இறைவன் நம்மோடு பேசுகிறார்.
பெற்றோர் தாங்கள் பெற்ற பிள்ளைகளோடு எப்போதும் இருக்கவும்,
அவர்களோடு உரையாடவும்,
அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் ஆசைப்படுவது போலவே,
கடவுளும் தன்னால் படைக்கப்பட்ட நம்மோடு எப்போதும் இருக்கவும்,
நம்மோடு உரையாடவும்,
நமக்கு தேவையான உதவிகளை செய்யவும் ஆசைப்படுகின்றார்.
ஆசைப்படுவது மட்டுமல்ல அவர் எப்போதும் நம்மோடே இருக்கிறார்,
நம்மோடு பேசுகிறார்,
நமக்கு தேவையான உதவிகளைச் செய்து நம்மைப் பராமரித்துக் கொண்டு வருகிறார்.
அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை நாம் உணர வேண்டும்.
நாமும் அவரோடு பேச வேண்டும்.
அவரது பராமரிப்புக்கு நன்றி கூற வேண்டும்.
அவர் எங்கும் இருப்பதால்,
அவர் நமது உள்ளும், புறமும் இருப்பது மட்டுமல்ல,
நாமும் அவருக்குள்தான் இருக்கிறோம்.
அவர் ஆவி.
நமக்கு இருப்பதுபோன்ற சடப்பொருளால் ஆன உடல் அவருக்கு இல்லை.
ஆகவே நாம் பேசுவது போல வாயினால் பேசுவதில்லை.
நமக்காக மனுவுரு எடுத்து இவ்வுலகில் வாழ்ந்த முப்பத்திமூன்று ஆண்டுகளும் அவர் நம்மோடு நம்மைப் போலவே வாயினால் பேசினார்.
மற்ற காலங்களில் எல்லாம் அவர் நம்முள் இருந்துகொண்டு நமது உள்ளத்தில் எழுப்பும் உள் உணர்வுகள் (Inspirations) மூலமாகவும்,
நமது காவல் தூதர்கள் மூலமாகவும்,
அவர் நிறுவிய கத்தோலிக்க திருச்சபையின் மூலமாகவும்,
அவர் நமக்காக படைத்த இயற்கையின் மூலமாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் நம்மோடு பேச பயன்படுத்தும் மற்றொரு சாதனம் நாம் வாழும் சூழ்நிலை.
நமது சூழ்நிலை மூலமாக அவர் எப்படி நம்மோடு பேசுகிறார் என்பதைப்பற்றி நாம் தியானிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனையும்
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்,
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்
வாழும்படியாக படைத்திருக்கிறார்.
நாம் எந்த காலகட்டத்தில் பிறக்க வேண்டும்,
எந்த பெற்றோருக்குப் பிறக்க வேண்டும்,
எந்த சூழ்நிலையில் வாழ வேண்டும்
என்பதையெல்லாம் தீர்மானிப்பவர் அவரே.
நாம் எந்த காலக்கட்டத்தில் பிறந்தாலும்,
எந்த குடும்பத்தில் பிறந்தாலும்,
எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும்
ஒரே ஒரு விசயத்தில் மாற்றம் இல்லை.
நாம் வாழ வேண்டியது காலத்திற்காகவோ, குடும்பத்திற்காகவோ, சூழ்நிலைக்காகவோ அல்ல,
நம்மை படைத்த கடவுளுக்காக மட்டுமே.
நாம் அவருக்காக வாழ்வதற்காக வாழ வழி காட்டுவதற்காகவே நாம் வாழும் சூழ்நிலை மூலமாக நம்மோடு பேசுகிறார்.
நாம் வாழும் சூழ்நிலை நம்மை சுற்றி வாழும் மக்களையும்,
நாம் வாழும் இடத்தின் இயற்கை அமைப்பையும்,
காலநிலை மாற்றங்களையும் குறிக்கும்.
வித்தியாசமான மக்கள் வித்தியாசமான சூழ்நிலையில் வாழ்கின்றார்கள்.
ஆகவே ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் வித்தியாசமாக இருக்கும்.
ஆனால் எல்லோரும் இறைவனுக்காக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் வித்தியாசம் இல்லை.
ஒரு பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஒருவனுக்கு படிப்பைப் கொடுத்து வேலைக்கு அனுப்புகிறார்கள்.
ஒருவனிடம் விவசாய பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.
ஒருவனுக்கு ஒரு கடை வைத்துக் கொடுத்து வியாபாரி ஆக்குகிறார்கள்.
ஒருவனுக்கு சமூக சேவை செய்யும் பொறுப்பை கொடுக்கிறார்கள்.
நால்வரின் வாழ்க்கை முறைகளில் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரு விசயத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது.
பெற்றோர் மட்டிலும், குடும்பத்தினர் மட்டிலும் காட்டக்கூடிய அன்பிலும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் பாங்கிலும் வித்தியாசம் இருக்கக்கூடாது.
அதேபோல் தான் நாம் வித்தியாசமான சூழ்நிலைகளில் படைக்கப்பட்டிருந்தாலும்,
அவற்றின் மூலம் இறைவன் நம்மோடு பேசுவது இறையன்பைப் பற்றியும், பிறரன்பைப் பற்றியும் மட்டும்தான்.
ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் சூழ்நிலையில் இறைவனது பேச்சில் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் நோக்கம் ஒன்றே.
சவேரியார் வாழ்ந்த சூழ்நிலையின் மூலம் இறைவன் பேசி அவரை உலகை சுற்றிவந்த வேத போதகர் ஆக்கினார்.
தெரெம்மாள் வாழ்ந்த சூழ்நிலை மூலம் இறைவன் பேசி அவளை நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழும் ஜெப வாழ்விற்கு அழைத்தார்.
அருளானந்தர் வாழ்ந்த சூழ்நிலை மூலம் அவரோடு பேசி அவரை இந்தியாவிற்கு வேத போதகராக அனுப்பினார்.
அருட்திரு ஸ்டான்ஸ் சுவாமி வாழ்ந்த சூழ்நிலை மூலம் இறைவன் அவரோடு பேசி ஆதிவாசிகளுக்காக உழைக்கவும், அவர்களுக்காக உயிரையே கொடுத்து வேத சாட்சி ஆகவும் அழைப்பு விடுத்தார்.
அன்னைத் தெரசா வாழ்ந்த சூழ்நிலை மூலம் அவளை புனித கல்கத்தா தெரெசாவாக மாற்றினார்.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாழும் கோடிக்கணக்கான சூழ்நிலைகள் மூலம் ஒவ்வொருவரிடமும் இறைவன் பேசி ஆன்மீகப் பாதையில் வழிநடத்துகிறார்.
ஒவ்வொருவரும் தங்களது ஆன்மீக பாதையில் முன் நடந்தவற்றை பின்நோக்கி விசுவாச கண்ணோடு உற்று நோக்கினால்
இறைவன் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்கின்ற சூழ்நிலை மூலம் எப்படியெல்லாம் நம்மோடு பேசினார் என்பது தெளிவாகப் புரியும்.
விசுவாசத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொரு செயலையும் இறைவனது அதிமிக மகிமைக்காகவே செய்யவேண்டும்.
நாம் செய்யத் திட்டமிடும் ஒரு செயல் இறைவனுக்கு ஏற்றதாக இருந்தால் அதை நாம் வாழும் சூழ்நிலை வழியாகவே இறைவன் அதற்கு அனுமதி அளித்து விடுவார்.
அவரது சித்தத்திற்கு எதிராக இருக்குமானால் சூழ்நிலை மூலமாகவே அதை தடுத்து விடுவார்.
இதை நமது அனுபவப் பூர்வமாக உணரலாம்.
ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த வேலை இறைவனது விருப்பத்திற்கு எதிராக இருந்தால் அதில் நாம் சேராதவாறு தடுக்கும் சூழ்நிலையை இறைவனே உருவாக்கி விடுவார்.
எவ்வளவோ முயன்று படித்தும் தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டால் படிப்பை நிறுத்திவிட்டு
"வேறு வேலைக்குப் போ" என்று இறைவன் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
செப உணர்வோடு, அதாவது ஆண்டவரோடு இணைந்து வாழும் உணர்வோடு, நாம் வாழ்ந்தால்
நமது செயல் திட்டங்கள் பற்றி நமது சூழ்நிலை வழியாக இறைவன் பேசுவது நமக்கு நன்கு புரியும்.
நமது செயல் திட்டங்களுக்கு இறைவனது ஆசீரும் கிடைக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment