Thursday, October 31, 2019

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."(லூக்.13:24)



"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."
(லூக்.13:24)
******      *****     ******     *****

இறைவன் ஆவி.(Spirit) 

அவரால் படைக்கப்பட்ட உலகம் ஒரு சடப்பொருள்.(Matter)

துவக்கமும் முடிவும் இன்றித்    தாமாக இருக்கும் இறைவன்

நம்மை (ஆன்மாவை) தன்னைப்போல் ஆவியாகப் படைத்து,

சடப்பொருளாகிய மண்ணிலிருந்து  உடலை உருவாக்கி, 

நம்மை உடலோடு இணைத்து

ஆவியும், சடப்பொருளும் சேர்ந்த மனிதனாக்கினார்.

எதிர்எதிரான குணங்கள் உள்ள இரண்டு பொருட்களின் இணைப்புதான் மனிதன்.

ஆன்மா ஆவி. 
உடல் சடப்பொருள்.

ஆன்மாவுக்குத் துவக்கம் உண்டு, முடிவு இல்லை,
 அழியாது.

உடலுக்குத் துவக்கமும் உண்டு முடிவும் உண்டு,  அழியும்.

உடல் இவ்வுலகைச் சார்ந்தது, ஆன்மா மறுவுலகைச் சார்ந்தது.

இதன் அடிப்படையில் இரண்டுக்கும் பாரதூர வித்தியாசம் ஒன்று உண்டு.

உலகம்  பிரபஞ்சத்தின் (Universe) ஒரு பகுதி.

பிரபஞ்சம் மிக விசாலமானது.

அது எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்று யாராலும் கணக்கிடமுடியாது.

அதன் பகுதியான உலகமும் விசாலமானதுதான்.
 51,00, 72, 000.   சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.

ஆகவே நமது உடல் நடப்பதற்கு
விசாலமான பாதையை விரும்புகிறது.

வசிப்பதற்கு விசாலமான வீட்டை விரும்புகிறது.

படுப்பதற்கு விசாலமான அறையை விரும்புகிறது.

சடப் பொருளுக்கு நீள, அகலம் உண்டு.

ஆகவே உடல்  சௌகர்யமாக வாழ விசாலமான இடத்தை விரும்புகிறது.

ஆனால் ஆன்மா?

விசாலம் என்பதற்கு எதிற்பதம்  ஒடுக்கம்.

ஆகவே ஆன்மா ஒடுக்கத்தையே விரும்ப வேண்டும்.

ஆனால், ஆன்மா ஆவி.

ஒடுக்கம் என்ற வார்த்தைக்கு ஆன்மீக ரீதியாகத்தான் பொருள் கொடுக்க வேண்டும்.

அதாவது ஞான ஒடுக்கம். 

ஆன்மீக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வைத்தான் 
"ஒடுக்கமான வாயில்" என்கிறோம்.

விண்ணக வீட்டிற்குள் நுழைவதற்கான வாசல் 'ஒடுக்கமானது'.

என்னுடைய தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடுகளின் வாசல் உயரம் குறைவாக இருக்கும்.

வீட்டிற்குள் போகவேண்டுமானால் தலையைக் குனிந்துதான் வாசல் வழியே போகமுடியும்.

நிமிர்ந்துபோனால் உச்சந்தலையில் நிலையின் அடிவிழும்.

வீட்டிற்குள் நுழைபவர் 'தலை வணங்கிதான்' நுழைய முடியும்.

நமது விண்ணக வீட்டிற்குள் நுழைய வேண்டுமானால் நமது வாழ்க்கை அதற்குறிய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாய் இருக்க வேண்டும்.

விதிமுறைகளை அதாவது கட்டுப்பாடுகளை மீறி உள்ளே நுழைய முயன்றால் தலையில் அடிபட்டு வெளியே விழவேண்டி யிருக்கும்.


அதாவது மனம்போன  போக்கில் வாழ்பவர்கள் 
விண்ணக வீட்டிற்குள் நுழைய முடியாது.

இறைவனால் நேரடியாக நமது மனசாட்சி வழியே தரப்பட்ட பத்துக் கட்டளைகள்

 இறைவனிடமும், நமது அயலானிடமும் 

எப்படி நடந்து கொள்ள வேண்டும், 

எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று கட்டுப் பாடுகளை விதித்துள்ளன.

அவற்றிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே ஆராதனை செலுத்த வேண்டும்.

 இறைவனால் படைக்கப்பட்ட,

நமது பயன்பாட்டிற்குத் தரப்பட்ட பூமிக்குப்

 'பூமித்தாய்' (Mother earth)  என்று பெயரிட்டு, 

அதற்குக் கற்பம் அடைந்த பெண்ணைப் போல சிலை செய்து,

அதன் முன் சிலர் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கிய வீடியோ காட்சிகள் உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இது இறைவனால் விலக்கப் பட்ட விக்கிரக ஆராதனை.

இது இறைவனுக்கு விரோதமான பாவம்.

இதைப் போலவே 'பொய், களவு, கொலை, பிறர் மனைவி மேல் ஆசைப்படுதல்' போன்றவையும் கடவுளுக்கு விரோதமான பாவங்களே.

மனம் போன போக்கில் இவற்றைச் செய்பவர்கள் ஒடுக்கமான  விண்ணக வாயிலுள் நுழைய முடியாது.

தலையான பாவங்கள் ஏழையும் விலக்கி, 

அவற்றிற்கு எதிரான புண்ணியங்கள் ஏழையும்

கடைப்பிடிக்க வேண்டும்.

அவ்வாறே திருச்சபையின் கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், இறைவனையும் அயலானையும் நேசித்து,  நற்செயல்களால் சேவை செய்ய வேண்டும்.

ஒரே வாக்கியத்தில், இறைவன் சித்தப்படி வாழவேண்டும்.

நம்  விருப்பப்படி வாழ்வது மிக எளிது.

இறைவன் சித்தப்படி வாழ்வது கடினம்தான்.

இறைவன் சித்தப்படி வாழ்வதுதான் ஒடுக்கமான வழி.

ஒடுக்கமான வழி வாழ்வது கடினமாக இருந்தாலும், 

அதை இலேசாக மாற்ற ஒரு வழி இருக்கிறது.

இறைவனின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்வதுதான் அந்த வழி! 

இறைவன் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொண்டால், நமது விருப்பப்படி வாழலாமே!

இதைத்தான் அன்னை மரியும் செய்தாள்!

அன்னை வழியே செல்வோம், ஆண்டவர் பாதம் அடைவோம்! 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment