Friday, December 24, 2021

Happy Christmas!

           Happy Christmas!



", Happy Christmas,! தாத்தா!"

", , Happy Christmas!  Christmasஐ எப்படிக் கொண்டாடப்  போகிறாய்?"

"போன ஆண்டு கொண்டாடியது போலவே இந்த ஆண்டும் கொண்டாடுவேன்."

",போன ஆண்டு எப்படி கொண்டாடினாய்?"

''24ஆம் தேதி  இரவு முழுவதும் கண்விழித்திருந்தேன். 

நடு இரவு 12 மணிக்கு Christmas பூசை.

வீட்டுக்கு வந்து Cake வெட்டினோம்.

அப்புறம் வேட்டு போட்டோம்.

அதற்குள் விடிந்து விட்டது.

அப்புறம் 25ம் தேதி முழுவதும்
நல்ல தூக்கம், சாப்பாட்டு நேரம் தவிர."

", என்னடா சொல்ற, கிறிஸ்துமசே 25ம் தேதிதான், நீ அன்று முழுவதும் தூங்கினேன் என்கிறாய்!

அப்போ நீ கிறிஸ்மசைக் கொண்டாடவில்லை, தூங்கியிருக்கிறாய்!"

"தாத்தா, 24ம் தேதி முழுவதும் விழித்திருந்தேனே!

 பகலில் கிறிஸ்மசுக்காக வீட்டை அலங்கரித்தேரம்.

இயேசு பாலனுக்கு குடில் கட்டினோம்.

மாலையில் Star தொங்கப் போட்டோம்.

இரவில் பூசை கண்டோம்.

 கேக் வெட்டினோம்.

 வேட்டு போட்டோம்.

25ம் தேதி மட்டும் தூங்கினேன்.

இரவு முழுவதும் விழித்திருந்தால் பகலில் தூங்கித்தானே ஆக வேண்டும்.''

",நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?

 ஆண்டு முழுவதும் விழுந்து விழுந்து படித்தேன்.

 தேர்வின்போது உட்கார்ந்து கொண்டே தூங்கினேன் என்பது போல் இருக்கிறது.

 ஆண்டு முழுவதும் தூங்காமல் படிப்பதே தேர்வைத்  தூங்காமல் எழுதுவதற்காகத்தான்.

 ஆண்டு முழுவதும் தூங்காமல் படித்துவிட்டு தேர்வு நேரத்தில் தூங்கினால் படித்து என்ன பயன்?"


"தாத்தா,  வழக்கமாக இரவில் தூங்கிவிட்டு பகலில் விழித்திருந்து வேலை பார்ப்போம்.

 இரவில் தூங்காமல் இருந்தால் அதற்கு ஈடு கட்ட பகலில் தூங்கித் தானே ஆக வேண்டும்!" 

",நீ சொல்வது

 ' ஒரு நாள் ஒரு சந்தி இருந்தால் மறுநாள் இரண்டு மடங்கு சாப்பிட வேண்டும்' 

என்று சொல்வதுபோல் இருக்கிறது.

 ஒரு சந்திக்கு ஈடுகட்ட பலசந்தி இருந்தால் ஒருசந்தியால் பயனில்லை.

உனக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால்,

 "ஒரு நாள்  தர்மம் கொடுத்தால், மறுநாள் கொடுத்ததைத்  திருட வேண்டும்" 

என்று சொல்வது போல் இருக்கிறது."

"வேறு எப்படித்தான் கிறிஸ்மசைக்
 கொண்டாட வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?"

",இயேசு எந்த நோக்கத்திற்காக மனிதனாகப் பிறந்தாரோ அதே நோக்கத்தை நாமும் நிறைவேற்றும் விதமாக கிறிஸ்துமசைக் கொண்டாட வேண்டும்.

இயேசு நமக்கு மீட்பை தருவதற்காக பிறந்தார்.

ஆகவே மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் கிறிஸ்மஸ் அடங்கியிருக்கிறது, மற்றவர்களிடமிருந்து பெறுவதில்  அல்ல.

 இல்லாதவர்களுக்கு  கொடுப்பதின் மூலமாகத்தான் கிறிஸ்துமசைக்  கொண்டாட வேண்டும்."

"தாத்தா, நான் பையன்.

என்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?

உணவு தருவது அம்மா.
 உடை தருவது அப்பா.

 தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?"

", அன்பு இல்லை?
அன்பான ஆறுதல் தரும் வார்த்தைகள் இல்லை?

அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு வேறு பையன்கள் இல்லை? 

இரவில் இயேசு பாலனை சந்தித்த நாம் பகலில் அவரோடு மற்றவர்களை சந்திக்க வேண்டாமா?

அவர்களிடம் இயேசுவைப் பற்றி பேச வேண்டாமா?

வீட்டிலேயே அம்மா, அப்பாவுக்கு உதவி செய்யலாம்.

ஞான வாசகங்கள் வாசிக்கலாம்.

செபம் சொல்லலாம்.

நாம் செய்யக்கூடிய ஆன்மீக காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன."


'.அவற்றை எல்லாம் செய்யலாம் தாத்தா.

தூங்க வேண்டிய நேரத்தில் விழித்து இருந்தோமே, அதை எப்படி சரிக்கட்ட?"

", ஆண்டவருக்காக தியாகம் செய்தது நாம் அவருக்கு  கொடுத்த காணிக்கை.

சரிக் கட்டுவதற்காக தியாகம் செய்வதில்லை.

அப்படி செய்தால் அது வியாபாரம்."

"சரி, தாத்தா. அடுத்த கிறிஸ்மசுக்கு இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்." 

",ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது.

 செயல்படுத்த வேண்டும்.

மற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்து கொள்வதில்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அடங்கியிருக்கிறது."


"இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். உங்களுக்கு உங்கள் அம்மாமேல் பாசம்  இருக்கிறதா?"

",அதிலென்ன சந்தேகம்?"

".அதில் சந்தேகம் இல்லை.

 ஆனால் அடுத்த கேள்விக்கு முன்னுரையாகக் கேட்டேன்.

அம்மாவுக்கு ஏதாவது கஷ்டம் வர விடுவீர்களா?"

",வர விடமாட்டேன்."

"நீங்களே அம்மாவுக்கு கஷ்டம் வர விட்டால் 

நீங்கள் அவர்களை நேசிக்க வில்லை என்றுதானே அர்த்தம்."

",அடுத்த கேள்வியை நேரடியாக கேள். நீ என்ன கேட்க விரும்புவது என்று எனக்குப் புரிகிறது."

"அப்போ அந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

எது நடந்தாலும் கடவுள் திட்டப்படி தான் நடக்கும் என்பதை மறக்காமல் பதில் சொல்லுங்கள்."

", மரியாளின் வயிற்றில் இயேசு உற்பவித்த வினாடியிலிருந்து அவள் வாழ்நாள் முழுவதும் பல கஷ்டங்களை அனுபவித்தாள்.

அவளை வியாகுல மாதா என்று நாம் அழைக்கும் அளவிற்கு அவள் கஷ்டங்களை அனுபவித்த அம்மாவாக இருந்தாள்.

இயேசு கடவுள். அவருடைய திட்டப்படி தான் அவருடைய அம்மாவுக்கு கஷ்டங்கள்  நேர்ந்தன.

பெற்ற தாய்க்கு கஷ்டங்களை அனுமதித்த  இயேசுவுக்கு தாய் மேல் பாசம் இருந்ததா? இருந்திருந்தால் தாய்க்கு கஷ்டங்களை வர விட்டிருப்பாரா?

இதுதானே உன் கேள்வி?"

"இதுவேதான். இப்போ பதில் சொல்லுங்கள்."

", இயேசு கடவுள். கடவுளின் செயல்பாடுகளை ஆன்மீகக் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்.

உலகியல் கண்ணோக்கிலிருந்து அல்ல.

இயேசு எதைச் செய்தாலும் ஆன்மீக நலனை மையமாக வைத்து செய்வாரேயொழிய  உடல் நலனை மையமாக வைத்து அல்ல.

அவர் உலகில் மனிதனாகப் பிறந்தது நமது ஆன்மாவை மீட்க,

உடலை அல்ல.

ஆன்மீக ரீதியில் ஒருவன் நலமாக இருக்கிறான் என்றால், அவனிடம் பாவம் எதுவும் இல்லை, அருள் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவனிடம் பாவங்கள் நிறைய இருந்து அருள் இல்லாவிட்டால் அவன் ஆன்மீக வியாதியஸ்தன் என்று அர்த்தம்.

இப்போ ஒரு உண்மை உனக்கு புரிந்திருக்க வேண்டுமே."

"புரிந்து விட்டது. 

மனிதனுக்கு உடல் ரீதியாக வருபவை எல்லாம் உண்மையான கஷ்டங்கள் அல்ல,

பாவத்தால் ஆன்மாவுக்கு வருவதுதான் உண்மையான கஷ்டம்.

அந்த வகையில் அன்னை மரியாள் பாவம் மாசு இல்லாதவள், அருள் நிறைந்தவள்.

அவள் சிறிதுகூட கஷ்டப்படாமல் அவளை காப்பாற்றியவர் அவளது மகன் ஆண்டவர் இயேசுதான்.

இயேசுவின் அருளால்தான் அவள் பாவ மாசின்றி உற்பவித்தாள்.
அருளால் நிரப்பப்பட்டாள்.

அவள் உடல் ரீதியாக   பட்ட கஷ்டங்கள் இறைவனின் பார்வையில், கஷ்டங்களே அல்ல.

ஆன்மீக கண்ணோக்கில் 

உலகில் வாழ்ந்த, 
வாழ்கின்ற,
வாழப்போகிற 
மனிதர்கள் அனைவரிலும் 

அதிக ஆரோக்கியமாக,

 கஷ்டமே இல்லாமல் வாழ்ந்தவள் அன்னை மரியாள் மட்டுமே.

இதைத்தானே சொல்ல வந்தீர்கள்."

",.கரெக்ட். இறைவனுக்கு மிகவும் பிடித்தது பாவமாசு இல்லாத ஆன்மா தான்.

அந்த வகையில் இறைவனுக்கு மிகவும் பிடித்தவள் இயேசுவின் தாய்.

இப்போ சொல்லு,

ஆன்மீக நோக்கில் 

ஆரோக்கியமாக 

கஷ்டமே இல்லாமல் 

தன் அன்னையை காப்பாற்றிய இயேசுவுக்கு தாய் மீது பற்று இருந்ததா இல்லையா?"

"இப்போ எனக்கு சிறிது கூட சந்தேகமில்லை.

 இயேசு தன் தாயை அளவில்லாத விதமாய் நேசித்தார்."

", இன்னொன்றையும் தெரிந்து கொள். 

யார் இறைவனை அதிகம் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு அவர் அதிகமான உடல் ரீதியான துன்பங்களை அனுமதிப்பார்.

உடல் ரீதியான துன்பங்களுக்கு ஆன்மீகப் பெயர் சிலுவை.

இயேசு சிலுவையில் தன்னையே பலியிட்டு நமக்கு ஆன்மிக மீட்பைத் தந்ததால்,

சிலுவை  மீட்பின் அடையாளம் ஆயிற்று. 

இயேசு தனது சிலுவை மரணத்தை தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது போல,

நாமும் நமக்கு வரும் சிலுவையை ஏற்று இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்

நமக்கு இறைவனது அருள் கிடைக்கும்.

சிலுவை நமக்கு ஆன்மீக அருளை ஈட்டும் கருவி. நமது ஆன்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் சிலுவையைச் சுமந்தாக வேண்டும்.

அன்னை மரியாளும் தன் மகனோடு வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்தாள்.

அதனால் தான் வியாகுல மாதா என்று அழைக்கப்படுகிறாள்.

அருளை சம்பாதிக்க வேண்டுமா? சிலுவையைச் சுமக்க வேண்டும்.

உலகில் நமக்கு சம்பளத்தை ஈட்டி தருவது துன்பமா? உழைப்பா?"

"உழைப்பு."

",ஆன்மாவிற்கு அருளை ஈட்டித் தரும் அது துன்பமா? சிலுவையா?"

"சிலுவை. இப்போது இன்னொன்றும் புரிகிறது.

நமக்கு வரும் உடல் ரீதியான துன்பத்தை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டால் 

அது மீட்பைத் தரும் சிலுவையாக மாறுகிறது.

ஏற்றுக் கொள்ளாவிட்டால் துன்பம் துன்பமாகவே இருக்கும்.

துன்பம் ஆன்மீக ரீதியாக பலன் தர வேண்டுமென்றால் அதை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டு சிலுவையாக மாற்ற வேண்டும்.

துன்பத்தை சிலுவையாக மாற்ற மனதுடையோர், தங்களுக்கு அதிகமான துன்பம் வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அவர்களுக்கு துன்மங்கள் அதிகமாக அதிகமாக சிலுவைகளும் அதிகமாகும்.

சிலுவைகள் அதிகமாக அதிகமாக ஆன்மாவுக்கு அருள்வரத்து அதிகமாகும்.

அருள்வரத்து அதிகமாக அதிகமாக ஆன்மீக ஆரோக்கியம் அதிகமாகும்.

ஆன்மீக ஆரோக்கியம் அதிகமாக அதிகமாக நித்திய வாழ்வின் பேரின்பம் அதிகமாகும்."

", உடலுக்கு வரும் துன்பங்களை இறைவனுக்காக ஏற்று,

அதை சிலுவையாக மாற்றி,

அதை இறைவனுக்காக சுமந்து,

விண்ணகத்தை அடைவோம்."

லூர்து செல்வம்.

Thursday, December 23, 2021

"அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்."(லூக். 1:64)

 "அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்."
(லூக். 1:64)

எலிசபெத்தம்மாளுக்கு குழந்தை பிறந்த எட்டாவது நாள் அதற்கு பெயர் சூட்டு விழா வைத்தார்கள்.

 மற்றவர்கள் அதற்கு அதன் தந்தையின் பெயரை சூட்டுவார்கள் என்று எண்ணினார்கள்.

 ஆனால் எலிசபெத்தம்மாள் குழந்தைக்கு அருளப்பன் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார்.

 தந்தையை சைகை காட்டி கேட்டபோது அவரும் 

"இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதிக் காட்டினார்.

 அதுவரை பேச முடியாமல் இருந்த
 சக்கரியாஸ் பேச ஆரம்பித்தார்.


அதுவரை அவர் ஏன் பேச முடியாமல் இருந்தார்?

கபிரியேல் தூதர் சக்கரியாசிடம் அவரது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும், 

அவருக்கு " அருளப்பர் " எனப் பெயரிட வேண்டும் என்று சொன்னபோது
 
அவரால் நம்ப முடியவில்லை.

அவர் தூதரிடம், " இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ? நானோ வயதானவன், என் மனைவியும் வயது முதிர்ந்தவள் " என்றார்.

தூதர் மறுமொழியாக,

"இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். 

ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்.

இப்போது நமது மனதில் ஒரு கேள்வி எழும்.

வானதூதர் கூறியதை 
நம்பாததிற்காகத் தண்டனையாக பேசமுடியாது இருந்தாரா?

இக்கேள்வி மனிதர்கள் மனதில் எழுவது இயல்பு.

நாம்தான் தண்டனை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

அன்பே உருவாக இறைவன் நம்மை பராமரிக்கும் போது செய்யக்கூடிய காரியங்களை அப்படியே விளக்குவதற்கு உரிய வார்த்தைகள் மனித மொழியில் இல்லை என்று நினைக்கிறேன்.

மனித அனுபவத்தில் கூட அன்பினால் மட்டும் இயக்கப்பட்டு நம்மைக் கவனிப்பவர்களுக்கும்,

 சட்டத்தினால் மட்டும் இயக்கப்பட்டு நம்மை கவனிப்பவர்களுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

அரசாங்கம் சட்டத்தினால் நம்மை ஆள்கிறது.

 சட்டத்தை மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் நம்முடைய பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோர் நம்மை அன்பினாலும், அக்கரையினாலும் கவனிக்கிறார்கள்.

பெற்றோர் சொல்வதை 
மீறும்போதும்,

ஆசிரியர்களின் உத்தரவுகளை மீறும்போதும்

அவர்கள் நம் மீது எடுக்கும் நடவடிக்கையை தண்டனை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

 "பிரம்பை எடுக்காதவன் பிள்ளையைப் பகைக்கிறான்,"

என்பது வேதவாக்கு.

பெற்றோரும் சரி, ஆசிரியரும் சரி பிரம்பை பயன்படுத்துவது பிள்ளைகளை திருத்தி நல்லவர்கள் ஆக்குவதற்காக,

 அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. 

மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஆசிரியர் கையில் பிரம்பை எடுக்கிறார்.

இறைவனும் அப்படியே.

அன்பே உருவான அவர்  தன்னால் படைக்கப்பட்டவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்,

  நிலை வாழ்வுக்கு தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும்

என்பதற்காகவே  கையில் பிரம்பை எடுக்கிறார்,

தண்டிப்பதற்காக அல்ல.

விசுவாசக் குறைவின் காரணமாக சக்கரியாஸ் கபிரியேல் தூதரின் வார்த்தைகளை நம்பத் தயங்கினார்.

அவரை முழுமையான விசுவாசம் உள்ளவராக மாற்றுவதற்காகத்தான் 

இறைவன் அவரை அவரது மகன் பிறந்து 

பெயரிடப்படு மட்டும் 
பேசாதிருக்கும்படி செய்தார்.

அவரும் இறைவனின் விருப்பப்படி முழுமையான விசுவாசத்தை பெற்று,

"இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதிய உடனேயே

 பேசும் திறனைத் திரும்பவும் பெற்று,

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று 
ஆண்டவரை போற்றினார்.

சக்கரியாசின் இந்த அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம்.

 நமது விசுவாசக் குறைவின் காரணமாகத்தான் நமக்கு சில சமயங்களில் துன்பங்கள் வருகின்றன.

நமக்கு துன்பங்கள் வரும்போது நாம் நமது விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவோம்.

துன்பங்கள் நமது விசுவாசத்தை ஆழமாக உதவும் ஆசீர்வாதங்கள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

ஆழமான விசுவாசம்தான் நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்திச் செல்லும்.

நாம் விண்ணகத்திற்குள் நுழையும்போது இயேசு நம்மை நோக்கி 

"உனது விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்பார்.


லூர்து செல்வம்

Wednesday, December 22, 2021

"என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது."(லூக். 1:46, 47)

"என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.
 என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது."
(லூக். 1:46, 47)

வயிற்றில் குழந்தை இயேசுவுடன் எலிசபெத்தம்மாள் வீட்டிற்கு அவளுக்கு பணிவிடை செய்வதற்காக சென்ற அன்னை மரியாள், 

இறைவன் தன்னில் ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்துப் பார்த்து,

அதனால் தானடைந்த மகிழ்ச்சியை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்.   

ஆண்டவர் ஆற்றிய அரும்பெரும் செயல்களை அன்னை மரியாவின் ஆன்மா நினைத்துப் பார்த்து, போற்றுகிறது.

 இதயம் மகிழ்ச்சியால் பொங்குகிறது.

மரியாள் தனது ஆன்மா இறைவனை போற்றுவதாகவும்,

இதயம் மகிழ்வாகவும் கூறுகின்றாள்.

ஆன்மாவையும், இதயத்தையும் மையமாக வைத்து சிறிது நேரம் சிந்தித்தால்,

மரியாளின் கூற்று முழுமையாக விளங்குவதோடு,

நாமும் அவளைப் போலவே மாற உதவியாக இருக்கும்.

ஒரு உயிர்ப் பிராணியை மனிதன் ஆக்குவது அதனுடைய ஆன்மா.


ஆன்மாவுக்கு (Soul) ஆன்மீக ரீதியாக (Spiritually) உயிரளிப்பது அன்பு.

அன்பின் இருப்பிடம் இதயம்.
 
உடலின் இதயம் உடலின் இயக்கத்துக்கு உயிர்.

ஆன்மாவின் அன்பு ஆன்மாவின்
இயக்கத்துக்கு உயிர்.

ஆகவே ஆன்மாவின் அன்பை உடல் இதயத்தின் அடையாளத்தால் குறிப்பதோடு அன்பின் இருப்பிடம் இதயம் என்றும் கூறுகிறோம். 

புத்தி, மனது, இதயம் மூன்றும் ஆன்மாவின் அதாவது இயங்கும் மனிதனின் மூன்று தத்துவங்கள்.

புத்தி சிந்தித்து அறிகிறது.

மனது அறிந்ததை ஞாபகத்தில் வைக்கிறது.

இதயம் ஞாபகத்தில் இருப்பதை அன்பு செய்கிறது. 

அன்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் தான் உண்மையான மகிழ்ச்சியும் இருக்கும்.

அன்னை மரியாளின் ஆன்மா இறைவன் அவளுக்கு செய்த அரும்பெரும் செயல்களை முழுமையாக அறிகிறாள். 

தான் அறிந்ததை  தன்னுள்ளத்தில் கொண்டிருக்கிறாள்.

 இறைவன் அவளுக்கு செய்த அரும்பெரும் செயல்களை நினைத்து நினைத்து இறைவனைப் போற்றி புகழ்கின்றாள்.

அவளது இதயம் மகிழ்ச்சியால் பொங்கி வழிகிறது.

அந்த மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இறைவன் மட்டில் அவளுக்கு இருந்த அளவு கடந்த அன்பு.

சுருக்கமாகச் சொல்வதானால், இறைவன் அவருக்கு செய்த அரும்பெரும் செயல்களை அறிந்து, நினைத்து, அன்பு செய்து

 அதன் காரணமாக மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறாள் .


நாம் கோடிக் கணக்காக பணம் செலவழித்து 

ஒரு பெரிய வீட்டை கட்டி 

அதை அலங்கரிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 

அந்த வீடு நம்மை பார்த்து போற்றிப் புகழுமா?

புகழாது. ஏனெனில் அதற்கு ஆன்மாவும் இல்லை, இதயமும் இல்லை.

இறைவன் மரியாள் என்ற வீட்டை ஜென்ம பாவ மாசில்லாமல் கட்டி,

அதை தனது அருள் வரங்களால் நிரப்பி, அலங்கரித்து,

அதில் குடியேறுகிறார்.

அது அவர் கட்டிய வீடு.
பாவ மாசு இல்லாமல் கட்டிய வீடு.
அருள் வரங்களால் நிறைந்த வீடு.

அந்த வீடு இறைவன் தனக்கு செய்த மாபெரும் செயல்களை  எண்ணி எண்ணி மகிழ்ச்சியோடு அவரைப் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏனெனில் மரியாள் என்ற அந்த அருள் நிறைந்த வீட்டுக்கு ஆன்மா இருக்கிறது இதயமும் இருக்கிறது.

ஆன்மா புகழ்கிறது,

 இதயம் மகிழ்கிறது.

அன்னை மரியாளைப் பற்றி இப்படி தியானித்து விட்டு நமது கண்களை நம்மை நோக்கி திருப்புவோம்.

 நமக்கும் மரியாளைப் போலவே ஆன்மா இருக்கிறது, இதயமும் இருக்கிறது.

நாம் சென்மப் பாவத்தோடு  உற்பவித்தோம்.

ஆனாலும் இறைவன் ஞானஸ்நானத்தின் மூலம் நமது சென்ம பாவத்தை நம்மை விட்டு நீக்கிவிட்டார். 

இது அவர் நமக்குச் செய்த அரும்பெரும் செயல்.

ஞானஸ்நானம் பெற்ற வினாடியில் நமது ஆன்மா பாவ மாசு இல்லாமல் இருந்தது. 

அன்னை மரியாள் தனது வாழ்நாள் முழுவதும் சிறு அற்ப பாவம் கூட செய்தது இல்லை.

தான் உற்பவிக்கும் போது பெற்றிருந்த பரிசுத்த தனத்தை கடைசிவரை காப்பாற்றினாள். 

ஆனால் நாம் ஞானஸ்நானம் பெற்ற பின்பும் தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

 ஆனால் எல்லாம் வல்ல இறைவன் நமது பாவங்களை பாவசங்கீர்த்தனம் என்ற திரு அருள் சாதனத்தின் மூலம் மன்னித்துக் கொண்டே வருகிறார்.

 அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து அவர் பிறந்ததே நமது பாவங்களை மன்னிக்கத்தானே!

இயேசு சிலுவையில் தன்னைப் பலியாக்கி கொண்டிருந்தபோது

 அன்னைமரியாள் சிலுவை அடியில் நின்று அவரது பலியை நமது பாவங்களுக்கு பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்து கொண்டிருந்தார்.

அந்தப் பாக்கியத்தை நாமும் பெறுவதற்காகத்தான் இயேசு  குருத்துவத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு நாளும் திருப்பலி ஒப்புக்கொடுக்க  ஏற்பாடு செய்திருக்கிறார். 

தனது பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை தனது சீடர்களுக்கு தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தது போலவே 

இன்று நமக்கும் ஒவ்வொரு நாளும் தன்னையே உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

அன்று எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக

எப்படி யூத மக்கள் பாஸ்கா நாளன்று

 ஒரு ஆட்டுக்குட்டியை இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு 

அதை அவர்களே உணவாக உண்டார்களோ,

அதேபோல இன்று பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக 

இறை மகனையே இறைத் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு,

  பலிப் பொருளாகிய இயேசுவையே நாம் உணவாக உட்கொள்கிறோம்.

இயேசு ஏற்படுத்தி நமக்குத் தந்த எல்லா தேவ திரவிய அனுமானங்களும் அவர் நமக்கு செய்து கொண்டு வரும் அரும்பெரும் செயல்கள்தானே.

தாயைப் போல பிள்ளை என்பார்கள்.

நாம் நமது மரியன்னையைப் போல் இருக்கிறோமா?

நமது தாயைப் போல நாமும் இறைவன் நமக்கு செய்துவரும் அரும்பெரும் செயல்களை நமது மனதில் இருத்தி

 நமது ஆன்மாவால் போற்றி புகழ்கின்றோமா?

இறைவன் நமக்கு செய்துவரும் அரும்பெரும் செயல்கள் நமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றனவா?


நமது ஆன்மாவால் ஆண்டவரை ஏத்திப் போற்றி,

அவரை நினைந்து நமது இதயம் களிகூர்ந்தால்தான் 

நாம் மரியாளை அம்மா என்று உரிமையோடு  அழைக்க முடியும்.

திருவருள் சாதனங்களை இறைவனது அருளைப் பெறும் நோக்கத்தோடு பெற்றால்

நாம் உண்மையிலேயே இறைவனை ஆன்மாவால் போற்றுவோம், இதயத்தில் மகிழ்வோம்.

தினமும் வழக்கம் போல் சாப்பிடுவதுபோல வழக்கப்படி அவற்றைப் பெற்றால் நம்மால் போற்றவும் முடியாது, மகிழவும் முடியாது.

ஒவ்வொரு நாளும் காலை உணவு முடிந்தவுடன் அதை தந்ததற்காக அம்மாவை போற்றுகிறோமா? 
உணவு உண்டதற்காக மகிழ்கிறோமா?


அன்னை மரியாளின் மனநிலை நமக்கு இருந்தால்தான்

 ஒவ்வொரு முறையும் ஆண்டவரை உணவாக பெற்றவுடன் 

நம்மால் அவரைப் போற்ற முடியும், இதயத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

வழக்கம்போல  கையால் நற்கருணையை வாங்கி, வாயில் போட்டு விட்டுப் போனால்

 எங்கிருந்து மகிழ்ச்சி வரும்?

தேர்வில் வெற்றி பெற்று விட்டால் எப்படி மகிழ்கின்றோமோ,

அதைப்போலவாவது நன்மை எடுத்தவுடன் மகிழ்கின்றோமா?

அன்னை மரியாள் எப்படி இயேசுவுக்காக மட்டும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தாளோ

 அதேபோல நாமும் நம்மை அர்ப்பணித்து வாழ்ந்தால்தான் நம்மால் உண்மையிலேயே இறைவனை போற்றவும், புகழவும் முடியும்,

 இதயத்தில் மகிழவும் முடியும்.

ஆண்டவர் நமது வாழ்வில் செய்துவரும் அரும்பெரும் செயல்களுக்காக அவரைப் போற்றிப் புகழ்வோம்.

ஆண்டவரைப் புகழ்வதற்காக வாழ்ந்தால் மட்டுமே நமது இதயத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, December 21, 2021

" என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?"(லூக். 1:43)

" என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?"
(லூக். 1:43)

கபிரியேல் தூதர் அன்னை மரியாளிடம் மங்கள வார்த்தை சொல்லி,

அவள் அதை ஏற்றுக்கொண்ட வினாடியிலேயே 

இறைமகன் அவள் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

" இதோ ஆண்டவருடைய அடிமை." என்று அன்னை மரியாள் ஒப்புக்குச் சொல்லவில்லை.

 தனது உண்மை நிலையைத்தான் வானதூதரிடம் அவள் எடுத்துரைத்தாள்.

மூன்று வயதிலிருந்தே கோவிலில் வளர்ந்தவள்.

 இறையன்பால் நிறைந்திருந்ததோடு,

பிறரன்புப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வளர்ந்தவள்.

இப்போது அன்பே உருவான கடவுளே அவரது அடிமையின் மகனாக மனித உரு எடுத்திருக்கிறார்.

அதாவது நம்மைப் படைத்த இறைவனே நமக்குப் பணிபுரிவதற்காகத் தன்னை ஒரு அடிமையின் நிலைக்குத் தாழ்த்தியிருக்கிறார்.

இயேசு மனுவுரு எடுத்த மறு வினாடியே அன்னை மரியாள் தனது உறவினளான எலிசபெத்தைச் சந்தித்துப் பணிபுரிய புறப்படுகிறார்.

எலிசபெத்தின் வீடு யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊரில் இருக்கிறது.

மரியாள் வாழ்ந்த நாசரேத் ஊருக்கும், எலிசபெத் வாழ்ந்த ஊருக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 81 மைல்கள்.

அவ்வளவு தூரத்தையும் மரியாள் வயிற்றில் குழந்தையோடு நடந்தே கடக்கிறார்.

அவ்வளவு பிறரன்பு!

சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.

எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.

 என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?


 உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது."

என்கிறாள்.

எலிசபெத் மரியாளைப் பார்த்ததும் அவள் ஆண்டவரின் தாயார் என்பதை அடையாளம் கண்டுகொண்டாள்.

அவர் மட்டுமல்ல 
அவர் வயிற்றிலிருந்த குழந்தையும் (ஸ்நாபக அருளப்பர்) இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு மகிழ்ச்சியினால் துள்ளினார்.

அந்நேரமே பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவரது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டது.

அன்னை மரியாள் மட்டுமே சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்தாள்.

அன்னை மரியாள், ஸ்நாபக அருளப்பர் ஆகிய இருவரும் சென்மப் பாவம் இல்லாமல் பிறந்தார்கள்.

எலிசபெத்தம்மாளும், ஸ்நாபக அருளப்பரும் மரியாளின் வயிற்றில் இருந்த குழந்தையை அடையாளம் கண்டு கொண்டதைப் பற்றி வாசிக்கும் நாம்,

திருப்பலியின்போது 
குருவானவரோடு நம்மை நோக்கி வரும் இயேசுவை அடையாளம் கண்டு கொள்கின்றோமா?

அடையாளம் கண்டு கொண்டால் நமது உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்க வேண்டாமா?

திருவிருந்தின்போது உணவாக நம் நாவில் வருவது அன்னை மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்த அதே இயேசுதானே!

மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து  வளர்ந்த அதே 
இயேசுதானே!

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த அதே இயேசுதானே!

கணக்கற்ற நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசுதானே!

நமக்காக பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கிய அதே 
இயேசுதானே!

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசுதானே!

அவரை உண்மையிலேயே நாம் அடையாளம் கண்டுகொண்டால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்!

அன்னை மரியாள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடாக நமது மகிழ்ச்சியும் இருக்க வேண்டுமே!

கொஞ்சம் சிந்தித்தால் அதைவிட அதிகமான மகிழ்ச்சி நம்மிடம் இருக்க வேண்டும்,

ஏனெனில் இயேசு அன்னை மரியாளின் வயிற்றில் பத்து மாதங்கள் இருந்தார்.

பிறந்தபின் மடியில் வளர்ந்தார்.

வளர்ந்தபின் அவரோடு இருந்தார்.

ஆனால் நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதே இயேசுவை நமது நாவில் வாங்கி உணவாக உட்கொள்ளுகிறோமே!

இயேசு நமது ஆன்மாவோடும், 
 உடலோடும் கலந்து விடுகிறாரே!

அவரோடு மட்டுமல்ல, அவராகவே வாழ்கிறோமே!

நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்!

இயேசுவோடு உரையாடவும், உறவாடவும் நமக்கு பாக்கியம்  கிடைத்திருக்கிறதே!

அதை நினைப்போம்.

வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்போம்.

மோட்சத்திற்கு செல்லும்போது மரியாளைப் பார்த்து,

"அம்மா, நாங்கள் உங்களை விட பாக்கியசாலிகள்! 

ஏன் தெரியுமா?

 நீங்கள் இயேசுவை ஒருமுறைதான் பெற்றீர்கள்,

 நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் அவரைப் பெற்றோமே!"

அம்மா நம்மைக் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பார்கள்!

லூர்து செல்வம்.

Monday, December 20, 2021

இறைவன் நம்மோடு பேசுகிறார்.

   இறைவன் நம்மோடு பேசுகிறார்.


பெற்றோர் தாங்கள் பெற்ற பிள்ளைகளோடு எப்போதும் இருக்கவும், 

அவர்களோடு உரையாடவும்,

 அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும்  ஆசைப்படுவது போலவே,

கடவுளும் தன்னால் படைக்கப்பட்ட நம்மோடு எப்போதும் இருக்கவும்,

 நம்மோடு உரையாடவும்,

 நமக்கு தேவையான உதவிகளை செய்யவும் ஆசைப்படுகின்றார்.

ஆசைப்படுவது மட்டுமல்ல அவர் எப்போதும் நம்மோடே இருக்கிறார்,

நம்மோடு பேசுகிறார்,

நமக்கு தேவையான உதவிகளைச் செய்து நம்மைப் பராமரித்துக்  கொண்டு வருகிறார்.

அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை நாம் உணர வேண்டும்.

நாமும் அவரோடு பேச வேண்டும்.

அவரது பராமரிப்புக்கு நன்றி கூற வேண்டும்.

அவர் எங்கும் இருப்பதால்,

அவர்  நமது உள்ளும், புறமும் இருப்பது மட்டுமல்ல,

 நாமும் அவருக்குள்தான் இருக்கிறோம்.

அவர் ஆவி.

நமக்கு இருப்பதுபோன்ற சடப்பொருளால் ஆன உடல் அவருக்கு இல்லை.

ஆகவே நாம் பேசுவது போல வாயினால் பேசுவதில்லை.

நமக்காக மனுவுரு எடுத்து இவ்வுலகில் வாழ்ந்த முப்பத்திமூன்று ஆண்டுகளும் அவர் நம்மோடு நம்மைப் போலவே வாயினால் பேசினார்.

மற்ற காலங்களில் எல்லாம் அவர் நம்முள் இருந்துகொண்டு நமது உள்ளத்தில்  எழுப்பும் உள் உணர்வுகள் (Inspirations) மூலமாகவும்,

நமது காவல் தூதர்கள் மூலமாகவும்,

அவர்  நிறுவிய கத்தோலிக்க திருச்சபையின் மூலமாகவும்,

அவர் நமக்காக படைத்த இயற்கையின் மூலமாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அவர் நம்மோடு பேச பயன்படுத்தும் மற்றொரு சாதனம் நாம் வாழும் சூழ்நிலை.

நமது சூழ்நிலை மூலமாக அவர் எப்படி நம்மோடு பேசுகிறார் என்பதைப்பற்றி நாம் தியானிக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனையும்
 ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், 
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் 
வாழும்படியாக படைத்திருக்கிறார்.

நாம் எந்த காலகட்டத்தில் பிறக்க வேண்டும்,

எந்த பெற்றோருக்குப் பிறக்க வேண்டும்,

எந்த சூழ்நிலையில் வாழ வேண்டும் 

என்பதையெல்லாம் தீர்மானிப்பவர் அவரே.

நாம் எந்த காலக்கட்டத்தில் பிறந்தாலும்,

எந்த குடும்பத்தில் பிறந்தாலும்,

எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும்

 ஒரே ஒரு விசயத்தில் மாற்றம் இல்லை. 

நாம் வாழ வேண்டியது காலத்திற்காகவோ, குடும்பத்திற்காகவோ, சூழ்நிலைக்காகவோ அல்ல,

நம்மை படைத்த கடவுளுக்காக மட்டுமே.

நாம் அவருக்காக வாழ்வதற்காக வாழ வழி காட்டுவதற்காகவே நாம் வாழும் சூழ்நிலை  மூலமாக நம்மோடு பேசுகிறார்.

நாம் வாழும் சூழ்நிலை நம்மை சுற்றி வாழும் மக்களையும்,

நாம் வாழும் இடத்தின் இயற்கை அமைப்பையும்,

காலநிலை மாற்றங்களையும் குறிக்கும்.

வித்தியாசமான மக்கள் வித்தியாசமான சூழ்நிலையில்  வாழ்கின்றார்கள்.

ஆகவே ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் எல்லோரும் இறைவனுக்காக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் வித்தியாசம் இல்லை.

ஒரு பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒருவனுக்கு படிப்பைப் கொடுத்து வேலைக்கு அனுப்புகிறார்கள்.

ஒருவனிடம் விவசாய பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒரு கடை வைத்துக் கொடுத்து வியாபாரி ஆக்குகிறார்கள்.

ஒருவனுக்கு சமூக சேவை செய்யும் பொறுப்பை கொடுக்கிறார்கள்.

நால்வரின் வாழ்க்கை முறைகளில் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரு விசயத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது.

பெற்றோர் மட்டிலும், குடும்பத்தினர் மட்டிலும் காட்டக்கூடிய அன்பிலும்,  ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் பாங்கிலும் வித்தியாசம் இருக்கக்கூடாது.

அதேபோல் தான் நாம் வித்தியாசமான சூழ்நிலைகளில் படைக்கப்பட்டிருந்தாலும்,

அவற்றின் மூலம் இறைவன் நம்மோடு பேசுவது இறையன்பைப் பற்றியும், பிறரன்பைப் பற்றியும் மட்டும்தான். 

ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் சூழ்நிலையில் இறைவனது பேச்சில் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் நோக்கம் ஒன்றே.

சவேரியார் வாழ்ந்த சூழ்நிலையின் மூலம் இறைவன் பேசி அவரை உலகை சுற்றிவந்த  வேத போதகர் ஆக்கினார்.

தெரெம்மாள் வாழ்ந்த சூழ்நிலை மூலம் இறைவன் பேசி அவளை நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழும் ஜெப வாழ்விற்கு   அழைத்தார்.

அருளானந்தர் வாழ்ந்த சூழ்நிலை மூலம் அவரோடு பேசி அவரை இந்தியாவிற்கு வேத போதகராக அனுப்பினார்.

அருட்திரு ஸ்டான்ஸ் சுவாமி வாழ்ந்த சூழ்நிலை மூலம் இறைவன் அவரோடு பேசி ஆதிவாசிகளுக்காக உழைக்கவும், அவர்களுக்காக உயிரையே கொடுத்து வேத சாட்சி ஆகவும் அழைப்பு விடுத்தார்.

அன்னைத் தெரசா வாழ்ந்த சூழ்நிலை மூலம் அவளை புனித கல்கத்தா தெரெசாவாக மாற்றினார்.

உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாழும் கோடிக்கணக்கான சூழ்நிலைகள் மூலம் ஒவ்வொருவரிடமும் இறைவன் பேசி ஆன்மீகப் பாதையில் வழிநடத்துகிறார். 

ஒவ்வொருவரும் தங்களது ஆன்மீக பாதையில் முன் நடந்தவற்றை பின்நோக்கி விசுவாச கண்ணோடு உற்று நோக்கினால்

 இறைவன் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்கின்ற சூழ்நிலை மூலம் எப்படியெல்லாம்  நம்மோடு பேசினார் என்பது தெளிவாகப் புரியும்.

 விசுவாசத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொரு செயலையும் இறைவனது அதிமிக மகிமைக்காகவே செய்யவேண்டும்.

 நாம் செய்யத் திட்டமிடும் ஒரு செயல் இறைவனுக்கு ஏற்றதாக இருந்தால் அதை நாம் வாழும் சூழ்நிலை வழியாகவே இறைவன் அதற்கு அனுமதி அளித்து விடுவார். 

அவரது சித்தத்திற்கு எதிராக இருக்குமானால் சூழ்நிலை மூலமாகவே அதை தடுத்து விடுவார்.

 இதை நமது அனுபவப் பூர்வமாக உணரலாம்.

ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

 அந்த வேலை இறைவனது விருப்பத்திற்கு எதிராக இருந்தால் அதில் நாம் சேராதவாறு தடுக்கும்  சூழ்நிலையை இறைவனே உருவாக்கி விடுவார்.

எவ்வளவோ முயன்று படித்தும் தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டால் படிப்பை நிறுத்திவிட்டு 

"வேறு வேலைக்குப் போ" என்று இறைவன் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

செப உணர்வோடு, அதாவது ஆண்டவரோடு இணைந்து வாழும் உணர்வோடு, நாம் வாழ்ந்தால்

நமது செயல் திட்டங்கள் பற்றி நமது சூழ்நிலை வழியாக இறைவன் பேசுவது நமக்கு நன்கு புரியும். 

நமது செயல் திட்டங்களுக்கு இறைவனது ஆசீரும் கிடைக்கும்.


லூர்து செல்வம்.

Saturday, December 18, 2021

புனித சூசையப்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

புனித சூசையப்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மரியாள் கருவுற்றிருப்பது குறித்து சூசையப்பர் மனதில் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தபோது

ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்.

 ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். 

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.


21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்.

 ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை கூற அவளது இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார்.

ஆனால் சூசையப்பரிடம் அவரது கனவில் தோன்றி பேசினார்.

சூசையப்பர் கனவுதானே என்று எண்ணி அதை ஒதுக்கிவிடவில்லை.

அவரிடமிருந்த ஆழ்ந்த விசுவாசத்தின் காரணமாக

நீதிமானாகிய அவர் தூதர் சொன்னதை ஏற்றுக்கொண்டு

அதன்படி செயல்பட்டார்.

மூன்று கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை ஆராதித்து விட்டு சென்ற பின்பும் 

கபிரியேல் தூதர் சூசையப்பரின் கனவில்தான் தோன்றி, அவரை மாதாவையும் இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு போகச் சொன்னார்.

ஏரோது இறந்ததும், மீண்டும் அவர் எகிப்தில் சூசையப்பரின் 
கனவில்தான் தோன்றி எகிப்திலிருந்து திரும்பச் சொன்னார்.

மீண்டும் கனவில்தான் தோன்றி கலிலேயாவிற்குப் போகச் சொன்னார்.

ஒவ்வொரு முறையும் சூசையப்பர் வானதூதரின் சொல்லுக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தார்.

வானதூதர் மூலமாக இறைவன் செய்தி அனுப்பிய போதெல்லாம்

 உடனடியாக அவர் பயன்படுத்திய கீழ்படிதல் என்ற என்ற புண்ணியத்தைத்தான் 

நாம் சூசையப்பரிடமிருந்து 
கற்றுக்கொள்ள வேண்டும்.

  சர்வ வல்லப கடவுளாகிய இயேசுவே அவரால் படைக்கப்பட்ட மனிதர்களான சூசையப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் நாசரேத்தூரில் பணிந்திருந்தார்.

சூசையப்பரைப்போல் எப்படி இறைச் செய்திக்குக் கீழ்ப்படிவது?

சூசையப்பருக்குக் கொண்டு வந்தது போல் நமக்கும் வானதூதர் இறைச் செய்தியைக் கனவில் கொண்டு வருவாரா?

நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு வான தூதரைக் காவல் தூதராக நியமித்துள்ளார். 

அவர் எப்போதும் நம்முடனே தான் இருக்கிறார்.

கடவுளது செய்தியை நமக்கு கொண்டுவருவதும், 

அவர் மூலம் நாம் செய்யும் செபங்களை கடவுளிடம் கொண்டு சேர்ப்பதும், 

நம்மை காவல் காப்பதும் அவர் பணி.

ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மோடு இருந்து கடவுள் நமக்கு தரும் செய்தியை உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம்  தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் விசுவாசக் கண்ணோடும், செப உணர்வோடும் செயல்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு அவர் தரும் செய்தி புரியும்.

நாம் எப்போதும் நமது காவல் தூதரோடு செப உறவில் இருக்க வேண்டும். 

பழைய ஏற்பாட்டின் தோபியாசு ஆகமத்தை வாசிப்பவர்களுக்கு காவல் தூதரின் பணி நன்கு புரியும்.

இயேசு தாய்த் திருச்சபை மூலமாக நம்மோடு பேசுகிறார்.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் இயேசுவின் இடத்தில் இருந்து கொண்டுதான் நம்மை நமது ஆன்மீக பாதையில் வழி நடத்துகிறார்கள்.

திருச்சபையின் பெயரால் அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் இறை இயேசுவிடமிருந்து தான் வருகின்றது.

நமது பங்கு குருக்கள் நமது ஆன்மிக வழிகாட்டிகள். (Spiritual Directors)

இறைச் செய்தியை நமக்குத் தருபவர்களும்,

ஆன்மீக ஆலோசனை தருபவர்களும்,

நாம் தவறு செய்யும் போது நம்மை திருத்துபவர்களும்,

நாம் செய்த பாவங்களை மன்னிப்பவர்களும்,

இயேசுவையே நமக்கு உணவாகத் தருபவர்களும் அவர்களே.

நமக்கு ஆன்மீக காரியங்களில் ஏதாவது சந்தேகமோ, பிரச்சினையோ ஏற்பட்டால் ஆலோசனைக்கு அணுக வேண்டியது அவர்களைத்தான்.

நமது ஆன்ம குருவானவர் (Spiritual Father) காட்டும் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு நடக்கலாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது.

நமது தாய் திருச்சபை நமக்குத் தந்துள்ள பைபிள் மூலமாகவும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.

விஞ்ஞானத்திற்கும்(Science) மெஞ்ஞானத்திற்கும் (Spirituality) சம்பந்தமே இல்லையென்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு.

இரண்டுக்கும் காரண கர்த்தா அதே கடவுள்தான்.

நாம் இறைவனுக்கு ஏற்ற ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான் இறைவன் நம்மை இந்த விஞ்ஞான உலகத்தில் வாழ விட்டிருக்கிறார்.

விஞ்ஞான விதிகள்படி இயங்கும் இயற்கை மூலமாகவும் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாக இறைவன் நம்மோடு பேசுகிறார்.

இயற்கையை உற்று நோக்கினாலே இறைவனின் அளவுகடந்த வல்லமையும், அவர் நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பும் நமக்கு  புரியும்.

இயற்கை நிகழ்வுகளில் நாம் இறைவனின் குரலைக் கேட்கலாம்.

ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த புத்தகத்தையும் பிரம்பையும் பயன்படுத்துவது போல், இறைவனும் இயற்கை நிகழ்வுகளை பயன்படுத்துகிறார்.

ஆசிரியர் இரண்டையுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கே பயன்படுத்துகிறார்.

புத்தகம் போதனைக்கு, 

பிரம்பு போதனையை கவனிக்காதவர்களுக்கு.

 கடவுள் சில இயற்கை நிகழ்வுகளை போதிப்பதற்காகவும்,

 சிலவற்றை போதனையை கவனியாதவர்களைத் திருத்துவதற்காகவும் பயன்படுத்துகிறார்.

வைரஸ் பிரச்சனையும் ஒரு இயற்கை நிகழ்வுதான்.

ஆசிரியர் கையிலுள்ள பிரம்பைப் போல் கடவுள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாம் அதை உணர்ந்து திருந்த வேண்டும்.

சில இயற்கை நிகழ்வுகளால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைகிறார்களே, அதன் பொருள்?

நெல்லை விளைய வைத்த விவசாயி அதை ஏன் அறுவடை செய்கிறான்?

தானியத்தை வீட்டுக்குக் கொண்டுவர.

மரணத்தை வாழ்க்கையின் முடிவு என்று நினைப்பவர்கள் தான் அதைக்கண்டு பயப்படுவார்கள்.

அது நித்திய வாழ்வின் ஆரம்பம் என்று நினைப்பவர்கள் பயப்பட மாட்டார்கள்.

அறுவடையான நெல் வீட்டுக்கு வருவது போல, இறைவனுக்காக வாழ்ந்து, மரணமடைபவர்கள் நித்திய பேரின்ப வீட்டிற்குச் செல்கிறார்கள்.

இது இறைவனின் திட்டம். 

காவல் தூதர்கள் மூலமாகவும்,

தாய்த் திருச்சபையின் மூலமாகவும்,

 இயற்கையின் மூலமாகவும் நம்மோடு இறைவன்தான் பேசுகிறார்.

ஆழமான விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவரது குரல் கேட்கும்.

 வகுப்பில் ஆசிரியர் பேசும்போது அதைக் கவனிக்காதவர்களின் காதுகளில் அவரது வார்த்தைகள் எதுவும் விழாது.

இறைவனைக் கவனித்து கொண்டிருப்பவர்களுக்கு அவரது குரல் கேட்கும்.

குரல் தரும் செய்தியும் கேட்கும்.

சூசையப்பரைப்போல் நாமும் இறைச் செய்திக்குக் கீழ்ப்படிவோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, December 17, 2021

முதல் கிறிஸ்மஸ்.

       முதல் கிறிஸ்மஸ்.

நவம்பர் மாதம் பிறப்பதற்கு முன்னாலேயே டிசம்பர் 25ல் கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்மசுக்கு திட்டம் போட ஆரம்பித்து விடுவோம்.

யார் யாருக்கு என்ன dress எடுப்பது, 
எந்தக் கடையில் எடுப்பது, என்ன விலையில் எடுப்பது, எப்போது எடுப்பது,

வீட்டை எப்படி அலங்கரிப்பது,

என்ன design ல் குடில் அமைப்பது,

எப்படி Star தொங்கப் போடுவது,

என்னென்ன உணவு தயாரிப்பது, 

யார் யாரை விருந்துக்கு அழைப்பது,

யார் யாருக்கு என்ன design ல் greetings அனுப்புவது,

இவ்வளவு செலவுகளுக்கும் எவ்வளவு Loan, எங்கே வாங்குவது 

என்றெல்லாம் திட்டம் போடுவோம்.

கிறிஸ்மசை ஒரு விழாவாக மட்டும் பார்ப்போமேயொழிய,

 அதை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டோம்.

அதை நினைத்துப் பார்த்திருந்தால் முதல் கிறிஸ்துமஸ் எப்படி கொண்டாடப்பட்டது என்பதை நினைத்துப் பார்த்திருப்போம்.

முதல் கிறிஸ்துமசைக் கொண்டாடியவர்கள் ஒரு ஏழைத் தச்சனும், அவரது மனைவியும்.

அவர்களுடைய சொந்த ஊர் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூர். 

அங்கேதான் அவர்களது வீடு இருந்தது.

ஆனால் அவர்கள் கிறிஸ்மசைக் கொண்டாடுவதற்காக சொந்த வீட்டை விட்டு விட்டு 

யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற ஊருக்குச் சென்றார்கள்.

அங்கு அவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை.

அவர்கள் விழாவை கொண்டாடியது யாருக்கோ சொந்தமான ஒரு மாட்டுத் தொழுவத்தில்.

அங்கு கிறிஸ்து பாலனுக்கு படுக்க கூட இடம் கிடைக்கவில்லை.

மாடுகளின் தீவனத் தொட்டியில் தான் மாதா இயேசு பாலனைக் கிடத்தியிருந்தாள்.

அவர்களுக்கு புது dress எதுவும் எடுக்கப்படவில்லை.

விருந்து எதுவும் தயாரிக்கப்படவில்லை.

அவர்களை பார்க்க வந்தவர்கள் அவர்களைப் போலவே ஏழைகளான ஆடு மேய்க்கும் இடையர்கள்.

ஆரவாரமில்லாமல் ஒரு ஏழை குடும்பம் கொண்டாடிய கிறிஸ்மசைத்தான் நாம் இப்போது ஆரவாரத்தோடும், பணக்காரத்தனத்தோடும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

பண வசதி இல்லாமையால் திருக்குடும்பம் கிறிஸ்மசை எளிமையாக கொண்டாடவில்லை.

உண்மையில் ஒரு ஏழைப் பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்த இயேசு குழந்தை உலகத்திற்கே அதிபதியான இறைமகன்.

அனைத்தையும் படைத்த சர்வ வல்லவ கடவுள்.

நித்திய காலமாக திட்டம் போட்டே ஏழையாகப் பிறந்தார்.

அவர் நினைத்திருந்தால் ஒரு பெரிய அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்து அகில உலகத்தையே அவரது பிறந்தநாளை அதிமிக 
ஆடம்பரத்தோடு கொண்டாட செய்திருக்கலாம்.

ஆனால் 

"ஏழைகளே பாக்கியவான்கள்" என்ற தனது போதனைக்கு முன்மாதிரிகையாக 

ஏழையாகப் பிறந்தவரது விழாவை  

 அவரது போதனைக்கு எதிராக பணக்காரத் தனத்தோடு கொண்டாடுவது  

"நாங்கள் உங்களது போதனைக்கு எதிரானவர்கள்" என்று அவரிடம் கூறுவதற்குச் சமம்.

குடிப்பதையே வெறுக்கும் ஒருவர் முன்னால் நாம் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் நம் மீது அவருக்கு மகிழ்ச்சி வருமா? எரிச்சல் வருமா?

ஏழ்மையின் காரணமாக கிழிந்த உடையை அணிந்திருப்பவர் முன் Tip top ஆக dress அணிந்து நின்று,

"என்னைப் பார், என் உடையைப் பார்" என்று சொன்னால் அவருக்கு நம் மீது என்ன வரும்?

நமக்கு முன் மாதிரிகை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு பாலனுக்கு லட்சக்கணக்கில் செலவழித்து குடில் அமைத்தால் அவருக்கு நம் மீது என்ன வரும்?

 பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக மனித உரு எடுத்த 
குழந்தை இயேசு பிறந்த விழாவில் முக்கியத்துவம் பெறவேண்டியது மீட்பு சார்ந்த ஆன்மீகம் மட்டுமே,

 ஆடம்பரமான கொண்டாட்டம் அல்ல.

நல்ல பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து ஆகியவை மட்டுமே விழாவின் மையம்.

எளிமையான முறையில் ஏழைகளோடு கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுவதையே இயேசு விரும்புகிறார்.

உடை இல்லாதவர்களுக்கு உடை,

உண்ண இல்லாதவர்களுக்கு உணவு,

கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல்

போன்ற பிறரன்பு செயல்களே குழந்தை இயேசுவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கிறிஸ்மஸ் விழா மட்டுமல்ல தாய்த் திருச்சபை கொண்டாடும் எல்லா விழாக்களுமே ஆன்மீக வளர்ச்சி சம்பந்தப்பட்டவை.

நமது விழாக்களில் உலக ஆடம்பரம்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால்

ஆன்மீகத்தை மறந்து விடுவோம்.

ஒரு கல்யாண வீட்டில் கொட்டு அடிக்க ஆரம்பித்தவுடனே, மாப்பிள்ளை தன்னை மறந்து எழுந்து கொட்டுப்பார்க்கப் போய்விட்டாராம்!

"ஏன் திருவிழா திருப்பலியின் போது உங்களை கோவிலில் காணவில்லை?"

"திருப்பலி முடிந்தவுடன் சப்பரம் தூக்க வேண்டும். நான் திருப்பலிக்கு வந்து விட்டால் சப்பரத்தை அலங்கரிப்பது யார்?"

"அப்போ நீங்கள் திருவிழா கொண்டாடுவது சப்பரத்தை அலங்கரிப்பதற்காக மட்டும்!"

                       *****

"இன்றைய திருவிழா திருப்பலி பிரசங்கத்தில் சாமியார் என்ன சொன்னார்?"

" நான் கோவிலுக்குள்ளே வரவே இல்லை. பூசை முடிந்தவுடன் எல்லோருக்கும் பிரியாணி சாப்பாடு. பிரியாணி தயாரிப்பதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்."

"அப்போ பிரியாணி சாப்பிடுவதற்காகத்தான் அந்தோனியாருக்கு விழாவா?"


ஆன்மாவை மறந்து ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது 

பொண்ணு, மாப்பிள்ளை இல்லாமல் திருமண விருந்து மட்டும் கொடுப்பது போலாகும்!

ஆன்மாவை தயாரிப்பதற்காகத்தான் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்பு திருவருகைக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜவுளி எடுப்பதற்கும் வீட்டை அலங்கரிப்பதற்கும் அல்ல.

ஆகவே ஜெபத்தோடும், தவத்தோடும் கிறிஸ்மஸ் விழாவிற்கு நமது ஆன்மாவை தயாரிப்போம்.

கிறிஸ்து விரும்புகிற எளிமையோடு விழாவைக் கொண்டாடுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, December 16, 2021

"ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்."(லூக்.7: 30

"ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்."
(லூக்.7: 30)

ஸ்நாபக அருளப்பர் காலத்தில் வாழ்ந்த யூத மக்களை அவர்களின் ஆன்மீகத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.

1. படிப்பறிவில்லாத சாதாரண மக்கள். பாவிகளாகக் கருதப்பட்ட வரி தண்டுவோர் (ஆயக்காரர்),
பாவத்தில் வாழ்ந்த விலைமாதர்.

2.தங்களை பரிசுத்தவான்கள் என்று தற்பெருமையாக எண்ணிக் கொண்டிருந்த சட்டம் பயின்ற பரிசேயரும், சட்டவல்லுநரும். 

இதில் முதல் வகையினர்தான் அருளப்பரின் ஞானஸ்நானத்தால் ஆன்மீகப் பயன் பெற்றார்கள்.

அவர்களைப் பற்றி,

"அருளப்பர் சொன்னதை மக்கள் எல்லாரும் கேட்டு, 

அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்று,

 கடவுளின் திட்டம் ஏற்றத்தக்கது என்று காட்டினார்கள்.

 ஆயக்காரரும்கூட ஞானஸ்நானம் பெற்றனர்.

 ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்."

என்று நம் ஆண்டவர் கூறினார்.

ஆனால் இரண்டாவது பிரிவினர் அருளப்பரது போதனையாலும், ஞானஸ்நானத்தாலும் பயன் எதுவும் பெறவில்லை.

அவர்களைப் பற்றி,

"ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்."

என்று நம் ஆண்டவர் கூறினார்.


அருளப்பர் நீதிநெறியைக் காட்ட அவர்களிடம் வந்தார்: அவர்களோ அவரை நம்பவில்லை. 

ஆண்டவருடைய போதனையாலும் பயன்பெற்றவர்கள் முதல் பிரிவினரே.

அவர்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்கவும், தங்கள் வியாதிகளிலிருந்து குணம் பெறவும், மனம் திரும்பி பாவமன்னிப்பு பெறவும் அவர் சென்ற இடமெல்லாம் அவர் பின்னே சென்றார்கள்.


ஆனால் பரிசேயர்களும், சட்ட வல்லுநர்களும் அவரது பேச்சில் குறை காணவும், அவரை கொல்வதற்காகவும் அவர் பின்னாலே சென்றனர். 

இந்த இரண்டு வகையினரைப் பற்றிய நற்செய்திப் பகுதியை வாசிக்கும் நாம் அதன் மூலமாக 
ஆன்மீகப் பயன்பெற வேண்டும். 

ஆன்மீகப் பயன் பெறாவிட்டால் நற்செய்தியை வாசித்தும் பயனில்லை.

ஆன்மீகப் பயன்பெற வேண்டுமென்றால்
நாம் எந்த வகையினரைச் சார்ந்தவர்கள் என்று தியானித்து அறிய வேண்டும்.

ஆயக்காரரும் விலைமாதரும் தங்களை பாவிகள் என்று ஏற்றுக் கொண்டு மனம் திரும்பியது போல்

 நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொண்டு மனம் திரும்ப விருப்பம் உள்ளவர்களா,

அல்லது 

பரிசேயர்களை போல நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைத்துக் கொண்டு மாற விருப்பம் இல்லாதவர்களா என்பதை சிந்தித்து அறிய வேண்டும்.

நமது வசதிக்காக இரண்டு பிரிவினருக்கும் இரண்டு பெயர்கள் வைத்துக் கொள்வோம்.

முதல் பிரிவினருக்கு ஏற்போர் எனவும்,

இரண்டாவது பிரிவினருக்கு மறுப்போர் என்றும் பெயர்கள் வைத்துக் கொள்வோம்.

நாம் ஏற்போரா? மறுப்போரா?


வியாதியஸ்தன் தனக்கு வியாதி உள்ளது என்று ஏற்றுக் கொண்டால் தான் மருத்துவம் பெற்று குணமடைய முடியும்.

வியாதியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மருத்துவம் பெறவோ குணமடையவோ முடியாது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் மத்தியில் வாழ்ந்த அருளப்பர் இன்று நம்மிடையே இல்லை.

ஆனால் அன்று வாழ்ந்த அதே இயேசு இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது மனித சுபாவத்துக்கு உரிய ஆன்மாவோடும், உடலோடும், இரத்தத்தோடும் திவ்ய நற்கருணையில் நம்மிடையே வாழும் இயேசு,

தேவ சுபாவத்தில் நமது உள்ளம் என்னும் கோவிலில் நமக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்று யூத மக்களிடையே வாய்திறந்து பேசிய இயேசு இன்று நம்மோடு உள்ளம் திறந்து பேசுகிறார்.

அன்று பாவிகள் அவரது பேச்சை கேட்டு மனம் திரும்பியது போல நாமும் அவரது பேச்சை கேட்டு அதன்படி நடக்கிறோமா,

அல்லது

பரிசேயர்களைப் போல செயல்படுகிறோமா?


நமது வார்த்தைகளில்,

நாம் ஏற்போரா? மறுப்போரா?

நமது உள்ளத்தில் எண்ணங்கள் மூலம் இயேசு பேசுகிறார்.

அதிகாலையில் கண் விழித்தவுடன்
இயேசு பேசுகிறார்,  உள்ளத்தில் தோன்றும் எண்ணம் மூலம்,

"சிலுவை அடையாளம் வரைந்து எழு, காலை ஜெபத்தை சொல்லிவிட்டு, பைபிளில் இன்றைய வாசகத்தை வாசி."

நாம் ஏற்போராக இருந்தால் உடனே அப்படியே செய்வோம்.

அன்று முழுவதும் வாசகம் நம்மை வழி நடத்தும்.

மறுப்போராக இருந்தால் Cell phone ஐத் தேடுவோம்.

ஏற்போராக இருந்தால் நாளின் ஒவ்வொரு வினாடியும் இயேசு நல்ல எண்ணங்களால் நம்மோடு பேசிக் கொண்டிருப்பார்.

 நாமும் அவர் சொன்னபடி செய்து கொண்டிருப்போம்.

எப்போதும் நமது முகத்தில் புன்சிரிப்பு இருக்கும்.

தேவைப் படுவோருக்கு உதவிகள் செய்வோம்.

நம்மை காயப்படுத்துவோரை மன்னிப்போம்.

நமக்கு தீங்கு செய்வோருக்கு நன்மை செய்வோம்.

நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

இயேசுவின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறி விட்டால் 
வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் போலவே வாழ்வோம்.

மறுப்போராக இருந்தால் இயேசு பேசுவது எதுவும் கேட்காது.

இஷ்டபடி வாழ்வோம்.

இயேசு பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தார்.

பாவிகளை மிகவும் அதிகமாக நேசிக்கிறார்.

இயேசுவின் நேசத்தை நாம் உணர வேண்டுமென்றால் முதலில் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டால்தான் பாவங்களுக்காக மனஸ்தாபப் படுவோம்.

பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டால்தான் பாவங்கள் மன்னிக்கப்படும்.

பாவங்கள் மன்னிக்கப் பட்டால்தான் நாம் பரிசுத்தர்களாக மாறுவோம்.

பரிசுத்தர்களாக மாறினால்தான் விண்ணகத்தில் நுழைய முடியும்.

நலம் பெற விரும்புகிறவன் முதலில் தனக்கு வியாதி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல்தான் பரிசுத்தர்களாக வாழ விரும்புவோர் முதலில் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

பாவிகளை தேடி வந்த இயேசு எப்போதும் நம்மோடு இருப்பார்.

லூர்து செல்வம்.

Wednesday, December 15, 2021

"என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" (லூக்.7:23)

"என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" 
(லூக்.7:23)

அருளப்பர் தம் சீடருள் இருவரை அழைத்து, "வரப்போகிறவர் நீர்தாமோ ? 

அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவர ஆண்டவரிடம் அனுப்பினார்.

அருளப்பருக்கு இயேசுதான் மெசியா என்பது உறுதியாக தெரியும்.

இயேசுவுக்கு முன்னோடியாக வந்தவர் அவர்தானே.

அன்னை மரியாள் எலிசபெத்தம்மாளை  பார்க்கச் சென்றபோதே

 மரியாளின் வயிற்றில் இருந்த குழந்தை இயேசுவை அடையாளம் கண்டு 

தன் தாயின் வயிற்றினுள்ளே குழந்தையாய் இருந்தபோதே அக்களிப்பால் துள்ளியவர் அருளப்பர்.

அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற இயேசு யோர்தான் நதிக்கு வந்தபோதே  

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.''


என்று கூறி   அவரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

பெலவேந்திரருக்கும், மற்றொரு சீடருக்கும் இயேசுவை அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

தம் சீடருள் வேறு இருவருக்கு இயேசுவை அறிமுகப் படுத்துவதாகத்தான் அவர்களை இயேசுவிடம் 

நேரடியாக அனுப்பி,

"வரப்போகிறவர் நீர்தாமோ ? 

அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவரச்  சொன்னார்.
 
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்:

 குருடர் பார்க்கின்றனர், 

முடவர் நடக்கின்றனர்,

 தொழுநோயாளர் குணமடைகின்றனர், 

செவிடர் கேட்கின்றனர், 

இறந்தவர் உயிர்க்கின்றனர்,

 எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது." என்று கூறியதோடு,

"என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்

(And blessed is the one who takes no offense at me.)

இயேசு தான் செய்த புதுமைகளைக் முதலில் சொல்கிறார்,

அடுத்து,

என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்"

என்று சொல்கிறார்.

இயேசு செய்த புதுமைகளில் இடறல் படுவதற்கு என்ன இருக்கிறது? 

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இடறல் பட எதுவும் இல்லாதது போல் தோன்றும்.

ஆனால் இயேசுவின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்தால் 

அவரது கூற்றுக்கு பொருள் புரியும்.

இயேசு தாம் செய்த புதுமைகளை பற்றி கூறும்போது அவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய  உண்மையைக் கூறுகிறார்.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இயேசு உடல் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணமாக்குவதற்காக வந்திருப்பது போல் தோன்றும்.

இயேசு உடற்கூறு சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்ல, 

ஆன்மீக மருத்துவர்.

தியானிப்பவர்களுக்கு அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு நோயும் ஆன்மீக சம்பந்தப்பட்ட நோயைக் குறிப்பது புரியும்.

அவற்றைக் குணமாக்கவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

உடற்கூறு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் போதே

அவை குறிப்பிடும் ஆன்மீக  நோய்களையும்  குணமாக்கினார்.

அதற்காகவே நோய்களை குணமாக்கும் முன் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசுவாசத்தை பரிசாக  முதலில் கொடுத்துவிட்டு,

பின் அவர்களிடம்,

"உன் விசுவாசம் உன்னைக் 
குணமாக்கிற்று" என்று சொல்வது அவர் வழக்கம்.

விசுவாச கண்ணோடு பார்க்கும்போது குணமான ஆன்மீக நோயாளிகள் யார் என்பது நமக்குப் புரியும்.

குருடர்
முடவர்
தொழுநோயாளர்
செவிடர்
இறந்தவர்

 ஆகியோர் அவர் குணமாக்கிய நோயாளிகள்.

இந்த உடற்கூறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறிப்பிட்டுக் காட்டும் ஆன்மீக நோய்கள்:

விசுவாசக் கண் இல்லாமை.

ஆன்மீக பாதையில் நடக்க முடியாமை.

எது நல்லது, எது கெட்டது என்ற உணர்ச்சி இல்லாமை.

இறை வாக்கிற்கு செவி கொடாமை.

பாவத்தால் ஏற்படும் ஆன்மீக இறப்பு.

இந்த நோய்களைக் குணமாக்கவே  இயேசு உலகிற்கு வந்தார்.

மக்களுக்கு இறைவன் மேல் விசுவாசத்தை கொடுக்க வேண்டும்.

விசுவாச அர்ப்பண வாழ்வின் மூலம் மக்கள் விண்ணகப் பாதையில் நடக்க வேண்டும்.

கெட்டது  எது,  நல்லது எது என்பதை உணர்ந்து, கெட்டதை நீக்கி நல்லதை செய்ய வேண்டும்.

இறைவன் அளிக்கும் நற்செய்தியை காதுகொடுத்து கேட்கவேண்டும்.

ஆன்மாவின் சாவிற்கு காரணமாகும் சாவான பாவங்களுக்கு  மன்னிப்புப் பெறவேண்டும்.


இவை சம்பந்தப்பட்ட ஆன்மீக நோய்கள்  நம்மிடம் உள்ளன என்று இயேசு கூறும் போது நாம் இடறல் படக்கூடாது.

We should not feel offended by His words.

நம்மிடம் உள்ள ஆன்மீக நோய்களை நமக்கு இயேசு உணர்த்தும் போது நாம் மனம் உவந்து ஏற்றுக்கொள்வதோடு மனம் திருந்தி வாழ வேண்டும்.

அனேக சமயங்களில் நாம் எதையும் விசுவாச கண்ணால் பார்ப்பதில்லை.

நமக்கு வரும் துன்பங்களை விசுவாச கண்ணால் பார்த்தால் அவை ஆசீர்வாதங்கள் என்பது புரியும்.

நாம் சுமப்பதற்கு இயேசு தந்த சிலுவை என்று அவைகளை ஏற்றுக் கொள்வோம்.

விண்ணக பாதையில் ஆன்மீக நடைபோடும்போது உலகத்தின் மீது நமக்கு பற்று ஏற்படாது.

உலகத்தின் மீது  பற்று ஏற்பட்டால்
நமது ஆன்மீக வாழ்வு பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது.

நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

நற் செய்தியை வாசித்து அதன்படி வாழ வேண்டும்.

சாவான பாவத்தில் விழ நேர்ந்தால் ஆன்மீக இறப்பு ஏற்படும்.உடனே பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற வேண்டும். ஆன்மா மீண்டும் உயிர் பெறும்.


இவற்றையெல்லாம் இயேசுவின் இடத்திலிருந்து நம்மை வழிநடத்தும் பங்கு குரு அடிக்கடி சுட்டி காண்பிப்பார்.

 நமது ஆன்மீக நோய்களை குருவானவர் நமக்கு சுட்டிக் காண்பிக்கும் போது அவர் மீது வருத்தப் படாமல் மனம் திரும்பி வாழ வேண்டும்.

பங்குக் குருவின் வார்த்தைகள் 
இயேசுவின் வார்த்தைகள்.

அவரைப்பற்றி நாம் இடறல் படக்கூடாது.

மகிழ்ச்சியோடு  அவற்றை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ வேண்டும்.

இது இயேசு நமக்கு வழங்கும் அறிவுரை.

லூர்து செல்வம்.

Tuesday, December 14, 2021

நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ்கின்றோமா?

நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ்கின்றோமா?

உலகியல் வாழ்க்கை வாழ்வோர் தங்களை மையமாக வைத்துக் கொண்டு வாழ்வார்கள், அதாவது அவர்கள் தங்களுக்காக வாழ்வார்கள்.

தங்களது சூழ்நிலையை தங்கள் வாழ்வுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

தங்களுக்கு பயன் படாதவற்றைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் ஆன்மீக வாழ்க்கை வாழ்வோர் இறைவனை மையமாக கொண்டு வாழ்வார்கள். அதாவது இறைவனுக்காகவே வாழ்வார்கள்.

இறைவனை மகிமை படுத்துவது மட்டுமே அவர்களது வாழ்வின் குறிக்கோளாக இருக்கும்.

இறைவனது மகிமைக்காக தங்களையே தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மை மையமாக வைத்து வாழ்கின்றோமா?

 அல்லது 

இறைவனை மையமாக வைத்து வாழ்கின்றோமா?

இந்த கேள்வியே வினோதமாகத் தெரியும்,

 ஏனெனில் கிறிஸ்தவர்கள் வாழவேண்டியது ஆன்மீக வாழ்க்கை.

கிறிஸ்தவர்கள் வாழவேண்டியது ஆன்மீக வாழ்க்கை என்பதில் ஐயமில்லை.

ஆனால் ஆன்மீக வாழ்க்கையை ஆன்மீகத் தனமாக வாழ்கின்றோமா, 

உலகியல் தனமாக வாழ்கின்றோமா என்பதுதான் கேள்வி.

இறைவனை மையமாக வைத்து வாழவேண்டிய ஆன்மிக வாழ்க்கையை,

நம்மை மையமாக வைத்து வாழ்ந்தால் அது 
உலகியல்தனமாக மாறிவிடும்.


 நாம் இறைவனுக்காக வாழ்ந்தால் மட்டுமே அது உண்மையான ஆன்மீக வாழ்க்கை.

 நமது தேவைகள் நிறைவேறுவதற்காக இறைவனை பயன்படுத்துவதற்காக வாழ்ந்தால் அது உலகியல் வாழ்க்கை.

ஒருவன் பள்ளிக்கூடத்திற்கு போவதால் மட்டும் அறிவை பெற்று விடுவதில்லை,

 அவன் எதற்காக பள்ளி செல்கின்றானோ, அதைச் செய்தால் தான், அதாவது பாடங்களை படித்தால் தான் அறிவைப் பெற முடியும்.

அதேபோல ஒருவன் கோவிலுக்குப் போவதால் மட்டும்,

அல்லது 

செபங்களைச் சொல்வதால் மட்டும் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து விடுவதில்லை.

இறைவனை ஆராதித்து வழிபடுவதற்காகவும்,

இறைவனது பராமரிப்புக்கு நன்றி சொல்வதற்காகவும்,

இறைவனுக்காக வாழ தேவையான அருள் வரங்களை கேட்பதற்காகவும்,

இறைவனோடு இணைந்து இருப்பதற்காகவும் 

கோவிலுக்கு சென்று செபம் செய்தால் மட்டுமே அவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இவை எதையும் செய்யாமல் தனது உலக வசதிகளை பெறுவதற்காக இறைவனிடம் வேண்ட கோவிலுக்கு சென்றால் அதில் ஆன்மீகம் இல்லை.

வங்கியிலிருந்து கடன் பெறுவதற்காக வங்கிக்கு சென்றால் அது சொந்த நலனுக்காக,

 வங்கியின் நலனுக்காக அல்ல. 

அதேபோல

நமது உலக வசதிகளை பெற வேண்ட கோவிலுக்கு சென்றால் அது நமது நலனுக்காக, இறைவனது மகிமைக்காக அல்ல.

இறைவனது மகிமைக்காக அன்றி எதைக் செய்தாலும் அது உண்மையாக ஆன்மீகம் இல்லை.

நாம் தேட வேண்டியது இறையரசை மட்டுமே,

நமது வாழ்க்கைக்கு என்ன தேவை என்று இறைவனுக்கு தெரியும்.

நாம் கேட்காமலேயே அவற்றை நமக்கு தருவார்.

பிள்ளைக்கு என்ன என்ன வேண்டும் என்று பெற்ற தாய்க்கு தெரியாதா?

படைக்கப்பட்ட நமக்கு என்னென்ன தேவை என்று படைத்தவருக்கு தெரியாதா?

"எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.


32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.


33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:31 - 33)

நமது வாழ்வின் ஆன்மீக நோக்கத்தை மறந்து விட்டு,

உலக வாழ்க்கைக்காக மட்டும் இறைவனைத் தேடினால் நாம் வாழ்வது உலகியல் வாழ்க்கையே.

உலகம் அல்லது உடல் சம்பந்தப்பட்ட வசதிகளை இறைவனிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை,

 ஆனால் அவற்றை ஆன்மீக நோக்கத்திற்காக கேட்க வேண்டும்.

அதாவது அவை நமது உண்மையான ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கும்படியாக கேட்க வேண்டும். 

இறைவனுக்காக மட்டுமே என்பதை மறந்துவிட்டு, நமது வசதிக்காக மட்டுமே எந்த அடிப்படையில் கேட்கும் எந்த உதவியும் உலகியல் சம்பந்தப்பட்டதே.

இறைவனுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளில்கூட 
உலகியல்தனம் கலந்து விடக்கூடாது.

"தேர்வில் வெற்றி , வேலை, சம்பளம் கூடுதல் போன்ற உலக நோக்கங்கள் நிறைவேறினால்

 கோவிலுக்கு இவ்வளவு காணிக்கை செலுத்தி விடுகிறேன்"

 என்று நேர்ந்தால் அது வேலைக்காக அரசியல்வாதியிடம் லஞ்சம் கொடுப்பது போல ஆகிவிடும்.

 நமது காணிக்கையை இறைவனுக்கு கொடுக்கும் லஞ்சமாக மாற்றிவிடக் கூடாது.

இறைவனது பராமரிப்புக்கு நன்றியாக,

வேறு நிபந்தனை ஏதுமின்றி,

செலுத்தப்படுவதே காணிக்கை.

நமது பிறரன்பு பணிகள் கூட நமது இறை அன்பின் , அதோடு இணைந்த பிறர் அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க வேண்டும்.

நிபந்தனைகள் அடிப்படையில் செய்யும் பிறரன்பு பணிகள் உண்மையில் பணிகள் அல்ல.

நமது பெருமைக்காக செய்யும் பணிகளும் பணிகள் அல்ல.

அன்பின் அடிப்படையில் செய்யும் பணிகளே பணிகள். 

நமது இறை அன்பும் பிறர் அன்பும் பணிகளாக மாற வேண்டும்.

அவையே அன்பே உருவான இறைவனுக்கு பிடிக்கும்.

அவை மட்டுமே உண்மையான ஆன்மீகத்தின் வெளிப்பாடு.

நமது ஆன்மீக வாழ்க்கையை இறைவனுக்காக வாழ்கின்றோமா அல்லது நமக்காக வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, December 13, 2021

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்."(மத்.21:31)

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்."
(மத்.21:31) 

தலைமைக்குருக்களும், மக்களின் மூப்பரும் இயேசுவிடம் வந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

ஒரு தந்தையின் இரு மக்களுள் ஒருவன் ஒரு வேலையை செய்வதாகச் சம்மதித்து விட்டு வேலையை செய்யவில்லை.

அடுத்தவன் வேலையை செய்ய சம்மதிக்காமல் இருந்துவிட்டு, வேலையை செய்து முடித்தான்.

இவ்விருவரில் எவன் தந்தையின் விருப்பப்படி நடந்தவன் என்று கேட்டார்.

 சம்மதிக்காவிட்டாலும் வேலையை செய்தவன்தான் தந்தையின் விருப்பப்படி நடந்தவன்தான் என்றனர்.


தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் இறைவன் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்தவர்கள். ஆனால் அருளப்பர் காட்டிய நீதிநெறியைக் நம்பவில்லை. 

ஆயக்காரரும், விலைமாதரும் இறைவன் திட்டத்தை  நிறைவேற்றுவதாக வாக்கு கொடுக்காமல் பாவம் செய்தார்கள்.

ஆனால் அருளப்பர் போதித்த போது அவரது போதனையை ஏற்றுக்கொண்டு பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனம்  திரும்பினார்கள்.
ஆகவே அவர்கள்
கடவுள் அரசில் நுழைவார்கள்.

நாம் பாவம் செய்பவர்களைப் பார்த்தவுடன் இவர்கள்   விண்ணகம் செல்ல மாட்டார்கள் என்று தீர்மானித்து விடக்கூடாது.

எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும்,

 எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் மனம் திரும்பி விட்டால் அவர்களுக்கு விண்ணகம் உறுதி.


ஒரு தாய் சுகமில்லாத தன் குழந்தை மீது அதிக அக்கறை காட்டுவது போல கடவுளும் பாவிகள் மீது அதிக அக்கறை காட்டுகிறார்.

இறைமகன்  மனுமகன் ஆகி உலகிற்கு வந்ததே   பாவிகளைத் தேடித்தான்.

நல்ல ஆயன் தனது மந்தையில் இருந்து காணாமல் போன ஆட்டை தேடி அலைவது போல நமது ஆண்டவரும் காணாமல் போன பாவிகளைத் தேடி உலகிற்கு வந்தார்.

அவர் பாவிகள் வீட்டில் உண்பதை கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து,

 "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.


12 இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

13 " பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள்.

 ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:11-13)

இயேசு தலைமைக்குருக்களிடம் கேட்ட கேள்விகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது:

"என்னை இறைப்பணிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது,

உண்மையிலேயே அர்ப்பண வாழ்வு வாழவேண்டும்.

அர்ப்பண வாழ்வு வாழாவிட்டால் 
அவர்கள் உலகில் வாழ்வது பயனற்றது."

"நமது முன்னால் பாவிகளாக வாழ்பவர்கள் அனைவரும் நரகத்திற்கு போவார்கள் என்று தீர்மானித்து விடக்கூடாது, 

 ஏனெனில் அவர்கள் எந்த நேரத்தில்,

 மரண நேரத்திலும் கூட, 

மனம் திரும்பினாலும் அவர்களுக்காக விண்ணகத்தின் கதவு திறந்தே இருக்கும்.

நல்ல கள்ளன் இதற்கு ஒரு உதாரணம்."

இறை பணிக்கு தங்களை அர்ப்பணிப்பவர்கள் அன்னை மரியாளைப் போல வாழ்நாள் முழுவதும் அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும்.

 பாவிகளாய் வாழ்பவர்கள்  மதலேன்மரியாளைப் போல மனம் திரும்பி புனித வாழ்வு வாழ வேண்டும்.

உயிர்த்த  இயேசு முதல் முதல் காட்சி கொடுத்தது தன்னை பெற்ற அன்னைக்குத்தான்.

அடுத்து தனது அப்போஸ்தலர்களுக்குக் காட்சி கொடுப்பதற்கு முன்பாகவே அவர்  மனம் திரும்பிய பாவியாகிய மதலேன் மரியாளுக்குக் காட்சி கொடுத்தார்.

அவள் மூலமாக தான் உயிர்த்த செய்தியை அவர்களுக்கு இயேசு அறிவித்தார்.

'இதோ! இயேசு, அவர்களுக்கு

 (மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,) 

எதிர்ப்பட்டு, "வாழ்க" என்றார். அவர்கள் அணுகி, அவர் பாதங்களைத் தழுவிக்கொண்டு அவரைப் பணிந்தனர்.

10 இயேசு அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், நீங்கள் என் சகோதரரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்று சொன்னார்.
(மத்.28:9,10)

மதலேன் மரியாள் மனம் திரும்பியதால் அப்போஸ்தலர்களுக்கே அப்போஸ்தலராக விளங்கும் பாக்கியத்தைப் பெற்றாள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக பாவியாக வாழ்ந்து கொண்டிருந்த அகுஸ்டினார் மனம் திரும்பிய பின் புனித அகுஸ்டினாராக மாறினார்.

பாவங்களுக்கு மனஸ்தாபப்பட  நேரம் காலம் எல்லாம் தேவையில்லை.

விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பெண்ணைக் கூட இயேசு தீர்ப்பிட  விரும்பவில்லை.


"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ"
(அரு. 8:11)

"இனிமேல் பாவஞ்செய்யாதே" என்று கூறியதால் பழைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்று எடுத்துக் கொள்ளலாம்.

 மன்னிக்கப்பட்டிருக்க வேண்டுமானால் அந்தப் பெண் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டிருக்க வேண்டும்.


விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்தாலும் இயேசுவை பார்த்தவுடன் அவள் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டிருக்க வேண்டும்.

பாவியாக வாழ்ந்த சக்கேயு கூட இயேசுவைப் பார்த்தவுடன்
மனம்திரும்பி விட்டானே!

இயேசுவும் அவன் வீட்டில்  தங்க ஆசைப் பட்டதுமல்லாமல் 

அவன் மனம் திறந்து பேசிய உடன் 
இயேசு 

"இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

10 இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

மீட்பு என்ற வார்த்தையிலே மனஸ்தாபமும், மன்னிப்பும் அடங்கியுள்ளன.

 நாமும் நமது  மனக்கண் முன்
 இயேசுவை நிறுத்தி  அவரைப்  பார்த்துக்  கொண்டிருந்தால் மனஸ்தாபம் வந்துவிடும்.

எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவன் நரகத்திற்கு போய்விட்டான் என்று கூற நமக்கு உரிமை இல்லை.

 இயேசுவை மரணத்திற்கு தீர்ப்பிட்ட பிலாத்து கூட 

நம்மை வரவேற்க மோட்சத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தால் கூட ஆச்சரியபடுவதற்கில்லை.

நாம் எல்லோருமே பாவிகள்தான்.

 நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு,

 இறைவனின் சித்தப்படி நடந்தால்  நம் அனைவருக்கும் விண்கை வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

Saturday, December 11, 2021

"இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" (லூக்.3:11)

"இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" (லூக்.3:11)

இயேசுவின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்த வந்த அவரின் முன்னோடியான ஸ்நாபக அருளப்பரின் போதனை இயேசுவினுடைய போதனையை ஒட்டி இருப்பதில் வியப்பில்லை.

''ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை கொடுங்கள், 

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்"

என்ற இயேசுவின் போதனையை பிரதிபலிக்கிறது ஸ்நாபக அருளப்பரின் போதனை.

(ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்)

 இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் மனித இயல்பு.
அப்போதுதான் நாம் கொடுத்தது திரும்பி வரும்.

வசதி உள்ளவர்களுக்கு ஏதாவது gift கொடுத்தால் அது என்றாவது ஒருநாள் திரும்பிவரும்.

திரும்பி தரக் கூடியவர்களுக்கு கொடுப்பவன் சாதாரண மனிதன்.

திரும்பி தர முடியாதவர்களுக்கு கொடுப்பவன்தான் உண்மையான விசுவாசி.

"நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது,
 உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, 
செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. 

அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். 

அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.

13 மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

14 அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை.

 நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" 
(லூக்.14:12-14)

என்று ஆண்டவர் சொல்கிறார்.

ஆண்டவருடைய கூற்றிலிருந்து ஒரு மிக முக்கியமான உண்மை தெரிய வருகிறது.

இல்லாதவனுக்கு கொடுப்பவன் உண்மையிலேயே பேறு பெற்றவன். ஏனெனில் அவன் உண்மையில் எல்லாம் உள்ளவருக்கு, அதாவது, கடவுளுக்குக், கொடுக்கிறான்.

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

உலகில் எதுவுமே இல்லாதவனுக்கு கொடுக்கும்போது எல்லாம் உள்ள கடவுளுக்கு கொடுக்கிறோம்.

கடவுள் தனக்கு கொடுப்பவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வை பரிசாக அளிக்கிறார்.

உலகில் உள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள் கொடுத்த அளவையே திரும்ப பெறுவார்கள்.

எதுவும் பெறாமல் கூட போகலாம்.


 ஆனால் தாகம் உள்ள ஒருவருக்கு கடவுள் பெயரால் ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் நமக்கு
 அழியாத நித்திய பேரின்ப வாழ்வு பரிசாகக் கிடைக்கும்.

இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆண்டவரின் போதனையை ஆழ்ந்து தியானித்தால் மற்றொரு முக்கியமான உண்மை நமக்கு தெரியவரும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால் உலகில் இருப்பவர்களும் இருக்கவேண்டும், இல்லாதவர்களும் இருக்க வேண்டும்.

இல்லாதவர்களே இல்லாவிட்டால் ஆண்டவரின் இந்த போதனையை கடைப்பிடிக்க இயலாமல் போய்விடும்.

இருப்பவர்களை படைத்த அதே கடவுள் தான் இல்லாதவர்களையும் படைத்திருக்கிறார்.

அதாவது சமூக ஏற்ற தாழ்வுகளோடு உலகை படைத்திருக்கிறார்.

ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ உலகை விரும்புகிறவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

 ஏற்ற தாழ்வுகளே இல்லாவிட்டால் உலகம் இயங்க முடியாது.

மனிதனைப் படைப்பதற்கு முன்னால் இறைவன் இயற்கையை படைத்தார்.

இயற்கையை ஒட்டி வாழும் விதமாகவே மனிதனை படைத்தார்.

 ஏற்ற தாழ்வுகள் இருப்பதால்தான் இயற்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது.

வெப்பமும் குளிர்ச்சியும் இருப்பதால்தான் குறைந்த காற்றழுத்த மண்டலமும் அதிக காற்றழுத்த மண்டலமும் இருக்கின்றன.

அவை இல்லாவிட்டால் காற்று வீச முடியாது.

காற்று வீச முடியாவிட்டால் மேகங்கள் பயணிக்க முடியாது.

மேகங்கள் பயணிக்காவிட்டால் மழை பெய்ய முடியாது.

மழை பெய்யாவிட்டால் ஆறுகள் ஓட முடியாது.

மேட்டிலிருந்துதான் பள்ளத்தை  நோக்கி
 தண்ணீர் ஓடும்.

ஆகவே மேடு பள்ளம் இல்லாவிட்டால் 
ஆறுகளும் இருக்காது, 
ஏரிகளும் இருக்காது,
 குளங்களும் இருக்காது, 
குட்டைகளும் இருக்காது.

ஏற்றதாழ்வுகள் இருப்பதால்தான் இயற்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கையை ஒட்டி வாழும் சமூகமும் அப்படியே.

எல்லோரும் அரசர்களாக உள்ள நாட்டையும்,

எல்லோரும் முதலாளிகளாக உள்ள தொழிற்சாலையையும்,

எல்லோரும் நிர்வாகிகளாக உள்ள அலுவலகத்தையும் 

கற்பனை செய்து பாருங்கள்.

ஏற்றத்தாழ்வின் அவசியம் புரியும்.

இருப்பவர்கள் கொடுப்பதற்காகவே இல்லாதவர்களையும் இறைவன் படைத்திருக்கிறார்.

இல்லாதவர்களுக்கு கொடுப்பவன் இறைவனுக்கே கொடுக்கிறான்.

இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் இறைவனுக்கு நாம் செலுத்தும் காணிக்கை.

நேசிப்பவர்களுக்குதான் கொடுப்போம்.

நாம் ஏழைகளை நேசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசுவே ஏழையாகப் பிறந்தார்.

ஏழைகளை நேசிப்பவன் தான் இயேசுவையும் நேசிக்கிறான்.

ஏழைகளுக்கு கொடுப்பவன்தான் இயேசுவுக்கு கொடுக்கிறான்.

இயேசுவின் பெயரால் இல்லாதவர்களுக்கு கொடுப்போம்.

இறையரசில் நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, December 10, 2021

"உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:"(மத்.17:20)

"உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:"
(மத்.17:20) 

இயேசு தனது பொது வாழ்வின் போது கணக்கற்ற நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார்.

குணமான ஒவ்வொரு நோயாளியையும் பார்த்து

" உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று"

 என்று சொல்லியிருக்கிறார்.

அதை வைத்துப் பார்க்கும்போது அவரால்  குணமான அத்தனை சாதாரண மக்களும் விசுவாசம் உள்ளவர்களே.

ஆனால் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டு அவரோடு எப்போதும் இருந்த அப்போஸ்தலர்களிடம் அவர் எதிர்பார்த்த விசுவாசம் இல்லை.

இருந்திருந்தால் கடலில் புயல் வீசியபோது அவர்கள்,

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"

என்று கூறியிருக்க மாட்டார்கள்.

இயேசுவும் அவர்களைப் பார்த்து,

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"

என்று கேட்டிருக்க மாட்டார்.

இராயப்பர் இயேசுவின் அனுமதியோடு கடல்மேல் நடந்த போது,

"ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" 

என்று அலறியிருக்க மாட்டார்.


இயேசுவும் அவரைப்  பார்த்து, 
"குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?"

 என்று கேட்டிருக்க மாட்டார்.

தோமையார் இயேசு உயிர்த்ததை மற்ற அப்போஸ்தலர்கள் கூறியபோது உடனே
 நம்பியிருப்பார்.

 ஒருமுறை  ஒரு  பையனைப் பிடித்திருந்த பேயை அப்போஸ்தலர்களால்
 ஓட்ட  முடியவில்லை.

 காரணம் அவர்களுடைய விசுவாசக் குறைவுதான் என்று இயேசு கூறினார்.

 சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும்,

இன்று நம்மிடமும் போதுமான விசுவாசம் இல்லை.

"விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறோம்.ஆனால் நடைமுறையில் நம்மிடம் போதுமான விசுவாசம் இல்லை.

விசுவாசப் பிரமாணத்தில்,

"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன்."

என்று கூறுகிறோம்.

நாம் வாழும்  உலகத்தையும், விண்ணில் உள்ள விண்மின்களையும்   படைத்த  படைத்த  கடவுள்     எல்லாம் வல்லவர் என்று நாம் உண்மையிலேயே விசுவசித்தால்,

  அவரது பராமரிப்பில் வாழும் நாம்     எதற்கும் பயப்பட   மாட்டோம்.

நாம் பெற்ற பிள்ளைகளை எவ்வளவு அக்கறையாக பராமரிக்கிறோம்.

அதைப்போல் அளவற்ற மடங்கு அக்கறையாக  எல்லாம் வல்ல கடவுள் நம்மை பராமரிக்கிறார்.

எல்லாம் வல்லவரின் பராமரிப்பில் வாழும் நாம் எதற்காவது பயந்தால் அவரது வல்லமை மீது நமக்கு விசுவாசம் இல்லை என்று அர்த்தம்.

இயற்கை முழுக்க முழுக்க எல்லாம் வல்லவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது 

இயற்கையில் எது நடந்தாலும் அதில் வாழ்கின்ற நமது நன்மைக்காகவே இருக்கும் என்ற விசுவாசம் நமக்கு இருந்தால் நாம் இயற்கை நிகழ்வுகளை கண்டு பயப்பட மாட்டோம்.

ஆனால் நாம் இறைவனது அனுமதியோடு நடக்கும்

 நிலநடுக்கத்தைக் கண்டால் பயப்படுகிறோம்,

 சுனாமியைக் கண்டால் பயப்படுகிறோம்,

 புயலைக் கண்டால் பயப்படுகிறோம்,

 மழையைக் கண்டால் பயப்படுகிறோம்,

விபத்துக்களைப் பார்த்து பயப்படுகிறோம்,

வைரசை நினைத்தாலே பயப்படுகிறோம்,

 மரணத்தை நினைத்தாலும் பயப்படுகிறோம்.

தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தை கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தால் அதற்கு தாய் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

கடவுள் அனுமதிக்கும் இயற்கை நிகழ்வுகளைக் கண்டு பயந்தால் நமக்கு கடவுளின் பராமரிப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்.

மரணத்தை  நினைத்து பயப்பட்டால் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

உண்மையான விசுவாசம் உள்ளவர்கள் பாவத்தை நினைத்து மட்டுமே பயப்படுவார்கள்.

ஏனெனில் பாவம் மட்டுமே நம்மை இறைவனது உறவிலிருந்து பிரிக்கும்.

பாவம் மட்டுமே கடவுளுக்கு பிடிக்காதது.

இயற்கையை நிகழ்வுகளால் ஏற்படும் மரணங்கள் நம்மை கடவுளிடமிருந்து  பிரிக்காது, மாறாக  நம்மை அவரிடம் சீக்கிரம் அனுப்பும்.

இயேசு அப்போஸ்தலர்களுடன் கடலில் பயணித்த போது புயல் வீசியது போல,

இன்று கொரோனா என்னும் புயல் உலகில் வீசிக்கொண்டிருக்கிறது.

 
அப்போஸ்தலர்களோடு இருந்த அதே இயேசு இன்று நம்மோடு இருக்கிறார்.

அவர் எல்லாம் வல்லவர்.

நாம் அவரைப் பார்த்து,

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"

என்கிறோம்.

ஆனால் அவர் நம்மைப் பார்த்து,

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?"

என்கிறார்.

அன்று அப்போஸ்தலர்களை புயலிலிருந்து காப்பாற்றிய இயேசு இன்றும் இன்றைய புயலிலிருந்து உறுதியாக காப்பாற்றுவார்.

விசுவசிப்போம்.

உண்மையான விசுவாசிகள் பாவத்திற்கு மட்டுமே பயப்படுவார்கள்.

ஆசிரியர் என்ற முறையில் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்,

நாலரை மணிக்கு அளிக்கவேண்டிய மணியை  நாலு மணிக்கே சேர்வாடி அடித்துவிட்டால்,

மாணவர்கள் துள்ளிக் குதித்து எழுந்து ஓடுவார்கள்.

வீட்டுக்குப் போக அவ்வளவு ஆசை.

லூர்து செல்வம்.

Thursday, December 9, 2021

" மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்: அவரை " இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்", என்கிறார்கள்" (மத்.11:19)

" மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்: அவரை " இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்", என்கிறார்கள்" (மத்.11:19)

நாம் என்ன செய்தாலும் நம்மை படைத்த எல்லாம் வல்ல இறைவனுடைய மகிமைக்காக செய்ய வேண்டுமே அல்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களை திருப்தி படுத்துவதற்காக அல்ல.

நாம் இந்த உலகத்தில் வாழ காரணமாய் இருப்பவர் சர்வ வல்லவராகிய கடவுள். 

அவரை திருப்திப்படுத்துவது ஒன்றே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும் நம்மை சுற்றி உள்ளவர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது.

இது நமது ஆண்டவரே அனுபவித்த அனுபவப்பூர்வமான உண்மை.

ஸ்நாபக அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பிடிக்காதவர்கள் அவரைப் பேய்பிடித்தவன் என்றார்கள்.

நமது ஆண்டவரோ சாதாரண மக்களோடு உண்டார், குடித்தார்.

அவரை பிடிக்காதவர்கள் அவரைப் 
போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்றார்கள்.

கடவுளுக்கே இந்த பாடு என்றால் நமது பாடு எப்படி இருக்கும்!

ஆன்மீக வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாத இந்த உலகைச் சார்ந்தவர்களுக்கு 

 ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் பைத்தியக்காரத்தனம் ஆகியவை போன்றே தோன்றும்.

நமது விசுவாசம் அவர்களுக்கு புரியாது.

ஒரு முறை நமது சமயத்தைச் சாராத நண்பர் ஒருவர்,

"எதன் அடிப்படையில் நீங்கள் விசுவசிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

விசுவாசத்தின் அடிப்படையை அவருக்கு புரிய வைப்பதற்காக 

"உங்கள் அப்பா யார் என்று உங்களுக்குத் தெரியுமா?"

 என்று கேட்டேன். 

"தெரியும்" என்றார்.

"எப்படித் தெரியும்?" என்று கேட்டேன்

"அம்மா சொல்லி தெரியும்." என்றார்.

"எதன் அடிப்படையில் அம்மா சொன்னதை ஏற்றுக் கொண்டீர்கள்? '' 

என்று கேட்டேன்.

"அம்மா பொய் சொல்ல மாட்டார்கள்" என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

"நாங்கள் கத்தோலிக்க திருச்சபையை தாயாக ஏற்றுக் கொள்கிறோம்.

தாய் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

அதன் அடிப்படையில்தான் கத்தோலிக்க திருச்சபை சொல்வதை விசுவசிக்கிறோம்.

திருச்சபையை தாயாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எங்களது விசுவாசம் புரியாது."

அதற்குமேல் அவரைப் புரிய வைக்க முடியாது.

நம்மைப் பொறுத்த மட்டில் விசுவாசம் இறைவன் கொடுத்த நன்கொடை.

அதன் அடிப்படையில்தான் திருச்சபையைத் தாயாக ஏற்றுக் கொள்கிறோம்,

 தாய் சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

கிணற்றுக்குள் விழுந்தவனை தூக்க வேண்டும் என்றால் நாம் கிணற்றுக்குள் குதித்தாக வேண்டும்.

இயேசு பாவிகளை மீட்கவே
 இந்த உலகிற்கு வந்தார்.

பாவிகளோடு பழகாமல் எப்படி அவர்களை மீட்க முடியும்?

இது தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பரிசேயர்களுக்குப் புரியவில்லை.

ஆகவே அவர் பாவிகளோடு உண்டதால் அவரை ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும் நண்பன் என்றார்கள்.

இயேசு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை, ஏனெனில் உண்மையாகவே அவர் பாவிகளின் நண்பர்தான்.

எப்படி ஒரு மருத்துவர்
 நோயாளிகளின் நண்பரோ,

அப்படியே இயேசுவும் பாவிகளின் நண்பர்தான்.

கத்தோலிக்க திருச்சபையைக்கூட 'பாவிகளின் கூடாரம்' என்றுதான் அழைக்கிறோம்.

எப்படி மருத்துவமனை நோயாளிகளின் கூடாரமோ 

அப்படியே திருச்சபையும் பாவிகளின் கூடாரம்தான்.

எப்படி குணமாக விரும்பும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கிறார்களோ 

அதேபோல்தான் மீட்கப்பட விரும்பும் பாவிகள் எல்லோரும் கத்தோலிக்க திருச்சபைக்குள் நுழைகிறார்கள்.

இயேசு பாவிகளின் நண்பன் என்பது நமக்குப் பெருமைதான்,

 ஏனெனில் நாம் பாவிகள்,

 அவர் நமது நண்பன்.

அவர் பாவிகளின் நண்பன் என்பதால் 

நாம் அவரிடம் நம்பிக்கையோடு வரலாம்.

 அவரிடம் மனம் திறந்து பேசலாம்,

 நமது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பு பெறலாம்.

இயேசு நமது குருக்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும்  முக்கியமான அதிகாரம் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்.  .


இயேசு உலகிற்கு வந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு நமது குருக்களுக்கு கொடுத்திருக்கிறார்.

நம்மில் எத்தனை பேர் அதைப் பயன்படுத்துகிறோம்?

எத்தனை பேர் பாவசங்கீர்த்தன தொட்டியை நாடி செல்கிறோம்?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

திருப்பலியின் போது அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றும் அதே குருவானவர்தான் 

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

ஆகவே திருப்பலி பீடத்திற்குக் கொடுக்கும்  முக்கியத்துவத்தை 

பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கும் கொடுப்போம்.

நாம் பாவிகள்.

 இயேசு நமது நண்பர்.

லூர்து செல்வம்.

Wednesday, December 8, 2021

."கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."(மத். 7:7)

."கேளுங்கள்,   உங்களுக்குக் கொடுக்கப்படும்."
(மத். 7:7) 

"ஆண்டவரே!"

"சொல்லு."

"உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."

"கொஞ்சம் அல்ல, நிறையவே பேசு.
நீ பேசுவதை கேட்பதற்காகவும் உன்னோடு பேசுவதற்காகவும்தானே நான் இரவும் பகலும் நற்கருணைபேழையில்  காத்துக்கொண்டிருக்கிறேன்."

",."கேளுங்கள்,   உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்று சொன்னது நீங்கள்தானே?"

" நான்தான் சொன்னேன் இதில் உனக்கு என்ன சந்தேகம்."

"",அதில் சந்தேகமில்லை, ஆனால் நான் கேட்டதெல்லாம் கிடைக்கவில்லையே, அதனால்தான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன்.
.
உங்களுக்குத் தெரியும் நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களிடம் திரும்ப திரும்பக் கேட்டேன் ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை.  அதனால் தான் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன்."

",இப்போது அதற்கு ஒரு கதை சொல்லட்டுமா?"

"ஆசிரியர்தான் வகுப்பில் பாடம் நடத்தும்போது இடையிடையே கதை சொல்லுவார்."

",நானும் ஒரு ஆசிரியர்தான் என்பதையும் மூன்று ஆண்டுகள் நிறைய கதைகள் சொல்லி போதித்திருக்கிறேன் என்பதை மறந்து விட்டாயா?"

"மறக்கவில்லை. சொல்லுங்கள் ஆண்டவரே."


", ஒரு ஆசிரியர் வகுப்பில் ஆங்கில இலக்கண பாடம் நடத்திக்
 கொண்டிருந்தார்.  

நடத்த வேண்டிய பகுதியை நடத்தி முடித்தவுடன்,

" ஏதாவது சந்தேகம் இருப்பவர்கள் கேட்கலாம் என்றார்.

ஒரு பையன் எழுந்து நின்று,

"சார், ஒரு சந்தேகம்" என்றான்.

"கேள்" என்றார்.

"இந்தியாவிலிருந்து அமெரிக்கா எவ்வளவு தூரத்தில் உள்ளது?"

மற்ற மாணவர்கள் சிரித்து விட்டார்கள்.

"சார், கேள்வி கேட்பது நான். இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?"

"எனக்கும்தான் சிரிப்பு வருகிறது. நான் நடத்திக் கொண்டிருப்பது என்ன பாடம்?"

"English Grammar."

"நீ கேள்வி கேட்பது என்ன பாடம்?"

"புவியியல்."

"English Grammar நடத்தும்போது அது சம்பந்தப்பட்ட கேள்விகள் தான் கேட்க வேண்டும்."

"உங்களுக்கு புவியியல் பாடமும்  தெரியுமே." 

",தெரியும் என்பது வேறு விஷயம். எந்த பாடம் நடத்தப்படுகிறதோ அந்த பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகள் தான் கேட்கவேண்டும்.

 நான் நடத்தியதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?"

"இல்லை."

"அப்போ உட்கார்."

",கதை புரிகிறதா?"

"கதை புரிகிறது. ஆனால் நான் வேலை கேட்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"

",இறைவனாகிய நான் ஏன் மனிதனாகப் பிறந்தேன்?"

",மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்கு."

" எனது போதனைகள் எல்லாம் எதைப்பற்றி இருந்தன?

"மனிதர்களின் மீட்பை பற்றி."

"அப்போ, "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னபோது எதைக் கேட்க சொல்லியிருப்பேன்?"

"பாவத்திலிருந்து மீட்பு பெறுவதற்கான உதவிகளைக் கேட்கச் சொல்லியிருப்பீர்கள்."

"தேடுங்கள், கண்டடைவீர்கள்: " என்று சொன்ன போது யாரைத் தேடச் சொல்லியிருப்பேன்?"

"உங்களை."

"தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.என்று சொன்னபோது எதைத் தட்டச் சொல்லியிருப்பேன்?"

"தங்கள் இதயக்கதவை."

"திருடுவதற்காக பக்கத்து வீட்டுக்காரன் கதவைத்  தட்டிக்கொண்டு என்னிடம் உதவிக்கு வரக்கூடாது!"

"நான் வேலைதானே கேட்டேன்?"

"அப்போ இன்னும் உனக்கு நான் சொன்ன கதை புரியவில்லை."

"அப்போ உலக சம்பந்தப்பட்ட எந்த உதவியும் கேட்க கூடாதா?"

"இல்லை. ஆன்மீகம் சம்பந்தப்படாத எந்த உதவியும் கேட்க கூடாது."

"அப்போ நான் சாமியாராக போக மட்டும் தான் உதவி கேட்க வேண்டுமா?"

"ஆன்மீகம் சாமியாருக்கு மட்டுமா சொந்தம்? படைக்கப்பட்ட அனைவருமே ஆன்மீகம் உரியது."

"எங்களைப் படைத்து உலகத்தில் தானே வாழவிட்டுருக்கிறீர்கள்  
உலகம் ஒரு சடப்பொருள்தானே, ஆன்மீக பொருள் இல்லையே?"

"அதைப் படைத்த எனக்கு தெரியாதா?
உனக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.
அன்பு ஆன்மீகமா லௌகீகமா."


'ஆன்மா மட்டும் தான் அன்பு செய்ய முடியும். ஆகவே அன்பு ஆன்மிகம் தான்."

",நீ என்னை அன்பு செய்கிறாயா?"

"நிச்சயமாக."

",என் மீது நீ கொண்டுள்ள அன்பை காண்பிக்க என்ன செய்கிறாய்?"

"உங்களுக்கு நான் காணிக்கை கொடுக்கிறேன்."

"காணிக்கை என்ன பொருள்."

"சடப்பொருள்."

",அன்பு ஆன்மீகம் அதைக் காட்ட சடப் பொருளை பயன்படுத்துகிறாய். அதாவது ஆன்மீகத்தை காட்ட சடப் பொருளைப பயன்படத்துகிறாய்."

"ஆமா."

"நீ வாழும் இந்த உலகம் ஒரு சடப் பொருள் . அதை நீ உனது ஆன்மீகத்தை காட்ட பயன்படுத்த வேண்டும்.

பிறர்மீது கொண்டுள்ள அன்பு ஆன்மீகம், அதை  நீ காட்ட சடப்பொருளைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

 அதற்காகத்தான் உலகமாகிய சடப்பொருளில் உன்னை வாழ வைத்திருக்கிறேன்.

 நீ உலகிற்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தால் உலகை எனக்காக பயன்படுத்துவாய்  அது ஆன்மீகம் ஆகிவிடுகிறது."


"அதாவது சடப் பொருளை ஆன்மீக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் அது ஆன்மீகம் ஆகிவிடுகிறது. சரியா?"

"சரி."

"கேளுங்கள் உங்களுக்கு தரப்படும்  என்ற தங்களது கூற்றுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"


",நீ என்ன உதவியைக் கேட்டாலும் அது உன்னுடைய ஆன்மீக மீட்புக்கு உதவியாக இருந்தால் மட்டுமே தருவேன். மீட்புக்கு எதிராக இருந்தால் கேட்பதை தர மாட்டேன். 

நீ கேட்ட வேலை லஞ்சம் வாங்க தூண்டுவது.

லஞ்சம் வாங்குவது பாவம். ஆன்மீக மீட்புக்கு எதிரானது.

 ஆகவே தான் அதை உனக்கு தரவில்லை, இன்னும் தரமாட்டேன்.

நீ என்ன உதவியை கேட்டு விண்ணப்பித்தாலும், 

"ஆண்டவரே இதை எனக்கு தர விருப்பம் இருந்தால் மட்டுமே தாரும் "

 என்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

 அப்போதுதான் கிடைக்காவிட்டாலும் ஏமாற்றம் இருக்காது."


"இனி அப்படியே விண்ணப்பிக்கிறேன் ஆண்டவரே.

அடியேனை ஆசீர்வதியும்."

லூர்து செல்வம்.

Monday, December 6, 2021

நமது வீட்டை எங்கே கட்டியிருக்கிறோம்?

நமது வீட்டை எங்கே கட்டியிருக்கிறோம்?

ஒரு நபர். நண்பர் அல்ல.. ஆனால் ரோட்டில் அடிக்கடி பார்த்திரருக்கிறேன். ஆனால் ஒருநாளும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதில்லை. அவர் யார், எந்த ஊர் என்றுகூட எனக்குத் தெரியாது.

ஒரு நாள் என்னை பார்த்தவுடன் ",வணக்கம், சார்" என்றார்.

 எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

எனக்கு பழக்கம் இல்லாத ஒருவர், இதுவரை என்னோடு ஒரு வார்த்தை கூட பேசாத ஒருவர் திடீரென்று எதிர்பாராத விதமாய் ஏன் "வணக்கம்" போட்டார் என்று .தெரியவில்லை.

 ஆயினும் நான் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். 

' அதன் பின் சில நாட்கள் வணக்கம் தொடர்ந்தது.

 திடீரென்று ஒரு நாள் , "சார், காபி சாப்பிட வரிங்களா" என்று அழைத்தார்.

" இல்லை, நான் காபி சாப்பிடுவது இல்லை." என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

 ஆனாலும் ஏன் இந்த அழைப்பு என்பது புரியவில்லை.

அதிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து என்னை பார்த்தவர் "வணக்கம்" சொல்லிவிட்டு உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.

" என்ன விஷயம்" என்று கேட்டேன். 

"உங்கள் சாமியார் ஏழைகள் வீடு கட்ட இலவசமாய் அமெரிக்கன் கோதுமை கொடுக்கிறறாராமே.
எனக்காக அவரிடம் கொஞ்சம் பேசி கோதுமை வாங்கி தர முடியுமா?"

இப்போதுதான் அவர் போட்ட வணக்கங்களில் அர்த்தம் புரிந்தது!

"அதற்கு வேறு ஒரு ஆள் பொறுப்பாக உள்ளார். அவரைச் சென்று பாருங்கள்" என்று அவரது பெயரை கூறிவிட்டு நகர்ந்தேன். அதற்குப்பிறகு வணக்கங்கள்
 மாயமாகி போய்விட்டன.
                         ***
நண்பர் ஒருவர். 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு ஒழுங்காக வருவார். பக்தியுடன் பூசை காண்பார். பூசை முடிந்தவுடன் சாமியாரிடம் சென்று
கொஞ்ச நேரம் பேசிவிட்டு நெற்றியில் சிலுவை வாங்கிக்கொண்டுதான் வீட்டுக்கு செல்வார்.

"பூசை முடிந்தவுடன் சுவாமியிடம் பேசிவிட்டுப் போவது நல்ல பழக்கம்."

"நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ தெரியாது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் பூசைக்கு வருவது சுவாமிக்கு தெரிய வேண்டும். அதற்காகத் தான் பேசிவிட்டு வருகின்றேன்"

"எதற்காக சுவாமிக்கு தெரிய வேண்டும்?"

" நான் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் கொடுத்திருக்கிறேன். பூசைக்கு வராவிட்டால் எப்படி வேலை தருவார்?

பூசைக்கு வருவதற்குக்கூட வேலை தேவைப்படுகின்றது ! 
                     ***

"சைக்கிளில் தூரமா?"


" உவரி அந்தோணியார் கோவிலுக்கு சைக்கிளிலேயே போகப் போகிறேன்."

"ஏன், பஸ்ஸில் போகக் காசு இல்லையா?"

"இல்லை. நான் விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைத்துவிட்டால் உவரிக்கு சைக்கிளில் திருயாத்திரை போவதாக நேர்ந்திருக்கிறேன்."

ஆக இவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பதற்காகவே அந்தோணியார் மோட்சத்திற்கு சென்றிருக்கிறார்!

                         ***

அனேகர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே கிறிஸ்தவர்களாக வாழ்கின்றார்களே தவிர உண்மையான விசுவாசத்தினால் அல்ல.

"விசுவாசிக்கிறேன்" என்று சொல்வதால் மட்டுமே விசுவாசம் வந்துவிடுவதில்லை.

உண்மையான விசுவாசம் அடி மனதின் ஆழத்தில் இருந்து தன்னை கொண்டிருப்பவரை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க வைக்கும்.

உண்மையாக விசுவாசம் உள்ளவர்களிடம் உலக நாட்டம் கொஞ்சம் கூட இருக்காது.

தாங்கள் வாழும் உலகத்தையே கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து விட்டு அதில் அவருக்காகவே வாழ்வார்கள்.

                            ***

அனேகர் கிறிஸ்தவர்களைப் போல் வாழ்வார்கள், ஆனால் கிறிஸ்தவர்களாக வாழ மாட்டார்கள்.

எப்படி?

ஜெபம் சொல்லுவார்கள், கோவிலுக்குப் போவார்கள், 
பூசை காண்பார்கள்,
 நன்மை எடுப்பார்கள்,
கோவிலுக்கு ஒழுங்காக வரி கொடுப்பார்கள்,
திருவிழா கொண்டாடுவார்கள்.

ஆனால் எதிலேயும் ஆன்மீக நோக்கம் இருக்காது.

இவ்வுலகம் சம்பந்தப்பட்ட நன்மைகளை பெறுவதற்காகவே இவற்றை எல்லாம் செய்வார்கள்.

குழந்தை கிடைக்க,
 தேர்வில் வெற்றி பெற,
நோயிலிருந்து சுகம் கிடைக்க,
 வேலை கிடைக்க,
 அதிகமான சம்பளம் கிடைக்க, திருமணம் கூடிவர 
போன்ற உலக சம்பந்தப்பட்ட நோக்கங்களுக்காகவே எல்லாவற்றையும் செய்வார்கள்.

அதாவது இறைவனுக்காக வாழ மாட்டார்கள்.

இறைவனை தங்கள் உலக வாழ்க்கைக்காக பயன்படுத்திக் கொள்ளவே வாழ்வார்கள்.

தாங்கள் கேட்டது எதுவுமே கிடைக்காவிட்டால் எல்லாவற்றையும் விட்டு விடுவார்கள்.

இலவச டிவி, மிக்ஸி கிடைக்கும் என்பதற்காக ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு,

 எதுவுமே கிடைக்காவிட்டால் மற்றொரு கட்சிக்கு மாறி விடுவது போலவே இவர்களது சமய வாழ்க்கையும் இருக்கும்.

இப்படி ஆன்மிக நோக்கமின்றி உலக வாழ்க்கைக்காகவே இறைவன்மீது பக்தி வைத்திருப்பவர்கள்தான்

தங்கள் ஆன்மீக  வீட்டை மணல் மீது கட்டுபவர்கள்.

ஒரு சோதனை வந்ததும் வீடு விழுந்துவிடும்.

நாம் இவ்வுலகில் வாழ்கிறோம், ஆனால் உலகத்திற்காக வாழவில்லை.

இறைவனுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்பதை மனதில் கொண்டு 

அவரது சித்தப்படி மட்டும் நடப்பவர்களே தங்கள் ஆன்மீக வீட்டை பாறை மீது கட்டுபவர்கள்.

நாம் நமது ஆன்மீக வீட்டைப் பாறை மீது கட்டிக் கொண்டிருக்கிறோமா? 

அல்லது மணல் மீது கட்டிக் கொண்டிருக்கிறோமா?

சிந்திப்போம்.

 செயல்படுவோம்.

லூர்து செல்வம்.
 


.