:"(மத்.17:20)

"உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:"
(மத்.17:20) 

இயேசு தனது பொது வாழ்வின் போது கணக்கற்ற நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார்.

குணமான ஒவ்வொரு நோயாளியையும் பார்த்து

" உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று"

 என்று சொல்லியிருக்கிறார்.

அதை வைத்துப் பார்க்கும்போது அவரால்  குணமான அத்தனை சாதாரண மக்களும் விசுவாசம் உள்ளவர்களே.

ஆனால் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டு அவரோடு எப்போதும் இருந்த அப்போஸ்தலர்களிடம் அவர் எதிர்பார்த்த விசுவாசம் இல்லை.

இருந்திருந்தால் கடலில் புயல் வீசியபோது அவர்கள்,

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"

என்று கூறியிருக்க மாட்டார்கள்.

இயேசுவும் அவர்களைப் பார்த்து,

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"

என்று கேட்டிருக்க மாட்டார்.

இராயப்பர் இயேசுவின் அனுமதியோடு கடல்மேல் நடந்த போது,

"ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" 

என்று அலறியிருக்க மாட்டார்.


இயேசுவும் அவரைப்  பார்த்து, 
"குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?"

 என்று கேட்டிருக்க மாட்டார்.

தோமையார் இயேசு உயிர்த்ததை மற்ற அப்போஸ்தலர்கள் கூறியபோது உடனே
 நம்பியிருப்பார்.

 ஒருமுறை  ஒரு  பையனைப் பிடித்திருந்த பேயை அப்போஸ்தலர்களால்
 ஓட்ட  முடியவில்லை.

 காரணம் அவர்களுடைய விசுவாசக் குறைவுதான் என்று இயேசு கூறினார்.

 சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும்,

இன்று நம்மிடமும் போதுமான விசுவாசம் இல்லை.

"விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறோம்.ஆனால் நடைமுறையில் நம்மிடம் போதுமான விசுவாசம் இல்லை.

விசுவாசப் பிரமாணத்தில்,

"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன்."

என்று கூறுகிறோம்.

நாம் வாழும்  உலகத்தையும், விண்ணில் உள்ள விண்மின்களையும்   படைத்த  படைத்த  கடவுள்     எல்லாம் வல்லவர் என்று நாம் உண்மையிலேயே விசுவசித்தால்,

  அவரது பராமரிப்பில் வாழும் நாம்     எதற்கும் பயப்பட   மாட்டோம்.

நாம் பெற்ற பிள்ளைகளை எவ்வளவு அக்கறையாக பராமரிக்கிறோம்.

அதைப்போல் அளவற்ற மடங்கு அக்கறையாக  எல்லாம் வல்ல கடவுள் நம்மை பராமரிக்கிறார்.

எல்லாம் வல்லவரின் பராமரிப்பில் வாழும் நாம் எதற்காவது பயந்தால் அவரது வல்லமை மீது நமக்கு விசுவாசம் இல்லை என்று அர்த்தம்.

இயற்கை முழுக்க முழுக்க எல்லாம் வல்லவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது 

இயற்கையில் எது நடந்தாலும் அதில் வாழ்கின்ற நமது நன்மைக்காகவே இருக்கும் என்ற விசுவாசம் நமக்கு இருந்தால் நாம் இயற்கை நிகழ்வுகளை கண்டு பயப்பட மாட்டோம்.

ஆனால் நாம் இறைவனது அனுமதியோடு நடக்கும்

 நிலநடுக்கத்தைக் கண்டால் பயப்படுகிறோம்,

 சுனாமியைக் கண்டால் பயப்படுகிறோம்,

 புயலைக் கண்டால் பயப்படுகிறோம்,

 மழையைக் கண்டால் பயப்படுகிறோம்,

விபத்துக்களைப் பார்த்து பயப்படுகிறோம்,

வைரசை நினைத்தாலே பயப்படுகிறோம்,

 மரணத்தை நினைத்தாலும் பயப்படுகிறோம்.

தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தை கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தால் அதற்கு தாய் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

கடவுள் அனுமதிக்கும் இயற்கை நிகழ்வுகளைக் கண்டு பயந்தால் நமக்கு கடவுளின் பராமரிப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்.

மரணத்தை  நினைத்து பயப்பட்டால் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

உண்மையான விசுவாசம் உள்ளவர்கள் பாவத்தை நினைத்து மட்டுமே பயப்படுவார்கள்.

ஏனெனில் பாவம் மட்டுமே நம்மை இறைவனது உறவிலிருந்து பிரிக்கும்.

பாவம் மட்டுமே கடவுளுக்கு பிடிக்காதது.

இயற்கையை நிகழ்வுகளால் ஏற்படும் மரணங்கள் நம்மை கடவுளிடமிருந்து  பிரிக்காது, மாறாக  நம்மை அவரிடம் சீக்கிரம் அனுப்பும்.

இயேசு அப்போஸ்தலர்களுடன் கடலில் பயணித்த போது புயல் வீசியது போல,

இன்று கொரோனா என்னும் புயல் உலகில் வீசிக்கொண்டிருக்கிறது.

 
அப்போஸ்தலர்களோடு இருந்த அதே இயேசு இன்று நம்மோடு இருக்கிறார்.

அவர் எல்லாம் வல்லவர்.

நாம் அவரைப் பார்த்து,

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"

என்கிறோம்.

ஆனால் அவர் நம்மைப் பார்த்து,

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"

என்கிறார்.

அன்று அப்போஸ்தலர்களை புயலிலிருந்து காப்பாற்றிய இயேசு இன்றும் இன்றைய புயலிலிருந்து உறுதியாக காப்பாற்றுவார்.

விசுவசிப்போம்.

உண்மையான விசுவாசிகள் பாவத்திற்கு மட்டுமே பயப்படுவார்கள்.

ஆசிரியர் என்ற முறையில் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்,

நாலரை மணிக்கு அளிக்கவேண்டிய மணியை  நாலு மணிக்கே சேர்வாடி அடித்துவிட்டால்,

மாணவர்கள் துள்ளிக் குதித்து எழுந்து ஓடுவார்கள்.

வீட்டுக்குப் போக அவ்வளவு ஆசை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment