நோக்கத்திலேயே குறியாய் இருப்போம்.
**** **** **** **** ****
மீன் பிடிக்கப் படகில போகிற மீனவனுக்கு மீன்தான் குறியாக இருக்க வேண்டும்.
"ஐயோ கடல் ரொம்ப ஆழமாச்சே, படகு கவுந்தா என்ன ஆகிறது"ன்னு பயந்தா மீன் பிடிக்க முடியாது.
தேர்வுக்குத் தயாரிப்பவன் படித்த பாடங்களை திருப்பிப் பார்ப்பதில் குறியாய் இருக்க வேண்டும்.
"ஐயோ! படிப்பதெல்லாம் மறந்து போனால் என்ன செய்வேன்?"
என்று பயந்து செத்தால் தேர்வுக்குத் தயாரிக்க முடியாது.
ஆன்மீக வாழ்விலும் அப்படித்தான்.
ஆன்மீகத்தின் நோக்கம் விண்ணக வாழ்வு.
விசுவசிப்பவன் 'கடவுள் நம்மை உறுதியாக மீட்பார், நாம் விண்ணகம் செல்வது உறுதி' என்று உறுதியாக நம்ப வேண்டும்.
வேறு எதையும் பற்றிக் கவலைப் படாமல்,
மீட்புக்கு வழியான அன்பிலும், நற்செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது வாழ்வின் நோக்கம் விண்ணகம்.
வழி அன்பு.
அன்பு வழியில் நடந்தால் விண்ணகம் உறுதி.
இதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும்.
அதை விடுத்துவிட்டு
"ஐயோ! சோதனைகள் வருமே! செயிப்பேனா? தோற்றால் என்ன செய்வேன்? விண்ணகம் போவேனா?"
என்று கவலை மட்டும் பட்டுக் கொண்டிருந்தால் நம்பிக்கை போய்விடும்.
லௌகீக வாழ்வாக இருந்தாலும் சரி,
ஆன்மீக வாழ்வாக இருந்தாலும்சரி
ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
"தந்தையே! எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்,"
என்று நம்பிக்கையுடன் பிரச்சனைகளை அவர் கையில் ஒப்புவித்துவிட்டு,
நிம்மதியுடன் நம் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைத் தன் தாயின் மடியில் படுத்திருக்கும்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாகத் தூங்கும்.
ஏனெனில் அதற்குத் தன் தாயின் மேல் அவ்வளவு நம்பிக்கை.
எங்கும் இருக்கும் இருக்கும் இறைவன் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்,
நமக்குள்ளும் இருக்கிறார்,
நாம் அவருக்குள்தான் இருக்கிறோம் என்ற உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருந்தால்
தாய்மடியில் தூங்கும் குழந்தையைப்போல நாம் எவ்வித கவலையும், பயமும் இன்றி வாழ்வோம்.
அவரைத் தாண்டி எதுவும் நம்மிடம் வர இயலாது.
எதுவும் வந்தாலும் அவரது அனுமதியுடன்
நமது நன்மைக்காகவே வரும்.
இது சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது,
நடைமுறையில் பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால் எப்படி கவலைப் படாமல் இருக்க முடியும்?
உதாரணத்திற்கு டாக்டரைத் தவிர்க்க முடியாத அளவிற்கு நோய் வந்திருக்கிறது.
வைத்தியம் பார்க்கப் பணமில்லை.
எப்படிக் கவலைப் படாமல் இருக்க முடியும்?
நோய்கள் மட்டுமல்ல, தோல்விகள், எதிர்ப்புகள்,இயலாமைகள் போன்றவற்றை
பிரச்சனைகள் என்று நினைப்பதுதான் பெரிய
பிரச்சனை.
உண்மையில் உலகியல் வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம்.
ஆனால் ஆன்மீக வாழ்வில்
பிரச்சனைகளே கிடையாது.
நோய் ஒரு பிரச்சனையா?
நமது விசுவாசப் பற்றாக்குறை காரணமாக,
ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைக்கூட
பிரச்சனைகளாக்கி,
தேவையில்லாமல் வாழ்க்கையை
கவலைக் கிடங்காக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு ஆழமான விசுவாசம் இருந்தால்,
விண்ணக வாழ்விற்காகவே நம்மைப் படைத்த கடவுள்
அதற்கான பாதையில் நம்மைத் தன் பராமரிப்பின் மூலம் வழி நடத்துகிறார் என்பதை ஏற்றுக் கொள்வோம்.
இறைவனின் பராமரிப்பை ஏற்றுக்கொண்டால் அவரது வழிமுறைகளையும் ஏற்றுக் கொள்வோம்.
துன்பங்கள் (Sufferings) எந்த வடிவத்தில் வந்தாலும், அது நமது இரட்சண்யத்திற்காக இறைவன் பயன்படுத்தும் ஆயுதம்.
கட்டித் தங்கத்தை நகையாக மாற்ற, அதை உருக்க நெருப்பு ஒரு ஆயுதமாகப் பயன்படுகிறதோ,
அதேபோல உலகவாசியை விண்ணகவாசியாக மாற்ற
துன்பங்கள் (Sufferings) பயன்படுகிறது.
இயேசு நமது மீட்பிற்காக சிலுவை மரணமாகிய துன்பத்தை ஏற்றுக்கொண்டதால்
நமது மீட்பிற்காக நாம் ஏற்கும் துன்பம் சிலுவை ஆகிறது.
நாம் சிலுவையைச் சுமக்கும்போது இயேசுவைப் போலாகிறோம்.
உலகக் கண்ணோக்கில் பார்த்தால் நோய் துன்பம் மட்டும்தான்.
விசுவாசக் கண்ணோக்கில் நோய் ஒரு சிலுவை.
நமக்கு சிலுவை வெற்றியின் சின்னம்.
கசப்பான மருந்தைத் தேனோடு கலந்து சாப்பிட்டால் இனிப்பாக மாறிவிடுவதுபோல்
துன்ப வேதனையை விசுவாசத்தோடு அனுபவித்தால்
அது நிலை வாழ்வு பெறுவதற்கான ஆசீர்வாதமாக (Blessing) மாறிவிடுகிறது.
வாழ்வின் நோக்கம் விண்ணக வாழ்வு மட்டும்தான்.
அதைமட்டும்தான் குறிக்கோளாய்க் கொண்டு வாழவேண்டும்.
அப்படியானால் நோய்க்கு வைத்தியம் பார்க்க வேண்டாமா?
பசிக்கும்போது சாப்பிடுவதுபோல,
தாகமாய் இருக்கும்போது நீர் அருந்துவதுபோல,
அழுக்குப் பட்டால் துடைப்பதுபோல
நோய் வந்தால் வைத்தியம் பார்ப்பதும் இருக்கவேண்டும்.
அதைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது.
நோயை ஒரு தீமையாய்க் கருதாமல்
ஆண்டவரின்ஆசீரைச் சம்பாதிக்க வல்ல கருவியாய்க் கருதவேண்டும்.
நோய் குணமானாலும் நன்றி கூறவேண்டும்.
குணமாகாவிட்டாலும்
நன்றி கூறவேண்டும்.
விண்ணக நோக்கத்தில் மட்டுதான் குறியாக இருக்க வேண்டும்.
அநித்திய துன்ப வாழ்வுக்குப் பரிசாக
ஆண்டவர் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தருவார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment