Saturday, December 18, 2021

புனித சூசையப்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

புனித சூசையப்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மரியாள் கருவுற்றிருப்பது குறித்து சூசையப்பர் மனதில் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தபோது

ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்.

 ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். 

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.


21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்.

 ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை கூற அவளது இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார்.

ஆனால் சூசையப்பரிடம் அவரது கனவில் தோன்றி பேசினார்.

சூசையப்பர் கனவுதானே என்று எண்ணி அதை ஒதுக்கிவிடவில்லை.

அவரிடமிருந்த ஆழ்ந்த விசுவாசத்தின் காரணமாக

நீதிமானாகிய அவர் தூதர் சொன்னதை ஏற்றுக்கொண்டு

அதன்படி செயல்பட்டார்.

மூன்று கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை ஆராதித்து விட்டு சென்ற பின்பும் 

கபிரியேல் தூதர் சூசையப்பரின் கனவில்தான் தோன்றி, அவரை மாதாவையும் இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு போகச் சொன்னார்.

ஏரோது இறந்ததும், மீண்டும் அவர் எகிப்தில் சூசையப்பரின் 
கனவில்தான் தோன்றி எகிப்திலிருந்து திரும்பச் சொன்னார்.

மீண்டும் கனவில்தான் தோன்றி கலிலேயாவிற்குப் போகச் சொன்னார்.

ஒவ்வொரு முறையும் சூசையப்பர் வானதூதரின் சொல்லுக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தார்.

வானதூதர் மூலமாக இறைவன் செய்தி அனுப்பிய போதெல்லாம்

 உடனடியாக அவர் பயன்படுத்திய கீழ்படிதல் என்ற என்ற புண்ணியத்தைத்தான் 

நாம் சூசையப்பரிடமிருந்து 
கற்றுக்கொள்ள வேண்டும்.

  சர்வ வல்லப கடவுளாகிய இயேசுவே அவரால் படைக்கப்பட்ட மனிதர்களான சூசையப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் நாசரேத்தூரில் பணிந்திருந்தார்.

சூசையப்பரைப்போல் எப்படி இறைச் செய்திக்குக் கீழ்ப்படிவது?

சூசையப்பருக்குக் கொண்டு வந்தது போல் நமக்கும் வானதூதர் இறைச் செய்தியைக் கனவில் கொண்டு வருவாரா?

நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு வான தூதரைக் காவல் தூதராக நியமித்துள்ளார். 

அவர் எப்போதும் நம்முடனே தான் இருக்கிறார்.

கடவுளது செய்தியை நமக்கு கொண்டுவருவதும், 

அவர் மூலம் நாம் செய்யும் செபங்களை கடவுளிடம் கொண்டு சேர்ப்பதும், 

நம்மை காவல் காப்பதும் அவர் பணி.

ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மோடு இருந்து கடவுள் நமக்கு தரும் செய்தியை உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம்  தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் விசுவாசக் கண்ணோடும், செப உணர்வோடும் செயல்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு அவர் தரும் செய்தி புரியும்.

நாம் எப்போதும் நமது காவல் தூதரோடு செப உறவில் இருக்க வேண்டும். 

பழைய ஏற்பாட்டின் தோபியாசு ஆகமத்தை வாசிப்பவர்களுக்கு காவல் தூதரின் பணி நன்கு புரியும்.

இயேசு தாய்த் திருச்சபை மூலமாக நம்மோடு பேசுகிறார்.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் இயேசுவின் இடத்தில் இருந்து கொண்டுதான் நம்மை நமது ஆன்மீக பாதையில் வழி நடத்துகிறார்கள்.

திருச்சபையின் பெயரால் அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் இறை இயேசுவிடமிருந்து தான் வருகின்றது.

நமது பங்கு குருக்கள் நமது ஆன்மிக வழிகாட்டிகள். (Spiritual Directors)

இறைச் செய்தியை நமக்குத் தருபவர்களும்,

ஆன்மீக ஆலோசனை தருபவர்களும்,

நாம் தவறு செய்யும் போது நம்மை திருத்துபவர்களும்,

நாம் செய்த பாவங்களை மன்னிப்பவர்களும்,

இயேசுவையே நமக்கு உணவாகத் தருபவர்களும் அவர்களே.

நமக்கு ஆன்மீக காரியங்களில் ஏதாவது சந்தேகமோ, பிரச்சினையோ ஏற்பட்டால் ஆலோசனைக்கு அணுக வேண்டியது அவர்களைத்தான்.

நமது ஆன்ம குருவானவர் (Spiritual Father) காட்டும் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு நடக்கலாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது.

நமது தாய் திருச்சபை நமக்குத் தந்துள்ள பைபிள் மூலமாகவும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.

விஞ்ஞானத்திற்கும்(Science) மெஞ்ஞானத்திற்கும் (Spirituality) சம்பந்தமே இல்லையென்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு.

இரண்டுக்கும் காரண கர்த்தா அதே கடவுள்தான்.

நாம் இறைவனுக்கு ஏற்ற ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான் இறைவன் நம்மை இந்த விஞ்ஞான உலகத்தில் வாழ விட்டிருக்கிறார்.

விஞ்ஞான விதிகள்படி இயங்கும் இயற்கை மூலமாகவும் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாக இறைவன் நம்மோடு பேசுகிறார்.

இயற்கையை உற்று நோக்கினாலே இறைவனின் அளவுகடந்த வல்லமையும், அவர் நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பும் நமக்கு  புரியும்.

இயற்கை நிகழ்வுகளில் நாம் இறைவனின் குரலைக் கேட்கலாம்.

ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த புத்தகத்தையும் பிரம்பையும் பயன்படுத்துவது போல், இறைவனும் இயற்கை நிகழ்வுகளை பயன்படுத்துகிறார்.

ஆசிரியர் இரண்டையுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கே பயன்படுத்துகிறார்.

புத்தகம் போதனைக்கு, 

பிரம்பு போதனையை கவனிக்காதவர்களுக்கு.

 கடவுள் சில இயற்கை நிகழ்வுகளை போதிப்பதற்காகவும்,

 சிலவற்றை போதனையை கவனியாதவர்களைத் திருத்துவதற்காகவும் பயன்படுத்துகிறார்.

வைரஸ் பிரச்சனையும் ஒரு இயற்கை நிகழ்வுதான்.

ஆசிரியர் கையிலுள்ள பிரம்பைப் போல் கடவுள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாம் அதை உணர்ந்து திருந்த வேண்டும்.

சில இயற்கை நிகழ்வுகளால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைகிறார்களே, அதன் பொருள்?

நெல்லை விளைய வைத்த விவசாயி அதை ஏன் அறுவடை செய்கிறான்?

தானியத்தை வீட்டுக்குக் கொண்டுவர.

மரணத்தை வாழ்க்கையின் முடிவு என்று நினைப்பவர்கள் தான் அதைக்கண்டு பயப்படுவார்கள்.

அது நித்திய வாழ்வின் ஆரம்பம் என்று நினைப்பவர்கள் பயப்பட மாட்டார்கள்.

அறுவடையான நெல் வீட்டுக்கு வருவது போல, இறைவனுக்காக வாழ்ந்து, மரணமடைபவர்கள் நித்திய பேரின்ப வீட்டிற்குச் செல்கிறார்கள்.

இது இறைவனின் திட்டம். 

காவல் தூதர்கள் மூலமாகவும்,

தாய்த் திருச்சபையின் மூலமாகவும்,

 இயற்கையின் மூலமாகவும் நம்மோடு இறைவன்தான் பேசுகிறார்.

ஆழமான விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவரது குரல் கேட்கும்.

 வகுப்பில் ஆசிரியர் பேசும்போது அதைக் கவனிக்காதவர்களின் காதுகளில் அவரது வார்த்தைகள் எதுவும் விழாது.

இறைவனைக் கவனித்து கொண்டிருப்பவர்களுக்கு அவரது குரல் கேட்கும்.

குரல் தரும் செய்தியும் கேட்கும்.

சூசையப்பரைப்போல் நாமும் இறைச் செய்திக்குக் கீழ்ப்படிவோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment