""அவர் சொல்லுவதைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாகவும் அவர்கள் வந்திருந்தனர்." (லூக்.6:17)
***** ***** ***** *****
இயேசு உலகில் மனுவுரு எடுத்தது மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக்க.
இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,
நம்மை இரட்சிக்க,
நம்மை மீட்க,
நற்செய்தியை அறிவிக்க,
நம்மை விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்ல.
எப்படிச் சொன்னாலும் பொருள் ஒன்றுதான்,
நோக்கமும் ஒன்றுதான்.
அவரைப் பார்க்க வந்தவர்கள் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்கவும்,
நோய்கள் நீங்கிக் குணம் பெறவும் வந்தார்கள் என்று நற்செய்தியாளர் கூறுகிறார்.
இயேசு வந்ததின் நோக்கம் ஒன்று, ஆன்ம இரட்சண்யம்.
ஆனால் மக்களின் நோக்கம் இரண்டு.
மக்களுக்கு ஆன்மாவும், சரீரமும் இருப்பதால்
ஆன்ம நலனுக்காக நற்செய்தியைக் கேட்கவும்,
சரீர நலனுக்காக நோய்கள் நீங்கிக் குணம் பெறவும்
இயேசுவிடம் வந்தார்கள்.
இயேசு ஆன்மீக மீட்பிற்காக நற்செய்தியை அறிவித்தார்.
அதோடு மக்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர்களது நோய்களைக் குணமாக்கினார்.
ஆனாலும் அவர் உலகிற்கு வந்தது ஆன்மாவை மீட்க மட்டும்தான், நோய்களைக் குணமாக்க அல்ல.
நண்பனைப் பார்க்க அவனது வீட்டிற்குச் செல்கிறோம்.
வீட்டிலே அவனது சிறு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
நண்பனைப் பார்க்கப் போவதுதான் நம் நோக்கம்.
ஆனாலும் சிறு பிள்ளைகளுக்காக ஏதாவது தின் பண்டம் வாங்கிச் செல்வோம்.
யாராவது நம்மிடம்,
"தூரமா போய் வருகிறீர்கள்"
என்று கேட்டால்,
"நன்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றுதான் சொல்லுவோம்.
"நண்பனுடைய பிள்ளைகளுக்குத் தின்பண்டம் வாங்கிக் கொடுத்து விட்டு வருகிறோம்" என்று சொல்ல மாட்டோம்.
யாராவது இயேசுவிடம்,
"ஆண்டவரே, நீர் ஏன் உலகிற்கு வந்தீர்?" என்று கேட்டால்
"உன்னை இரட்சிக்க வந்தேன்" என்றுதான சொல்லுவார்.
"உன் நோயைக் குணமாக்க வந்தேன்" என்று சொல்லமாட்டார்.
ஆனாலும்
(நாம் நண்பனின் பிள்ளைகளுக்குப் பண்டம் வாங்கிக்கொண்டு போவதுபோல)
குணமாக்குவார்.
இறைவன் நம்மைப் படைத்தது ஒரே ஒரு நோக்கத்தோடுதான், அவரை அன்பு செய்ய, இவ்வுலகிலும், மறுவுலகிலும்.
சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் விடுமுறைக்காக வீட்டிற்குப் புறப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
யாராவது, "தூரமா? " என்று கேட்டால்,
"விடுமுறை ஆரம்பித்து விட்டது, அதனால் வீட்டுக்குப் போகிறேன்." என்பானா?
அல்லது
"விடுமுறை ஆரம்பித்து விட்டது, அதனால் Train க்குப் போகிறேன்" என்பானா?
"இறைவன் உன்னை ஏன்படைத்தார்?"
என்று கேட்டால்,
"நிலை வாழ்விற்காக" என்று கூற வேண்டும்.
"இவ்வுலகில் வாழ"என்று கூறினால், அது அறியாமை.
இரயிலில் பயணிப்பது போல இவ்வுலகில் வாழ்கிறோம்.
நாம் பயணிப்பது ஆன்மீகப் பயணம், விண்ணகத்தை நோக்கி.
இயேசு சொல்கிறார்,
"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும்
அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால்,
அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்16:26)
நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு.
இயேசு தர இருப்பது ஆன்மீக விடுதலை,
அதாவது பாவத்திலிருந்து ஆன்மா பெறும் விடுதலை.
இயேசு தரும் இந்த விடுதலை வாழ்விற்கு நமது உடல் ஒத்துழைப்பு தரவேண்டும்.
நாம் வாழும் உலகம் நமது ஆன்மீகப் பயணத்திற்கு உதவுவதற்காகத்தான் நமக்குத் தரப்பட்டுள்ளது, நாம் நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.
சில சமயங்களில் நமது பயணங்களில் நமக்கு உதவியாகத் தரப்பட்டுள்ள சாதனங்கள்,
நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால்
பயணத்திற்கு இடைஞ்சலாக மாறுவது மட்டுமல்ல
பயணத்தின் போக்கையே மாற்றி விடும்.
ஆன்மீக விடுதலைக்கு உதவியாக இறைவன் தந்தவை:
1.சமூகம். (Society)
2. பூமி.(Earth)
1.சமூகம்:
கடவுள் மனிதனை சமூகப் பிராணியாகப் (Social being) படைத்தார்.
'மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று' என்று முதல் மனிதனுக்குக் துணையாக ஒரு மனைவியைக் கொடுத்தார்.
குடும்பமாகிய சமூகத்தை உருவாக்கி,
அவர்களை ஆசீர்வதித்து,
பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பும்படி கட்டளையிட்டார்.
நாம் நமது முதல் பெற்றோரிடமிருந்து பலுகிப் பெருகிய மனுக்குலமாகிய சமூகத்தில்தான் வாழ்கிறோம்.
சமூகத்திலுள்ள அனைவரும் நமது ஆன்மீகப் பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அவரது திட்டம்.
அதற்காகத்தான் அன்பு என்னும் பிணைப்புக் கயிற்றை எல்லோருடைய இருதயத்துக்கும் பரிசாகக் கொடுத்தார்.
ஆனால் ஆதிப் பெற்றோர் தாங்கள் செய்த பாவத்தின் காரணமாக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டார்கள்.
சமூக ஒற்றுமைக்காகத் தரப்பட்ட அன்புக் கயிற்றை மனிதன் தன் சுய நலத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்தான்.
இதனால் சமூகத்தின் மக்கள் ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்த ஆரம்பித்தார்கள்.
இந்நிலையைச் சாத்தான் தன் நோக்கத்தை நிறைவேற்றப்
பயன் படுத்திக் கொண்டான்.
சமூகத்தில் ஏற்பட்ட அடிமைத் தனங்களை நம் முன் நிறுத்தி,
அவற்றை தடைக்கல்லாகப் பயன்படுத்தி
நமது ஆன்மீகப் பயணத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறான்.
கடவுள் மனுவுரு எடுத்தது நமது ஆன்மீக விடுதலைக்காக.
(Spiritual liberation)
அதாவது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,
பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை மீட்பதற்காக.
அரசியல், பொருளாதார, சமூக
அடிமைத் தனத்திலிருந்து மீட்பதற்காக அல்ல.
அவர் அரசியல் விடுதலைக்காகப் பிறந்திருந்தால் யூத சமூகத்தை உரோமானிய அடிமைத் தனத்திலிருந்து மீட்டிருப்பார்.
"செசாருக்கு உரியதை செசாருக்குக் கொடு" என்று கூறியிருக்க மாட்டார்.
அவருடைய இராட்சியம் இவ்வுலகைச் சார்ந்தது அன்று, விண்ணுலகைச் சார்ந்தது.
அவர் போதித்த அன்பை அனைவரும் கடைப்பிடித்தால்
சமூகத்தில் உள்ள அனைத்து ஏற்ற தாழ்வுகளும் தாமாகவே மறைந்துவிடும்.
அதற்கு விடுதலை இறையியல் (Liberation theology)
தேவை இல்லை!
2.பூமி:
கடவுள் மனிதனைப் படைக்கு முன் பூமியைப் படைத்தார்.
பூமியிலுள்ள மண்ணை எடுத்துதான் நமது உடலைப் படைத்தார்.
அதனால்தான் நாம்
மண் + இதன் = மணிதன் = மனிதன் என்று அழைக்கப் படுகின்றோம்.
(Man = மண்)
பூமி நமது உடலுக்கு மட்டும்தான் தாய். ஆன்மாவிற்கு அல்ல.
ஆன்மா இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டு உடலோடு சேர்க்கப்படுகிறது.
நமது இறப்பின்போது நமது உடல் தன் தாயிடம் (Mother earth) திரும்பிவிடுகிறது.
ஆன்மா தன் தந்தையிடம் திரும்பிவிடுகிறது.
பூமி (Mother earth)
அழியக்கூடியது. ஆகவே உடலும் அழியக்கூடியது.
ஆன்மா அழிவற்றது.
பூமியையும், நம்மையும் படைத்த கடவுள் மட்டுமே நமது ஆராதனைக்கு உரியவர்.
அவரால் நாம் பயன்படுத்துவதற்கென்றே படைக்கப்பட்ட
பூமியைக் குறிக்க ஒரு பெண் சிலையைச் செய்து
அதன் முன் சாஸ்டாங்கமாக குப்புற விழுந்து வழிபடுவது
வடிகட்டின விக்கிரக ஆராதனை, யார் செய்தாலும்.
பூமியில்தான் நாம் பிறந்தோம், அங்கேயே தங்குவதற்கு அல்ல.
மருத்துவ மனையில் பிறப்பது அங்கேயே தங்குவதற்கா?
பூமி அழகானது. தன்னைப் படைத்த இறைவனின் அழகை அது பிரதிபலிக்கிறது.
பூமியைப் பார்த்தவுடன் அதைப் படைத்து நம்மிடம் தந்த இறைவன் ஞாபகத்திற்கு வர வேண்டும்.
அவருக்கு நன்றி கூறவேண்டும், பூமிக்கு அல்ல.
நமக்கு பிறந்த நாள் பரிசாக நண்பர் ஒருவர் ஒரு கைக்கடிகாரரம் வாங்கித் தந்திருந்தால்
நாம் நன்றி கூற வேண்டியது நண்பருக்கா?
கைக்கடிகாரத்துக்கா?
ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன்
கைக்கடிகாரத்தை மேசையில் வைத்து, அதைப் பார்த்து,
"Hi! my beloved wrist watch, thank you very much for having been with me throughout the day!" என்று சொன்னால் எப்படி இருக்கும்!
பூமியைப் பயன்படுத்துகிறோம். அதன் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், நம் வருங்கால சந்ததியின் நலன் கருதி.
அதில் மாற்றுக் கருத்து இல்லை.
பூமியின் சூழ் நிலையை மாசு படுத்தக் கூடாது, நம் நலன் கருதி.
அதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
நாம் சிக்கனமாக, மாசுபடுத்தாமல் இருப்போம்,
ஆனால் அதைக் கண்காணிக்க அரசு இருக்கிறது.
நமது ஆன்மீக வழிகாட்டிகள் நமது ஆன்மீக காரியங்களில் அக்கரை காட்ட வேண்டியவர்கள்.
மக்களின் ஆன்மீக காரியங்களில் அக்கரை காட்டுவதில் முழுக்கவனம் செலுத்தினால் நல்லது.
பூமித்தாயைக் கவனிக்க அதற்குறியவர்கள் இருக்கிறார்கள்.
நாமும் பூமியைச் சுத்தமாக வைத்துக் கொள்வோம்.
அது சுகாதாரம்.
அதைவிட முக்கியமாக நமது ஆன்மாவைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வோம்.
அது நமது நித்திய ஜீவாதாரம்!
God, starting point.
World, track for running.
God, finishing point.
நாம் ஆன்மீக ஓட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம்
கடவுளில் ஆரம்பித்து,
உலக வழியில் ஓடி,
கடவுளையே அடைய வேண்டும்.
நமது நோக்கம் கடவுளோடு இணைவது,
உலகையே நினைப்பது அல்ல.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment