Sunday, October 27, 2019

."கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" (லூக்.18:13)

."கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" (லூக்.18:13)
****      ****    ****    ****      ****
இந்த சிறிய செபத்தை செபித்தவனே

"இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன்"

என்று இயேசு சொல்கிறார்.

இதிலிருந்து இது எவ்வளவு வல்லமை வாய்ந்த செபம் என்று தெரிகிறது.

இந்த செபத்தைச் சொல்லும்போதே

1. கடவுளை ஏற்றுக் கொள்கின்றோம்.

2. நாம் பாவிகள் என்பதை  ஏற்றுக் கொள்கின்றோம்.

3.கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை  ஏற்றுக் கொள்கின்றோம்.

கடவுளை ஏற்றுக் கொள்ளும்போது 

அவரே நம்மைப் படைத்தவர்,

படைத்தவர் என்பதாலேயே

 நாம் என்ன செய்ய வேண்டும்,

 என்ன செய்யக்கூடாது என்று

 நமக்கு கட்டளையிட அதிகாரம் உள்ளவர் என்பதை  ஏற்றுக் கொள்கின்றோம்.


நாம் அவரது கட்டளைகளை மீறி பாவம் செய்து  விட்டோம்,

ஆகவே நாம் பாவிகள்,

பாவிகளால் பரிசுத்தரோடு உறவு வைத்துக் கொள்ள முடியாது,

இறை உறவு வேண்டுமென்றால் நாம் பரிசுத்தம் அடைய வேண்டும்,


 நாம் பரிசுத்தம் அடைய   நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்,

யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமோ அவர்மட்டும்தான் நமது பாவங்ளை மன்னிக்க முடியும்,

மன்னிப்புக் கேட்குமுன் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு, பாவங்களைச் செய்தமைக்காக வருந்த வேண்டும்

என்பதையும்  ஏற்றுக் கொள்கின்றோம்.

இறைவன் அன்பும்,  இரக்கமும் உள்ளவர்,

நாம் எத்தனைமுறைப் பாவம் செய்தாலும் நம்மீது அவர் கொண்டுள்ள அன்பும், இரக்கமும் மாறாது,

எத்தனைமுறை மன்னிப்புக்
கேட்டாலும் இரக்கத்தோடு மன்னிப்பார்

என்பதையும்  ஏற்றுக் கொள்கின்றோம்.

இவ்வாறு ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில்தான் நாம் அவரை நோக்கி,

"கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்கிறோம்.

வண்ணவண்ண வார்த்தைகளை அள்ளிக் கொட்டி செபிப்பதைவிட 

ஒரே வாக்கியத்தில் செபிக்கும் இந்த செபம் எவ்வளவோ பொருள் பொதிந்தது,

 வல்லமை உள்ளது.

1. மனதை ஒருநிலைப்படுத்துவது எளிது.

2. எவ்வளவுக்கு எவ்வளவு மனத்தாழ்ச்சியுடன் செபிக்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு செப வல்லமையும் கூடும்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போதே நாம் இறைவனின் சித்தத்திற்கு எதிராகச் சென்றதாக ஏற்றுக் கொள்வதோடு,

அவரின் வழிக்குத் திரும்ப நமது உறுதியான ஆவலை வெளிப்படுத்துகிறோம்.

ஆன்மீக வாழ்வில் முழுக்க முழுக்க இறைவனையே சார்ந்திருப்பதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

3.இறைவனின் இரக்கத்தை வேண்டும்போதே இறைவனிடம் வேண்டுவது கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை (Hope) வெளிப்படுத்துகிறோம்

நம்பிக்கையோடு செய்யும் செபத்திற்குதான் முழு வல்லமை உண்டு.

4. இறைவனை "இரக்கமாய் இரும்" என வேண்டும்போதே நாம் நம் அயலான்மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

இரக்க சுபாவம் உள்ளவன் மட்டுமே இரக்கத்தை எதிர்பார்க்க  முடியும்.

5.  'கடவுளே' என்று சொல்லும்போது நமது விசுவாசத்தையும்,

 'இரக்கமாயிரும்' என்று சொல்லும்போது நமது நம்பிக்கையையும்,

மொத்த செபத்தில் இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறோம்.

கடவுளின் இரக்கம் நம்மீது இருக்கும்போது நமக்கு வேண்டியது எல்லாம் நம்மிடம் இருக்கிறது என்றுதான் பொருள்.

பணிவோடு வேண்டுவோர் துணிவோடு வாழலாம்!

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment